வெள்ளி, 28 மே, 2010

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை - பாகம் 2


மறுநாள் காலையில் எழுந்த விக்கிரமாதித்தன் தேவலோக நந்தவனத்திற்குப் போய் மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம், முதலான பூக்களைச் சேகரித்து, சில,பல நண்டு, நட்டுவாக்களி, தேள் ஆகிய விஷ ஜந்துக்களையும் சேகரித்து, அந்த விஷ ஜந்துக்களை உள்ளே வைத்து அந்த ஜந்துக்கள் வெளியே தெரியாதபடி மலர்களைக்கொண்டு இரண்டு செண்டுகள் தயாரித்தான்.

பிறகு விடுதிக்குச் சென்று காலைக்கடன்களை முடித்து, அந்த மலர்ச்செண்டுகளை எடுத்துக்கொண்டு, ஆடையாபரணலங்கிருதனாய் இந்திர சபைக்கு வந்தான். அப்போது இந்திரனும் வர, அவர்களிருவரும் பேசிக்கொண்டே சென்று அவரவர்கள் ஆசனத்தில் அமர்ந்தார்கள். அப்போது இந்திரன் விக்கிரமாதித்தனைப்பார்த்து நடனத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்க, விக்கிரமாதித்தனும் சம்மதித்தான். இந்திரன் சைகை காட்ட ரம்பையும் ஊர்வசியும் சபையினுள் புகுந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி தங்கள் நடனத்தை ஆரம்பித்தார்கள். அவர்கள் முன்னும் பின்னும் சுழன்றும், குனிந்தும், நிமிர்ந்தும், மான்களைப்போல் துள்ளிக்குதித்தும்  ஒருவருக்கொருவர் சளைக்காமலும், தாளம் தப்பாமலும் ஆடின நடனத்தைப்பார்த்த தேவர்களும், மற்றோர்களும், விக்கிரமாதித்தன் இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வி எவ்வாறு கண்டுபிடித்து சொல்வானோவென்று ஆச்சரியத்துடன் காத்திருந்தார்கள்.

அப்போது விக்கிரமாதித்தன் அந்த நடனமாதர் இருவரையும் அருகில் அழைத்து, நீங்கள் நடனம் ஆடும் சிறப்பு மிகவும் மேன்மையாக இருக்கிறது. ஆனாலும் நீங்கள் வெறும் கையால் அபிநயம் பிடித்து ஆடுவதை விட இந்த மலர்ச்செண்டை கையில் பிடித்துக்கொண்டு ஆடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறி, அவன் கொண்டுபோயிருந்த மலர்ச்செண்டுகளை அவர்கள் கையில் கொடுத்தான். அவர்களும் ஆஹா, விக்கிரமாதித்த மகாராஜா நமது நடனத்தை மெச்சி பரிசாக இந்தமலர்ச் செண்டுகளைக் கொடுத்தார் என்று சந்தோஷப்பட்டு அந்த மலர்ச்செண்டுகளை கையில் பிடித்துக்கொண்டு இன்னும் உற்சாகத்துடன் நடனமாடினார்கள்.

இப்படி அவர்கள் நடனமாடியதில் ரம்பையானவள் அந்தப் பூச்செண்டை லாவகமாகவும், லேசாகவும் பிடித்துக்கொண்டு ஆடினாள். ஊர்வசியோ அந்த மலர்ச்செண்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அதனுள் இருந்த விஷ ஜந்துக்கள் அவள் விரலைத் தீண்ட, அவளுக்கு விஷம் ஏறி நடனத்தில் தாளம் தப்பி, தடுமாறி கீழே விழுந்து விட்டாள். அப்போது விக்கிரமாதித்தன் எழுந்து ரம்பையே போட்டியில் வென்றவள் என்று சபையோருக்கு அறிவித்தான். இந்திரன் முதலான சகல தேவர்களும் கைகொட்டி அதை ஆமோதித்தார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு விக்கிரமாதித்தன் இந்த வெற்றி தோல்வியினை எவ்வாறு கண்டுபிடித்தான் என்று தெரிந்துகொள்ள ஆவல். இதை தேவேந்திரனே விக்கிரமாதித்தனிடம் கேட்க, விக்கிரமாதித்தன் அந்த இரண்டு மலர்ச்செண்டுகளையும் கொண்டு வரச்செய்து அவைகளைப் பிரித்துக் காட்டினான். அவைகளுக்குள் இருந்த விஷ ஜந்துக்களை எல்லோரும் பார்த்தார்கள். விக்கிரமாதித்தன் சொன்னான், நான் இவ்வாறு மலர்ச்செண்டுகளை காலையில் தயார் செய்து கோண்டு வந்திருந்தேன். அவைகளை இந்த நடனமாதர்களின் கையில் கொடுத்து ஆடச்சொன்னதை யாவரும் பார்த்தீர்கள். ரம்பை இந்த மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக்கொண்டு ஆடியதால் இந்த விஷ ஜந்துக்கள் அவளை ஒன்றும் செய்யவில்லை. ஊர்வசியோ இந்த மலர்ச்செண்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அவளை இந்த விஷ ஜந்துக்கள் தீண்டி, அவள் தாளம் தப்பி ஆடினாள் என்று சொல்ல, எல்லோரும் விக்கிரமாதித்தனின் புத்தி சாதுர்யத்தை மெச்சிப் புகழ்ந்தார்கள். பிறகு சபை கலைந்தது.

தேவேந்திரன் கேட்டுக்கொண்டதினால் விக்கிரமாதித்தன் மேலும் சில தினங்கள் இந்திரலோகத்தில் தங்கினான். நான்கைந்து தினங்கள் சென்றபிறகு, விக்கிரமாதித்தன் தேவேந்திரனைப்பார்த்து, நான் என் நாட்டைவிட்டு வந்து பல தினங்கள் ஆகிவிட்டன. எல்லோரும் என்னை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள், ஆகவே எனக்கு விடை கொடுக்கவேண்டும் என்று கேட்க, இந்திரனும் அப்படியே ஆகட்டும் என்று கூறி, குபேரனைக்கூப்பிட்டு நமது பொக்கிஷசாலையில் இருக்கும் அந்த முப்பத்திரண்டு பதுமைகள் வைத்த ரத்தின சிம்மாசனத்தை எடுத்து வருமாறு பணித்தான். அவனும் அவ்வாறே அந்த சிம்மாசனத்தை சபையில் கொண்டு வந்து வைத்தான். அந்த சிம்மாசனமோ மிகுந்த வேலைப்பாட்டுடனும், விலைமதிக்க முடியாத நவரத்தினங்கள் பதித்து, முப்பத்திரண்டு படிகளுடனும், ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு பதுமையும் கூடி, கண்டோர் வியக்கும் வண்ணம் தேவலோக சிற்பி மயனால் இயற்றப்பட்டதாகும்.

தேவேந்திரன் விக்கிரமாதித்தனை பலவாறாகப் புகழ்ந்து, அந்த சிம்மாதனத்தை விக்கிரமாதித்தனுக்கு கொடுத்து, இந்த சிம்மாசனத்தை எங்கள் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி, இந்த சிம்மாசனத்தில் நீ ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிவாயாக என்ற வரமும் கொடுத்தருளினான். கூடியிருந்த மற்ற தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவ்வாறே ஆகுக என்று வாழ்த்தினார்கள். பிறகு இந்திரன் மாதலியைக்கூப்பிட்டு, விக்கிரமாதித்த மகாராஜாவையும், இந்த சிம்மாசனத்தையும் அவருடைய நாட்டில் சேர்ப்பித்துவிட்டு வருவாயாக என்று பணித்தான். விக்கிரமாதித்தனும் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு தேரில் ஏற, மாதலியும் சில நொடிகளில் விக்கிரமாதித்தனின் சபை முன்பு தேரைக் கொண்டு போய் நிறுத்தினான். ராஜா தேரிலிருந்து இறங்கிக்கொண்டு பணியாட்களைக் கூப்பிட்டு முப்பத்தியிரண்டு பதுமைகள் கூடிய சிம்மாசனத்தை இறக்கி ராஜசபையில் வைக்கச்சொல்லிவிட்டு, மாதலிக்கு விடை கொடுத்தனுப்பினான். அதற்குள் ராஜா வந்துவிட்ட சேதி தெரிந்து பட்டியும், மற்ற மந்திரி பிரதானிகளும் வாசலுக்கு வந்து ராஜாவிற்கு முகமன் கூறி வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துப் போனார்கள்.

