சனி, 10 டிசம்பர், 2016

இனிமையான வியாதி

இது ஒரு மீள் பதிவு.


                                     Image result for sugar patient
இனிப்பானதெல்லாம் இன்பமானதல்ல. அதில் ஒன்றுதான் சர்க்கரை நோய். உலகில் பெரும்பாலானவர்கள் வைத்திருக்கும் நோய். இந்திய நாடு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தில் “மதுமேகம்” என்று அழைக்கப்படுகின்ற இந்த நோய் இந்தியர்களுக்குப் பல காலமாகப் பரிச்சயமான நோய். இந்த நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்வு அவசியம்.


முதலில் புரிந்து கொள்ளவேண்டியது – இது ஒரு நோய் அல்ல. உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு. வயது ஆகிவிட்டால் தலை நரைக்கிறது. பல் விழுகிறது. பசி குறைகிறது. காது கேட்பதில்லை. அந்த மாதிரிதான் சர்க்கரை வியாதியும். இது ஒரு ஜீரண மாறுபாடு. இந்நோய் பற்றிய மருத்துவத் தகவல்கள் டாக்டர் முருகானந்தம் அவர்கள் ஒரு பதிவில் அருமையாக விளக்கியுள்ளார். தையும் படியுங்கள்.

தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று முதன்முதலில் தெரியும்போது எல்லோரும் அதிர்ச்சியடைவது இயல்பு. அவர்கள் கற்பனை சிறகடித்துக்கொண்டு பறக்கும். ஓ, இனி ஆயுளுக்கும் இனிப்பு சாப்படக்கூடாது, காப்பிக்கு சர்க்கரை போடாமல் குடிக்கவேண்டும், சப்பாத்தி மட்டுமே சாப்பிடவேண்டும், இப்படி வாழ்வது என்ன வாழ்க்கை, செத்துப் போய்விடலாமா என்றெல்லாம் கற்பனை பண்ணுவார்கள். இந்தக் கற்பனைகள் எல்லாம் தேவையற்றவை. நீங்களும் எல்லோரையும் போல் வாழலாம். நல்ல காப்பி குடிக்கலாம். கல்யாண வீட்டில் வெளுத்துக் கட்டலாம். அரிசிச் சாப்பட்டை விட வேண்டியதில்லை. எப்படி என்று பார்க்கலாம்.

நம் உடம்பின் அவயவங்கள் இயங்குவதற்கும், நாம் வேலை செய்வதற்கும் சக்தி தேவைப்படுகிறது. (ஆபீசில் வேலை செய்பவர்கள் இதிலிருந்து விதிவிலக்கு - ஏனென்றால் அவர்கள் வேலை என்பது தூங்குவதுதானே). இந்த சக்தியானது நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் சாப்பாடு அப்படியே சக்தியாவதில்லை. பலவிதமான வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் உணவு சக்தியாக மாறுகின்றது. அப்படி ஏற்படும் மாற்றங்களில் முக்கியமானது நம் உணவிலுள்ள ஸ்டார்ச்சு சத்து குளுகோஸ் சர்க்கரையாக மாறுவது. இது நமது இரைப்பையில் நடக்கிறது.

இந்த குளுகோஸ் சர்க்கரை குடல்களில் உள்ள குடல் வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேருகிறது. இந்த குளுகோஸ் சர்க்கரைதான் உடலின் பல பாகங்களுக்கும் சென்று அந்த திசுக்களுக்கு சக்தியைத் தருகிறது. குளுகோஸ் திசுக்களில் எப்படி சக்தியாக மாறுகிறது என்பதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ( நான் படிச்சதையெல்லாம் உங்களுக்குச் சொல்லி கட்டாயம் உங்கள் கழுத்தை அறுக்கப் போகிறேன்.)

நாம் எல்லோரும் பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவோம். அதற்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். நாம் சாப்பிட்ட உணவு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகி, அந்த குளுகோஸ் முழுவதும் ரத்தத்தில் சேர்ந்து விடும். அப்போது ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாக இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் நமது உடம்புக்கு சக்தி ஒரு அளவில் நீடித்து, அதாவது அடுத்த வேளை உணவு உண்ணும் வரை வேண்டும். ஆகவே ரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரையை ஓரிடத்தில் சேமித்து வைத்துப் பிறகு உடலுக்குத் தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் நல்லதல்லவா? கடவுள் இதற்கான ஒரு வழியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்போது, அந்த சர்க்கரையானது கல்லீரலில் சேமிக்கப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, கல்லீரலிலிருந்து ரத்தத்திற்கு திரும்பவும் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆறுகளில் வெள்ளம் வரும்போது அதை அணைக்கட்டுகளில் சேகரித்து ஆற்றில் நீரை ஒரே அளவில் விடுகிறோம் அல்லவா? அதே போல் கல்லீரல் சர்க்கரைக்கு ஒரு அணைக் கட்டாக செயல்படுகிறது. இப்படி இல்லாவிட்டால் ஆற்று வெள்ளம் அது பாயும் இடங்களிலெல்லாம் சேதம் விளைவித்து விடும் அல்லவா? அது போல்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் உடலின் பல அவயவங்களுக்குத் தீமை வந்து சேரும். இவ்வாறு நடக்காமல் இருக்க கல்லீரல் ஒரு அணையாக வேலை செய்கிறது.

இன்னொரு சமாச்சாரம். சர்க்கரை ரத்தத்திலிருந்து கல்லீரலுக்குள் போவதற்கும் மறுபடி கல்லீரலுக்குள் இருந்து ரத்தத்திற்கு வருவதற்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகின்றது. பல காரணங்களினால் இந்த இன்சுலின் பலருடைய உடம்பில் பற்றாக்குறையாகி விடுகிறது. அப்போது சாப்பிட்டவுடன் ரத்தத்தில் அதிக அளவில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்குள் போகாமல் ரத்தத்திலேயே இருந்து விடுகிறது. அதனால்தான் இதை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.

சரி, அப்படி ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. அதிக சர்க்கரை ரத்தத்தில் இருந்தால், கிட்னி அதை வெளியேற்றப் பார்க்கும். அப்போது சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இப்படி சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறிவிட்டால் கொஞ்ச நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது கல்லீரலிலிருந்து சர்க்கரை ரத்தத்திற்கு வராது. வேலை செய்ய சக்தி குறையும். அதை ஈடுகட்ட மூளை சாப்பிடு என்று சொல்லும். பசி எடுக்கும். அப்போது சாப்பிடவேண்டும்.

இப்படி சாப்பிடுவதும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் இருந்து சிறுநீர் வழியாக சர்க்கரை வெளியேறுவதுமாக இருந்தால் உடல் நிலை க்ஷீணித்து பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இதற்கு தீர்வு உடலில் இன்சலின் செயலை அதிகரிக்கவேண்டும். இதை இரண்டு விதத்தில் டாக்டர்கள் செய்வார்கள். ஒன்று மாத்திரைகள், இரண்டு இன்சுலின் இஞ்செக்ஷன். ஆனால் இவை முழுமையான தீர்வுகள் அல்ல. டாக்டர் முருகானந்தம் சொல்லியுள்ள வழி முறைகளை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்.