திங்கள், 19 ஆகஸ்ட், 2013

புலம்பல் எங்களது பிறப்புரிமை.


வீட்டில் வயதானவர்கள் இருந்தால் நீங்கள் இதை அனுபவித்திருப்பீர்கள். "அந்தக் காலத்தில ரூபாய்க்கு மூன்று படி அரிசி வித்தப்போ" என்று ஆரம்பித்தால் நான்-ஸ்டாப்பாக மூன்று மணி நேரம் அந்த பிரசங்கம் ஓடும்.

வயதானவர்கள் மட்டும்தான் புலம்புகிறார்கள். இளம் வயதில் புலம்புவர்கள் மிகவும் அரிது. ஏன் இப்படி வயதானவர்கள் மட்டும் புலம்புகிறார்கள் என்று (எனக்கும் வயதாகிவிட்டதால்) ஒரு ஆராய்ச்சி செய்தேன். அதில் கண்டு பிடித்த உண்மைகளை உங்களுக்குச் சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும்போல் இருக்கிறது. அதனால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமெல்லாம் என்ற தத்துவப்படி உங்களையும் வாதிக்கிறேன்.

இளம் வயதுக்காரர்கள் ஏதாவது ஒரு வேலையில் இருப்பார்கள். தவிர குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கும். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு வேறு எதிலும் சிந்தனை இருக்காது.

வயதாகி ரிடையர் ஆகி வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மனது வேலை செய்து கொண்டேயிருக்கும். அப்போது பேசுவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். மனதின் எண்ணங்களை செயல்படுத்தும் தென்பும் போயிருக்கும். வாய் மட்டும் வேலை செய்யும். அப்போது நிகழ்வதுதான் இந்தப் புலம்பல்.

மனதின் எண்ண ஓட்டங்களை வாய் வழியாக வெளியில் வருகின்றன. மற்றவர்கள் இதைக்கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, இந்தப் புலம்பல் நடந்துகொண்டே இருக்கும்.

இரண்டாவது, அவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் முன் வருவதில்லை. எனக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது. ஒரு பயலும் என்னிடம் யோசனை கேட்க மாட்டேன் என்கிறானே என்பதுதான் பெரும்பாலானவர்களின் புலம்பலாக இருக்கும். காலம் மாறி விட்டது. அவர்களின் பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர மறுப்பதுதான் இந்தப் புலம்பலுக்கு காரணம்.

இன்று மூன்று வயதுக் குழந்தை இன்டர்நெட்டில் விளையாடுகிறது. செல் போன் பேசுகிறது. விமானத்தில் பயணிக்கிறது. இந்த கிழங்கள் எல்லாம் தங்கள் இளம் வயதில் விமானம் பறப்பதை வாயில் ஈ புகுவது தெரியாமல் வேடிக்கை பார்த்த கேஸ்கள். பேரன் விமானத்தில் போனதைப் பற்றிப் பேசினால், ஆஹா, நாங்கள் பார்க்காத விமானமா, ராமன் காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்ததாக்கும் என்று ஆரம்பிப்பார்கள். பேரன் அப்போதே ஓடிப்போய் விட்டிருப்பான். ஆனாலும் இவர்கள் அவன் முன்னால் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு தங்கள் பிரலாபத்தை இரண்டு மணி நேரம் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கேஸ்களை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் காலத்தில் கிராமபோன் மெஷினில் ரெக்கார்டைப் போட்ட மாதிரி, நான் ஸ்டாப்பாக இவர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காதில் விழாத மாதிரி எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

19 கருத்துகள்:

  1. பேரன் கேக்கலைன்னா என்ன? அதுக்குதான் நமக்கு ப்ளொக் இருக்கே. இங்கே புலம்பினால் அட்லீஸ்ட் நாலு டெம்ப்ளேட் பின்னூட்டங்களாவது, உண்மை, அபாரம்.அசத்தீட்டீங்க, ன்னு வராதா என்ன?

    நீங்க சொல்வது அத்தனையும் 'உண்மை'!

    பதிலளிநீக்கு
  2. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா.பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. அந்த கால ஆட்கள் சொல்வதை போலவே இந்த கால ஆட்களும் எதிர்கால ஆட்களிடம் அது போன்ற கதையைத்தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள் காலங்களும் கலாச்சராங்களில் மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் மனித மனங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. பெரியவர்களின் அனுபவ மொழிகளை எல்லாம் இளையவர்கள் எங்கே காதில் போட்டுக் கொள்கிறார்கள்? முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் இருக்காங்களே.....!!!!

    வயதானவர்கள் பற்றி ஒண்ணே முக்கால் வருஷங்களுக்கு முன்னால் எழுதிய பதிவு ஒன்றை உங்களைப் படிக்க அழைக்கிறேன்!!! (கிடைச்சுது சான்ஸ்...இப்படி படிக்க வைத்தால்தான் உண்டு!)

    http://engalblog.blogspot.in/2011/10/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  5. கிழடுகளுக்கு பல் போனாலும் சொல் போகாது அப்படித்தானே ?புலம்பல் ..மன்னிக்கவும் ...உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துகள் அய்யா !

    பதிலளிநீக்கு
  6. எப்படியிருந்தாலும் இன்னைக்கு பச்சமட்டையெல்லாம் நாளைக்கு பழுத்தமட்டை.

    பதிலளிநீக்கு
  7. சரியாகச் சொன்னீர்கள்
    அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொண்டால்
    நமக்கும் நல்லது

    பதிலளிநீக்கு
  8. துளசியின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். நமது புலம்பல்களை ப்ளாகில் போட்டு விடவேண்டியதுதான்! டெம்ப்ளேட் காமென்ட் வராவிட்டாலும் பரவாயில்லை. நம் பாரமாவது குறைகிறதே!
    உங்களைபோல இங்கு நிறைய பேர்கள் இருக்கிறோம். புலம்பலுக்குத் தடையில்லை. நாங்கள் வந்து தவறாமல் படிக்கிறோம். ஒரே ஒரு கண்டிஷன்: நீங்கள் எங்கள் புலம்பல்களை படிக்க வேண்டும்! :)

    பதிலளிநீக்கு

  9. புலம்பல்களை ப்லாகில் போட்டால் படிப்பவரும் பெரும்பாலும் புலம்புபவர்களே. எதுவும் அளவோடு இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா... இருந்தாலும் இப்போதெல்லாம் அவர்களை புலம்பவிடாமல் தொலைக்காட்சி மெகா தொடர்கள் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன...

    பதிலளிநீக்கு
  11. புலம்புவதைக் கேட்கப் ‘பெண்டாட்டி’ கிழம் இருந்தால்[போரடித்தாலும்] கொஞ்சம் ஆறுதல். இல்லாவிட்டால்..... அண்டை அயல் வீடுகளில் கிழடுகள் இருக்காதா என்ன?

    பதிலளிநீக்கு
  12. //நான் ஸ்டாப்பாக இவர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காதில் விழாத மாதிரி எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.//

    இது ஒரு தொடர்கதை. நாம் தாத்தாக்கள் புலம்பிக்கொண்டு இருந்தார்கள். பிறகு நம் அப்பா நமது பேரனிடம் புலம்பினார்கள். நாம் இப்போது நமது பேரன்களிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறோம். நம் பையன் இதைத்தொடருவான்!

    பதிலளிநீக்கு
  13. காலம் மாறி விட்டது. அவர்களின் பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர மறுப்பதுதான் இந்தப் புலம்பலுக்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  14. இது புது வகை புலம்பல்
    இந்த பழசுகளுக்கு புலம்புவதே வாழ்க்கையாகி போச்சு
    புலம்பும் நேரத்தில் ஒரு பதிவு போடலாமில்லையா
    நானும் தினமும் பதிவை திறந்து பார்த்தால் புலம்பும் பதிவோடு நின்று போயிருக்கிறது
    கம்பியூடரினால் வந்த கதை பாகம் 3 என்ன ஆயிற்று என்று நாங்கள் புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார் கவுண்டர்.
    சீக்கிரம் எங்கள் புலம்பலை நிறுத்துவதற்கு வழியை பாருமையா

    சேலம் குரு

    பதிலளிநீக்கு