வெள்ளி, 24 நவம்பர், 2017

26. கல்யாணங்களில் மேக்கப் கலைஞர்களும் விடியோக்காரர்களும்.

                                                 Image result for marriage makeup in tamilnadu
இரண்டு நாட்களுக்கு முன் நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண்ணின் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். கல்யாண சடங்குகளை மேற்பார்வை பார்த்துக்கொள்ளுமாறு பெண்ணின் தாயார் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். காலை சரியாக 9 மணிக்கு சடங்குகளை ஆரம்பித்து விடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

நானும் அதே போல் உறவினர்களை எல்லாம் தயார் பண்ணி வைத்திருந்தேன். 9 மணிக்கு மணப்பெண் மேடைக்கு வரவேண்டும். 9 மணி, 9.15, 9.30, 9.45, 10 மணியும் ஆகி விட்டது. மணப்பெண் வருவதாகக் காணோம். மணப்பெண்ணின் அறைக்குப் போய் பெண்ணின் தாயாரிடம் '' என்னம்மா, ஏன் இப்படி லேட்'' என்று கேட்டேன்.

மேக்கப் போடும் அம்மா விடமாட்டேன் என்று சொல்கிறாள் என்று பதில் வந்தது. ஏம்மா, மேக்கப்காரியிடம் முதலிலேயே இந்த நேரத்திற்குள் மேக்கப்பை முடிக்கவேண்டும் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். சொன்னதுதானுங்க, ஆனால் இப்போது சொன்ன நேரத்திற்குள் மேக்கப்பை முடிக்க வில்லையே, நான் என்ன செய்வது என்று புரியவில்லை என்று பெண்ணின் தாயார் தன் கஷ்டத்தைச் சொல்லி புலம்பினாள்.

பல கல்யாணங்களில் இப்படித்தான் மேக்கப் போடுபவர்கள் அநியாயத்திற்கு காலதாமதம் செய்கிறார்கள். பாதி மேக்கப்பில் பெண்ணை கூட்டி வருவது இயலாத காரியம். கல்யாணக்காரர்களின் பாடு படு திண்டாட்டம்.

அடுத்து கல்யாண சடங்குகள் நடைபெறும்போது இந்த போட்டோக்காரனும் விடியோக்காரனும் பண்ணும் அழும்புகள் இருக்கிறதே அதைச்சொல்லி மாளாது. எந்த சடங்கையும் வந்திருக்கும் உறவினர்கள் பார்க்க முடியாது. இந்த ஆட்கள் சுற்றிலும் நின்று கொள்வார்கள். யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

அதிலும் இவன்கள் செய்யும் இன்னொரு கொடுமை என்னவென்றால், ஒரு சடங்கு முடிந்தவுடன், இவன் எடுத்த போட்டோ சரியாக இல்லை என்றால் அந்த சடங்கை மறுபடியும் செய்யச்சொல்வான். இந்த சடங்குகள் மந்திரங்கள் சொல்லி புனிதமாகச் செய்யப்படுபவை. அதைப்பற்றி இந்த போட்டோக்காரனுக்கு கவலை இல்லை. அவனுக்கு போட்டோ நன்றாக வரவேண்டும். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். தாலி கட்டுவதையே இன்னொரு முறை செய்யச்சொன்னாலும் நம் ஆட்கள் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.

இனிமேல் கல்யாணத்தை நடத்த இந்த மேக்கப்காரிகளும் விடியோக்காரன்களுமே போதுமானதாக ஆகி விடும். விருந்தினர்கள் போய் தலையைக்காட்டி விட்டு சாப்பிட்டுவிட்டு வருவதோடு சரி. என்னைப் போன்ற கிழங்கட்டைகளுக்கு இந்தக் கூத்தைப் பார்க்க சகிப்பதில்லை. நாம் ஏதாவது சொல்லப்போனால் ''பெரிசு, இதுதான் இந்தக் காலத்து நாகரிகம், உங்க காலம் மாதிரி பொண்ணு தலையைக் குனிஞ்சிகிட்டு இருந்த தெல்லாம் உங்க காலத்தோட போச்சு. பேசாம சாப்பிட்டுட்டுப் போவயா, அது சொத்தை, இது சொத்தைன்னு புலம்பாதே'' என்ற அறிவுரைதான் வரும்.

நம்ம மரியாதையைக் காப்பாத்திக்கணும்னா இந்த மாதிரி வைபவங்களுக்குப் போகாமலிருப்பதுதான் சிறந்தது.

                                       Image result for videographer

10 கருத்துகள்:

  1. ///ஒரு சடங்கு முடிந்தவுடன், இவன் எடுத்த போட்டோ சரியாக இல்லை என்றால் அந்த சடங்கை மறுபடியும் செய்யச் சொல்வான்///

    உண்மை ஐயா இது எனக்கு அறவே பிடிக்காத காரியம்.

    நீங்கள் சொல்வது போல நண்பன் கோவிலில் பூக்குழி இறங்கினான் நண்பன் சரியாக எடுக்காததால் மீண்டும் இறங்கி வரச்சொன்னான். இதெல்லாம் தெய்வகுற்றம் ஆகாதா ? பிறகு மழை வரவில்லை ஆத்தா கண் திறக்கவில்லை என்றால் எப்படி ?

    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. காலம் மாறி விட்டது ஐயா ஏறுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான். கொடுமை.
    //தாலி கட்டுவதையே இன்னொரு முறை செய்யச்சொன்னாலும் நம் ஆட்கள் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.//

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் அய்யா! "இப்பொழுது போட்டோ எடுக்கும் சடங்கு நடக்கிறது" அது நடந்த பின்தான் அனைத்தும் என்று நான் சொல்வதுண்டு! தாலி கட்டும்போது கூட போட்டோ எடுப்பவர்களின் பின்பக்கத்தைத்தான் பார்க்கமுடிகிறது! இதுதன் உச்சகட்டக்கொடுமை!




    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வது சரி. குறிப்பாக வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் மற்றவர்களை பார்க்க விடாமல் மறைப்பது. இன்னொரு கஷ்டம் கல்யாண ரிஸப்ஷன்களில் சத்தமாக இசைக்க கச்சேரித் தலைவலி. நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கும் உறவுகள், நட்புகள் யாரும் யாரோடும் பேசி விட முடியாது.

    பதிலளிநீக்கு
  6. இதைப்பற்றி நீங்கள் சுலபமாக எழுதிவிட்டீர்கள். இப்போ பல வருடங்களாகவே திருமணம் என்ற சடங்கு அபத்தக்களஞ்சியங்களாகிவிட்டன. இதனால் சமூகப் பாதிப்புகளைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அவரவர் திருமணம் அவரவர் விருப்பப்படி என்றாலும் நிறைய அபத்தங்கள். நீங்கள் எழுதியிருக்கிற போட்டோ, வீடியோ அராஜகங்களைவிட இன்னும் ஏகப்பட்டது இருக்கு.

    இந்த திருமண ஆல்பத்தை, வீடியோவை யார் திரும்பப் பார்க்கிறார்கள்? ஒரு உபயோகம், திருமணத்தை விசாரிக்க வந்தவர்களிடம் ஆல்பத்தைக் கையில் கொடுத்துவிட்டு அவரவர்கள் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் எல்லாவிஷயமும் சலிப்புத்தட்டி போகிறது சில அபத்தங்கள் அதீதமாய் ஆகும் போது

    பதிலளிநீக்கு
  8. நீங்க இந்த பதிவின் இறுதியில் போட்ட காமராவின் படமே சமுதாயத்தின் உண்மை நிலைமையை தெரிவிப்பது. தங்களது பகட்டை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக கடுமையாக போட்டி போட்டு கொண்டு படபிடிப்பு தான் நடத்தகிறார்கள்.
    அவர்களது படபிடிப்புக்கு கவர்ச்சி தரும் அலங்காரங்களாகவே தாலி, சடங்குகள், மந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். ஏதாவது கேள்வி கேட்டால் தாலியின் புனிதம், சடங்குகளின் அவசியம் என்று அடித்துவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  9. மட்டமான கலாசாரமாக மாறி விட்டது! சொன்னால் வாங்கிக் கட்டிக் கொள்ளணும்! :(

    பதிலளிநீக்கு