சனி, 19 நவம்பர், 2016
இரண்டு வயிற்றெரிச்சல் சம்பவங்கள்
சிவகங்கை மாவட்டத்திலிருந்து நான்கு பேர் புறப்பட்டு கோவை வந்தார்கள். அவரகளில் இருவருடைய உறவுப் பையன்கள் கோவையில் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு ஒரு இரண்டாம் கையாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.
இதற்குள் மாலை 7 மணி ஆகி விட்டது. அன்றே சிவகங்கை திரும்புவது என்று முதலிலேயே முடிவு செய்திருந்தார்கள். சரி, சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று ஒரு நல்ல ஓட்டலில் (அநேகமாக அசைவமாக இருக்கலாம்) நன்றாக சாப்பிட்டுவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.
அந்த நாலு பேரில் ஒருவன் கார் ஓட்டத்தெரிந்தவன். இரண்டு பேர் ஜோசியர்கள். கார் ஓட்டத்தெரிந்தவன் நான் தூங்காமல் கார் ஓட்டுவேன் என்று பெருமையாகச்சொல்லி இருக்கவேண்டும். அதை மற்ற மூவரும் நம்பி 9 மணிக்கு கோவையிலிருந்து சிவகங்கை புறப்பட்டிருக்கிறார்கள்.
பல்லடம் - தாராபுரம் சாலையில் குண்டடம் என்னும் ஊருக்குப் போகும்போது அநேகமாக இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி உணவுக்குழாயிலிருந்து ரத்தத்தில் சேரும் நேரம். அப்போது மூளைக்கு ரத்தம் குறைவாகச் செல்லும். ஒரு மாதிரியாக கண்ணைச் சொருகி வரும்.
இந்த நிலையில் கார் ஓட்டுனர் ஒரு நிமிடம் கண்ணை மூடி விட்டார். எதிரில் அரசு பஸ் வந்து கொண்டிருக்கிறது. காரும் பஸ்சும் 80 கிமீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். கார் பஸ்ஸுக்குள் புகுந்து அப்பளமாகப் பொடிந்தது. நான்கு பேரும் சிவகங்கை போவதற்குப் பதிலாக யம பட்டணம் போய்ச்சேர்ந்தார்கள்.
என் கேள்விகள் இரண்டு.
1. பயண அசதியுடன் ஏன் இரவில் கார் ஓட்டவேண்டும்? கோயமுத்தூரில் இரவு தங்கி விட்டு காலையில் ஏன் புறப்பட்டு இருக்கக் கூடாது?
2. அந்த நாலு பேரில் இரண்டு பேர் ஜோசியர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி குண்டடத்தில் யமன் காத்துக்கொண்டு இருக்கிறான் என்பது தெரியாமல் போனது எப்படி?
அடுத்த சம்பவம்.
நாமக்கல் என்ற ஊரில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திலிருந்து
ஓய்வு பெற்ற ஒருவர் தன்னுடைய மகளை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிப் போயிருக்கிறார். மகளை மருத்துவ மனையில் விட்டு விட்டு பக்கத்திலுள்ள பேங்கிற்குப் போய் 22000 ரூபாய் எடுத்து அதை ஒரு பையில் வைத்து தன்னுடைய காரில் வைத்து ஆஸ்பத்திருக்குத் திரும்பி வந்தார்.
கார் கண்ணாடிகளை எல்லாம் ஏற்றி விட்டு காரைப் பூட்டி விட்டு ஆஸ்த்திரிக்குள் போய் வேலையை எல்லாம் முடித்து விட்டு மகளுடன் காருக்கு வந்தார். காரைப் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி. கார் கண்ணாடியை உடைத்து பணப்பையை யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.
இங்கு என் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான். அதாவது 22000 ரூபாய் ( பதினொரு 2000 ரூபாய் நோட்டுகள்) ஒரு சில டன் எடை கொண்டிருக்குமா? அவ்வளவு கனத்தை கையில் தூக்க முடியாமல் காரிலேயே விட்டு விட்டுப் போனாரா? அல்லது 22000 ரூபாய் அவருக்கு ஒரு பொருட்டு இல்லையா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)