அந்தப்புரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்தப்புரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஏப்ரல், 2015

என் அந்தப்புரத்து ராணிகள்.

                                          Image result for அரண்மனைகள்
என்னுடய அரண்மனை அந்தப்புரத்தில் ராணிகள் கூட்டம் பெருகிப் போச்சு. இட நெருக்கடி ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு ராணியை அடுத்த நாட்டு இளவரசனுக்கு தானம் கொடுத்தேன். இப்போ ஐந்தே ஐந்து ராணிகளுடன் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறேன்.

அவர்கள் யார் யார், அவர்களால் எப்படி என் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் இந்த நாட்டு பட்டத்து ராணி.


சிம்மாசனத்தில் எப்படி அமர்ந்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?  இவர்கள் ஆலோசனைப்படி நான் நடந்து கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இப்படி என்று கொஞ்சம் டிராக் மாறினாலும் வினை வந்து விடும். நான் மூளையுள்ள ராஜாவல்லவா? வம்பு வழக்கிற்கெல்லாம் போக மாட்டேன்.

அடுத்த இளைய ராணி.


இந்த ராணி அரன்மணைக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அரண்மனையின் இட நெருக்கடியைப் பாருங்கள். ரிவர்சில் கொண்டு வந்து சுவற்றோடு ஒட்டி நிறுத்தினாலும் ஒண்ணே முக்கால் அடி இடம்தான் மீதம் இருக்கும். இதைத்தான் அரண்மனைக்கு வருகிறவர்கள் உபயோகிக்க வேண்டும். ரதத்தைக்கொண்டு வந்து நிறுத்தின பிறகு, ரதத்தை விட்டு இறங்க நான் ஒரு சர்க்கஸ் செய்யவேண்டும். 

டிரைவர் சைடு கதவைத் திறக்க முடியாது. ஏனென்றால் அது சுவற்றை ஒட்டி இருக்கிறது. அதனால் ரதத்தை நிறுத்திய பிறகு, கியர் பாக்சைத் தாண்டி இடது புறம் வந்து பாசன்ஜர் சைடு கதவைத் திறந்து அதன் வழியாகத்தான் வெளியில் வரவேண்டும். ஏன் இந்தக் கஷ்டம், ரதத்தை நேராகக் கொண்டு வந்து நிறுத்தி விட்டால் சௌகரியமாக டிரைவர் சைடு கதவைத் திறந்து வெளியில் வரலாமே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

நல்ல ரத ஓட்டிகளுக்குத் தெரியும். ரிவர்சில் வரும்போதுதான் சுவற்றை ஒட்டினாற்போல் நிறுத்த முடியும். பார்வேர்டில் வந்தால் சுவற்றோடு ஒட்டி நிறுத்த முடியாது. இட நெருக்கடியால் சுவற்றோடு ஒட்டி நிறுத்தினால்தான் மீதி இருக்கும் இடத்தில் நடக்க முடியும்.

பழைய ரதமே நன்றாகத்தானே இருந்தது. இப்போது இவ்வளவு செலவு செய்து புது ரதம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்று பட்டத்து ராணி முணுமுணுத்தார்கள். அடியே ராணி, ராஜா இப்படி ஏதாவது செய்து கொண்டிருந்தால்தான் ராஜா இன்னும் நல்ல செல்வாக்குடன் இருக்கிறார் என்று குடிபடைகள் நம்புவார்கள். இல்லாவிட்டால் ராஜா ஓய்ந்து விட்டார் என்று பேசுவார்கள், அதனால் இது மாதிரி ஏதாவது ஸ்டன்ட் அவ்வப்போது செய்வது அவசியம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

அடுத்து மூன்று ராணிகள்.

1. கம்ப்யூட்டர்.


2. கேலக்சி டேஃப்.


3. ஸ்மார்ட் போன்.



இந்த மூன்று ராணிகளும் ஒரே ஜாதியானதால் இவர்களுக்குள் அடிக்கடி போட்டி வந்து விடுகின்றது. நீ பெரியவளா நான் பெரியவளா என்ற ஈகோ பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் கம்ப்யூட்டரிலிருந்துதான் மற்ற இருவரும் "வை-பை" சிக்னல்கள் பெற வேண்டும். சமீபத்தில் நடந்த லடாய் பற்றி அறிந்திருப்பீர்கள். 

இப்போதைக்கு இந்த ராணிகளை ஒரே மாதிரி சிந்திக்க வைப்பதில்தான் என் நேரம் முழுவதும் செலவாகிறது. எப்படியும் இவர்களை வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என்பதில் சந்தேகம் இல்லை.

அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.