நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது கடிதங்கள் எழுதுவது பற்றி சில சட்டங்கள் இருந்தன. ஒரு காகிதத்தை எடுத்தால் அதில் உள்ள எல்லா வெற்றிடத்திலும் காலி விடாமல் எழுதக் கூடாது என்பது முதல் பாடம்.
மேலும் கீழும் போதுமான இடம் விடவேண்டும். இடது பக்கம் இரண்டு விரற்கடை அளவு "மார்ஜின்" (Margin) விடவேண்டும். வலது பக்கத்திலும் குறைந்தது ஒரு விரற்கடை அளவாவது இடம் விடவேண்டும். இவையெல்லாம் அந்த கடிதத்தை சிரமமில்லாமல் படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை.
பள்ளிக்குழந்தைகளுக்கு இந்த தத்துவத்தை மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவேதான் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் மார்ஜின் கோடுகள் போடப்படுகின்றன. தட்டச்சு இயந்திரங்களில் தட்டச்சு செய்தாலும், கணினியில் தட்டச்சு செய்தாலும் ஒரு அச்சிட்ட பக்கத்தில் மேல், கீழ், இடது, வலது ஆகிய நான்கு பக்கங்களிலும் போதுமான இடம் வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
புத்தகங்கள் அச்சிடும்போதும் இதே விதிகள் கடைப் பிடிக்கப்படுகின்றன. நான் முதுகலைப் படிப்பு படிக்கும்போது எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இந்த விதி கடுமையாக கவனிக்கப்படும். இந்த விதிகளுக்குப் புறம்பாக இருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
அதே போல் வரிகளுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். இவையெல்லாம் படிப்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிகள். ஒரு வரி இவ்வளவு அகலம்தான் இருக்கலாம் என்றும் கணக்குண்டு. ஏனெனில் ஒரு வரியைப் படித்த பின் அடுத்த வரிக்கு வரும்போது வரிகளைத் தெளிவாக அறியும்படி இருக்கவேண்டும்.
பதிவுலகில் எழுதும் பதிவர்கள் தாங்கள் மட்டுமே படிப்பதற்காக எழுதுவதில்லை என்று நம்புகிறேன். அப்படி இல்லாமல் மற்றவர்களும் படிக்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்களாயின் இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கடைப்பிடித்தால் படிப்பவர்கள் சிரமமில்லாமல் படிப்பார்கள்.
இந்தப்படத்தைப் பார்க்கவும்.
இப்படிக் கொச கொசவென்று எழுதினால் படிப்பதற்குள் கண் வலி வந்து விடும்.
இன்னொரு தளம் பாருங்கள்.
ஒரு வரியைப் படித்து விட்டு அடுத்த வரி வருவதற்குள் வரி மாறி விடுகிறது. கொஞ்சம் அகலத்தைக் குறைத்தால் என்ன? கூகுள்காரன் இலவசமாக இடம் கொடுக்கிறான் அதில் கொஞ்சம் தாராளம் காட்டினால் என்ன?
தளம் முழுவதும் இடமிருந்து வலமாக முழு கணினி திரையையும் நிரப்பவேண்டுமா, என்ன?
நான் ஒரு பழமைவாதி. என்னால் இந்த மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.