திங்கள், 7 செப்டம்பர், 2015

சினிமா நடிகர்கள் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம்

                                          Image result for cine actor cutout worship
நான் சிறுவனாக இருந்தபோது சினிமா நடிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ரசிகர்களும் இருந்தார்கள். அந்தந்த ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்கள் நடித்த படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். இப்போது போல் தொழில் நுட்பக் கருவிகள் கண்டு பிடிக்கப்படாத காலம்.

தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் நடித்த படத்தை பல முறை, சிலர் தினமுமே பார்த்த காலம் அது. படங்கள் நல்ல முறையில் நல்ல கம்பெனிகள் தயாரித்தன. இன்று போல் கோடிக்கணக்கில் செலவு செய்தவர்கள் யாரும் இல்லை. சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் தாங்கள் போடும் முதலீட்டுக்கும் உழைப்பிற்கும் தகுந்த லாபம் பெற்று வந்தார்கள். ஏதோ ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் தங்கள் முதலை இழந்து ஓட்டாண்டிகளானார்கள்.

குறிப்பாக சில சினிமா நடிகர்கள், தாங்கள் நடித்த படங்கள் நல்ல வசூலைத் தருவது கண்டு பேராசைப்பட்டு சினிமா எடுக்கத் துணிந்து சினிமா எடுத்தார்கள். அப்படி சினிமா எடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணத்தை இழந்ததுமல்லாமல் தங்கள் மார்க்கெட்டையும் இழந்தார்கள்.

பிற்காலத்தில் நடிக்கவந்தவர்களில் குறிப்பாக சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றவர்கள் இந்தத் தவறை செய்யாமல் தாங்கள் சம்பாதித்ததை நல்ல முதலீடுகளில் போட்டார்கள். அவர்களும் பிற்காலத்தில் சினிமா எடுக்கத் துணிந்தார்கள். சில படங்கள் வெற்றியளித்தன. ஆனாலும் அவர்கள் நல்ல முதலீடுகளில் பணம் போட்டிருந்ததால் சில தோல்விகள் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படியும் சிலர் தங்கள் கடைசி காலத்தில் வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந்தக் காலகட்டம் வரையில் சினிமா நடிகர்களுக்கென்று யாரும் ரசிகர் மன்றம் வைக்கவில்லை. ரஜனிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தபோது அவர்கள் பழைய நடிகர்களை போட்டியில் வென்றாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோதுதான் இந்த ரசிகர் மன்றம் அமைப்பதைப் பற்றி யாரோ ஒருவரின் மூளையில் உதித்திருக்கிறது.

இவர்கள் ஆரம்பித்து வைத்த ரசிகர் மன்ற கலாச்சாரம் இன்று அருகுபோல் வேறூன்றி ஆல்போல் தழைத்து நிற்கிறது. இந்த நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் தினத்தன்று அந்தந்த தியேட்டர்களின் முதல் காட்சியின் மொத்த டிக்கெட்டுகளும் இந்த ரசிகர் மன்றங்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்றங்கள்தான் அந்தப் படத்திற்கு தாரை தப்பட்டைகளுடன் விளம்பரம் செய்கிறார்கள். தியேட்டரில் வைத்திருக்கும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

இந்த முதல் காட்சியின்போது இவர்கள் தியேட்டருக்குள் செய்யும் அக்கிரமங்களை எழுத்தில் சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த ரசிகர் மன்றங்கள் அந்தந்த நடிகர்களின் அனுமதியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. வாழ்க ரசிகர் மன்றம். வாழ்க நடிகர்கள்.

13 கருத்துகள்:

  1. சிவாஜி, எம் ஜி ஆர் காலத்திலேயே அவர்களுக்கே ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு விட்டன.

    //அப்படி சினிமா எடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணத்தை இழந்ததுமல்லாமல் தங்கள் மார்க்கெட்டையும் இழந்தார்கள்.//

    குறிப்பாக டி ஆர் மகாலிங்கம்! அவர் சொந்தத் தயாரிப்பில் அவர் மகன் பெயரில் எடுத்த ஒரு படம் கூட ஓடவில்லை!

    பதிலளிநீக்கு

  2. // இந்தக் காலகட்டம் வரையில் சினிமா நடிகர்களுக்கென்று யாரும் ரசிகர் மன்றம் வைக்கவில்லை.//

    அப்போதும் எம்‌ஜி‌ஆர் சிவாஜி ஆகியோருக்கும் மன்றங்கள் இருந்தன. மேலும் இந்த மன்றங்கள் அவ்வப்போது வரும் படங்களின் பெயரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டன. (எ.கா: தங்கப்பதக்கம் சிவாஜி இரசிகார் மன்றம்) அவைகளை அடியொட்டித்தான் பின்னாட்களில் கமல் இரஜனி போன்றோருக்கு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் கமலஹாசன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டவை நற்பணி மன்றங்கள் என அழைக்கப்பட்டன.

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பதிவர்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் இல்லாதது ஏன்?

    பதிலளிநீக்கு
  4. யதார்த்தத்தை வேதனையுடன் பகிர்ந்துள்ளீர்கள். அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  5. அதனால்தானோ என்னவோ சில நடிகர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்ளக் கூடும்

    பதிலளிநீக்கு
  6. என்ன ஐயா கடைசியில் அவர்களை வாழ்க என்று முடித்து விட்டீர்கள்
    தமிழ் மணம் பாலாறு

    பதிலளிநீக்கு
  7. இன்றுள்ள எந்த நடிகருக்கும் எம்.ஆர் .ராதா போல் ரசிகன் பேய்கூத்தைச் சாடும் தைரியம் உண்டா? இவர்களின் அறியாமையில் அவர்கள் சந்ததி கோலோச்சுது.
    இது இளிச்சவாய்த் தமிழனுக்கு கல்லாலெழுதிய எழுத்து. நானும் நீங்களும் நொந்தாவது ஏதும் இல்லை.
    உண்மையிலேயே , இவற்றைப் பார்க்கும் போது, இதில் ஒன்றாவது விழுந்து செத்தால் , நாட்டின் பாரம் குறையுமே என மனம் எண்ணும். என்னைக் குரூரமனம் படைத்தவனாக உள்ளான் என யாரவது நினைத்தாலும் கவலையில்லை. துன்பப்படுவோரைக் கண்டு இரங்கும் என் மனம் இவர்களையும் இவர்கள் தலையில் தூக்கி வைத்தாடுபவர்களையும் பார்க்கும் போது கொதிக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. தமிழ்நாட்டின் கலாச்சார சீர்கேடுகளுக்கு அடிப்படையாக சில ரசிகர் மன்றங்கள் செயல் படுகின்றன...அய்யா....புதுகை வலைப்பதிவர் விழாக்குழுவினர் சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி

    பதிலளிநீக்கு
  9. தமிழ்நாட்டில் அப்போது தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆர், சிவாஜி மன்றங்கள்தான் இப்போதைய ரசிகர் மன்றங்களுக்கு வழிகாட்டி. சினிமா ரசிகர்களை மையமாக வைத்து ஜெய்சங்கர் நடித்த “சினிமா பைத்தியம்” என்ற படம் வெளியானது (கதை –வசனம் ஏ.எஸ்.பிரகாசம்) நினைவுக்கு வருகிறது.

    இந்த பதிவை இன்னும் கொஞ்சம் விரிவாக, சுவாரஸ்யமாக உங்களுக்கே உரிய குறும்பு மொழியில் எழுதி இருக்கலாம். ஏதோ அவசரத்தில், சுருக்காக முடித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு