வெள்ளி, 16 ஜனவரி, 2015

பதிவுலகம்பற்றி என் சிந்தனைகள்


பதிவுலகம் ஒரு நல்ல பொழுது போக்கு தளம். அதே சமயம் புதுப் புதுக் கருத்துகளை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது. இது பதிவர்களின் சுதந்திர உலகம் என்று சொல்லலாம்.

என் மனதில் தோன்றும் எண்ணங்களை நான் முன்பு டைரியில் அல்லது ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் குறித்து வந்தேன். பிளாக்குகள் தோன்றி எனக்கு அவை அறிமுகமானபின் பிளாக்குகளில் எனது மன ஓட்டங்களைப் பதிகிறேன். அவைகளை எல்லோரும் படிக்கலாம் என்ற முறையில் என் பதிவைப் பொதுவில் அதாவது ஓபனாக வைத்திருக்கிறேன்.

என் பதிவைப் படிப்பதும் படிக்காததும் வாசகர்களின் விருப்பம். என் பதிவை நீங்கள் படித்துத்தானாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வாசகர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் பதிவு எழுதும் ஆர்வம் கொண்டவர்கள் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். சொல்லும் எண்ணங்கள் புதுமையாக இருந்தால் வாசகர்கள் தானாகவே அந்தப் பதிவைப் படிப்பார்கள்.

ஆனாலும் இங்கும் சில வரைமுறைகள் இருக்கின்றன. பதிவர்கள் தங்கள் கருத்துகள் எதுவானாலும் கூறலாம். ஆனால் அவை ஆபாசமாகவோ அல்லது தனி நபர் தாக்குதலாகவோ, வன்முறைகளைத் தூண்டுவதாகவோ, ஒரு தேசத்தின் நலனுக்கு எதிராகவோ, இருக்கக் கூடாது.  இப்படி வரைமுறைகள் உண்டு.

இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டு பதிவர்கள் தங்கள் கருத்துக்களை எழுதலாம். அப்படி எழுதும் கருத்துகளுக்கு அவர்களே பொறுப்பு ஏற்கவும் வேண்டும். பதிவு எழுதுவது என்பது பிள்ளையைப் பெற்றுவிட்டு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டுப் போகும் சமாச்சாரமல்ல. ஒவ்வொரு பதிவர் எழுதும் கருத்துகளும் அவருடைய தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.

பின்னூட்டங்கள் இடுபவர்கள் விளக்கம் கேட்கலாம். கருத்தை ஒட்டி விவரங்கள் கொடுக்கலாம். உங்கள் கருத்து தவறென்று சுட்டிக்காட்டலாம். அப்படிக் கூறப்பட்ட பின்னூட்டங்களுக்கு அந்தப் பதிவர் பதில் கூறலாம். கூறாமலும் விடலாம். அதை தன் பதிவில் போடலாம் போடாமலும் இருக்கலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.

பின்னூட்டமிடுபவர்கள் அந்தப் பதிவரைக் கலாய்க்க அல்லது சிண்டு முடிய அல்லது வீண் வம்பு வளர்க்க நினைக்கலாம். அப்படி வரும் பின்னூட்டங்களுக்கு அந்தப் பதிவர்  சரியான பதிலடி கொடுக்கக் கூடும். நான் அப்படித்தான் செய்கிறேன். பின்னூட்டமிடுபவர் என்ன நோக்கத்துடன் எழுதியிருக்கிறார் என்பதை அடையாளம் கண்டு அதற்குப் பொருத்தமான பதில் கொடுக்க நான் தயங்கியதே இல்லை.

பதிவுலகில் பதிவர்களின் நிஜ அடையாளம் காண்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலானோர் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைத்தே வைத்திருக்கின்றனர். அதனால் பின்னூட்டங்களை யார் எழுதுகிறார்கள் என்பதை கணிக்க முடிவதில்லை. அவர்கள் எழுதும் பின்னூட்டங்களை வைத்தே அதற்கு பதில் தர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில் சில சமயங்களில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கு அப்படி அடையாளத்தை மறைத்து வைத்திருக்கும் பதிவர்களே காரணமாவார்கள்.

நான் படித்து பின்னூட்டம் இடும் பதிவுகளில் அந்தப் பின்னூட்டத்தை பிரசுரிப்பதோ நிராகரிப்பதோ அந்தப் பதிவரின் உரிமை. என் பின்னூட்டத்தை ஏன் நிராகரித்தீர்கள் என்று கேட்க முடியாது. இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு அந்தப் பதிவில் பின்னூட்டம் இடாமல் இருந்து விட வேண்டியதுதான்.

பதிவுகளினால் பெரிய சமுதாயப் புரட்சி வெடித்து விடும் என்று நான் நம்பவில்லை. காரசாரமான விவாதங்கள் நடக்கலாம். அவ்வளவுதான். சில நாட்களில் அது நீர்த்துப்போகும். ஏதோ பொழுதைப் போக்க ஒரு வழி என்கிற அளவில்தான் பதிவுகளை நான் உபயோகப்படுத்துகிறேன். மறைமுகமான கிண்டலும் நகைச்சுவையும் என் பதிவுகளில் கையாள்கிறேன். இதில் ஒரு சோகம் என்னவென்றால் பலருக்கு அந்த நகைச்சுவையை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை.

நான் வம்புச்சண்டைக்குப் போவதில்லை. ஆனால் வந்த சண்டையை விடுவதுமில்லை. அதற்கு நான் பிறந்த ஊர், இனம், வளர்ந்த சூழ்நிலை ஆகியவைகளே காரணம். அதற்காக நான் வருந்தவில்லை. என் பாணியை மாற்றவும் போவதில்லை. மாற்ற நினைத்தாலும் பழகின தோஷம் அவ்வளவு சீக்கிரம் மாறாது.  நான் தவறு செய்திருந்தால் அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க தயங்குவதில்லை. ஆனால் காரணமில்லாத குற்றச்சாட்டுகளைக் கண்டு சும்மாவும் இருக்கமாட்டேன்.

நடப்பவை நடக்கட்டும். நடப்பவை நன்றாகவே இருக்கட்டும்.