அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜனவரி, 2018

34. தற்கால சங்கீத வித்வான்கள்

நான் கொஞ்சம் கர்னாடக இசைப் பிரியன். இந்த சங்கீதத்தின் கணக்கு வழக்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல இசையென்றால் கேட்டு ரசிப்பேன் அவ்வளவுதான்.

இங்கே நான் பதிவு செய்திருக்கும் பாட்டும் பாடகியும் சங்கீத உலகில் பிரபலமானவர்கள். முதலில் அதைக் கேளுங்கள். பிறகு நான் என் சந்தேகத்தைச் சொல்லுகிறேன்.
இந்தப் பாடகிக்கு முன் ஒரு லேப்டாப் வைத்திருக்கிறார்கள் அல்லவா? இது எதற்கு என்று  நான் ரொம்ப நாளாய் என் மூளையைக் குழப்பிக்கொண்டு இருந்தேன். (எப்படி, சந்தடி சாக்கில் எனக்கும் மூளை இருக்கும் சமாச்சாரத்தை உங்களுக்கு சொல்லிவிட்டேன் பார்த்தீர்களா?)

இன்றைக்குத்தான் இந்த ரகசியத்தை எப்படியும் கண்டு பிடித்து விடுவது என்று கூகிளாரை வினவினேன். அவர் சொல்கிறார் - இது ஒரு டெலிபிராம்ப்டராம் - பாடகர்களுக்கு பாட்டின் வரிகள் மறக்காமலிருக்க அந்த வரிகள் இந்த லேப்டாப்பில் நகர்ந்து கொண்டு இருக்குமாம். அதைப் பார்த்து பாடகர்கள் பாடுவார்கள் என்று கூகுளார் சொன்னார்.

டிவி வந்த புதிதில் செய்தி வாசிப்பாளர்கள் இந்த மாதிரி டெலிபிராம்ப்டர்கள் உபயோகப்படுத்துவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது மேடைப் பாடகர்களும் இந்த யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு புரட்சிதான்.

சில பாடகர்கள் பாட்டை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு அதைப் பார்த்துப் பாடுவதைப் பார்த்திருக்கிறேன். பரவாயில்லை, தொழில் நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது பாருங்கள். அநேகமாக இன்னும் சில வருடங்களில் பாட்டை முன்பே பதிவு செய்து கொண்டு வந்து மேடையில் பக்க வாத்தியக்காரர்களும் பாடகரும் அந்த இசைக்கு ஏற்றபடி வாயையும் கையையும் அசைப்பார்கள் என்று யூகிக்கிறேன்.

என் சிறு வயதில் பிரபல பாடகர்கள் நான்கு ஐந்து மணி நேரக் கச்சேரிகளில் இந்த மாதிரி எந்த யுக்தியும் இல்லாமல் எப்படிப் பாடினார்கள் என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

வெள்ளி, 24 நவம்பர், 2017

26. கல்யாணங்களில் மேக்கப் கலைஞர்களும் விடியோக்காரர்களும்.

                                                 Image result for marriage makeup in tamilnadu
இரண்டு நாட்களுக்கு முன் நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண்ணின் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். கல்யாண சடங்குகளை மேற்பார்வை பார்த்துக்கொள்ளுமாறு பெண்ணின் தாயார் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். காலை சரியாக 9 மணிக்கு சடங்குகளை ஆரம்பித்து விடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

நானும் அதே போல் உறவினர்களை எல்லாம் தயார் பண்ணி வைத்திருந்தேன். 9 மணிக்கு மணப்பெண் மேடைக்கு வரவேண்டும். 9 மணி, 9.15, 9.30, 9.45, 10 மணியும் ஆகி விட்டது. மணப்பெண் வருவதாகக் காணோம். மணப்பெண்ணின் அறைக்குப் போய் பெண்ணின் தாயாரிடம் '' என்னம்மா, ஏன் இப்படி லேட்'' என்று கேட்டேன்.

மேக்கப் போடும் அம்மா விடமாட்டேன் என்று சொல்கிறாள் என்று பதில் வந்தது. ஏம்மா, மேக்கப்காரியிடம் முதலிலேயே இந்த நேரத்திற்குள் மேக்கப்பை முடிக்கவேண்டும் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். சொன்னதுதானுங்க, ஆனால் இப்போது சொன்ன நேரத்திற்குள் மேக்கப்பை முடிக்க வில்லையே, நான் என்ன செய்வது என்று புரியவில்லை என்று பெண்ணின் தாயார் தன் கஷ்டத்தைச் சொல்லி புலம்பினாள்.

பல கல்யாணங்களில் இப்படித்தான் மேக்கப் போடுபவர்கள் அநியாயத்திற்கு காலதாமதம் செய்கிறார்கள். பாதி மேக்கப்பில் பெண்ணை கூட்டி வருவது இயலாத காரியம். கல்யாணக்காரர்களின் பாடு படு திண்டாட்டம்.

அடுத்து கல்யாண சடங்குகள் நடைபெறும்போது இந்த போட்டோக்காரனும் விடியோக்காரனும் பண்ணும் அழும்புகள் இருக்கிறதே அதைச்சொல்லி மாளாது. எந்த சடங்கையும் வந்திருக்கும் உறவினர்கள் பார்க்க முடியாது. இந்த ஆட்கள் சுற்றிலும் நின்று கொள்வார்கள். யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

அதிலும் இவன்கள் செய்யும் இன்னொரு கொடுமை என்னவென்றால், ஒரு சடங்கு முடிந்தவுடன், இவன் எடுத்த போட்டோ சரியாக இல்லை என்றால் அந்த சடங்கை மறுபடியும் செய்யச்சொல்வான். இந்த சடங்குகள் மந்திரங்கள் சொல்லி புனிதமாகச் செய்யப்படுபவை. அதைப்பற்றி இந்த போட்டோக்காரனுக்கு கவலை இல்லை. அவனுக்கு போட்டோ நன்றாக வரவேண்டும். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். தாலி கட்டுவதையே இன்னொரு முறை செய்யச்சொன்னாலும் நம் ஆட்கள் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.

இனிமேல் கல்யாணத்தை நடத்த இந்த மேக்கப்காரிகளும் விடியோக்காரன்களுமே போதுமானதாக ஆகி விடும். விருந்தினர்கள் போய் தலையைக்காட்டி விட்டு சாப்பிட்டுவிட்டு வருவதோடு சரி. என்னைப் போன்ற கிழங்கட்டைகளுக்கு இந்தக் கூத்தைப் பார்க்க சகிப்பதில்லை. நாம் ஏதாவது சொல்லப்போனால் ''பெரிசு, இதுதான் இந்தக் காலத்து நாகரிகம், உங்க காலம் மாதிரி பொண்ணு தலையைக் குனிஞ்சிகிட்டு இருந்த தெல்லாம் உங்க காலத்தோட போச்சு. பேசாம சாப்பிட்டுட்டுப் போவயா, அது சொத்தை, இது சொத்தைன்னு புலம்பாதே'' என்ற அறிவுரைதான் வரும்.

நம்ம மரியாதையைக் காப்பாத்திக்கணும்னா இந்த மாதிரி வைபவங்களுக்குப் போகாமலிருப்பதுதான் சிறந்தது.

                                       Image result for videographer

ஞாயிறு, 7 மே, 2017

2. நதிமூலம்-2

Image result for gambling den
கணிணியில் சீட்டு விளையாடுவதைப்பற்றி போன பகுதியில் எழுதியிருந்ததின் தொடர்ச்சி. ஒரு நாள் போனில் என் மனைவி வழி உறவினர் யாரோ என்னைக் கூப்பிட்டிருக்கறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு என் மனைவி, அவர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்ல ஒரே கூத்தாகிப்போய்விட்டது. சீட்டு விளையாடுவது என்பது பஞ்சமா பாதகங்களில ஒன்றாக கருதப்படும் சமூகத்தில் பிறகு என் மாமனார் வகை உறவில் என் மதிப்பு என்ன ஆகி இருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.

சரி இந்த வம்பு வேண்டாம், ஆனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

இப்படி இருக்கும்போது என் நண்பர் ஒருவர் அமெரிக்காவுக்கு தன்னுடைய மகன் வீட்டிற்கு 6 மாத தங்கலுக்காக சென்று விட்டார். அவரும் என்னைப்போலவே ஓய்வு பெற்றவர். அவர் இங்கே இருக்கும்போது அவருக்கு என்ன வேலை என்றால் தினமும் காலையில் டிபன் சாப்பிட்டு முடிந்த்தும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு நண்பர் வீட்டிற்கு செல்வார். அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் பேசி உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வார். உலக நடப்பென்றால், திருவிளையாடல் சினிமாவில் சிவாஜி கணேசன் பாணியில் ‘நடந்தது, நடவாதது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும்’ அவருக்கு தெரிந்தாகவேண்டும். இல்லையென்றால் அன்று இரவு அவருக்கு தூக்கம் வராது.

