சனி, 13 செப்டம்பர், 2014

இன்னுமொரு விமர்சனம்




இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.(சுடிதார் வாங்கப் போறேன்)

சிறுகதைகளுக்கு ஒரு சம்பவத்தை அப்படியே கண்முன் காட்சியாகக் கொண்டுவரும் வல்லமை உண்டு. ஆனால் இந்த திறமை அந்த கதையின் ஆசிரியரின் சாமர்த்தியம். அப்படிப்பட்டவர்களே சிறுகதை மன்னன் என்று போற்றப்படுகிறார்கள். திரு வை.கோ. அவர்களிடம் இந்தத் திறமை நன்றாக பளிச்சிடுகிறது.

கல்கி, தேவன், கி.வா.ஜ., அகிலன், மு.வ., புதிமைப்பித்தன் ஆகியோர் சிறுகதைகளைப் படித்து வளர்ந்தவன் நான். ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகிய பத்திரிக்கைகளில் அவர்களது
கதைகள் வெளிவரும். தவிர அந்தப் பத்திரிக்கைகளின் தீபாவளி மலர்களிலும் அவர்களது சிறப்புக் கதைகள் வெளியாகும். இது எல்லாம் ஒரு காலம்.

அப்படிப்பட்ட பத்திரிக்கைகளின் இன்றைய இதழ்களைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒரு துணுக்கைப் போட்டுவிட்டு இதுதான் ஒரு பக்கக்கதை என்கிறார்கள். சிறுகதை எழுதும் ஆசிரியர்களே இல்லையோ என்று மனது வெறுத்துப் போய் இருக்கும்போது பதிவுலகத்திலே திரு வை.கோ. அவர்களின் கைகளைப் படித்து வெகுவாக இன்புற்றவன் தான்.

இந்த சுடிதார் வாங்கும் கதையில் ஒரு மூத்த குடும்பஸ்தனின் மன எண்ணங்களை அப்படியே தத்ரூபமாக காட்டியிருக்கிறார். இவர் வாங்கி வரும் சேலைகளையே அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் மனைவிக்கு சுடிதார் போட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததுதான் வயதான குடும்பஸ்தனுக்கு வரக்கூடாத ஆசை. ஆனாலும் வருவதை எப்படி தடுக்க முடியும்? இதை வெகு நாசூக்காக கோடி காட்டியிருப்பது எல்லோருக்கும் பொருந்தும்.

வரப்போகும் மருமகளுக்கு சுடிதார் வாங்கிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கவேண்டுமே என்ற ஆதங்கத்தை நுணுக்கமாக விவரித்திருக்கிறார். தெருவில் போகும் பெண்களின் சுடிதார் பேஷன்களைப் பார்த்து மதி மயங்குவது இயற்கையான ஒரு உணர்ச்சி. நாம் அதிக விலை கொடுத்து வாங்கின பொருளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமே என்ற மனதின் வேட்கை அந்த வார்த்தைகளில் புலப்படுகிறது.

ஜவுளிக்கடைகளில் ஜவுளிகளோடு அந்த விற்பனைப் பெண்களும் விற்பனைப் பொருளானால் நன்றாக இருக்கும் என்ற கற்பனை எல்லா இளைஞர்களுக்கும் இனிப்பாக இருக்கும். (பெரிசுகளுக்கும் கூடத்தான்)

கடைசியில் தான் வாங்கின சுடிதாருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அறியும்போது தான் பட்ட கஷ்டங்களெல்லாம் மறந்து ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே, அதற்காகத்தான் திரும்பத் திரும்ப மனிதர்கள் இந்தக் கஷ்டங்களை வலுவில் சுமக்கிறார்கள். இந்த உண்மையை மறைமுகமாக கதாசிரியர் இக்கதையின் மூலம் வலுவாக சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு நல்ல சிறுகதை படித்த மனத்திருப்தி கொடுத்த ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.