திங்கள், 4 ஏப்ரல், 2011

தொலை பேசியில் பேசும்போது அனுசரிக்கவேண்டிய பண்புகள்



தொலைபேசியில் பேசுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலோருக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வே கிடையாது. போன் என்பது பேசுவதற்குத்தானே, யாரையும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டுப் பேசலாம் என்று பலர் தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

விடியற் காலையில் 5 மணிக்குப் போன் வந்தால் என்னைப்போன்ற உள்ளூரில் வசிப்பவர்கள் என்ன நினைப்போம்? யாரோ இன்றைக்கு மண்டையைப் போட்டு விட்டார்கள், இன்றைய பொழுது அவ்வளவுதான் என்று முடிவு செய்துதான் போனை எடுப்போம். செய்தியும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். “இன்றைக்கு என்ன புரொக்ராம்” என்று ஒரு நண்பன் அந்நேரத்தில் கேட்டானென்றால் என்ன நினைப்போம்? பாவி, உன்னை எளவெடுக்க, காலங்கார்த்தாலே ஏண்டா என் தூக்கத்தை கெடுத்தே? என்றுதான் எண்ணுவோம் அல்லவா?

சிலர் அர்த்த ராத்திரியில் போன் பண்ணி, நாளைக்கு அவனைப் பார்க்கப் போகலாமா என்று விசாரிப்பார்கள். அவர்கள் அன்றைக்கு அன்று, தூங்காத ஜாதியைச் சேர்ந்தவர்கள். இரவு 1 மணிக்கு மேல்தான் படுக்கப்போவார்கள். காலையில் 11 மணிக்குத்தான் அவர்களுக்குப் பள்ளியெழுச்சி. நாம காலைல 7 மணிக்கு எழுந்திருச்சு 8 மணிக்கு ஆபீஸ் போறவங்களா இருந்தா, இந்தப் பீடைங்களுக்கு அர்த்த ராத்திரியில என்ன வாழ்த்துச் சொல்றது?

போன் என்பது அவசர, அத்தியாவசியச் செய்திகளைச் சொல்வதற்காக ஏற்படுத்திய சாதனம் என்று என்னைப் போன்ற கிழடுகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கின்றன. வடச்சட்டியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, தாளிப்பதற்கு என்னென்ன போடவேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிலிருக்கும் அம்மாவிற்குப் போன் போட்டுக் கேட்கும் மகள்கள் ஏராளம். “அடியே, நேற்று அந்த சீரியலில் என்ன நடந்தது, எனக்கு நாத்தனார்ப் பீடைகூட கோவிலுக்குப் போகச் சொல்லி அந்தக் கெழம் உயிரைப் பிடுங்கிச்சு, அதனால அந்த சீரியலப் பாக்க முடியல. அதில அவ புருசன் சாகறாப்பில இருந்தானே, அவன் செத்துட்டானா?” என்று அரை மணி நேரம் போனிலேயே கதை கேட்கும் மாமிகளும் உண்டு. அன்றைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கும். வீட்டில் மங்களகரமாக நாலு ஸ்லோகம் சொல்றத விட்டுட்டு இந்த எளவு விசாரணை. கதை கேக்கற சுவாரஸ்யத்தில நாளாவது, கிழமையாவது?

சிலர் அவர்கள் வழக்கமாகப் போகும் டாக்டருக்கு போன் செய்து “டாக்டர், வயிற்றில் இடது புறமாக வலிக்கிறது, அன்றைக்கு கொடுத்தீர்களே, அந்த மருந்தைச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள். என்ன அட்வைஸ் சொல்ல முடியும்? நேரில் பார்க்காமல் ஒன்றும் சொல்ல முடியாதம்மா, நேர்ல வாங்கன்னு சொன்னா, “பார்மசியில கேட்டாக் குடுக்கறான், இந்த டாக்டருக்கு கொம்பு மொளச்சிடுச்சு”, என்று பேசும் மக்கள்தான் அதிகம். இப்படிப்பட்ட சாவு கிராக்கிகள் வராததே நல்லதுக்குத்தான் என்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் நினைப்பார்கள்.

என்னைப் பொருத்தவரையில் நான் போனில் சொல்லவேண்டியவற்றை சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிடும் வழக்கமுடையவன். சிலர் அவர்களின் வீட்டுப் பிரச்சினைகளால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க இந்தப் போனைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுவது நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையென்றாலும் கடனே என்று கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் போன் பேசுவதில் ஒரு பண்பு, எட்டிக்கெட், என்னவென்றால், யார் கூப்பிடுகிறார்களோ அவர்கள்தான் பேச்சை முடித்து போனைக் கட் செய்யவேண்டும்.

என்னுடைய நண்பர்கள் இருவர் இப்படி போனில் ஒரு நிமிஷம் பேசவேண்டியதை ஒன்பது நிமிஷம் பேசுவார்கள். அவர்கள் பேசும்போது நாம் சும்மாவும் இருக்கமுடியாது. “ஊம்”, “அப்படியா”, “அப்புறம்”, இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லாவிட்டால், என்ன, கேட்டுட்டு இருக்கீங்களா, இல்லே தூங்கிட்டீங்களா, என்று கேள்வி வேறு வரும். இப்படியாக தடவைக்கு ஒரு அரை மணி நேரமாவது அறுப்பார்கள். விஷயம் ஒன்றுமிருக்காது.    

இதில் சமீபத்தில் நடந்த ஒரு சோகத்தைக் கேளுங்கள். “குதிரை கீழே தள்ளியதுவுமில்லாமல் குழியும் பறித்ததாம்” என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இவர்கள் தங்கள் டென்ஷனைக் குறைக்க ஏதோ பேசுகிறார்களே என்று அனுதாபப்பட்டு கேட்கப்போக, என் மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். அதாவது, நான் அவர்களுடன் போனில் பேசினால் சீக்கிரம் கட் பண்ணி விடுகிறேன், அவர்கள் என்னுடன் பேசினால் நீண்ட நேரம் பேச அவர்களைத் தூண்டுகிறேன், என்று கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்போமே என்று பேச்சைக் கேட்கப்போக, குற்றச்சாட்டு என் பேரிலேயே திரும்பி விட்டது. அதாவது அவர்கள் சொல்வது என்னவென்றால் நான் “அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே” என்று அலைகிறேன் என்பதை இவ்வாறு சொல்லி விட்டார்கள். அடுத்தவன் காசில் அனுபவிக்கிற ஜாதி என்பதை இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் “எனக்கு வேண்டும், இவர்கள் பேரில் அனுதாபம் காட்டியதிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று என் தலைவிதியை நொந்து கொண்டு இனி மேலாவது புத்தியாய் பிழைக்கவேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன்.

இந்த நிகழ்ச்சியின் நீதி என்னவென்றால், எந்த வயதிலும் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு என்பதுதான்.

12 கருத்துகள்:

  1. ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருப்பேன். இரவு பத்து மணிக்கு மேல் என் அப்பா/அக்கா கால் செய்தால் மட்டுமே எடுப்பேன். மற்ற எவரின் அழைப்பும் ஏற்கப்படாது.

    அதேபோல், அலுவல் ரீதியாக பேசுவதாய்இருந்தாலும், முதலில் ஒரு ஈ மெயில் அதை பற்றி அனுப்பிவிட்டே பேசுவேன். பின்னாடி அப்படி சொல்லவே இல்லை என்று மறுக்க முடியாதுப் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு. தொலைபேசியில் ஊர்க்கதையெல்லாம் பேசி விட்டு, பேச வேண்டியதை மறந்து விடுகிறார்கள். நேரில் பேச வேண்டிய - அதிகமான உரையாடல்களை தொலைபேசியில் பேசுகிறார்கள். தொலைபேசியில் பேச வேண்டிய சிறிய உரையாடல்களை நேரில் பேசுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. //“டாக்டர், வயிற்றில் இடது புறமாக வலிக்கிறது, அன்றைக்கு கொடுத்தீர்களே, அந்த மருந்தைச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள்//

    ===================================

    பெரும்பாலும் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்குத்தான் இந்த மாதிரி ஆலோசனை கேட்பார்கள்

    பதிலளிநீக்கு
  4. எனக்கு பாதி புரியுது, பாதி புரியலை. ஃபோன் போட்டு கேட்டுக்கறேன்... ஹெ ஹெ ஹெ :)

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அனுப்வம் எனக்கும் உண்டு


    நாங்களும் கவிதை எழுதுவோம்

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  7. "siriyor seidha sirupizhai ellaam
    periyor aayin poruppadhu Kadaney !

    siriyor perumpizhai seidhanar aayin
    periyor appizhai poruththalum aridhey !

    Nooraandu pazhahinum, moorkar keanmai
    neerkul paasi pol vear kolladhey !

    oru naal pazhahinum, periyor keanmai
    iru nilam pilakka, vear veezhkummey ! "

    பதிலளிநீக்கு
  8. மிகவும் நல்ல பதிப்பு. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம். இதில் நிறைய என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நன்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு