செவ்வாய், 23 அக்டோபர், 2012

பதிவுகளின் நோக்கங்கள்.


பதிவுலகம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழில் எழுதுபவர்கள் நிலையாக இல்லை. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற தொல்காப்பிய விதிப்படி பதிவுலகம் இயங்குகிறது.

நீண்ட காலமாக எழுதி வந்தவர்களும் கூட பல காரணங்களினால் காணாமல் போகிறார்கள். புதிதாக எழுத வருபவர்களும் நிறைய வருகிறார்கள். பலதரப்பட்டபதிவுகள் எழுதப்படுகின்றன. பதிவுகளின் தன்மைகளைப் பார்த்துக்கொண்டு இருந்ததில் எனக்குப் புலப்பட்ட சில கருத்துகளை இங்கே பதிகின்றேன்.

கதைகள், நகைச்சுவை, தகவல்கள், செய்திகள், விமரிசனங்கள், விவாதங்கள், அரசியல், சமூகப் பிரச்சினைகள், தனிநபர் பிரச்சினைகள் என்று பதிவு வகைகளின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. எல்லாவற்றையும் பார்க்கும்போது பொதுவான ஒரு நோக்கம் தெரிகிறது. முதலாவதாக, மக்கள் தங்கள் நினைவுகளை எழுத்தில் வடிக்க ஆசைப்படுகிறார்கள். வேறு வகையில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்ல ஊடகங்கள் இல்லாமையினால் இந்தப்பதிவு ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ஆக்க பூர்வமான செயலே ஆகும்.

இரண்டாவது அப்படி அவர்களது ஆக்கங்கள் பதிவில் வெளியாகும்போது அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக ஒரு அங்கீகாரம் தேவைப்படுகின்றது. பதிவுலகில் பின்னூட்டங்கள், வருகைகள், திரட்டிகளில் ஓட்டுகள் இப்படி அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. இதற்காக சில பல உத்திகளைக் கையாளுகிறார்கள். அப்படி அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பலர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

மூன்றாவது காரணம் அல்லது விளைவு முக்கியமானதாகும். பதிவுகள், படிப்பவர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த விழிப்புணர்வு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது. உதாரணத்திற்கு, இன்கம்டாக்ஸ் ஆபீசில் இருந்து வருவது போன்ற கடிதங்களை நம்பி ஏடிஎம் கார்டு நெம்பர்களைக் கொடுத்தால், உங்கள் கணக்கிலிருந்து பணம் எப்படித் திருடுகிறார்கள் என்று ஒரு பதிவு வெளியாகியது. இதைப் படித்தவர்கள் தங்களுக்கு இப்படி கடிதம் வந்தால் உஷாராகி விடுவார்கள் அல்லவா.

இப்படிப்பட்ட பதிவுகள் அதிகரிக்கவேண்டும். இப்படிப்பட்ட பதிவுகள்தான் சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்கும் உதவும். இப்படிப்பட்ட பதிவுகள் அவசியமானவை. ஆனால் அதனால் பெரிய சமுதாய மறுமலர்ச்சி நிகழ்ந்து விடும் என்று எண்ணவேண்டாம். காரணம் தமிழ்ப்பதிவர்கள் மொத்தமே பத்தாயிரத்திற்குள்தான். தினம் சுமாராக 300200இருநூறு பதிவுகள் போடப்படுகின்றன. இவைகளை ஏறக்குறைய மொத்தமாக ஒரு லட்சம் பேர் படிக்கக்கூடும்.

இந்த வாசகர்கள், சமுதாயத்தில் பெரிய மாற்றம் விளைவிக்கப் போதுமானதில்லை. இருந்தாலும் தமிழ் மக்களில் ஒரு சில பேராவது பயன் பெறுவார்கள் என்று நம்பித்தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. நானும் அந்த நம்பிக்கையில்தான் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. வாழ்க பதிவுலகம்.

24 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது உண்மைதான்.நீண்ட காலம் எழுதுவது என்பது எல்லோராலும் சாத்தியப் பாடாத ஒன்று.ஆர்வத்தின் காரணமாக ஆரம்ப காலங்களில் தொடர்ந்து பதிவு எழுத முடியும். பின்னர் தொய்வு ஏற்பட்டுவிடும்.எழுதப் படும் விஷயங்களில் சுவாரசியம் குறைய பார்வையாளர்களும் குறைந்துவிடுகிறது..
    சினிமா,நகைச்சுவை அரசியல் அதிகமாகப் பார்க்கப் படுவதால் அது தொடர்பான பதிவுகள் எழுதுபவர்கள். நீண்ட காலம் நிலைத்திருக்கிரார்கள்.
    என்னைப் போன்றவர்கள் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கப் போகிறோமோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. பதிவுலகம் குறித்து மிகச் சரியான பார்வை
    முறையான அலசல்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் சரியானதொரு முறையிலே தங்களின் கருத்து அமைந்திருக்கின்றது சகோ.!

    மக்கள் அங்கீகாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். பதிவுகள் புரிகின்றதோ இல்லையோ, பதிவில் பொருட்சுவையொடு இருக்கின்றதோ இல்லையோ பின்னூட்டமிட்டு திரட்டியில் புகழ்பெறுவதைத்தான் சிலர் செய்தும் கொண்டிருக்கின்றனர்.

    நாம் நம்மைச் சரி செய்வோம் என்ற நிலையோடு நின்று நோக்கும்,

    பதிலளிநீக்கு
  4. ஆக்க பூர்வமான பகிர்வுகள்..

    நம்பிக்கைதான் வாழ்க்கை. வாழ்க பதிவுலகம்.

    பதிலளிநீக்கு
  5. //தமிழ் மக்களில் ஒரு சில பேராவது பயன் பெறுவார்கள் என்று நம்பித்தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. நானும் அந்த நம்பிக்கையில்தான் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. //

    நானும் அந்த நம்பிக்கையில்தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.உங்களோடு சேர்ந்து நானும் வாழ்க பதிவுலகம் என உரக்க சொல்லுவேன்!

    பதிலளிநீக்கு
  6. என்னைப் பொறுத்தவரை வாழ்வில் இது ஒரு சிறு பகுதி (உலகம்...!!!) அவ்வளவு தான்...

    நன்றி... விழாக்கால வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கைதான் வாழ்க்கை.

    100% உண்மை. தொடர்ந்து எழுதுங்கள். எழுதுவோம்!

    பதிலளிநீக்கு
  8. ஐயா... நம்மாலான சிறிய விழிப்புணர்வையாவது பதிவுலகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற தங்களது நோக்கம் நிறைவேறவும் தாங்கள் மேலும் பற்பல பதிவுகளை எழுதவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் நண்பரே... சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுகள் வரவேற்கத் தக்கவை.... பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  10. பதிவு எழுதுவது கூட பெருசு இல்லைங்கயா அதை பாராட்டி ஒரு பின்னோட்டம் வரும்பாருங்க அது போதும்.
    ஐயா ஆயுத பூசை வாழ்த்துகள்.
    அப்படியே கம்பிட்டருக்கு பூசை போட்டுருங்க.

    பதிலளிநீக்கு
  11. சூரியன் போல நட்சத்திரங்கள் எல்லாம் தொடர்ந்து ஒளியை உமிழ்ந்துகொண்டே இருக்குமாம், ஒரு கட்டத்துக்கு அப்புறம் எரி பொருள் தீர்ந்துபோச்சுன்ன ரெட் ஜெயன்ட், சூப்பர்நோவா அது இதுன்னு மாறிப் போகுமாம். அது மாதிரி, பிரபலமா ஆகும் பதிவர்கள் பல பேர் கொஞ்ச காலத்துக்கப்புறம் போட்டுட்டு உட்கார்ந்திடறாங்க. ஏன்னுதான் தெரியலை.

    பதிலளிநீக்கு
  12. நல்லனவற்றைச் சொல்கிறோமோ இல்லையோ தீயனவற்றைப் பரப்பக் கூடாது என்பது 'எங்கள்' கொள்கை. மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பது எல்லாமே நூற்றுக்கு நூறு சரி.

    பதிலளிநீக்கு
  13. உண்மையான அலசல் ஐயா
    ஆனாலும் தனியே விழிப்புணர்வு மட்டும் எழுதிக்கொண்டிருப்பதென்பது நிறைய வாசகர்களுக்கு செல்லும் என்பதில் சந்தேகமே. சிலர் என்னடா இவன் ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டே இருக்கிறான் என்னு வலைப்பக்கம் வராமல் விட்டுவிடுவார்கள் அவர்கள் வராதது வலைத்தள உரிமையாளர்களுக்கு பிரச்சனையில்லை அந்த விழிப்புணர்வு அவருக்கு அவசியமாக இருக்கும் போது அந்த வாசகன் சுவாரஷ்யத்தை விரும்பி அந்தத் தலம் வராமல் விட்டால் அங்கு நஷ்டப்படுவது அந்த வாசகரே....

    அதனால்தான் சொல்கிறேன் எல்லா வகையான பதிவுகளையும் அளவோடு பகிர்ந்தால் நீண்ட காலம் இருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து

    பதிலளிநீக்கு
  14. மற்றொரு காரணத்தையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

    வேலைப்பளூவில் உருவாகும் மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள. விழிப்புணர்வை விட இது தான் முக்கியம். அடுத்து செயல்பட மனம் ரொம்பவே முக்கியம். வெளிநாட்டில் தமிழ் வாராந்திர இதழ்கள் கிடைக்காது. இணையத்தில் அந்த இதழ்களை படிக்க நேர்ந்தாலும் சிலருக்கு அது போதுமானதாக இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இந்த பதிவுலகம் தான் மிகப் பெரிய வரப்பிரசாதம். பலவிதமான கருத்துக்கள், ஆசைகள், ஏக்கங்கள், உரையாடல்கள் அத்தனையும் ஒரு புதிய பிம்பத்தையும், வாசிப்பவனின் மனதில் விதைக்கும். அதுவே அவனைக்கூட எழுத வைத்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா... நானும் திரு ஜோதிஜி சொல்வதை ஆமோதிக்கிறேன்.

      உண்மையில் புத்தகங்கள் கிடைக்கவில்லையே என்பதை விட
      தமிழில் யாருடனாவது பேச மாட்டோமா... என்று ஏங்கி இருக்கிறேன்.
      வலையில் பதிய ஆரம்பித்தபிறகு மற்றவர்கள் நம் கருத்தைப் படித்து
      பாராட்டியோ அல்லது எதிர்மறை கருத்தோ கூறும் பொழுது ஏதோ
      ஒரு சிலருடன் நாமும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு வருகிறது.

      தவிர மாற்றுக்கருத்துகளையும் அறிய முடிகிறது.
      கதையை எழுதி ஏதோ ஓர் இதழுக்கு அனுப்பி அது
      வெளிவந்த பிறகு கிடைத்த மகிழ்ச்சியை விட
      பதிவுலகில் நான் அதிகம் மகிழ்கிறேன்.

      அந்த மகிழ்ச்சியை வார்த்தையால் வர்ணிக்க முடியாது ஐயா.
      நன்றி.

      நீக்கு
  15. பத்திரிகை,தொலைக்காட்சி போன்றவைகளுக்கு வியாபார நோக்கம் முதன்மையாக இருப்பதாலும்,கட்சி சார்பு காரணமாகவும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில்லை.பதிவுலகம் இவற்றிற்கு மாற்றான ஒன்றாக இருக்கிறது என்பதோடு பல விதமான மனித உணர்வுகளின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறது.தற்போதைய நிலையில் குறைந்த எண்ணிக்கையில் பதிவுகள்,பார்வைகள் இருந்தாலும் எல்லோரும் கருத்து தெரிவிக்கும் சாத்தியமிருக்கும் ஒரே காரணம் கொண்டு மாற்றுக்கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளவும்,சமூக மாற்றங்கள் விளையும் சாத்தியங்கள் உண்டு.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. உண்மைதான் ஐயா, நானும்2009 இல் ஆரம்பித்துவிட்டு 2 மாதங்களுடன் எல்லாம் விட்டுவிடு போய்விட்டடேன். இப்ப மீண்டும்...ஆனால் இதில் கிடைக்கும் ட்திருப்பியே தனி. என்ற எழுத்தெல்லாம் எந்த பத்திரிகைக்கும் அனுப்பவில்லை....

    பதிலளிநீக்கு