இப்படியாக தினமும் காலையில் ஒரு நண்பர், மாலையில் ஒரு நண்பர் என்று முறை வைத்துக்கொண்டு நான்கு நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் வலம் வந்து செய்திகளை தெரிந்து கொள்வார். இது தவிர காலையிலும் மாலையிலும் இரண்டு குழுவினருடன் நடைப்பயிற்சியும் போவார். நடைப்பயிற்சியை விட அவருக்கு நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகம். இப்படிப்பட்ட அகோர செய்திப்பசி கொண்டவர் அமெரிக்காவில் போய் சிக்கிக்கொண்டால் எப்படியிருக்கும் ?
பொறுத்திருக்கவும்...

திங்கள், 6 ஜூன், 2016

நேத்து ராத்திரி யம்ம்மா தூக்கம் போச்சுதே யம்ம்மா

                         

நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் தாத்தா காலத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்து கோயமுத்தூருக்கு குடியேறினவர்கள். அப்போது கோயமுத்தூரில் புதிதாக லேஅவுட் போட்ட ஆர்எஆஃபுரம் பகுதியில் ஒரு இடம் வாங்கி கிராமத்து பாணியில் ஒரு ஓட்டு வீடு கட்டி குடியிருந்தார்கள். நான் அந்த வீட்டில்தான் பிறந்தேன்.

நான் ஏழாவது படிக்கும்போதுதான் வீட்டிற்கு மின்சார கனெக்ஷ்ன் வந்தது. மின்சாரம் லைட்டுகளுக்கு மட்டும்தான். மின் விசிறிகளெல்லாம் பெரிய பணக்காரர்கள் வீட்டில்தான் இருக்கும். அப்போதெல்லாம் கோவையில் மே மாதம் மட்டும்தான் பகலில் கொஞ்சம் புழுக்கமாக இருக்கும். ஒரு மூங்கில் விசிறியை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டினோம். இரவு வேளைகளில் புழுக்கமாக இருந்ததாக நினைவு இல்லை.

                               Image result for ஓலை விசிறி

நான் படித்து முடித்து வேலைக்குப் போய் பாட்டியுடன் தனிக்குடித்தனம் வைத்தபோதுதான் ஒரு மேஜை விசிறி வாங்கினேன். பிறகு கல்யாணம் ஆகி குடும்பம் பெரிதான பிறகுதான் சீலிங்க் பேஃன் வாங்கினேன். அதாவது என்னுடைய 35 வது வயதில்.

பிறகுதான் வசதிகள் பெருகின. மாடர்ன் டாய்லெட், கட்டில், பஞ்சு மெத்தைகள், இத்தியாதி. இவைகளுக்குப் பழகிய பிறகு எங்காவது உறவினர்கள் வீட்டிற்குப் போனால் இந்த வசதிகள் இல்லாவிட்டால் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். பழக்கம் மனிதனை எப்படி மாற்றுகிறது பாருங்கள்.

என்னுடைய 75 வது வயதில் வீட்டை மாற்றிக் கட்டின பிறகுதான் ஏசி மெஷின் மாட்டினேன். இப்படியாக படிப்படியாக வளர்ந்து இப்போது வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் எல்லா வேலைகளும் முடங்கிப்போய்விடுகின்றன.

அப்படித்தான் நேற்று இரவு மின்சாரம் போய்விட்டது. விடியும் வரை வரவில்லை. அவ்வளவுதான். நேற்று ராத்திரி யம்மா என்று பாடவேண்டியதாய்ப் போயிற்று,
  
                 

புதன், 3 பிப்ரவரி, 2016

போட்டியும் பொறாமையும்

                                Image result for fight
சிறு வயதிலிருந்தே மனிதனாகப் பிறந்தவனுக்கு போட்டியும் பொறாமையும் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குணங்கள் இருப்பவர்கள் நல்ல பண்பாடு உள்ள மனிதர்கள் இல்லை என்ற கருத்து நம் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும்.  தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது மிச்சம் மீதி இருக்கிற மூளையைக் கொண்டு  நான் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். அப்படி யோசித்தபோது தோன்றிய எண்ணங்களை, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்கிற பரந்த நோக்கத்தில் உங்களுடன் பகிர்கிறேன்.

சில உதாரணங்களை எடுத்துக் காட்டினால் என்னுடைய கருத்துக்களைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்துப் பேர் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். இந்தப் பத்து பேரும் போட்டி மனப்பான்மை இல்லாதவர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஓடும்போது என்ன நினைப்பார்கள்? மற்றவர்களில் யாராவது ஜெயிக்கட்டுமே என்று தாராள மனப்பான்மையில் ஓடினால் என்ன ஆகும்? அவரால் தன் முழு சக்தியையும் காட்ட முடியாது. இப்படியே ஒவ்வொருவரும் நினைத்தால் அந்த ஓட்டப் பந்தயம் எப்படி இருக்கும்?

ஓட்டப்பந்தயம் வேறு, வாழ்க்கை வேறு. "வாழ்க்கையில்தான் போட்டி பொறாமை கூடாது என்று சொல்கிறோம்" என்று ஒரு சாரார் வாதம் செய்யலாம். சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். கல்லூரியில் ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களை அனைவரும் நமக்குள் எந்த வேற்றுமையும் கூடாது. போட்டி, பொறாமையெல்லாம் கெட்ட குணங்கள், ஆகவே நாம் அனைவரும் ஒரே மாதிரியான மார்க்குகள்தான் வாங்கவேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியிருக்கும்?

இப்படியே பல வருடங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எல்லோரும் என்ன ஆவார்கள்? ஒரு மந்தையில் இருக்கும் ஆடுகளுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? எல்லோருக்கும் ஒரே மாதிரியான மந்த புத்தியே இருக்கும் அல்லவா?

வாழ்க்கைக்கு வருவோம். நாங்கள் அனைவரும் சமம், எல்லோரும் ஒரே மாதிரியான வேலை செய்வோம், ஒரே அளவு சம்பளம் வாங்குவோம் என்று இருந்தால் என்ன ஆகும்? சமூகத்தில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா?

மக்களே, யோசித்துப் பாருங்கள். போட்டி, பொறாமை இருந்தால்தான் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட முனைவார்கள். ஏனெனில் இறைவன் அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரி படைக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமையை வைத்திருக்கிறான். சிலருக்கு தலைமைப் பண்பு இருக்கும். சிலர் சாதாரண வேலைகளைச் செய்யும் அளவிற்கே திறன் இருக்கும்.

அதனால் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கவேண்டும் என்று நினைத்தால் மனித சமூகம் முன்னேறாது. ஆகவே போட்டியும் பொறாமையும் இவ்வுலகில் அவசியம்.  

திங்கள், 11 ஜனவரி, 2016

கல்யாணம் பண்ணப் போகும் மகனே

                                      Image result for இளம் தம்பதி

கல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு #அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.!

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.

உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்!!!

3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு.!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...!

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!

ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்.....!!
உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..!!


நன்றி: முகநூல்

செவ்வாய், 15 டிசம்பர், 2015

பிச்சையெடுத்தானாம் பெருமாளு, பிடுங்கித்தின்னானாம் அனுமாரு

   

                                         Image result for அனுமார்

இதுதான் நடக்குது இப்போ சிங்காரச் சென்னையிலே. அராஜகம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இப்போது சென்னை சென்றால் அளிந்து கொள்ளலாம்.

வெள்ளத்தில் அல்ல்லுற்றவர்களுக்காக மாவட்டங்கள்தோறும் பல நிவாரணப்பொருட்களைச் சேகரித்து சென்னைக்கு லாரி லாரியாக அனுப்புகிறார்கள். இவைகளை ஊர் எல்லையிலேயே வழிமறித்து கொள்ளை அடிக்கிறது ஒரு கும்பல். இதைக் கேட்பாரில்லை.

தலைமையே அப்படி இருக்கும்போது யாரையும் குறை சொல்லிப் பலன் இல்லை.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 1


நான் முன்பு ஒரு தரம் நெதர்லாந்து அனுபவம் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அப்போது ஒருவர் பின்னூட்டத்தில் "உங்கள் அனுபவங்களை விரிவாக சொல்லியிருக்கலாமே" என்று எழுதியிருந்தார். "அடிச்சது ஒரு லக்கி சான்ஸ் - என்னுடைய பிரதாபங்களை பறை சாற்ற" என்று இந்த தொடர் பதிவு எழுதுகின்றேன்.

என்னுடைய நெதர்லாந்து டூர் நாங்கள் ஆராய்ச்சி தொடர்பு கொண்டுள்ள ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி சார்பில் திட்டமிடப்பட்டது. மேலை நாடுகளில் ஒரு பிரயாணத் திட்டத்தை வகுப்பது என்பது மிகவும் துல்லியமாக இருக்கும்.

ஆம்ஸ்டர்டாம் நெதர்லாந்தின் தலைநகர். அந்த ஊர் டூருக்கான குறிப்புகள் ஒரு நான்கு வரிகளில் டைப் செய்து கோடுத்திருந்தார்கள். நான் தங்கவேண்டிய ஓட்டலின் பெயர், தங்கும் நாட்கள் ஆகிய விபரங்கள் அதில் இருந்தன.

வெளிநாடுகளில் டூர் செல்லும்போது நாம் நம் பொது அறிவையும் நன்றாக பயன்படுத்தவேண்டும். (இருந்தால்! இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லவேண்டாம்).  ஆம்ஸ்டர்டாம் ஏர்போர்ட்டின் பெயர் "ஷிபோல்" Schipol. அங்கு இறங்கியதும் நான் தேடியது சாமான் வைக்கும் அறை. ஏனெனில் என்னிடம் நான்கு ஐட்டங்கள் சேர்ந்து விட்டன. அவைகள் அனைத்தையும் தூக்கிக்கொண்டு போவது சிரமம் மற்றும் தேவையில்லை. அதனால் இரண்டு சாமான்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து விட்டு, திரும்பும்போது எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அந்த அறை இருக்கும் இடத்தை விசாரித்து அங்கு சென்றேன்.

அங்கே ஒருவரையும் காணவில்லை. நமக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் க்ளோக் ரூம்தான் பரிச்சயம். கூச்சல் போட்டு முண்டியடித்து லக்கேஜைக் கொடுத்தால் அங்கிருக்கும் ஆள் அந்தப் பூட்டைத் தொட்டவுடன் திறந்து கொள்ளும். வேற பூட்டு போட்டு கொண்டு வாருங்கள் சார் என்று முகத்திலடித்தாற்போல சொல்லி விடுவான்.

என்ன செய்வது என்று யோசித்தேன். ஆள் இல்லையே தவிர அந்த அறையை எப்படி உபயோகிப்பது என்பதைப் பற்றி விரிவான குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்கள். அங்கு நிறைய கப்போர்டுகள் இருந்தன. ஒவ்வொன்றிலும்  ஒரு நெம்பர் லாக் வைத்திருந்தார்கள். அதை நமக்கு வேண்டிய ஒரு நெம்பருக்கு செட் செய்து கப்போர்டை மூடிவிட்டால் லாக் ஆகிவிடும். பிறகு திறக்கும்போது அதற்குண்டான வாடகைப்பணத்தை அந்த கப்போர்டில் உள்ள துவாரத்தில் போட்டு விட்டு நாம் லாக் செய்த நெம்பரை செட் செய்தால் கப்போர்டு திறக்கும்.

சரி என்று சாமான்களை வைத்துவிட்டு, நெம்பரை செட் செய்து விட்டு பூட்டினேன். கதவை இரண்டு தரம் இழுத்துப் பார்த்தேன். திறக்கவில்லை. சரியாகத்தான் பூட்டியிருந்தது. பிறகுதான் என் குயுக்தி மூளை வேலை செய்தது. நாம் திரும்பி வரும்போது இது சரியாகத் திறக்குமா என்ற சந்தேகம் வந்தது.

நாமதான் வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு பர்லாங்க் வந்த பிறகு திரும்பவும் வீட்டிற்குப் போய் பூட்டை இழுத்துப் பார்க்கும் ரகமாயிற்றே. அப்படிப் பார்த்து விட்டு கல்யாண வீட்டில் சாப்பிடும்போது பொண்டாட்டி கிட்ட வீட்டைச் சரியாகப் பூட்டினோமா என்று கேட்போம். தவிர இந்த மாதிரி லாக்கர்களை முன்பின் பார்த்துவுமில்லை. எதற்கும் டெஸ்ட் செய்து பார்த்து விடலாம் என்று  அந்த லாக்கரில் சொன்ன பணத்தைப் போட்டு நெம்பரை செட் செய்து லாக்கர் கதவை இழுத்தேன்.

மீதி அடுத்தபதிவில். இந்தப் பதிவை ஒரு மாதத்திற்கு ஜவ் மிட்டாய் மாதிரி இழுப்பதுதான் என் நோக்கம். என்ன செய்வது? பதிவெழுத தலைப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது.