சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 செப்டம்பர், 2015

சினிமா நடிகர்கள் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம்

                                          Image result for cine actor cutout worship
நான் சிறுவனாக இருந்தபோது சினிமா நடிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ரசிகர்களும் இருந்தார்கள். அந்தந்த ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்கள் நடித்த படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். இப்போது போல் தொழில் நுட்பக் கருவிகள் கண்டு பிடிக்கப்படாத காலம்.

தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் நடித்த படத்தை பல முறை, சிலர் தினமுமே பார்த்த காலம் அது. படங்கள் நல்ல முறையில் நல்ல கம்பெனிகள் தயாரித்தன. இன்று போல் கோடிக்கணக்கில் செலவு செய்தவர்கள் யாரும் இல்லை. சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் தாங்கள் போடும் முதலீட்டுக்கும் உழைப்பிற்கும் தகுந்த லாபம் பெற்று வந்தார்கள். ஏதோ ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் தங்கள் முதலை இழந்து ஓட்டாண்டிகளானார்கள்.

குறிப்பாக சில சினிமா நடிகர்கள், தாங்கள் நடித்த படங்கள் நல்ல வசூலைத் தருவது கண்டு பேராசைப்பட்டு சினிமா எடுக்கத் துணிந்து சினிமா எடுத்தார்கள். அப்படி சினிமா எடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணத்தை இழந்ததுமல்லாமல் தங்கள் மார்க்கெட்டையும் இழந்தார்கள்.

பிற்காலத்தில் நடிக்கவந்தவர்களில் குறிப்பாக சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றவர்கள் இந்தத் தவறை செய்யாமல் தாங்கள் சம்பாதித்ததை நல்ல முதலீடுகளில் போட்டார்கள். அவர்களும் பிற்காலத்தில் சினிமா எடுக்கத் துணிந்தார்கள். சில படங்கள் வெற்றியளித்தன. ஆனாலும் அவர்கள் நல்ல முதலீடுகளில் பணம் போட்டிருந்ததால் சில தோல்விகள் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படியும் சிலர் தங்கள் கடைசி காலத்தில் வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந்தக் காலகட்டம் வரையில் சினிமா நடிகர்களுக்கென்று யாரும் ரசிகர் மன்றம் வைக்கவில்லை. ரஜனிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தபோது அவர்கள் பழைய நடிகர்களை போட்டியில் வென்றாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோதுதான் இந்த ரசிகர் மன்றம் அமைப்பதைப் பற்றி யாரோ ஒருவரின் மூளையில் உதித்திருக்கிறது.

இவர்கள் ஆரம்பித்து வைத்த ரசிகர் மன்ற கலாச்சாரம் இன்று அருகுபோல் வேறூன்றி ஆல்போல் தழைத்து நிற்கிறது. இந்த நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் தினத்தன்று அந்தந்த தியேட்டர்களின் முதல் காட்சியின் மொத்த டிக்கெட்டுகளும் இந்த ரசிகர் மன்றங்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்றங்கள்தான் அந்தப் படத்திற்கு தாரை தப்பட்டைகளுடன் விளம்பரம் செய்கிறார்கள். தியேட்டரில் வைத்திருக்கும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

இந்த முதல் காட்சியின்போது இவர்கள் தியேட்டருக்குள் செய்யும் அக்கிரமங்களை எழுத்தில் சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த ரசிகர் மன்றங்கள் அந்தந்த நடிகர்களின் அனுமதியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. வாழ்க ரசிகர் மன்றம். வாழ்க நடிகர்கள்.

ஞாயிறு, 31 மே, 2015

அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்.

                                                      Image result for விஸ்வாமித்திரர் மேனகை

முன்னொரு காலத்தில் சினிமா மட்டுமே மக்களின் முழுமையான பொழுது போக்கும் வழியாக இருத்தது. வேறு பொழுது போக்கும் வழிகள் கிளப்பில் சீட்டாடுவது அல்லது கிளப்பில் ஏதாவது விளையாட்டுகள் விளையாடுவது, வீட்டிலுள்ள பெண்கள் தாயக்கட்டம், அல்லது பல்லாங்குழி விளையாடுவது உண்டு.

ஆனாலும் சினிமா பார்ப்பது மட்டுமே அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. இந்தப் பொழுது போக்குகளின் முக்கிய அம்சம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாகப் பேசிப் பழகிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் மனப்போக்கு என்னவென்று கூடப் பழகுபவர்களுக்குத் தெரியும்.

இன்று தங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்று தந்தைக்குத் தெரியாது. அவன் என்னமோ கம்ப்யூட்டரில் விளையாடுகிறான் என்ற அளவிற்குத்தான் தெரியும். இது காலத்தின் கட்டாயம். குடும்பத்துடன் ஒரு சினிமா பார்த்துவிட்டு ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு வரும் அனுபவம் குடும்ப அங்கத்தினர்களிடையே ஒரு புரிதலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

அந்தக்காலத்தில் சினிமா தியேட்டர்கள் புதிதாக கட்டும்போது அந்த ஊரில் இருக்கும் தியேட்டர்களைவிட நூதனமாக இருக்கவேண்டும் என்று பல உத்திகளைக் கையாண்டார்கள். கோயமுத்தூரில் திரைப்படத்துறையில் முன்னோடியாக விளங்கிய பிரபல சினிமா புள்ளி திரு. சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். நகரத்தின் மையத்தில் வெரைட்டி ஹால் என்று ஒரு தியேட்டர் கட்டி வெற்றிகரமாக நடத்தினார். இந்த தியேட்டர்தான் அந்தக்காலத்தில் தென்னிந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் தியேட்டர் என்று சொல்லப்படுகிறது. இங்கு முதலில் ஊமைப் படங்கள்தான் திரையிடப் பட்டிருக்கின்றன. அந்த தியேட்டர் இருந்த ரோடுக்கே வெரைட்டி ஹால் ரோடு என்று பெயர் நிலைத்து விட்டது.

அவர்  ஆர்.எஸ். புரம் பகுதியில் புதிதாக வின்சென்ட் லைட்ஹவுஸ் என்ற பெயரில் 1945-46 ல் ஒரு தியேட்டர் கட்டினார். அதில் பல கலை நுட்ப அலங்காரங்களைப் பயன் படுத்தியிருந்தார். சுவர்களில் பல ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. விஸ்வாமித்திரர் மேனகையுடன் சல்லாபித்து பிறந்த குழந்தையை நிராகரிக்கும் காட்சி தத்ரூபமாக திரைக்கு ஒரு பக்கம் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. அலங்கின் பின் சுவற்றில் சாகுந்தலத்திலிருந்து பல காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தன.

இதில் முதல் படமாக நாகையா நடித்த "தியாகையா" என்ற தெலுங்கு படம் திரையிடப்பட்டது. அப்போது எனக்கு 12 வயது. அடுத்த படமாக மிஸ்ஸியம்மா திரையிடப்பட்டது. அதை நான் என் அத்தையுடன் பார்த்தேன். தியேட்டரின் அமைப்பும் அலங்காரங்களும் பிரமிப்பூட்டுவதாக இருந்தன. படமும் மிகவும் உணர்ச்சி வசமான காட்சிகள் நிறைந்த படம். "வாராயோ வெண்ணிலாவே" என்ற பாட்டு இன்றும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத ஒரு பாட்டு.

அந்தக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சினிமா பார்த்த பிறகு ஏற்படும் ஒரு மன நிறைவு இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களில் கிடைப்பதில்லை என்பது ஒரு சோகமே.                        



அப்போது கோயமுத்தூரில் 9 தியேட்டர்கள்தான் இருந்தன. அவைகள் ஒவ்வொன்றிலும் வழக்கமாக சில பேனர் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஜெமினி படங்கள் ராயல் தியேட்டரிலும் ஏவிஎம் படங்கள் கர்னாடிக் தியேட்டரிலும் வழக்கமாக வெளியாகும். அந்தக் காலத்து சினிமா வியாபாரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் ஒவ்வொரு பேனர் படங்களுக்கும் வழக்கமாக ஒரே விநியோகஸ்தர்தான் இருப்பார். புரோடியூசர், டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர்காரர், இந்த மூன்று பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது.

வியாபாரத்தில் எந்த சிக்கலும் வந்த மாதிரி எனக்கு நினைவில்லை. அந்தக் காலத்தில் படம் வெளியாகும் தினத்தன்று எல்லா முக்கிய செய்தித் தாள்களிலும் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரம் வெளியாகும். அதுபோக நகரத்தின் முக்கிய பகுதிகளில் விளம்ப பேனர்கள் வைப்பார்கள். இது தவிர முக்கிய வியாபார ஸ்தலங்களில் மூன்றடிக்கு இரண்டடி சைசில் தட்டி பேனர்கள் வைப்பார்கள். இதற்காக அந்த கடைக்காரர்களுக்கு ஒரு ஷோ சினிமா பார்க்க ஒரு பாஸ் கொடுப்பார்கள். அதற்கு "தட்டிப் பாஸ்" என்றே பெயர்.

இது தவிர நான்கைந்து சிறுவர்களை வைத்து ஒரு தள்ளு வண்டி, முக்கோண வடிவில் இருக்கும், அதில் சினிமா போஸ்டர்களை ஒட்டி கோஷம் போட்டுக்கொண்டு முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள். அவர் போடும் கோஷமே அலாதியானது. ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் கோரஸாக அதற்குப் பதில் சொல்லுவார்கள்.

என் நினைவில் இருக்கும் கோஷங்களைக் கூறுகிறேன்.

கேள்வி: கோபாலா
பதில்: ஏன் சார்?

கே: எங்கே போற?
ப:  சினிமாவுக்குப் போறேன்.

கே: என்ன சினிமா?
ப:    மிஸ்ஸியம்மா சினிமா

கே:   எந்த தியேட்டர்ல?
ப:  வின்சென்ட் லேட்ஹவுஸ் தியேட்டர்ல

கே: யாரு நடிக்கிறாங்க
ப:  ஜெமினி கணேசனும் சாவித்திரியும்.

இப்படியாக கோஷம் போட்டுக்கொண்டே அந்த சிறுவர்கள் வீதி வீதியாகப் போவார்கள்.

அப்போது டிக்கட்டுகள் நான்கு வகையாக இருக்கும். தரை, பெஞ்சு, சேர், பாலகனி. அவ்வளவுதான். வின்சென்ட் லைட் ஹவுசில் பாக்ஸ் என்று ஒரு அமைப்பு உருவாக்கியிருந்தார்கள். நான்கு பேர் உட்கார்ந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இது மாதிரி அப்போது எங்கும் இல்லை. ஊர் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

பிற்காலத்தில் ஊர் ஊருக்கு இந்த மாதிரி புது தினுசுகளில் தியேட்டர்கள் வர ஆரம்பித்தன. மதுரை தங்கம் தியேட்டர் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. தூத்துக்குடியில் சார்லஸ் தியேட்டரும் அது போலவே பிரபலமானது.

இப்படியாக தியேட்டர்களும் சினிமாக்களும் வளர்ந்து இன்றைக்கு சினிமாத் தொழில் படு கேவலமாக ஆகி வருவதைப் பார்த்தால்  காலத்தின் தாக்கம் புரிகிறது.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

நான் முட்டாள் ஆனேன்.

நான் எப்போதும் என் மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிடுவேன். இதனால் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் என்னால் என் குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

முன்னொரு காலத்தில் ஒரு நெசவாளி ஒரு மன்னரை ஏமாற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கண்ணுக்குத் தெரியாத அபூர்வ ஆடை நெய்வதில் நான் நிபுணன் என்று சொல்லி அரசனை அம்மணமாக நகர்வலம் போகச்செய்துவிட்டான். எல்லாரும் அரசனைத் துதி பாடிக் கொண்டிருக்கும்போது ஒரு குழந்தைதான் உண்மையைக் கூறியது உங்களுக்குத் தெரியும்.

அந்த மாதிரி இப்போது உலகமே போற்றிக்கொண்டிருக்கும் ஒரு சினிமாவைப் பற்றி என் கருத்தைக் கூற விரும்புகிறேன். நான் இது வரையிலும் சினிமா விமரிசனம் எழுதியதில்லை. இப்பாதும் இதை சினிமா விமரிசனமாக எழுதவில்லை.

சினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கு சாதனம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாதாரண பிரஜை. இந்த சினிமா பத்து கோடி ரூபாய் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் சரி, கை விடியோ கேமராவில் எடுக்கப்பட்டிருந்தாலும் சரி, எனக்கு வேண்டியது என்னவென்றால் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்.

லேடெஸ்ட் சினிமா டெக்னாலஜியில் நான் இந்தப் படம் எடுத்திருக்கேன் என்றால் எனக்கென்ன ஆயிற்று? எனக்கு படம் புரிகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.

நான் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்து ரசித்தவன். பிகாசோ ஓவியங்களின் கசாப்புக்கடை சீன்களை என்னால் ரசிக்க முடிந்ததில்லை. நான் பிற்போக்குவாதியாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் என்னை மாதிரித்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

பாசமலர், கல்யாணப்பரிசு, தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். அவைகளை எப்போதும் பார்க்கலாம். மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிவாஜி என்ற படம் தோல்வியைத் தழுவியது தெரியும்.

சினிமா என்றால் பாமர ரசிகனுக்குப் புரியும்படியாக இருந்தால்தான் அது வெற்றியடையும். ரொம்பவும் டெக்னிகலான படம் என்றால் அது இந்தியாவில் விலை போகாது.

விஸவரூபம் படம் பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சத்தம் விதவிதமாக வருகிறது. வெறும் சத்தத்திற்காக ஒரு படம் ஓடுமா என்று எனக்குத் தெரியவில்லை. சைக்கோ என்று அந்தக்காலத்தில் ஒரு படம் வந்தது. அதில் ஒரு காட்சியில் ஒரு சப்தம் கொடுத்திருந்தார்கள். ஒரு நிமிடம் இருதயம் நின்று பிறகு துடித்தது.

இங்கே வெறும் சப்தம் மட்டும்தான் இருக்கிறது. இதற்கு நல்லாப் பூச்சாண்டி காட்டுனாங்கய்யா.

புதன், 22 ஆகஸ்ட், 2012

ஒரு மனக்கணக்கு


சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

அப்படியானால் ஒரு நாளைக்கு 20 கோடி

100 தியேட்டர் என்றால் தியேட்டருக்கு 20 லட்சம்

1000 தியேட்டர் என்றால் தியேட்டருக்கு 2 லட்சம்

ஒரு நாளைக்கு 4 ஷோ என்றால் ஷோவிற்கு 50000 ரூபாய்

ஒரு ஷோவில் 1000 பேர் என்றால் ஒரு டிக்கட் 500 ரூபாய்

அல்லது

ஒரு ஷோவில் 2000 பேர் என்றால் ஒரு டிக்கட் 250 ரூபாய் 

அதாவது ஒரு நாளில் 1000 தியேட்டர்களில் 4 ஷோவில் பார்த்தவர்கள் 
4000 x 2000 = 8,00,000  = எட்டு லட்சம் பேர் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்து சினிமா பார்த்திருக்கிறார்கள்.

இந்தியா நிச்சயம் வல்லரசாகிறதோ இல்லையோ பணக்கார நாடு ஆகிவிட்டது.