வெள்ளி, 2 மார்ச், 2012

மலைவாழ் மக்களின் விருந்தோம்பல்



நான் மதுரையில் வேலையில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம். குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்படியே அலுவலக வேலை ஒன்றையும் முடித்துவிடலாம் என்று திட்டம்.

அதன்படி கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தூரத்திலுள்ள பண்ணைக்காடு என்னும் கிராமத்திற்குப் போகவேண்டும். அங்குள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு மதுரை விவசாயக் கல்லூரியில் மண்வளப் பரிசோதனை செய்யும் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. மண்வளப் பரிசோதனை செய்யும் உபகரணங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அதை வைத்து அவர் எவ்வளவு மண் மாதிரிகள் பரிசோதனை செய்திருக்கிறான் என்று ஆய்வு செய்வதுதான் என் பயணத்தின் நோக்கம்.

காலை சுமார் 11 மணிக்கு அந்த ஊருக்குப் போய் சேர்ந்தேன். அந்த இளைஞனுக்கு முன்பே தபால் மூலம் தகவல் அனுப்பியிருந்ததால் அவர் என்னை வரவேற்கத் தயாராக இருந்தார். அவர் வேலைகளைப் பார்த்து அவருக்கு சில வழிமுறைகளைச் சொல்லி முடிக்கும்போது ஏறக்குறைய 1 மணி ஆகிவிட்டது. அவர்கள் வீட்டில் எனக்காக விருந்து தயார் பண்ணிவிட்டார்கள். அதை மறுத்துவிட்டுப் போவது நாகரிகமல்ல என்பதால் விருந்தைச் சாப்பிட்டேன். சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின்பு கொடைக்கானலுக்குப் புறப்பட்டேன். அவர்கள் வீட்டிலிருந்து பஸ் நிற்குமிடத்திற்கு மூன்று பேர் துணைக்காக வந்தார்கள். அதில் ஒருவர் ஒரு பையில் நிறைய ஏதோ போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.


அதில் ஒரு கிலோ காப்பிக்கொட்டை, ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்கள், ஒரு சீப்பு மலைவாழைப்பழம் ஆகியவை இருந்தன. இது எனக்குப் பிற்பாடுதான் தெரிந்தது. பஸ் நிலையத்திற்கு வந்து சிறிது நேரத்தில் தூரத்தில் பஸ் வருவது தெரிந்ததும் அந்தப் பையை அவர்கள் என்னிடம் கொடுத்து ஊருக்கு கொண்டுபோங்கள் என்றார்கள். நான கொஞ்சம் பிகு பண்ணிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக என் கையில் கொடுத்து விட்டார்கள். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. பணம் பத்து ரூபாயை என்னிடம் பஸ் சார்ஜுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தார்கள். நான், ஐயா, எனக்கு நீங்கள் இந்தப்பையைக் கொடுத்ததே அதிகம், ஏதோ அன்பினால் கொடுக்கிறீர்கள் என்று வாங்கிக்கொண்டேன். பஸ்சிற்கும் பணம் கொடுப்பது என்பது அதிகப்படியான சமாசாரம், எனக்கு அரசு பயணப்படி கொடுக்கிறது என்று சொல்லி அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன்.


அதற்கு அப்புறம் நடந்ததுதான் கிளைமாக்ஸ். நான் பஸ்சில் ஏறியதும் அவர்கள் அந்தப் பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து விட்டு டிக்கட்டையும் மீதி சில்லறையையும் என்னிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். கண்டக்டரிடம் நான் பணம் கொடுத்து டிக்கட் கேட்டால் கண்டக்டர் இந்த விவரத்தைச் சொல்லி, டிக்கட்டும் மீதி சில்லறையையும் என்னிடம் தந்தார். மலைவாழ் மக்களின் விருந்தோம்பும் பண்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.

  

11 கருத்துகள்:

  1. நாம் நகர வாசிகள், நம் பண்பாட்டை மறந்துவிட்டோம்! அவர்கள் மறக்கவில்லை!! நல்ல பதிவு ஐயா!

    பதிலளிநீக்கு
  2. இது போன்ற மக்களிடம் தான் இந்த வகியான விருந்தோம்பல், மனிதனை மனிதனாக மதிப்பது போன்ற பழக்கங்கள் இன்னும் இருக்கின்றன. !!! நல்ல அனுபவம் போலும்

    பதிலளிநீக்கு
  3. வாழ்வின் வழியில் எத்தனையோபேரை சந்தித்தும்
    இருக்கிறோம்.மறந்தும் இருக்கிறோம்
    இது போன்ற ஒரு சிலர்தானே காலம் கடந்தும் நம்முள்
    கற்சிலையாய் இருக்கிறார்கள்
    மனம் கவர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
  4. பண்ணைக்காடு என்னும் கிராமத்திற்கு நாங்களும் சென்றிருந்தோம்....

    மறுக்கமறுக்க இரண்டு பாட்டில் தேன் கொடுத்துவிட்டு பணம் வாங்க மறுத்துவிட்டார்கள்..

    தேனை விட தித்தித்தது அவர்கள் விருந்தோமபல்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனம் கொண்ட மனிதர்கள்....

    நகரத்து மனிதர்கள் இந்த பழக்கங்களை மறந்து பல நாட்களாக ஆகிவிட்டதோ எனத் தோன்றுகிறது....

    பதிலளிநீக்கு
  6. மலைவாழ் மக்களின் அன்புள்ளம் நெகிழ வைக்கிறது. தேனாக இனிக்கும் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இன்று நகர வாழ்க்கையில் பார்க்க முடியாத மனிதர்கள்....விருந்தோம்பல் என்பதே தமிழர்களின் மரபல்லபா....

    வீட்டுக்கு வருபவர்களை ”வாங்க” என்று அழைக்கும் பழக்கமே பல வீடுகளில் மறந்து கொண்டு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். நானே சில நண்பர்களின் வீட்டில் அனுபவித்து வருகிறேன். நண்பனுக்காக போகாமலும் இருக்க முடியவில்லை.

      நீக்கு
  8. மிகவும் வித்தியாசமான அனுபவம் சார்! அவர்களின் அன்பு நெகிழ வைத்தது உங்களை மட்ட்டுமல்ல சார்! இதைப் படிக்கும் எங்களையும் தான்!

    பதிலளிநீக்கு
  9. மலைவாழ்மக்களின் அன்பு எம்மையும் கட்டிப்போட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு