திங்கள், 7 ஏப்ரல், 2014

திருச்சியில் ஒரு இளைஞர்


இந்தப் பதிவு மிகவும் தாமதாகப் பதிவிடுகிறேன். காரணம் சோம்பல் மற்றும் உடல் சோர்வு.

திருச்சி பதிவர் வை.கோபாலகிருஷ்ணனைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். தற்போது இவருடைய சிறுகதைகளுக்கு ஒரு விமர்சனப் போட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

பல நாட்களாகவே இவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். குறிப்பாக இவர் வீட்டு ஜன்னலைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசைதான் அதிகம். இந்த ஜன்னலைப் பற்றி இவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். போன வாரம் திருச்சி போகவேண்டிய அவசியம் ஒன்று ஏற்பட்டது. அங்கு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பேரன் படிப்பை முடித்து விட்டான்.

இப்போது வாழ்க்கையில் பல புது கலாச்சாரங்கள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் கல்லூரிகளில் படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடத்துவதும் ஒன்று. ஆனால் இது உண்மையில் பட்டமளிப்பு விழா அல்ல. பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகம்தான் நடத்த முடியும். ஆனால் அது போன்ற ஒரு மாயை விழாவை இறுதி வைபவமாக கல்லூரிகள் நடத்துகின்றன. அதைப் பார்க்க மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் வருகிறார்கள்.

நானும் என் மனைவியும் இந்த விழாவிற்காக திருச்சி செல்வதென்று முடிவு எடுத்தோம். அப்போது எனக்கு எப்படியாவது "வைகோ" வை (அரசியல்வாதி வைகோ அல்ல) சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன். பல விதமான பிரயாணத்திட்டங்கள் தீட்டினதில் விழா அன்று காலை காரில் சென்று விட்டு மறு நாள் திரும்புவது என்று முடிவாயிற்று.


ஆண்டார் தெரு ஆரம்பம்

இந்த திட்டத்தின் பிரகாரம் திருச்சியில் எனக்கு மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஒரு இடைவெளி கிடைத்தது. சரி, இந்த இடைவெளியில் வைகோவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை எனக்கு எப்போது வந்தாலும் சௌகரியமே என்று கூறினார்.


வைகோ வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மதுரா ஹோட்டல்

காரில் செல்வதற்கு டிரைவர் இல்லை. நானே ஓட்டிக்கொண்டு போக  பயமாக இருந்தது. திருச்சி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊராக இருந்தாலும் நான் திருச்சியைப் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். புது ரோடுகள், மேம்பாலங்கள் என்று திருச்சி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. ஆகவே டவுன் பஸ்சில் போய் வந்து விடுவது என்று முடிவு செய்தேன்.

இங்கு நான் ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டேன். அது கதிரவனின் கருணை. மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கோடை காலங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் அது இருபது வருடங்களுக்கு முன். இப்போது எனக்கு இருபது வயது கூடியிருக்கிறது என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. நான் பார்க்காத திருச்சி வெய்யிலா என்ற மமதையுடன் கிளம்பி விட்டேன்.

நான் செய்த சமீப காலத் தவறு இதுதான். வெயில் தாக்கத்தில் நா வரண்டு போகிறது. நடை தள்ளாடுகிறது. எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. பஸ்சில் போய் மெயின் கார்டு கேட்டில் இறங்கி வைகோ வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்த அனுபவம். வழியில் ஒருவன் கரும்புச் சாறு விற்றுக்கொண்டிருந்தான். ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கி பக்கத்தில் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது.


வைகோ வசிக்கும் காம்ப்ளெக்சின் முன்புறத்தோற்றம்

பின்பு நடையைக் கட்டினேன். வைகோ வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு வந்தது. இந்த இடங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயமானவைதான். ஆகவே வைகோ வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
நான் அவர் வசிக்கும் காம்ளெக்ஸ் வாசலில் நுழையும்போதே "வாங்கோ வாங்கோ" என்று ஒரு அசரீரி கேட்டது. குரல் வரும் திசை நோக்கி மேலே பார்த்தேன். வைகோ தனது இரண்டாவது தளத்தில் இருந்து என்னைப் பார்த்து விட்டு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.

லிப்டில் ஏறி இரண்டாவது தளத்திற்குப் போனேன். லிப்டு கதவிற்கே வந்து என்னை வரவேற்று தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். அவரது துணைவியாரும் வீட்டு வாசலிலேயே என்னை வரவற்றார்கள். வீட்டுக்குள் என்னை அவருடைய பெட்ரூம் கம் ஆபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏசி வைத்திருக்கிறார். வெய்யிலில் வந்ததற்கு ஏசி சுகமாக இருந்தது.


வைகோ தம்பதியினர்

குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். திருச்சியில் இப்போது கடும் தண்ணீர் பஞ்சம் போலிருக்கிறது. திருச்சி வரும் வழியில் காவிரியைப் பார்த்த போது அதில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆயிரக் கண்க்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லுகிறார்கள். அதனால் திருமதி வைகோ எனக்கு மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அம்மா எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார்கள்.


இரு "பிரபல" பதிவர்கள்

கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றதற்கு மிகவும் தயங்கி ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பிறகு பரஸ்பரம் குடும்ப க்ஷேமங்கள் குறித்து விசாரித்தோம். ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்குள் ஆறு தடவை சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்க்ள. இருபது வருடத்திற்கு முன்பாக இருந்தால் அவை அனைத்தையும் கபளீகரம் செய்திருப்பேன். இப்போது முடியவில்லை.

நான் அவரைத் தொடர்பு கொண்டபோதே எனக்கு அய்யர் விட்டு டிகிரி காப்பி வேண்டும் என்று சொல்லியிருந்தேன். திருமதி வைகோ நான் கேட்டுக்கொண்டபடி, கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து கொடுத்தார்கள். பழைய கால முறைப்படி டவரா டம்ளரில் காப்பி வந்தது. டம்ளரைப் பார்த்து நான் பயந்தே போனேன். உண்மையிலேயே டம்ளர் ஆதி காலத்துதான். கால் லிட்டர் கொள்ளளவு கொண்டது. நான் திருமதி வைகோ அவர்களிடம் கெஞ்சி அதல் பாதியை எடுத்துக் கொள்ளச் செய்தேன். உண்மையிலேயே டிகிரி காப்பிதான்.


வைகோ வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைக்கோட்டை

வைகோ அவருடைய பதிவுகளில் குறிப்பிட்டபடி அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை துல்லியமாகத் தெரிகிறது. ஸ்வாமி ஊர்வலங்கள் வந்தால் வீட்டை விட்டு நகராமலேயே ஸ்வாமியைத் தரிசித்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவருடன் அளவளாவிக்கொண்டு  விடை பெற்றேன். அந்த ஒரு மணி நேரமும் அவர்கள் காட்டிய அன்பையும் விருந்தோம்பலையும் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

நான் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு நான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இந்த சந்திப்பு நான் மறக்க முடியாத சந்திப்பு. நாங்கள் பிரிந்து இரண்டு மணி நேரத்திலேயே இந்த சந்திப்பைப் பற்றி பதிவு போட்டு விட்டார். லிங்க் இதோ.

http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

என்னால் அப்படிப்போட முடியவில்லை. அவருடைய சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் முன்னால் நான் ஒரு வாழைப்பழச்சோம்பேறி. அதனால்தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் இது ஒரு தாமதமான பதிவு என்று குறிப்பிட்டேன்.

வைகோ தம்பதியினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

23 கருத்துகள்:

  1. பதிவும் படங்களும் மிக அருமை. உண்மையில் இரு பிரபல பதிவர்கள் அல்ல, இரு பிரபல இளைஞர்கள் எனக் கூறினால் அது மிகை ஆகாது. திருச்சி எனது கல்லூரி காலங்களில் சிலவற்றை கழித்த இடம், மலைக்கோட்டையும், மல்லிகை சூடிய இளம் பெண்களின் கூட்டத்தையும் மறக்க இயலாது. ஒரு நினைவூட்டலாகவும் இந்த பதிவு எனக்கு அமைந்தது.

    மிக்க நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  2. நானும் அவர்களைத் தரிசித்து
    ஆசி பெறவேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பதால்
    இப்பதிவு எனக்கு இது ஒரு நல்ல வழிகாட்டிப் பதிவாகவும்
    அமைந்து மிக்க மகிழ்வளிக்கிறது
    இரு பதிவுலக இளைஞர்களின் சந்திப்பும்
    பதிவும் மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
  3. இனிய சந்திப்பை உங்கள் பாணியில் சொன்னது ரொம்பவும் சுவாரஸ்யம்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. இரு "பிரபல" பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  5. இரண்டு இளைஞர்களும் சந்தித்து உரையாடியது குறித்து சந்தோஷம். அவர் ஜன்னலிலிருந்து ஒரு வடைக்கடையும் தெரியுமே... அதை விட்டு விட்டீர்களே! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். திங்கள், 7 ஏப்ரல், 2014 7:30:00 முற்பகல் IST

      //அவர் ஜன்னலிலிருந்து ஒரு வடைக்கடையும் தெரியுமே... அதை விட்டு விட்டீர்களே! :))//

      கடைசி போட்டோவில் அதையும் கவர் செய்துள்ளார்கள்.

      துரதிஷ்டவசமாக அன்று அந்த வடை/பஜ்ஜிக் கடைக்கு விடுமுறையாகிப்போய் விட்டது.

      அந்தப்படத்தில் கீழே ஒரு சந்தின் ஆரம்பத்தில் ஓர் ஆட்டோ நிற்கிறது பாருங்கள்.

      அதன் அருகே ஒரு கை வண்டி மூடப்பட்டுள்ளது பாருங்கோ.

      அதுதான் பஜ்ஜி/வடைக்கடை.

      அந்தக்கடை திறந்திருப்பதை இதோ இந்த என் பதிவினில் சுடச்சுட பஜ்ஜி மணம் கமழக் காட்டியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

      நீக்கு
    2. நானும் பஜ்ஜிக்கடையை காணவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் வைகோ என்னுடைய போட்டோவில் இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் தானும் கவனித்தேன்.

      ஆனாலும் போட்டோ அநியாயத்திற்கு அவ்வளவு துல்லியமாய் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். என்னுடைய கேமராதானா, நான் எடுத்த படம்தானா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. “ திருச்சியில் ஒரு இளைஞர் “ - மூத்த வலைப்பதிவர் திருச்சி வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நீங்கள் சொன்ன தலைப்பு நூற்றுக்கு நூறு பொருந்தும். எப்போதும் இனிய முகத்தோடு எல்லோரையும் வரவேற்பவர். வலைப்பதிவர் என்றால் அவருக்குள்ளேயே இனம் புரியாத பாசம் அவருக்குள் வந்துவிடும். ஒரு குழந்தையாக மாறி நம்மையும் ஒரு குழந்தையாக எண்ணி உபசரிக்கத் தொடங்கி விடுவார். அவரது மனைவியும் வள்ளுவருக்கேற்ற வாசுகி போல் திரு V.G.K மனம் அறிந்து நடப்பவர்.

    நீங்கள் உங்கள் காரை தங்கும் விடுதியிலேயே விட்டுவிட்டு பஸ்ஸில் சென்றதுதான் சரி. ஏனெனில் திரு V.G.K இருக்கும் ஆண்டார் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக்கோட்டை பகுதியில் கார் பார்க்கிங் வசதி கிடையாது.

    இரண்டு பிரபல வலைப்பதிவர்களும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அனுபவ பகிர்வுக்கு நன்றி!

    ( முதற் கருத்துரையில் PHONETIC முறையில் டைப் செய்யும் போது வள்ளுவர் என்பது வள்ளூவர் என்று தவறாக வந்துவிட்டது. எனவே அதனை நீக்கி விட்டேன். மன்னிக்கவும்.)



    பதிலளிநீக்கு
  8. அட! ஜன்னல் காட்சி சூப்பர்! இதுக்காகவும் அந்த டிகிரி காஃபிக்காகவும் போயே தீரணும் நானும்.

    முந்தைய திருச்சி பயணத்தில் விவரமில்லாமல் கோட்டை விட்டுட்டேனே:(

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் வை.கோ-வைச் சந்தித்துவிட்டுத் திரும்புகையில் " Why Go?" இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுப் போகலாமே' என்று சொல்லவில்லையா? நல்ல பதிவு. இருவரும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. ஒரு இளைஞரை இன்னொரு இளைஞர் போய் சந்தித்திருக்கிறார். மாம்பழ ஜூஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார். ரொம்பவும் தயங்கி ஒரு டம்பளர் நீர் கொடுத்தார் என்கிற வரிகளில் தெரியும் உங்கள் குறும்பை ரொம்பவும் ரசித்தேன்.

    நானும் போகவேண்டும் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன். எப்போது என்று தெரியவில்லை. ஜூன் மாதம் வரை வெயில். அதன் பிறகுதான் திட்டமிடவேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. வை கோபாலகிருஷ்ணன் ஒரு இனிமையான மனிதர். எனக்கு அவர் மேல் கொஞ்சம் பொறாமைகூட. நான் உங்களை கோவையில் உங்கள் இல்லத்தில் சந்தித்திருந்தாலும் உங்கள் பெங்களூர் வருகையின் போது வருவதாகச் சொல்லி நான் காத்திருந்து ஏமாந்தது ஏனோஇப்போது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தவறு என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளை பெங்களூருக்கு டிக்கட் எடுத்து விடுகிறேன். டிக்கட் புக் ஆனதும் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறேன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. அன்புள்ள ஐயா, வணக்கம் ஐயா.

      தங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி தான் ஐயா.

      தாங்கள் சொல்வதுபோல திருச்சியில் மிகவும் வெயில் ஜாஸ்தியாகக் கொளுத்தி வருகிறது ஐயா.

      நல்ல வேளையாக தாங்கள் வருகை தந்த அன்று மின் தடை ஏதும் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமே. லிஃப்ட் + A.C. ஐ நாம் நன்கு தடையேதும் இன்றி அனுபவிக்க முடிந்தது.


      நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தாங்கள் மெயின் கார்டு கேட் பகுதியிலிருந்து வெயிலில் நடந்தே என் வீடுவரை வந்துள்ளது எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் வருத்தமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.

      திரும்பிச் செல்லும்போதும், நான் ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்ன ஆட்டோவை வேண்டாம் என பிடிவாதமாக மறுத்து விட்டீர்களே, ஐயா. ;(

      10 நிமிட நடை தூரம் தான் என்றாலும், வெயில் நம்மை வாட்டி வதைத்து விடும் ஐயா.

      தாங்கள் இந்த நடை பயணத்தால் ஓர் இளைஞர் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள் !

      தாங்கள் நடந்தே வந்து நடந்தே போனதை நினைத்து நினைத்து எனக்கும் என் மனைவிக்கும், [நாங்கள் AC ROOM இல் இருந்தும் கூட] நீண்ட நேரம் வியர்த்துக்கொட்டிக்கொண்டே இருந்தது.

      காவிரி ஆறு வரண்டு இருப்பினும், என் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால், ஏதோ இன்று வரை காவிரி [கார்ப்பொரேஷன்] வாட்டர் + நிலத்தடி நீர் போரிங் வாட்டர் இரண்டும் பஞ்சமில்லாமல் குடிக்க சுவையாகக் கிடைத்தே வருகின்றன.

      போகப்போக எப்படி இருக்குமோ ?

      என் இல்லம் நோக்கி தங்களின் அன்பான வருகைக்கும், நகைச்சுவையான இந்தப் பதிவுக்கும், தாங்கள் பிரியத்துடன் கொடுத்துச்சென்ற ஸ்பெஷல் தின் பண்டங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      பிரியமுள்ள கோபு [ VGK ]

      நீக்கு
    2. அன்புள்ள திரு.வைகோ அவர்களுக்கு,

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. நீங்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி, தங்கள் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்ததை பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன். நேற்று இரவுதான் நினைவிற்கு வந்தது. இந்த தவறுக்கு மன்னிக்கவும்.

      நான் சிறுவயதில் ஆடம்பரங்களுக்கு பழகியவன் இல்லை. என் சட்டைகளை நானே துவைத்து நானே இஸ்திரி செய்து உபயோகித்தவன். மூன்று மைல் ( 5 மிலோமீட்டர்) தூரத்தில் இருக்கும் எங்கள் சொந்த ஊருக்கு நடந்தே போய் நடந்தே திரும்பவேன்.

      தவிர பிற்காலத்தில் வசதி வாய்ப்புகள் பெருகிய காலத்திலும் வாழ்க்கையை எளிமையாக வாழவேண்டும், அப்போதுதான் பிரச்சினைகள் குறைவாக இருக்கும் என்ற சித்தாந்தம் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பது உங்களுக்கும் தெரியும்.

      உடலுழைப்பு, கஷ்டங்களை தவிர்த்தல் ஆகியவை ஒருவனுடைய மனோவலிமையை சிதைக்கும் என்பதும் என் கருத்து. என் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்து இதுவரையில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால் என் விதியை என்றும் நான் நொந்து கொண்டது இல்லை. ஆண்டவன் இன்று என்னை சகல வசதிகளுடனும் வைத்திருக்கிறான். அவனுக்கு அன்றாடம் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

      ஆகவே நான் பத்து நிமிடம் வெய்யிலில் நடந்ததற்காக நீங்கள் வருந்த வேண்டாம். அப்படி நடக்க மனமும் உடம்பும் ஒத்துக்கொள்ளாவிடில் அப்புறம் இந்த உடம்பை வைத்துக்கொண்டு என்ன பயன்?

      நீக்கு
  13. தங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் நண்பர் வைகோவை சந்தித்ததை பகிர்ந்து கொண்டது சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. ஆமாம்... ஆமாம்.... துளசி மேடம் சொல்வது போல் அந்த டிகிரி காஃபிக்காகவே ஒரு முறை போயே தீரணும்ன்னு தோனுது.
    தமிழ்நாட்டவரின் உபசரிப்பினைச் சொல்லவா வேண்டும். நீங்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஐயாவைச் சந்தித்த அனுபவத்தை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்...

    வாழ்த்துக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  16. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களை திருச்சி சென்றால் அவசியம் சந்திக்கவேண்டும் என்று திரு தி. தமிழ் இளங்கோ மற்றும் திரு சீனா அவர்களின் பதிவுகளைப் படித்தபோது தீர்மானித்திருந்தேன். தங்களின் இந்த பதிவு அந்த ஆசையை மேலும் தூண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் வீட்டிற்குச் செல்ல நினைப்பதுண்டு. ஒரு சில முறை மட்டுமே செல்ல முடிந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதும் ஒரு காரணம்....

    செல்லும்போதெல்லாம் அவர் வீட்டு டிகிரி காப்பியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் தின்பண்டங்களும் எனக்கும் பிடித்தவை!

    இரண்டு பேருமே இளைஞர்கள் என்பதில் சந்தேகமென்ன....

    பதிலளிநீக்கு
  18. ஐயா வலைச்சர அறிமுகமு பார்த்து உங்க பக்கம் வந்தேன் திருச்சியின் பிரபல பதிவரை சந்திக்க எனக்கெல்லாம் எப்ப வாய்ப்பு கிடைக்குமோ???

    பதிலளிநீக்கு