என் பதிவைப் படித்து வரும் நண்பர்களுக்கு என் நினைவில் நீங்காமல் நிற்கும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த சம்பவம்தான் நான் போன பதிவில் கூறிய பைகள் சேமிப்புக்கான ஆரம்பம்.
எங்கள் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர வகை. அதாவது மூன்று வேளையும் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். அதற்கு மேல் எந்த ஆடம்பரமும் கிடைக்காது. அந்த உணவும் எனக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. "என்ன தினமும் இதேதானா" என்று கேட்டால் வரும் ஸ்டேண்டர்ட் பதில் - "பிடித்தால் சாப்பிடு, பிடிக்கவில்லையானால் எழுந்து போ".
அப்போது நான் செகண்ட் பாரம் அதாவது ஏழாவது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கு ஒரு கித்தான் பையில்தான் புஸ்தகம், நோட்டுகள் ஆகியவற்றைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். எங்கள் வீட்டில் அந்த ஒரு பைதான் இருந்தது. நான் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் அதை பையைத்தான் காய்கறி வாங்க என் அம்மா எடுத்துக் கொண்டு போவார்கள்.
மறுநாள் நான் பள்ளிக்கு எடுத்துப் பொக அந்தப் பையை எடுத்தால் அதற்குள் வெங்காயச் சருகு, கருவேப்பிலை இலைகள், சில சமயம் சிறு கத்தரிக்காய் இப்படி பலது இருக்கும். பொதுவாக நான் அவைகளை அப்புறப்படுத்தி விட்டு பள்ளிக்கு கொண்டு போவேன். சில சமயம் அவசரத்தில் மறந்து போய் அந்தப் பையை அப்படியே கொண்டு போய் விட்டால் சக மாணவர்கள் இந்த காய்கறி மிச்சங்களைப் பார்த்து என்னைக் கலாட்டா செய்வார்கள்.
இதனால் மனம் வெறுத்து விட்டது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் போய் முறையிட்டேன். அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.
நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையை அம்மா காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போய் அழுக்காக்கி விடுகிறார்கள். அதனால் அந்தப் பையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போக வெட்கமாய் இருக்கிறது. அதனால் எனக்கென்று தனியாக ஒரு பை வாங்கித்தரவேண்டும் என்று சொன்னேன்.
என் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சொன்ன பதில்தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.
அவர் சொன்ன பதில்;
"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".
அவ்வளவுதான், மேட்டர் முடிந்தது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. மரியாதையாக அந்தப் பையையே வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். பெயிலாகாமல் படித்தேன். வேலைக்குப் போனேன். சம்பாதித்தேன். பைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி சேமித்தேன். இன்று அவைகள் சுமையாகி விட்டபடியால் வேண்டியவர்களுக்கெல்லாம் தானமளிக்கிறேன்.
ஐ போன் வாங்கித்தராவிட்டால், பாடசாலை போகமாட்டேனென இன்று பிள்ளைகள் அதிகாரம் செய்ய, அப்பாக்கள் வாங்கிக் கொடுத்துப் பாடசாலை அனுப்புகிறார்கள்.
பதிலளிநீக்குஎன்ன மாற்றம்.
இங்கு செல்போன் வாங்கிக்கொடுக்கவில்லை என்று ஒரு பாலிடெக்னிக் மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
நீக்குஇப்படிப்பட்ட நிலையை நினைத்தால்,எதிர்கால இந்தியாவை உருவாக்கப்போகும் இளைய தலைமுறையை பற்றி ஒருவித பயம் வருகிறது. எந்த ஒரு சிறு தோல்வியையும் தாங்கமுடியாத மன நிலை நல்லதில்லையே. எந்த ஒரு சிறு மருதளிப்பையும் தாங்காத மனோநிலை நாளை தற்கொலையில் முடியும் அல்லது மனோநிலை பாதிக்கப்பட்ட கீழ்ப்பாக்க கேசாக முடியும் அல்லது சமூக புறக்கணிப்பில் ரௌடிகளாகவும் முடியலாம். எதுவுமே நல்லதில்லையே.
நீக்குஇன்றைய அவசரதேவை பள்ளிகளில் நல்லொழுக்கப்பாடங்கள். இளைய தலைமுறையினரின் மனத்தை திடப்படுத்தும், எதையும் எதிர் கொண்டு சமாளிக்கும், வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் வீறு கொண்டு எழும் வீரியமான மனது. அதை உருவாக்குவது நமது கையில்தான் உள்ளது. அதற்கு தேவையான தன்னம்பிக்கையை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.
சேலம் குரு
அப்படிப்பட்ட வீறு கொண்டு எழும் மனது இருந்ததால்தான் நம்மால் ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரம் பெற முடிந்தது. ஆனால் இந்த அறுபதே ஆண்டுகளில் அத்தகைய பண்பை கண்காணாமல் தொலைத்து விட்டோமே. என்ன ஆயிற்று நமக்கு? அத்தகைய பண்பை மீண்டும் பெறமுடியுமா என்ற சந்தேகம் எழுகின்றது.
நீக்குதன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதனால் முன்னேறவே முடியாதே.
"வீழ்வது தவறில்லை. வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. மீண்டும் எழுந்து விட்டால் வெற்றிதான்"
ஆனால் இன்று நான் வீழ்ந்து விடவே கூடாது. வீழ்ந்தால் ஒரேயடியாகத்தான். நேராக தற்கொலைதான் என்ற எண்ணம்தானே நிலவுகிறது. இதைத்தான் நாம் மாற்றவேண்டும்.
திருச்சி காயத்ரி மணாளன்
இன்றைக்கு :
பதிலளிநீக்குநான் கேட்டதெல்லாம் வேண்டும்... இல்லேன்னா வெளியே போ...
எம் ஜி ஆர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்ததற்கு ஒரு பின்னணிக் கதை உண்டு. அது போல பைகள் சேகரிக்க இதுதான் பின்கதையா? (முன்கதை என்று சொல்லவேண்டுமோ) :))
பதிலளிநீக்குமஞ்சள் பையில் புஸ்தகம் எடுத்துப் போனதும், அலுமினிய டப்பாவில் உணவு எடுத்துக் கொண்டு போனதும் இன்றும் நினைவில்......
பதிலளிநீக்குஇன்றைக்கு வேண்டியதை கேட்டவுடன் வாங்கித் தரும் பெற்றோர்கள்...
ஆமாம் சார்
நீக்குஅன்று நீங்கள் வாங்கிய மதிப்பெண்கள் எவ்வளவு?
இன்றைய குழந்தைகள் வாங்கும் மதிப்பெண்கள் எவ்வளவு?
ஏணி வைத்தாலும் எட்டுமா?
செலவு செய்துதான் ஆகவேண்டும் இல்லையா?
திருச்சி காயத்ரி மணாளன்
மதிப்பெண்கள் மட்டும் ஒருவனின் திறமையை எடை போடுவதில்லை. அன்று 60 சதத்திற்கு மேல் யாரும் மார்க் போடமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு திறமை இல்லை என்று ஆகிவிடுமா?
நீக்குஉண்மைதான் அய்யா. மதிப்பெண்கள் மட்டுமே ஒருவனை எடை போடுவதில்லை என்பதால்தான் அன்று விளையாட்டு நேரம், கைத்தொழில் நேரம், ஒழுக்கபாட நேரம், தொட்ட வேலை நேரம் என்று அனைத்திலும் பள்ளியில் நேரம் ஒதுக்கினார்கள். மாணவர்களும் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினார்கள். இன்றோ விளையாட்டு நேரம் கூட கணித பாடத்திற்கு ஒதுக்கப்படுகிறது. குழந்தைகள் மதிப்பெண் வாங்கும் ஒரு இயந்திரமாக மாற்றிவிடப்படுகிறார்கள். அவர்களின் இயல்பான திறமைகள் எல்லாம் திரைமறைவில். சில சமயங்களில் எப்போதுமே வெளிவருவதில்லை. நாம் ஒரு விதத்தில் திறமைசாலிகள் என்றால் இந்த காலத்து குழந்தைகள் நம்மை விட திறமை சாலிகள்தான் என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். என்ன அது ஆல்ரவுண்டு திறமைசாலிகளாக இருக்க நாமே அனுமதிப்பதில்லை.
நீக்குநமது திறமை இதற்கு உபயோகப்படாமல் போய்விட்டது.
சேலம் காயத்ரி மணாளன்.
"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".
பதிலளிநீக்குஇதுபோல் இந்த காலத்தில் சொல்லமுடியுமா என நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் இப்படி நம் பெற்றோர்கள் சொன்னதால், நாம் ஒன்றும் சோடை போகவில்லை என்பது உண்மை.
நமது பெற்றோர் நமக்கு அன்று சொல்லும்போது அவர்கள் கஷ்டத்தை உணர்ந்து நடந்து கொண்டோம்.
நீக்குஇன்றோ நமது குழந்தைகள் சொல்லும்போது அவர்கள் இஷ்டத்தை புரிந்து நடந்து கொள்கிறோம்.
அன்று நமது பெற்றோரின் கஷ்டம்
இன்று நமது குழந்தைகளின் இஷ்டம்.
அவ்வளவுதான்
சேலம் குரு
அன்று பெற்றோருக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது என்பதிலும்
நீக்குஇன்று குழந்தைகளின் இஷ்டப்படி செய்யமுடிகிறது என்பதிலும் நமக்கு சந்தோஷம்தானே.
எந்த காரியம் செய்தாலும் முடிவில் அதில் ஒரு சந்தோசத்தை முழு மனதுடன் அனுபவிக்க முடிந்தால் அதைவிட ஒரு பாக்கியம் நமக்கு என்ன வேண்டும். எனவே நாம் கொடுத்து வைத்தவர்களே
திருச்சி காயத்ரி மணாளன்
அது அன்று, இன்று இவ்வாறு கூறமுடியுமா?
பதிலளிநீக்குகண்டிப்பாக கூற முடியாது.
நீக்குகாரணம் அன்று சின்ன வயதில் இருந்தே உலக யதார்த்தத்தை புரிய வைத்தார்கள். அன்று ஒவ்வொரு வீட்டிலும் ஐந்தாறு குழந்தைகள்.
இன்று நம்முடன் இருக்கும் வரை குழந்தைகள் (ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி) சந்தோஷமாக இருக்கட்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. காரணம் இன்று அனைவருக்கும் ஓரிரு குழந்தைகள்தான்.
எனவே இந்த மாற்றத்தை சரியான முறையில் நாம் புரிந்து கொண்டால் எல்லோருமே santhoshamaga இருக்கலாம்.
சேலம் துளசி புத்திரன்
நல்ல ப்ளாஷ் பேக்
பதிலளிநீக்குஅருமையாக சொன்னீர்கள் அய்யா.
பதிலளிநீக்குஇது மட்டுமா?
சுடும் வெயிலில் காலில் ஒரு ஹவாய் செருப்பு கூட இல்லாமல் மத்தியானம் சாப்பாடு சாப்பிட ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி ஓடி வருவோம். குழம்பில் போடும் காய்தான் தொட்டுகொள்ளவும் உபயோகபடுத்திகொள்ளவேண்டும். தனியாக கூட்டு பொரியல் அவியல் என்றெல்லாம் கிடையாது. ஒரு ரூபாய்க்கு 10 தேங்காய் கிடைத்த காலம் அது. (1965-70) ஆனால் அப்போதே குழம்பில் தேங்காய் போடுவது ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவைதான்.
ஆனால் குறைவான் தேங்காய் நிறைய நடை எல்லாம் இருந்ததால் நமக்கு ஒபெசிட்டி இல்லாமல் இருந்தது.
நாம் அன்று இருந்த நிலையை நினைத்து பார்த்து இன்று நமது குழந்தைகள் அப்படி அவஸ்தை படகூடாதே என்று பார்த்து பார்த்து செய்கிறோம். அதுதான் இப்படி. கேட்டது கிடைக்க வேண்டும் உடனே கிடைக்க வேண்டும் இல்லையென்றால் கலாட்டாதான்.
"சாப்பிட்டால் சாப்பிடு இல்லையென்றால் போ" "ஆள் ஆளுக்கு பை வாங்கித்தர முடியாது. பள்ளிக்கூடம் போனால் போ இல்லையென்றால் வேண்டாம்" என்பதெலாம் இந்த காலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது
காலம் ரொம்பத்தான் மாறிவிட்டது.
சேலம் குரு
எல்லாம் சரிதான். அன்று இயலவில்லை என்பது உண்மைதானே.
நீக்குஎந்த குழந்தை புஷ்டியாக இருந்தது? எல்லாம் நோஞ்சானாகத்தானே இருந்தது. இன்று மருத்துவ துறையில் இருந்து குழந்தை உணவு வரை எல்லாமே முன்னேறியிருப்பதால், நமது வருமானமும் ஓரளவு உயர்ந்திருப்பதால் நம்மால் அன்று முடியாததை, நம்மால் அன்று சாப்பிடக்கூட முடியாததை இன்று நமது குழந்தைகளுக்கு கொடுத்துப்பார்த்து ஆனந்தப்படுகிறோம். அவ்வளவுதான். ஒரு முறை கொடுத்துப்பழக்கப்படுத்திவிட்டால் அப்புறம் கேட்பது மனித இயல்பு. கொடுக்கமுடியாதபோது பேசி காரணத்தை சொல்லிவிட்டால் இந்த காலத்து குழந்தைகள் ஒத்துக்கொள்கிறார்கள்.
திருச்சி தாரு
இப்போது ஸ்கூல்மேட் நோட்டுதான் என்று கட்டாயம். அணில் நோட்கள் மாதிரி இன்னொரு மடங்கு விலை. என்ன செய்வது. வாங்கிதராவிட்டால் ஸ்கூல் போகமாட்டேன் என்று அடம்.
பதிலளிநீக்குபை வாங்கி தரமாட்டேன் பள்ளிக்கு போனால் போ என்றது அந்த காலம்.
ஸ்கூல்மேட் நோட்டு வங்கி கொடுத்தால் பள்ளிக்கு போவேன் இல்லையென்றால் போகமாட்டேன் எனபது இந்த காலம்.
திருச்சி அஞ்சு
அன்று பள்ளி ஆண்டுத்தேர்வு முடிந்தவுடன் செய்யும் முதல் வேலை பழைய நோட்டுக்களை எடுத்து எழுதிய பக்கங்களை கிழித்து மொத்தமாக எடைக்கு போட்டு (கிலோ அப்போது 40கசு இருந்தால் அதிகம்) வரும் காசில் கோந்து, தையல் ஊசி, ட்வைன் நூல் எல்லாம் வாங்குவோம். எழுதாத பக்கங்களை சேர்த்து ஒரு நோட்டுக்கு 192 பக்கங்கள் என்று வைத்து பிரவுன் பேப்பர் அட்டை போட்டு தைத்து வைப்போம். பிறகுதான் விளையாட்டெல்லாம்.
நீக்குஇன்றும் அந்த மாதிரி எழுதாத பக்கங்களை பேரன் பேத்திகள் உபயோகப்படுத்துகிறார்கள். என்ன ஒன்று, எழுதிப்பார்க்க அன்று பிட் நோட்டீஸ் சேகரித்து அதன் பின்புறம் (அச்சிடப்படாது இருக்கும் பக்கம்) எழுதிப்பார்ப்போம். இன்று போன வருட நோட்டுகளின் எழுதாத பக்கங்களை உபயோகப்படுத்துகிறார்கள்.
சேலம் குரு
அன்று கான்வென்ட் பள்ளியிலேயே வாரம் ஒரு நாள்தான் யூனிபார்ம் இருக்கும். மீதி நாட்களில் கசங்கிபோன சட்டையும் அரை டிராயரும்தான். இன்று சாதாரண பள்ளிகளில் கூட வார முழுக்க யூனிபார்ம். spic and span ஆக இருக்கவேண்டும். அயன் செய்தே ஆகவேண்டும். காசு எப்படி எப்படியெல்லாம் செலவாகிறது பாருங்கள்.
பதிலளிநீக்குவாழ்கை ரொம்பத்தான் கஷ்டமாகி விட்டது.
திருச்சி தாரு
அன்று சட்டை கசங்கி இருந்தாலும் மனது நன்றாக இருந்தது.
நீக்குஇன்று சட்டை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. மேற்கொண்டு ஒன்றும் சொல்ல விரும்ப வில்லை.
சேலம் குருப்ரியா
வளர்ச்சியின் படிநிலைகள் ஆச்சரியம் அளிக்கின்றன..!
பதிலளிநீக்குசகோதரி ராஜேஸ்வரி- டாம்பீகத்தின் வளர்ச்சியின் படிநிலைகள் என்பதே பொருத்தம்
நீக்குமுற்ற முழுக்க டாம்பிகம் என்று சொல்லிவிட முடியாது.
நீக்குஇன்றைய குழந்தைகளின் அறிவு விசாலம் அவர்கள் வயதில் நாம் இருந்ததை விட அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். என்ன அது எல்லை மீறி போய்விட்டது என்பதுதான் துரதிருஷ்டவசமானது. There is a thin line between necessity and daambeegam. அந்த எல்லையை கடந்து விட்டோம் என்பது உண்மையே
சேலம் குரு
//"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".//
பதிலளிநீக்குஅருமையான சான்ஸ். மிஸ் பண்ணிட்டீங்க. பெரிய மந்திரியா ஆகியிருக்கலாமே?
அன்று இப்படி யோசனை கூற யாரும் இல்லாமல் போனார்களே?
நீக்குஇன்று மந்திரியாக வேண்டுமானால் இன்னொரு தகுதியும் வேண்டும். தன்மானம் இருக்கக்கூடாது. காலில் விழ தயாராக இருக்க வேண்டும். அது உம்மிடம் இல்லை கவுண்டரே. அதனால் வருந்தவேண்டாம்.
நீக்குசேலம் குருப்ரியா
நல்ல அனபவம் நண்பரே....
பதிலளிநீக்குபடிக்கிற பையன் பள்ளிக்கு செருப்பு போட்டுகிட்டு போகலாமா? அன்று அப்பா கேட்ட கேள்வி!
பதிலளிநீக்குஇன்றும் நினைவில் இருக்கிறது!
என் அப்பாவுக்கும் விதம் விதமா பைகள் சேகரிக்கும் பழக்கம் இருக்கு. அதற்கும் இதுப்போல எதாவது ஒரு காரணம் இருக்குமோ!?
பதிலளிநீக்குஅன்றைய வாழ்க்கைமுறை - இருப்பதை அறிந்து தேவைகேற்ப செலவு செய். வீண் செலவு செய்யாதே. இருப்பதை பகிர்ந்து கொள் என்பதே.
பதிலளிநீக்குஇன்று அதெல்லாம் மாறிவிட்டது.
விவேகானந்தர் "நீ என்னவாக ஆக விரும்புகிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்று சொன்னது எவ்வளவு உண்மை.
நான் வீட்டில் முதலில் வேலைக்கு வந்ததால் தம்பி தங்கைகளுக்கு வேண்டியதை செய்ய வேண்டியதாய் இருந்தது. என் எதிர்பார்ப்புகளை சுருக்கிக்கொண்டு வீட்டுக்கு கொடுத்தேன்.
தம்பி, தங்கைகளோ வெளிநாடு செல்லவேண்டும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
விவேகானந்தர் சொல்லியது போல் நான் நினைத்தது மாதிரி வீட்டுக்கு உதவி செய்துகொண்டு உள்ளூரில் குப்பை கொட்டிகொண்டிருக்கிரேன். அவர்கள் நினைத்த மாதிரி அயல்நாட்டில் பணம் கொட்டிகொண்டிருக்கிறார்கள்.
பழைய பஞ்சாங்கம் என்று என்னை கேலிதான் பேசுகிறார்களே தவிர அவர்கள் இந்த நிலையை அடைய நான் இட்ட உரத்தை - எனது தேவைகளை சுருக்கிக்கொண்டு - மறந்து விட்டார்கள்.
நானும் இதுதான் உலக நியதி என்று மனத்தை சமாதானம் செய்துகொண்டு பணம் அந்த அளவு இல்லாவிட்டாலும் மன நிம்மதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
சேலம் துளசி புத்திரன்
:(
நீக்குவீட்டுக்கு மூத்த மகனாகப் பிறப்பது ஒரு சாபக்கேடுதான் போல!!!! நானும் மூத்த மகன்தான்.
நீக்குபழைய காலத்து நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்.
பதிலளிநீக்குஒரு பைசாவுக்கு கமர்கட் என்று ஒரு கெட்டியான ஒரு வெல்ல உருண்டை கிடைக்கும். காலையில் யில் வாங்கி வாயில் போட்டால் சாயங்காலம் முடிய நிதானமாக கரைந்து கொண்டேயிருக்கும். அந்த ஒரு பைசாவை வாங்க ஒரு நாள் முழுவதும் அம்மாவிடம் அடம் பிடிக்கவேண்டும் - அப்பாவிடம் சிபாரிசு பண்ண. வாங்கி வாயில் போட்டு விட்டால் அன்று நாம்தான் ராஜா. முகத்தில் ஒரு தனி கர்வமே ஜொலிக்கும். உலகமே நமது காலடியில் என்பது போன்ற ஒரு பீலிங்.
இன்றோ எனது பேரன் நூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கும் காட்பரீஸ் சில்க் சாக்கலட் அரை மணியில் காலி.
மீண்டும் அடம் ஆரம்பித்துவிடும்.
சேலம் குரு
//அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.//
பதிலளிநீக்குஅதனால்தான் அந்தகாலத்தில் அம்மாக்களுக்கும் குழந்தைகளிடம் நல்ல மரியாதை கிடைத்தது. எதுவானாலும் - மார்க் சீட்டில் கையெழுத்தா, ஒரு ரூபாய்க்கு பள்ளியில் கல்வி சுற்றுலா செல்லவேண்டுமா, புது நோட்டு, காம்பஸ் பாக்ஸ் வாங்க வேண்டுமா - அத்தனையும் அம்மா வழியாகத்தான். அப்பா ஒரு கடவுள் மாதிரி. பயபக்தியோடுதான் பார்த்தோம். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற பழமொழி இருந்தபோதும் அப்படித்தான் பார்த்தோம். இன்றோ அப்பாவும் மகனும் நண்பர்கள் மாதிரி பேசி கொள்கிறார்கள்.
அம்மா வழியாக சிபாரிசு போனதால் அம்மாவுக்கும் மதிப்பு இருந்தது. இன்றோ நேராக அப்பாவிடம் பேசுவதால் அம்மா தான் மதிப்பு பெற குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்க நேரிடுகிறது. குழந்தைகள் இதை நன்கு பயன்படுத்தி கொள்கிறார்கள்
சேலம் குருப்ரியா
//நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையை அம்மா காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போய் ..//
பதிலளிநீக்குஅன்று, ஒன்றும் தெரியாமல் இப்படி பல வேலைகளுக்கு ஒரே ரிசோர்சை உபயோகப்படுத்தினோம். ஆனால் அது மதிக்கப்படவில்லை.
இன்று oops (Object Oriented programmimg concept) முறையில் ப்ரோக்ராம் செய்யும்போது overloading என்ற கான்சப்ட் உபயோகப்படுத்தப்படுகிறது. அதில் ஒரு symbol, இருக்கும் இடத்தை பொறுத்து இரண்டு மூன்று variable ஆக தனது வால்யூவை எடுத்துக்கொள்ளும். இது மதிக்கப்படுகிறது. ஏனென்றால் இது கம்ப்யுடர் மெமரி ஸ்பேசை குறைக்கிறது.
எனவே அந்த காலத்தில் நாம் ப்ராக்டீஸ் செய்தவை எல்லாம் சிக்கனத்தை நோக்கி, வீண் செலவை குறைக்க, குழந்தைகளுக்கு பொருட்களின் மதிப்பை உணர்த்த என்று பல வகைகளில் உபயோகப்பட்டது.
இன்று எல்லாமே கிண்டல் செய்யப்படுகிறது. காரணம் நாம்தானோ, நம் குழந்தைகளை நல்லமுறையில் வளர்க்க தவறி விட்டோமோ என்று தோன்றுகிறது.
சேலம் குரு
//அப்போதெல்லாம் பள்ளிக்கு ஒரு கித்தான் பையில்தான் புஸ்தகம், நோட்டுகள் ஆகியவற்றைப் போட்டுக்கொண்டு போகவேண்டும்.//
பதிலளிநீக்குஇதற்காக என்றே அப்போது நல்ல திக் காக்கியில் துணி எடுத்து பை தைப்பார்கள். அதில்தான் புத்தகங்களை பள்ளிக்கு கொண்டு போக வேண்டும். அப்போது வியாபாரம் செய்யும் சிலரது குழந்தைகள் அலுமினிய பெட்டியில் புத்தகம் கொண்டு வருவார்கள். எங்களுக்கெல்லாம் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். புண்ணியம் செய்தவர்கள் என்று நினைத்துகொள்வோம். அந்த அலுமினிய பெட்டியை ஒரு முறை தொட்டு பார்த்து விட்டால் போதும் ஜன்ம சாபல்யம் அடைந்து விடுவோம் என்று நினைத்து கொண்டு கோயிலுக்கெல்லாம் போய் சாமியெல்லாம் கும்பிட்டு விட்டு வருவோம்.
இன்று ஜீன்ஸ் துணியில்தான் புத்தகப்பை. அதவும் ரோஷனில் தான் வாங்கவேண்டும் என்கிறார்கள். விலையை கேட்டால் நம்மை போன்ற ஆட்களுக்கு மயக்கமே வந்துவிடும்.
சேலம் குரு
//அவ்வளவுதான், மேட்டர் முடிந்தது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.//
பதிலளிநீக்குநமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று மனது சொன்னாலும், இந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் தன்மை அன்று இருந்தது. சொல்கிற பேச்சுக்கு மறு பேச்சில்லை என்பது எழுதப்படாத விதி.
இன்று அதை எல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை
திருச்சி அஞ்சு
//பைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி சேமித்தேன்.//
பதிலளிநீக்குஅப்பா சொன்ன அந்த வார்த்தைகள் - ஆள் ஆளுக்கு பையெல்லாம் வங்கி கொடுக்க முடியாது - எந்த அளவு ஆழமாக மனதில் பதிந்திருந்தது என்பதை இதை விட அழகாக சொல்ல முடியாது.
சேலம் குரு
அன்று நமக்குக் கிடைக்காததெல்லாம் இன்று நம் மக்களுக்கு மனமுவந்தே செய்து தருகிறோம். அந்தத் தலைமுறை வாழ்க்கையே வேறு.
பதிலளிநீக்கு//எங்கள் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர வகை. அதாவது மூன்று வேளையும் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். அதற்கு மேல் எந்த ஆடம்பரமும் கிடைக்காது. அந்த உணவும் எனக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை//
பதிலளிநீக்குவயிற்றுப்பசிக்கு சாப்பாடே ஒழிய ருசிக்கு இல்லை என்பது அந்தக்காலத்து கீழ்நடுத்தர குடும்பங்களின் நிலை.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஒரு ஹோட்டலை கடந்து செல்ல
வேண்டும். ஆசை ஆசையாக நாக்கில் எச்சில் ஊற பார்த்துகொண்டே செல்வோம். வருடத்திற்குஒருமுறை தேர்வு முடிவுகள் வரும்போது பள்ளிக்கு சென்று ரிசல்ட் பார்த்து விட்டு திரும்பும்போது அப்பா அந்த ஹோட்டலுக்கு கூடி செல்வார். பாசாகிவிட்டோம் என்ற சந்தோசத்தை விட அன்று ஹோட்டலுக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோசம்தான் எங்களுக்கு பெரிதாக இருக்கும். பிரமாதமாக ஒன்றும் இல்லை ரெண்டு இட்லி அதற்கு சட்னி சாம்பார், கூடவே ஒரு பூரி. நம்மை கையில் பிடிக்க முடியாது. ஒரு மாதத்திற்கு அதை பற்றி பேசியே மாய்ந்து போவோம். இன்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
திருச்சி காயத்ரி மணாளன்
நன்றாகச் சொன்னீர்கள்.
நீக்குமுக்கிய காரணம் அன்று நம்மிடம் போதுமென்ற மனம் இருந்தது.
நீக்கு"நம் வாழ்க்கை நம் கையில்", " அடுத்தவரை நினைத்து ஏங்குவது தவறு", " விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போவதில்லை" என்பது போன்ற நல்ல எண்ணங்கள் இருந்தன.
இன்றோ aping என்று சொல்லப்படும் புலியைபார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை மாதிரி அடுத்தவன் போல நாமும் வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிவிட்டது. ஆனால் அடுத்தவன் அந்த நிலைமைக்கு வர எந்த அளவு உழைத்திருப்பான் கஷ்டப்பட்டிருப்பான் என்பதை நினைத்துப்பார்க்க மறந்து விடுகிறோம். இறுதி வெற்றி மட்டுமே நமது கண்ணுக்கு தெரிகிறது கடந்து வந்த பாதையில் இருந்த முட்களும் புதர்களும் நமது கண்ணுக்கு தெரிவதில்லை.
தேசப்பிதா காந்திஜி சொன்ன மாதிரி என்றைக்கு முடிவு மட்டுமே முக்கியமல்ல செல்லும் பாதை அதைவிட முக்கியமானது என்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் பின்பற்றபடுகிறதோ அன்றுதான் மீண்டும் இந்த மாதிரி குடும்ப உறவுகள் பலப்படும்.
திருச்சி அஞ்சு
//அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.//
பதிலளிநீக்குஉண்மை. என் நிலமையும் அன்று இதே தான். “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற என் தொடர் பதிவினில் எழுதியுள்ளேன். http://gopu1949.blogspot.in/2012/03/1.html