எல்லோரும் அவரவர்கள் ஆசனங்களில் அமர்ந்தானபிறகு பட்டி எழுந்திருந்துதேவரீர் இங்கிருந்து தேவலோகம் சென்று திரும்பின வரையிலான செய்திகளைக்கேட்க அனைவரும் ஆவலாக இருக்கிறோம், ஆகவே அவற்றை தாங்கள் எடுத்துக்கூற வேண்டுகிறோம்என்று விக்ஞாபித்தான். விக்கிரமாதித்தனும் அவ்வாறே தான் தேவலோகம் சென்று ரம்பை ஊர்வசி நடனப்போட்டிக்கு தீர்ப்பு சொன்னது, தேவேந்திரன் ரத்தின சிம்மாசனம் கொடுத்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம் கொடுத்து அனுப்பியது வரையிலான விருத்தாத்தங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்ட பட்டி, தேவரீருக்கு ஆயிரம் ஆண்டுகள் வரம் வாங்கி வந்தீர்களே, எனக்கு ஏதாவது கேட்டு வாங்கி வந்தீர்களாவென்று கேட்க, பட்டி, உன்னை மறந்தேனே, என்ன செய்வது என்க, பட்டியும் போனால் போகிறது, விடுங்கள் என்று சொன்னான். அப்போது சூர்யாஸ்தமன நேரம் ஆகிவிட்டபடியால் சபை கலைந்து எல்லோரும் அவரவர்கள்  இருப்பிடங்களுக்குப் போய் சேர்ந்தார்கள்.

அன்று இரவு படுக்கப்போன பட்டிக்கு தூக்கம் வரவில்லை. நமது ராஜா இவ்வாறு தனக்கு மட்டும் ஆயுள் வாங்கிக்கொண்டு என்னை மறந்து வந்தாரே, நாம் இருவரும் ஆயுள் பரியந்தம் ஒன்றாக இருப்பதாக அம்மன்முன் சபதம் எடுத்தோமே, அது இப்போது வீணாய்ப்போய்விடும்போல் இருக்கிறதே என்று பலவாறாக யோசனை செய்து, எதற்கும் நமக்கு நம் மாகாளியம்மன் துணை இருக்கும்போது என்ன கவலை என்று உடனே புறப்பட்டு உச்சினிமாகாளியம்மன் கோவிலை அடைந்தான். அப்போது இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்ப சமயமானதால் அம்மன் நகர்வலம் போயிருந்தாள். சரி, அம்மன் வரட்டும் என்று பட்டி அம்மனைத் துதித்துக் கொண்டு அங்கேயே இருந்தான். சிறிது நேரத்திற்குப் பின் வந்த அம்மன் பட்டியை அங்கே பார்த்து ஆச்சர்யப்பட்டு, ஏது பிள்ளாய் பட்டி, இந்த நேரத்தில் இங்கு விஜயம் என்று கேட்க, பட்டியும் அம்மனைப் பலவாறாகத் தோத்திரம் செய்து, அம்மா, நீயல்லவோ ஏழை பங்காளன், எனக்கு உன்னை விட்டால் யாரிருக்கிறார்கள், நீதான் எனக்கு அருள் புரியவேண்டும் என்று தோத்திரம் செய்ய, பட்டியும் விக்கிரமாதித்தன் இந்திரலோகம் சென்று வந்த விருத்தாத்தங்களயெல்லாம் கூறி அங்கு அவன் தனக்கு மட்டும் ஆயிரம் ஆண்டுகள் வரம் வாங்கிக்கொண்டு, தன்னை மறந்து விட்டு வந்ததையும் கூறினான்.

