சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் எதிர்காலம்


அவர்கள் -உண்மைகள் பதிவின் ஆசிரியர் "இந்தியாவின் எதிர்காலம்" என்பதைப் பற்றி என் கருத்துகளைக் கேட்டார்.
http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html

என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவன் என்கிற நிலையில் நான் இந்திய நாட்டின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டு வருகிறேன்.

இந்தியா சுதந்திரம் வாங்கியபோது இருந்த ஜனத்தொகை 33 கோடி. இன்று இருப்பது 120 கோடி. ஜனத்தொகை குறைவாக இருந்த காலத்தில் உணவுப் பஞ்சம் அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. கடைசியாக வந்த உணவுப் பஞ்சம் 1943 ம் வருடம் என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு ஜனத்தொகை பலமடங்கு பெருகியிருந்த போதிலும் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை.

இது விவசாயத்துறையில் ஏற்பட்ட மகத்தான புரட்சி. அதே போல் தொழில் துறையிலும் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டில் இருந்த கார்கள் இரண்டேதான், பியட் மற்றும் அம்பாசிடர் மட்டும்தான். இன்று எத்தனை வகை கார்கள், மற்ற கனரக வாகனங்கள், சிறு சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என்று அந்த துறையிலேயே இருப்பவர்களுக்கு கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

ஆடை உலகிலே நாட்டில் பெரும் புரட்சியே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். பருத்தியிலிருந்து நூல் நூற்பதிலிருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாவது வரை, நடந்துள்ள மாற்றங்கள் மிகவும் வியக்கத்தக்கதாகும்.

இவ்வாறே கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலைகள் ஆகியவைகளும் பன்மடங்கு முன்னேற்றமடைந்துள்ளன. தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அபரிமிதமானதாகும்.

தனி மனிதனின் பொருளாதார வசதிகள் பன் மடங்கு பெருகியிருக்கின்றன. நல்ல வீடு, நல்ல துணிகள், வாகன வசதி என்று ஒவ்வொருவரும் முன்னேறியிருக்கிறார்கள். ஜனத்தொகை இன்று பலமடங்கு பெருகியிருந்த போதிலும் அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆள் தேவை என்ற அறிவிப்புப் பலகை தென்படுகிறது.

இந்த மாற்றங்களெல்லாம் நாடு முன்னேறுவதைக் குறித்தாலும் சில எதிர்மறை சக்திகள் இந்தியா வல்லரசாகும் வாய்ப்பைத் தடுக்கின்றன.

அதில் முதலிடம் வகிப்பது இந்நாட்டின் அரசியல். இதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

அடுத்தது ஊழல். இதற்கு முன்னோடிகள் யாரென்று தனியாகச் சொல்லவேண்டிதில்லை.

கடைசியாக மக்களின் ஒழுக்கம். இது சீர்கெட்டு வருவதை அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்திய மக்களுக்கு என்று எந்த வித ஒழுக்க அடையாளங்களையும் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.

இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா என்றோ வல்லரசு வரிசையில் சேர்ந்திருக்கும். இந்தக் குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.

33 கருத்துகள்:

  1. எனது வேண்டுகோளை ஏற்று பதிவு எழுதியதற்கு மிகவும் நன்றி

    பதிலளிநீக்கு
  2. இந்தியாவின் முன்னேற்றத்தை தடுப்பது அந்நிய சக்திகள் அல்ல இந்தியாவில் உள்ள சக்திகள்தான் அதை தடுக்கின்றன என்று தெளிவாக சுட்டிகாட்டியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  3. ஒட்டபந்தியத்தில் ஒடும் வீரனை அரசியல் ஊழல் ஒழுக்கம்கெட்ட மக்கள் என்ற மூன்று பேர் பிடித்து இழுத்தும் அதனையும் மீறி அவர்களையும் சேர்த்து இணைத்து போட்டி போட்டு கொண்டு இருப்பவன் சிறந்த வீரந்தான் அவனுக்கு நாம் தலைவணங்கி இந்த ஆகஸ்டு 15 ல் மரியாதை செலுத்துவோம் வாழ்க இந்தியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரனுக்கு தலை வாங்குவதும் ஊக்குவிப்பதும் அவசியம்தான், ஆனால் அவன் கால்களை பிடித்து இழுக்கும் ஈன இழி சக்திகளை ஒழிப்பது அதைவிட இன்றியமையாதது. சிந்திப்போமா?

      நீக்கு
  4. //நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.//

    உண்மை, உண்மை, உண்மை.

    இந்தியாவின் எதிர் காலம் மிகச்சிறப்பாக மட்டுமே இருக்கும்.

    இது மிகவும் அழகான அலசல் கட்டுரை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அரசியலில் இன்றும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை மக்கள் ஆதரித்து, ஆட்சி அமைக்கச்செயதால் நல்லது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. ஊழல் இல்லாத ஆட்சியே கிடையாது. மிகச்சிறிய அளவில் ஆங்காங்கே இருந்து வந்துள்ளது.

    இப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிகளுக்கும், ஜனத்தொகைக்கும் ஏற்ப, பணத்தின் வேல்யூ குறைந்து விட்டதாலும், ஊழலாகிய அவைகளும் கோடிக்கணக்காகப் பெருகியுள்ளது.

    உடனுக்குடன் தகுந்த தண்டனைகளும் அளிக்கப்படுவது இல்லை. அதனால் ஊழல் செய்ய யாரும் அஞ்சுவது இல்லை.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. //கடைசியாக மக்களின் ஒழுக்கம். இது சீர்கெட்டு வருவதை அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்திய மக்களுக்கு என்று எந்த வித ஒழுக்க அடையாளங்களையும் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.//

    இத்தகைய ஒழுக்கக்கேடுகள் காலம் காலமாகவே இருந்து வந்துள்ளன. இன்றும் ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு இவை பல இடங்களிலும் பரவித்தான் உள்ளன. மனிதர்களில் பெரும்பாலோர் மிருகங்களையும் விட கேடு கெட்டவர்களாகவே தான் உள்ளனர்.

    இதைப்பற்றியெல்லாம் வாய் கிழியப்பேசலாம். நடைமுறைப்படுத்துவது சாத்தியமே இல்லாதது.

    காலம் காலமாகத் தொடர்ந்து வரும் இவை பற்றியச் செய்திகள் பெரும்பாலும் மானத்திற்கு அஞ்சி ஆங்காங்கே மறைக்கப்பட்டு வந்தன. இப்போதும் பெரும்பாலான செய்திகள்.மறைக்கப்பட்டுத்தான் வருகின்றன.

    ஊடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியால், ஒவ்வொரு சிறிய ஒழுக்கக்கேடுகளும், இப்போதெல்லாம் பூதாகாரமாகக் காட்டப்பட்டு வருகின்றன.

    சினிமாவிலும், தொலைகாட்சியில் வரும் பல ஆபாசங்களும், வன்முறைக்காட்சிகளும் முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் ஒழுக்கக்கேடுகள் குறைய கொஞ்சமாவது வாய்ப்பாக அமையும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. இதுபோன்ற எவ்வளவு குறைபாடுகள் இருப்பினும் இந்தியா ஒருநாள் வல்லரசு ஆகப்போவது நிச்சயம்.. அதை நம் காலத்தில் பார்ப்போமா என்பது மட்டும் நிச்சயமில்லை.

    அனைவரும் நல்லதையே நினைப்போம்.

    நல்லதே நடக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  9. தாங்கள் கூறிய மூன்றாவது குறைபாட்டினையே முதல் குறைபாடாக எண்ணுகின்றேன் ஐயா. தனி மனித ஒழுக்கம் முன்னேற்றமடையுமானால், நாடு தானே வல்லரசாக மாறும் என நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. இந்தியவின் முன்னேற்றத்தைக் கெடுக்கும்
    முக்கைய மூன்று விஷக் கிருமிகளை
    மிகச் சரியாக அடையாளம் காட்டியது
    எனக்கும் உடன்பாடானதே

    பதிலளிநீக்கு
  11. மக்களின் ஒழுக்கமும், பகுத்தறிவுமே மிக பெரிய சவால். இரண்டும் இல்லாததால் தான் லஞ்சமும், ஊழலும் பெருகின. அதனால் தானே ஒழுக்கமற்றோர் அரசியலில் புகுந்து ஆட்டுவிக்கின்றனர். அரசியல் கேடு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் ஆனால் தனி மனித நல் ஒழுக்கத்தையும், பகுத்தறிவையும் பரப்ப வேண்டும்..

    பதிலளிநீக்கு
  12. ஒழுக்கமான மக்கள் அரசியலுக்கு வந்தால் ஊழலே இருக்காது. அந்த நாள் வருமென நம்புவோம். நாட்டின் நிலையை சரியாய் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ஊழலை விடுங்கள். தனிமனித ஒழுக்கம் இல்லாதிருப்பது நாட்டின் பெரிய சாபக்கேடு. யாரும் பார்க்கவில்லை, கேட்க ஆளில்லை என்றால் எந்த விதிகளையும், கட்டுப்பாட்டையும் மீறக் கூடிய நிலையில் இருக்கிறது நாட்டின் நிலை.

    ஹிஹி தமிழ்மணம் 3 வது வோட்டு நாந்தேன்.....!!!!!

    பதிலளிநீக்கு
  14. தனிமனிதனின் சுயநலமும் ,பேராசையும் ஒழிந்தால் தான் சாத்தியம் .

    பதிலளிநீக்கு
  15. இந்தியாவின் மூன்று பெரிய குறைகளை சரியாக அடையாளம் காட்டிய பதிவு.....

    பதிலளிநீக்கு
  16. தனிமனித சுதந்திரம் பற்றி எழுதி பேசி தள்ளியாகிவிட்டது.நிறைய "லெட்டர் பேடு " இயக்கங்களும் கூட உள்ளன,ஆனால் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இல்லவேயில்லை.அது தானாக வந்துவிடுவதில்லையே,அதிகம் கல்வி அறிவு பெற்றவர்களும் கூட தனிமனித ஒழுக்ககேட்டுடன் பெரிய அந்தஸ்தில் இருப்பதைபார்க்கிறோம்.

    தனிமனித ஒழுக்கம் அனைவருக்கும் குறைந்த பட்சமாவது இருக்குமானால் ஊழலும் லஞ்சமும் இன்றைய மிக உயரமான நிலையில் இருந்திருக்காது.

    அனைத்தையும் அரசாங்கமே தரவேண்டும் என்ற எண்ணம் ஏழைகள்,பணம் படித்தவர்களிடமும் நிறைய உள்ளது. இந்தியர்கள் மனதளவில் நிறைய மாறவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தியர்கள் மனதளவில் நிறைய மாறவேண்டும்//
      உண்மை.இதுவும் மிக அவசியமானது.

      நீக்கு

  17. நிறைகளை கூறியபின் குறைகளைச் சுட்டிக்காட்டும் முறை ரசித்தேன். இருக்கும் குறைகள் இல்லாமல்போக்க முடியாது. ஆனால் தனிமனிதரின் ஒழுங்கு குறைகள் குறைய வழி வகுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு! இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் மூன்று அழிவு சக்திகளான அரசியல், ஊழல், ஒழுக்கக் கேடு இவையும் தாண்டி முன்னேறும் என்ற தங்கள் நம்பிக்கை சிறப்பு! நம்புவோம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. நல்ல கட்டுரை.
    மக்கள் ஜ‌ன பெருக்கத்தை கட்டுபடுத்தி ஆக குறைந்தது பொலிஸஂ, மற்றும் அரச ஊழியர் அளவில் ஊழலை முற்றாக ஒழித்து, மக்களும் சிறிது பகுத்தறிவு,அடிப்படை பகுத்தறிவு பெற்றால் தனது மக்களுக்கு உலகிலேயே மிக சிறந்த வாழ்கை வழங்கும் நாடுகளில் ஒன்றக இந்தியா எதிர்காலத்தில் வரும். அப்போது இந்திய குடியுரிமையை தூக்கி எறிந்தவங்க கூட இந்திய குடியுரிமையை மறுபடியும் எப்படி பெறுவது, எப்படி விண்ணப்பிக்கலாம் என்று சிந்திப்பாங்க. இலங்கையோ, எந்த நாடோ, இந்தியனுக்கு குடியுரிமையை வழங்கலில்லையே துரத்திட்டாங்களே என்று அழுது புலம்பும் தற்போதைய நிலை மாறி இந்தியர்கள் வேறுநாட்டு குடியுரிமை எடுக்க மாட்டாங்க,அவங்களுக்கு அப்படியான எந்த தேவையும் இல்லை என்ற நிலை வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. சமூகத்தில் உள்ள மக்களில் கணிசமானோரின் ஒழுக்க சீர்கேடுதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிய தடைக்கல். பெற்றோரும் கல்விக்கூடங்களும் இதை நன்கு உணர்ந்து ஆவன செய்ய வேண்டும். நீதித்துறை செவ்வனே செயல் படாதது மற்றொரு முக்கிய காரணம். வளமான சட்டங்கள் இருந்தும் , தகுந்த நேரத்தில் வழக்குகள் முடிவதில்லை.இவை ஒழுக்க சீர்கேட்டை ஊக்குவிக்கிறது. ஊடகங்கள் வியர்தத்திற்கு துணை போகின்றன.- பாபு

    பதிலளிநீக்கு
  21. அருமையான பகிர்வு... அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... நாமும் வல்லரசாவோம்...

    பதிலளிநீக்கு
  22. குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.

    உற்சாகமளிக்கும் செய்திகள்..

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான கருத்துக்கள் . என்னையும் இந்தத் தலைப்பில் எழுதப் பணித்திருக்கிறார் அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன். . ஆகஸ்டு 15 அன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா என்றோ வல்லரசு வரிசையில் சேர்ந்திருக்கும். இந்தக் குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.//

    சரியாக சொன்னீர்கள்.

    ஆனால் இதில் இன்னொரு ஆச்சர்யமும் உள்ளது. உலகில் இத்தனை விதமான மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், ஏற்றதாழ்வுகள் கொண்ட நாடு வேறெங்காவது உள்ளதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் இத்தனை வேறுபாடுகள் இருந்தும் சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் ஒரே நாடாக இருக்கின்றோமே அதுவே ஒரு பெரிய சாதனைதான். யார் என்னதான் சொன்னாலும் என்னுடைய வாழ்க்கையிலேயே நான் கனவில் கருதியிராத பல மாற்றங்களை, முன்னேற்றங்களை நான் கண்டிருக்கிறேன் என்றுதான் சொல்வேன். எத்தனையோ வளர்ந்த நாடுகள் எட்டிப்பிடிக்காத நிலையை நாம் பல துறைகளிலும் கண்டிருக்கிறோம் என்பதும் உண்மை. குறிப்பாக குறைந்த செலவில் நல்ல தரமுள்ள மருத்துவ சேவை அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதைக் காட்டுகிறது. அதே போல விண்வெளி ஆராய்ச்சி, சுயமாக சாட்டிலைட்டுகளை வடிவமைத்து அவற்றை விண்வெளியில் ஏவும் திறன். ஆகவே நீங்கள் சொன்னதுபோன்று இந்தியா இனியும் மேலும் முன்னேறுவது உறுதிதான். ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இருப்பது ஒரு குறைதான் என்றாலும் அவற்றையும் மீறி முன்னேறுவது நமக்கு வாடிக்கையாகி விட்டது. இப்படி நம் நாட்டின் நல்ல முகத்தை அடிக்கடி வெளிக்காட்டும் சிந்தனைகள் மிக, மிக அவசியம்.

    பதிலளிநீக்கு
  25. சரிய சொல்லி இருக்கீங்க இந்த மூன்றும் இந்தியாவில் இருந்து அகற்ற பட வேண்டும் குடிமக்கள் அனைவரும் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
  26. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  27. லஞ்சம் கொடுப்பதை தவிர்த்தால் லஞ்சம் வாங்குவது தவிற்கப்படும்.துரிதப் படுத்த வேண்டும் என்ற இச்சை லஞ்சம் கொடுக்க தூண்டுகிறது. நமது முறை வரும்வரை காக்கும் பண்பாடு வளர்ந்தால் ஊழல் ஒழியும். இதனை இந்த சுதந்திர தின கோட்பாடாய் கொள்வோமாக. தனி மனித நல் ஒழுக்கம் வளர வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு