நம் நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம் நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 மார்ச், 2016

11. விவசாய மகாநாட்டின் தீர்மானங்கள்


ஐந்தாம் நாள் எல்லோரும் காலை பத்து மணிக்கு மகாநாட்டுப் பந்தலில் கூடினோம். ஏறக்குறைய அனைத்து முதல் மந்திரிகளும் தங்கள் தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். அந்தந்த மாநில விவசாய அதிகாரிகளும் விவசாயிகளும் மட்டுமே பந்தலில் இருந்தார்கள். ஓரிரு விவசாய மந்திரிகள் கண்ணில் பட்டார்கள்.

நான் பிரதம மந்திரியைப் பார்த்து நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல் நமது முதலமைச்சர்களுக்கு உண்டான அக்கறையைப் பார்த்தீர்களா என்றேன். அவர் தலையில் அடித்துக் கொண்டு நீங்கள் ஒரு முறை இவர்களைப் பார்த்ததுமே இப்படி அலுத்துக் கொள்கிறீர்களே, நான் அன்றாடம் இவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கிறேனே, என்னுடைய நிலையை யோசித்துப் பாருங்கள் என்றார். ஆமாங்க, உங்கள் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்கு உரியதுதான் என்றேன்.

 மகாநாட்டு அலுவல்கள் தொடங்கின. பிரதம மந்திரி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்து சொன்னதாவது. இப்போது நாம் இங்கு ஓரு விவசாயப் புரட்சி செய்யப் போகிறோம். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சாக நின்று விடப்போவதில்லை. அவைகள் உடனடியாக அமுலுக்கு வரப்போகின்றன. அதில் சந்தேகம் வேண்டாம். இப்போது தீர்மானங்களை நிதி மந்திரி முன்மொழிவார்.

நிதி மந்திரி எழுந்து தீர்மானங்களை ஒவ்வொன்றாக முன் மொழிந்தார்.

1. நம் தேவலோகத் தூதுவர் வருண பகவானிடம் போட்டுள்ள ஒப்பந்தப்படி இனிமேல் இந்தியாவில் மாதம் மும்மாரி பெய்யும். அனைத்து ந்திகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஓடும். எந்த ஆற்றிலும் நகரக் கழிவு நீரோ அல்லது தொழிற்சாலைக் கழிவு நீரோ கலக்காது. அவற்றிற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

2. விவசாயம் தொழில்துறையாக அறிவிக்கப்படுகிறது. தொழில் துறை நிறுவனங்கள் செயல்படும் விதத்திலேயே இனிமேல் விவசாயமும் செயல்படும். அதில் முக்கியமான செயல்பாடு, உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்தல். உற்பத்திச் செலவுகளுக்கு மேல் 20 சதம் அதிகம் வைத்து விலை நிர்ணயிக்கப்படும். இந்தியா முழுவதும் விளை பொருட்களின் விலை ஒரே மாதிரி இருக்கும். வியாபாரிகள் கொள்முதல் விலைக்கு மேல் 20 சதம் மட்டுமே லாபம் வைக்கலாம்.

3. விவசாய விளை பொருட்களை சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராவிட்டால் அந்தப் பொருட்களை அரசே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளும். அதிக விளைச்சல் வரும்போது விலை இல்லையே என்று எந்த விவசாயியும் கவலைப்படவேண்டியதில்லை.

4. விவசாயம் இனி நவீன தொழில் நுட்பங்களுடன் நடைபெறும்.வேலைகளை சுலபமாக்கும் நவீன கருவிகள் உபயோகிக்கப்படும். விவசாய வேலைகள் இனிமேல் நன்கு பயிற்சி பெற்ற தொழில் நிபுணர்களால் செய்யப்படும். அவர்களை பயன்படுத்த அந்தந்த கிராமங்களில் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

5. இயற்கை வழி விவசாயமே இனி கடைப்பிடிக்கப்படும். நச்சு கலந்த பூச்சிக்கொல்லிகள் உபயோகப் படுத்தப்படமாட்டாது. மண்வளம் பாதுகாக்கப்படும். காடுகளை எக்காரணம் கொண்டும் யாரும் அழிக்க முடியாது. அவைகளின் பரப்பளவு அதிகரிக்கப்படும். விவசாய நிலங்களை இனி வேறு எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.

6. வருடம் முப்போகம் விளைவதில், ஒரு போகம் பசுந்தாள் உரப் பயிர்களுக்காக ஒதுக்கப்படும். இதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.

7.இயற்கை உரங்களை அரசே தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கும்.
குறிப்பாக மனிதக் கழிவுகள் வீணாகாமல் உரம் தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும்.

8. மக்களுக்கு வேண்டிய தரமான, கலப்படமில்லாத உணவுப்பொருட்கள் ஆங்காங்கே நிறுவப்படும் அரசு அங்காடிகள் மூலமாக விற்கப்படும்.

9. முக்கியமான மற்றொரு தீர்மானம். விவசாயிகளின் கடன்கள், அவர்கள் எங்கு வாங்கியிருந்தாலும் சரி, அவைகள் மொத்தமாக ரத்து செய்யப்படுகின்றன.  இனிமேல் அவர்களுக்கு விவசாய வேலைகளுக்குத் தேவையான நிதி வட்டியில்லாக் கடனாகக் கொடுக்கப்படும்.

மத்திய விவசாய மந்திரி இந்தத் தீர்மானங்களை வழி மொழிந்தார்.

இந்தத் தீர்மானங்களைக் கேட்ட மகாநாட்டுக்கு வந்திருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்த சத்தம் கேட்டு வானத்திலிருந்து மும்மூர்த்திகளும் வந்து விட்டார்கள். நல்ல விஷயங்கள்தான் நடக்கிறது என்று அறிந்து கொண்டு ஊர் திரும்பினார்கள்.

இப்படியாக மாநாட்டுத் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின.

கடைசியில் பேசிய பிரதம மந்திரி கூறியதாவது.

அனைத்து விவசாய மந்திரிகளும் விவசாய அதிகாரிகளும் இந்த தீர்மானங்களை அமுல் படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பார்கள். இந்த நடைமுறைகளில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க விவசாய நிபுணர்கள் கொண்ட அனைத்திந்திய கமிட்டி ஒன்று 24 மணி நேரமும் செயல்படும்.

இவ்வாறு விவசாய மகாநாடு முடிவுக்கு வந்தது.

மகாநாடு முடிந்தவுடன் சில பத்திரிகை நிருபர்கள் சில சந்தேகங்களை கேட்டார்கள். விவசாயப்பொருட்களுக்கு இவ்வாறு விலை வைத்தால் அந்தப் பொருட்களை மக்களை வாங்குவார்களா என்று கேட்டார்கள். அதற்கு நிதி மந்திரி சொன்னார். இப்போதுள்ள லகுவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையில் இருப்பதால் மக்களின் தனிப்பட்ட பொருளாதாரம் வெகுவாக முன்னேறியுள்ளது.

விவசாயம் தவிர அனைத்துத் துறைகளிலும் பொருட்களின் விலை, வேலையாட்களின் கூலி ஆகியவை பன்மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால் விவசாயத்துறையில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. ஏனென்றால் இன்றைய சந்தை நிலவரப்படி விவசாயி ஆட்களுக்கு கூலி கொடுக்க முடிவதில்லை. ஏன்? அவன் விளைவிக்கும் பொருளுக்கு சந்தையில் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. இப்படியே இருந்தால் விவசாயம் அழிந்து போய்விடும்.

ஏன் விவசாயம் மட்டும் இப்படி இருக்கவேண்டும்? கணினித்துறையில் ஒருவன் 50000 ரூபாய் சாதாரணமாக சம்பளம் வாங்குகிறான். தொழில் துறையில் மேலாளராக இருப்பவனுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். கட்டிடத்துறையில் சாதாரண மேசனுக்கு 600 - 700 என்று சம்பளம். அவன் நான் ஏன் வாரம் முழுவதும் வேலைக்குப் போகவேண்டும்? இரண்டு நாள் போனால் என்னுடைய ஒரு வாரத்தேவைக்கான பணம் கிடைத்துவிடுகிறது என்கிறான்.

விவசாயிதான் ஊருக்கு இளைத்தவனா? அவன் எப்பொழுதும் கிழிந்த வேட்டியுடன்தான் இருக்கவேண்டுமா? அவன்தானே எல்லோருக்கும் உணவு உற்பத்தி செய்து கொடுக்கிறான்? அவன் உற்பத்தியை நிறுத்தி விட்டால் மக்கள் எதைச் சாப்பிடுவார்கள்?

மற்ற தொழில்களில் உற்பத்தி செய்ய்ப்படும் பொருட்களின் விலையை மட்டும் அவ்வப்பொழுது அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு செல்போனின் விலை 40000 ரூபாய் என்கிறார்கள். பெட்ரோல் விலை வாரத்திற்கு ஒரு முறை ஏறுகிறது. எங்காவது வாகன நெருக்கடி குறைந்துள்ளதா?

இதற்கெல்லாம் செலவு செய்யத் தயங்காத மக்கள் தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்களுக்கு, கட்டுப்படியாகும் விலை கொடுக்க ஏன் தயங்கவேண்டும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் என்றால் 50000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் கொடுப்பதற்கென்ன? மார்க்கெட்டில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் முருங்கைக் காயை விவசாயியிடமிருந்து வியாபாரிகள் என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

முந்தின நாள் இரவு குடித்த பானங்களின் வயிற்றெரிச்சல் தீர தினமும் காலையில் ஒரு இளனி 20 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறார்களே, அதில் அதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு எவ்வளவு சேருகிறது என்று தெரியுமா? வெறும் ஐந்து ரூபாய மட்டுமே.

தக்காளி சீசனில் அமோகமாக விளைந்துவிட்டால் அதைப் பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் செலவிற்கு கூட வியாபாரிகள் விலை கொடுப்பதில்லை என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

விவசாயியும் ஒரு மனிதன்தானே? இந்திய நாட்டின் குடிமகன்தானே? ஒரு கட்டிடத்தொழிலாளி வாங்கும் கூலியாவது அவனுக்குக் கிடைக்கவேண்டாமா? அவனும் மானமாக வாழ வழி வேண்டாமா? தற்கொலை செய்து கொள்ளத்தான் அவன் பிறந்தானா?

மக்களே யோசியுங்கள்.


இப்படியாகவே தொழில் துறை, கல்வித்துறை ஆகியவற்றிற்கும் அடுத்தடுத்து மகாநாடுகள் நடத்தப்பட்டன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் பதிவுலக மக்களின் ஆர்வக்குறைவே.

ஆகவே பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்போகிறேன்.

எதிர் பாருங்கள் - தேவலோக சுற்றுலா

சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் எதிர்காலம்


அவர்கள் -உண்மைகள் பதிவின் ஆசிரியர் "இந்தியாவின் எதிர்காலம்" என்பதைப் பற்றி என் கருத்துகளைக் கேட்டார்.
http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html

என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவன் என்கிற நிலையில் நான் இந்திய நாட்டின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டு வருகிறேன்.

இந்தியா சுதந்திரம் வாங்கியபோது இருந்த ஜனத்தொகை 33 கோடி. இன்று இருப்பது 120 கோடி. ஜனத்தொகை குறைவாக இருந்த காலத்தில் உணவுப் பஞ்சம் அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. கடைசியாக வந்த உணவுப் பஞ்சம் 1943 ம் வருடம் என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு ஜனத்தொகை பலமடங்கு பெருகியிருந்த போதிலும் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை.

இது விவசாயத்துறையில் ஏற்பட்ட மகத்தான புரட்சி. அதே போல் தொழில் துறையிலும் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டில் இருந்த கார்கள் இரண்டேதான், பியட் மற்றும் அம்பாசிடர் மட்டும்தான். இன்று எத்தனை வகை கார்கள், மற்ற கனரக வாகனங்கள், சிறு சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என்று அந்த துறையிலேயே இருப்பவர்களுக்கு கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

ஆடை உலகிலே நாட்டில் பெரும் புரட்சியே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். பருத்தியிலிருந்து நூல் நூற்பதிலிருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாவது வரை, நடந்துள்ள மாற்றங்கள் மிகவும் வியக்கத்தக்கதாகும்.

இவ்வாறே கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலைகள் ஆகியவைகளும் பன்மடங்கு முன்னேற்றமடைந்துள்ளன. தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அபரிமிதமானதாகும்.

தனி மனிதனின் பொருளாதார வசதிகள் பன் மடங்கு பெருகியிருக்கின்றன. நல்ல வீடு, நல்ல துணிகள், வாகன வசதி என்று ஒவ்வொருவரும் முன்னேறியிருக்கிறார்கள். ஜனத்தொகை இன்று பலமடங்கு பெருகியிருந்த போதிலும் அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆள் தேவை என்ற அறிவிப்புப் பலகை தென்படுகிறது.

இந்த மாற்றங்களெல்லாம் நாடு முன்னேறுவதைக் குறித்தாலும் சில எதிர்மறை சக்திகள் இந்தியா வல்லரசாகும் வாய்ப்பைத் தடுக்கின்றன.

அதில் முதலிடம் வகிப்பது இந்நாட்டின் அரசியல். இதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

அடுத்தது ஊழல். இதற்கு முன்னோடிகள் யாரென்று தனியாகச் சொல்லவேண்டிதில்லை.

கடைசியாக மக்களின் ஒழுக்கம். இது சீர்கெட்டு வருவதை அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்திய மக்களுக்கு என்று எந்த வித ஒழுக்க அடையாளங்களையும் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.

இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா என்றோ வல்லரசு வரிசையில் சேர்ந்திருக்கும். இந்தக் குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.