அப்போது அம்மன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, பட்டியும் விக்கிரமாதித்தன் தேவலோகத்துக்குப் போய் ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வாங்கி வந்திருக்கிறான், நீ எனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ வரம் கொடுக்க வேண்டுமென்று கேட்க, அம்மன் இது என்னால் முடியாத காரியம் ஆயிற்றே என்று சொல்ல, பட்டியும்அம்மா, உன்னால் முடியாத காரியமும் இந்த லோகத்தில் இருக்கிறதோ என்று பலவாறாக வேண்ட, அம்மன் ஏதாவது சால்ஜாப்பு சொல்லி இவனை அனுப்பிவிடலாம் என்றெண்ணி, அப்படியானால் நீ போய் விக்கிரமாதித்தனுடைய தலையை வெட்டிக்கொண்டு வந்தாயானால் உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னாள். பட்டி சரி, அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, உடனே விக்கிரமாதித்தன் அரண்மனைக்குச்சென்று அவன் சயனமண்டபத்துக்குள் புகுந்து அவனை எழுப்பினான். எழுந்த விக்கிரமாதித்தன் பட்டியைப்பார்த்து ஏது பிள்ளாய் பட்டி, இன்னேரத்தில் இங்கு வந்த காரணம் என்னவென்று கேட்க, பட்டியும் தேவரீர் தலை ஒரு காரியமாய் அவசரமாகத் தேவைப்படுகிறது, அதற்காகத்தான் வந்தேன்என்றான். விக்கிரமாதித்தனும்சரி எடுத்துக்கொண்டு போஎன்று சொல்லி படுத்துக்கொண்டான்.

பட்டி உடனே உடைவாளை உருவி விக்கிரமாதித்தன் தலையை ஒரே வெட்டாக வெட்டி தலையை எடுத்துக்கொண்டு அம்மன் கோவிலுக்குச் சென்று தலையை அம்மன் காலடியில் வைத்தான். அம்மன் திடுக்கிட்டு, ஓஹோ, இனிமேல் இவனுக்கு சால்ஜாப்பு சொல்லக்கூடாது என்று முடிவு செய்து வாரும் பிள்ளாய் பட்டி, நான் சொன்ன காரியத்தை நீ செய்து முடித்துவிட்டபடியால் நீ கேட்ட இரண்டாயிரம் வருடம் ஆயுளைத் தந்தோம், சுகமாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்தாள். கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்ட பட்டி அம்மனைப் பார்த்து கெக்கெக்கென பலமாகச் சிரித்தான். அம்மனுக்கு இவன் சிரித்த்தைப்பார்த்ததும் கோபம் வந்து யாது பிள்ளாய் நீ இப்போது சிரித்த காரணம் யாது, உடனே சொல்லக்கடவாய் என்று கேட்க பட்டியும் கூறலுற்றான். அம்மா தாயே இதோ இருக்கும் விக்கிரமாதித்தன் தேவலோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மற்றுமுள்ள முனி சிரேஷ்டர்களும் கூடி ஆசீர்வதித்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம் கொடுத்தனுப்பி இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் என் கையால் வெட்டப்பட்டு அவன் தலை உன் முன்னால் இருக்கிறது. அப்பேர்க்கொத்த வரத்திற்கே இந்த கதியென்றால் நீ கொடுத்த வரம் எத்தனை நாளைக்கு நிற்கப்போகிறதோ என்று நினைத்துச் சிரித்தேன் என்றான்.

அம்மனும் அவன் வார்த்தைச் சாதுர்யத்திற்கு மெச்சி, வாரும் பிள்ளாய் பட்டி, நீ அப்படி சந்தேகப்படவேண்டியதில்லை, என்னுடைய வரம் என்றென்றும் நிற்கும், நீ பயப்படவேண்டியதில்லை, ஆனாலும் உன்னுடைய வாக்குச் சாதுர்யத்தை மெச்சி, விக்கிரமாதித்தனையும் உயிரூட்டுகிறோம் என்று கூறி, இதோ தீர்த்தமும் பிரம்பும் தருகிறோம், நீ இந்த தலையை எடுத்துக்கொண்டு போய் விக்கிரமாதித்தன் உடம்பில் வைத்து தீர்த்தம் தெளித்து பிரம்பால் தட்டியெழுப்புவாயாகில் அவன் உயிருடன் எழுந்திருப்பான் என்று சொல்லி தீர்த்தமும் பிரம்பும் கொடுத்தனுப்பினாள். பட்டியும் அம்மனைப் பலவாறாகப் புகழ்ந்து தீர்த்த த்தையும் பிரம்பையும் வாங்கிக்கொண்டு, விக்கிரமாதித்தன் தலையையும் எடுத்துக்கொண்டு விக்கிரமாதித்தன் உடல் இருக்குமிடத்திற்கு வந்து தலையை உடலுடன் ஒட்டி வைத்து தீர்த்தத்தை தெளித்து பிரம்பால் தட்டி எழுப்பினான்

விக்கிரமாதித்தனும் தூக்கத்திலிருந்து எழுபவன் போல் எழுந்திருந்து, வாரும் பிள்ளாய் பட்டி, என் தலையை அவசரமாக இரவல் வாங்கிக்கொண்டு போன காரியம் என்னவென்று கேட்க, பட்டியும் நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லி தான் அம்மனிடம் இரண்டாயிரம் ஆண்டுகள் வரம் வாங்கி வந்தது வரை சொன்னான். அதைக்கேட்ட விக்கிரமாதித்தன் நல்ல காரியம் செய்தாய் பட்டி, ஆனால் ஒன்று, எனக்கு தேவேந்திரன் கொடுத்த ஆயுள் ஆயிரம் வருடம்தானே, நீ இப்போது அம்மனிடம் பெற்றுள்ள ஆயுள் இரண்டாயிரம் வருடம் ஆயிற்றே, இதற்கு என்ன செய்வது என்று கேட்க, பட்டி சொன்னான், தேவரீர் இந்திரனிடம் பெற்ற வரம், ஆயிரம் வருடங்கள் ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆட்சி புரிவதற்கல்லவா, நாம் ஒன்று செய்வோம், ஆறு மாதம் அரசாட்சி செய்த பிறகு ஆறு மாதம் காட்டுக்குச் சென்று வனவாசம் செய்வோம், அப்போது தேவரீருடைய ஆயளும் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிவிடும் என்று சொல்ல விக்கிரமாதித்தனும் பட்டியின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, ஆகா, பட்டி உன்னுடைய புத்தியே புத்தியென்று சொல்லி அவனைப்பாராட்டி, சரி, இரவு வெகு நேரம் ஆகிவிட்டது, நீ சென்று நித்திரை கொள் என்று அவனை வழியனுப்பிவிட்டு விக்கிரமாதித்தனும் நித்திரை போனான்

பட்டி விக்கிரமாதித்தன் தலையை இரவல் வாங்கின கதை முடிந்தது. சுபம்.

11 கருத்துகள்:

  1. மாடரேஷனா?அப்ப வடைக்கு முந்தியிருப்பாங்க:)

    உங்களுக்கு முன்பே நண்பர் அதுசரி விக்ரமாதித்தன் - டக்கீலா கொடுத்து வேதாளத்தை அவர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டவனாயுள்ளேன்:)

    பதிலளிநீக்கு
  2. உங்களின் கதை சொல்லும் பாங்கு நன்றாக உள்ளது. சிறு வயதி அதிகம் கதைக் கேட்டு வளர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சரியா?

    பதிலளிநீக்கு
  3. சூப்பர்.

    கதை முடிந்து விட்டது. வேறு ஏதேனும் கதைகள் வெளியிடும் உத்தேசம் உள்ளதா சார்?

    பதிலளிநீக்கு
  4. ராஜ நடராஜன் அவர்களுக்கு, வடை உங்களுக்குத்தான், கவலையே படாதீங்க.

    "டக்கீலா" - புது வார்த்தையா இருக்கு, கொஞ்சம் பதவுரை சொன்னா புரிஞ்சுக்குவேன்.

    பதிலளிநீக்கு
  5. அமைதி அப்பா சொன்னது:

    //உங்களின் கதை சொல்லும் பாங்கு நன்றாக உள்ளது. சிறு வயதி அதிகம் கதைக் கேட்டு வளர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சரியா?//
    ஓரளவுதான் சரி, என் அம்மா வழிப்பாட்டி பழைய ராஜா ராணி கதைகள் சொல்லுவார்கள். என்னுடைய அம்மா, அப்பாவுக்கு அவ்வளவு விவரமும் நேரமும் இருந்ததில்லை.

    நான் நன்றாக எழுதப்படிக்க தெரிந்த பிறகு (சுமார் 10 வயது) கதைப்புத்தகங்களும், வாரப் பத்திரிக்கைகளும் வாசிக்கும் பழக்கம் வந்துவிட்டது. வீட்டில் ஒரு பழய விக்கிரமாதித்தன் கதைப்புத்தகம் இருந்தது. அதை பல முறை படித்து ரசித்திருக்கிறேன். அந்த வாசனைதான் இப்போது பதிவில் வெளிக்கொணறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. King Viswa said:

    //கதை முடிந்து விட்டது. வேறு ஏதேனும் கதைகள் வெளியிடும் உத்தேசம் உள்ளதா சார்?//

    கதையே சொல்லிட்டு இருந்தா நல்லாயிருக்குமுங்களா? கொஞ்சம் நான் வேலை பார்த்த கதையையும் சொல்லிட்டு அப்பப்போ விக்கிரமாதித்தனையும் கவனிச்சிப்போம். என்ன, நான் சொல்றது சரிதானுங்களே.

    பதிலளிநீக்கு
  7. கதையின் இரு பாகங்களும் படித்து முடித்தேன்; சுகம்.
    என்னுடைய 'டேஷ்போர்ட்'இல் தங்களின் இந்த
    இடுகை 'டிஸ்ப்ளே' ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
  8. வர்ணனைகளை அப்படியே ஞாபகம் வைத்துளீர்களே !
    அதனால்தான் நீங்கள் அந்த விக்ரமாதித்தன் கதை புத்தகத்தை வைத்து எழுவதாக நினைத்தேன்.
    எதனை முறை படித்தாலும் சுவை குறையாத நடை.

    நீங்கள் அதனை இங்கு சொல்லும் பாங்கு, நிச்சயம் வலைபதிவர்கள் வேறு எவருக்கும் இல்லை.
    காரணம் உங்கள் அனுபவம்.

    நிறுத்த வேண்டாம் தொடரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. கக்கு-மாணிக்கம் சொன்னது:

    //வர்ணனைகளை அப்படியே ஞாபகம் வைத்துளீர்களே !
    அதனால்தான் நீங்கள் அந்த விக்ரமாதித்தன் கதை புத்தகத்தை வைத்து எழுவதாக நினைத்தேன்.
    எதனை முறை படித்தாலும் சுவை குறையாத நடை.

    நீங்கள் அதனை இங்கு சொல்லும் பாங்கு, நிச்சயம் வலைபதிவர்கள் வேறு எவருக்கும் இல்லை.
    காரணம் உங்கள் அனுபவம்.

    நிறுத்த வேண்டாம் தொடரவேண்டும்.//

    தொடர்ந்திடலாங்க, வேறென்ன வேலை ரிடைர்டு ஆன காலத்துல. என்ன இப்ப காலைல மூணு மணிக்கு முழிக்கிறேன், இனி ரெண்டு மணிக்கே முழிச்சாப்போச்சு :)-

    பதிலளிநீக்கு
  10. Nazimudeen saidL

    //கதையின் இரு பாகங்களும் படித்து முடித்தேன்; சுகம்.
    என்னுடைய 'டேஷ்போர்ட்'இல் தங்களின் இந்த
    இடுகை 'டிஸ்ப்ளே' ஆகவில்லை.//

    ஆமாங்க, என்னுடைய டேஷ் போர்டுலயும் டிஸெபிளே ஆகவில்லை. பதிவு போட்டவுடனேயே கவனித்தேன். என்ன செய்யறதுன்னு தெரியாமெ அப்படியே நடக்கறது நடக்கட்டும்னு விட்டுவிட்டேன். எனக்கு அதுக்கு மேல முடியல.
    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு