அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 நவம்பர், 2014

அரசியல்வாதிகள்- அன்றும் இன்றும்



இப்படி ஒரு பின்னூட்டம் என் ஒரு பதிவிற்கு வந்தது.

அய்யா அவர்களே 

ஒரு பதிவில் இதை படித்தேன். நம்பவே முடியவில்லை.
இத்தகைய அரசியல்வாதியையும் இன்றைய அரசியல்வாதிகளையும் compare செய்து ஒரு பதிவிடுங்களேன். இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு புதிய பாடமாக இருக்கும்.

அன்பரின் வேண்டுகோளை நிறைவேற்றும் அளவிற்கு எனக்கு அரசியல் ஞானம் இல்லை. ஆகவே அவர் பின்னூட்டத்தை மட்டும் அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். கூடவே என் அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்கிறேன்.

முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

உரையாடலின் நடுவே நினைவு கூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார்.

‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர்.

‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார்.

‘நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.

‘விடமாட்டேன்னுதீகளே...’ என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் ‘ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...’ என்று நிறுத்தச் சொல்கிறார்.

அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.

காமராசர் களை பறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் ‘ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...’ என்று கூவியிருக்கிறார்.

புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் ‘ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...’ என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.

தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.

நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !

அவர்தான் நம் அய்யா காமராசர்! 

சேலம் குரு


என் அனுபவம் ஒன்று:

என் நினைவில் நின்ற  அன்றைய ஒரு அரசியல்வாதி பற்றிய நினைவு. எல்லா அரசியல்வாதிகளும் காமராஜர் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நான் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு !956 ல் படித்தபோது நடந்த நிகழ்வு. நான் மாணவ மன்ற செயலாளராக இருந்தேன். மாணவ மன்றத்திற்காக ஒரு கூடுதல் ஹால் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அன்றைய முதல் அமைச்சரைக் கூப்பிட்டிருந்தோம்.

முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டுவதற்காக புதிதாக ஒரு கலவைச்சட்டியும் ஒரு கொத்தனார் கரண்டியும், இரும்பில், வாங்கி வைத்திருந்தோம். விழாவிற்கு இரண்டு நாள் முன்பு விழா ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த ஒரு முக்கிய மாவட்ட அதிகாரி இந்த கரண்டியைப் பார்த்துவிட்டு, இது சரிப்படாது, முதல் அமைச்சர் பயன்படுத்தும் கரண்டி வெள்ளியில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் என்ன இது, கொத்தனார் கரண்டி வெள்ளியில் கிடைக்குமா என்று சந்தேகப்பட்டுக்கொண்டு நகைக் கடைக்குப் போனால் அங்கு வெள்ளியில் ரெடிமேடாக இந்தக் கரண்டி வைத்திருந்தார்கள். விசாரித்ததில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் இது சகஜம் என்று சொன்னார்கள். அரசியல்வாதி வந்து போனபிறகு இந்தக் கரண்டியைத் திருப்பிக்கொண்டு வந்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டேன். அந்தக் கடைக்காரர்கள் சிரித்தார்கள். 

எனக்கு அப்போது வயது 21. உலகம் என்றால் வீடு, கல்லூரி மட்டுமே. அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. மந்திரி வந்து போனபிறகு கொண்டு வாருங்கள், வாங்கிக்கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

சரியென்று ஒரு கரண்டி வாங்கி வந்து வைத்திருந்தோம். விழாவிற்கு மந்திரி வந்து அடிக்கல் நாட்டினார். நான் மேஸ்திரியிடம் மந்திரி போனவுடன் அந்த வெள்ளிக் கரண்டியை பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். 

விழா முடிந்து மந்திரி போன பிறகு மேஸ்திரியிடம் அந்தக் கரண்டி எங்கே என்று கேட்டேன். தம்பி, அடிக்கல் நாட்டின உடனே மந்திரி அந்தக் கரண்டியை தன் உதவியாளரிடம் கொடுத்தார். அவர் வாங்கி தன் பையில் போட்டு கொண்டு போய் விட்டாரே  என்றார்.  

அப்போதுதான் எனக்கு அந்த நகைக் கடைக்காரர் ஏன் சிரித்தார் என்று புரிந்தது.

அன்றைய அரசியல்வாதி வெள்ளியில் கரண்டி கேட்டார். இன்றைய அரசியல்வாதிகள் தங்கம் அல்லது பிளாட்டினத்தில் கரண்டி கேட்பார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் அன்றைய அரசியல்வாதிக்கும் இன்றைய அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம்.

அனுபவம் இரண்டு:

நான் முதல் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த நிகழ்ச்சி.

அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை எங்கள் கல்லூரிக்கு அழைத்திருந்தார்கள். அனைத்து முதுகலை மாணவர்களும் ஆசிரியர்களும் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து மாணவர்களும் நேரு கோட் அணிந்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எல்லோரும் புதிதாக அந்த கோட் தைத்தோம். அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். இது ஒன்றும் பெரிதல்ல.

அவருக்கு உணவு தயாரிக்க டில்லி அசோகா ஓட்டலில் இருந்து ஒரு சமையல்காரரை விமானத்தில் தருவித்தார்கள். அவருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சன்மானம். அன்றைய (1958) ஆயிரம் ரூபாய் இன்றைக்கு லட்சம் ரூபாய்க்கு சமம். அவர் செய்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து பெரிய ஆபீசர்களும் ஆடிப்போய்விட்டார்கள். நேருவுக்குக் கூட அவ்வளவு பயப்படவில்லை. எப்படியோ விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அனுபவம் மூன்று:

கேரளாவில் நடந்த ஒரு செமினாருக்குப் போயிருந்தேன்.  கேரள விவசாய மந்திரி கலந்து கொள்வதாக ஏற்பாடு. விழா ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்பாக ஒரு அம்பாசிடர் கார் வந்து முகப்பில் நின்றது. வேட்டி சட்டை போட்டவர்கள் இருவர் இறங்கினார்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. எந்தப் போலீசும் இல்லை. விழா அமைப்பாளர்கள் அவர்களை வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றார்கள். ஒருவர் மேடையில் அமர்ந்தார் மற்றவர் கீழே முதல் வரிசையில் அமர்ந்தார்.

இவர்கள் யார் என்று விசாரித்தேன். மேடையில் அமர்ந்தவர்தான் விவசாய மந்திரி. கீழே அமர்ந்தவர் அவருடைய உதவியாளர் என்றார்கள். அந்த எளிமையைக் கண்டு நான் அதிசயித்தேன்.

திங்கள், 29 ஏப்ரல், 2013

18. நாட்டின் தலைவிதி மாறியது

பிரதம மந்திரி. நிதி அமைச்சர், கட்சித்தலைவர் ஆகியார் குழு வந்தார்கள். பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.

நான் சில கருத்துகளைக் கூறினேன்.

1. இப்போது உள்ள தேசீயக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும். இதில் 33 சதம் பெண்கள். இந்த  வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

2. எதிர்க் கட்சிக்கு 10 சதம் இடம் கொடுப்போம். ஏனெனில் எதிர்க்கட்சி இல்லாவிடில் அதை ஜனநாயக நாடு என்று ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

3. பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.

4. தேர்தலுக்கான அறிவிப்புகளும் வேட்பாளர் தேர்வும் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.

5. தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடித்து விடவேண்டும்.

இந்த கருத்துகளுக்கு அவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

நிதி அமைச்சர் மட்டும் ஒரு சந்தேகம் எழுப்பினார். நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சந்தோஷத்துடன் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்லொரும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். தேசீயக் கட்சி வேட்பாளர்கள் சீக்கிரம் முடிவு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட்டார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் வேட்பாளர்களை நானே ஏற்பாடு செய்தேன்.

வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு ஓட்டுச் சீட்டுகள் அடித்தாகிவிட்டது தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. அனைத்து ஓட்டர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.

தேர்தல் நாளைக்கு முன்தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து சாதனங்களும் தேர்தல் அதிகாரிகளும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்பட்டிருந்த அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் "வை-ஃபி" முறையில் தேவலோகத் தூதரகத்திலுள்ள சூபர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு யம கிங்கரனைக் காவலுக்குப் போட்டிருந்தேன். எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

14.வட்டத்திடம் மாட்டிக்கொண்டோம்.


வட்டத்திடம் பணம் கொடுத்தனுப்பி ஒரு வாரம் இரு வாரமாகி, ஒரு மாதமும் ஆகிவிட்டது. அவரிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. எப்போது செல்லில் கூப்பிட்டாலும் பிசி என்றே வந்தது. கடைசியில் செக்கை அனுப்பி என்ன விவரம் என்று பார்த்துவிட்டு வரச்சொன்னேன்.

அவர் போய் விசாரித்து விட்டு வந்து சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. நாம் சொன்னது போல் 1000 ஏக்கர் நிலம் பேசி வாங்கி விட்டாராம். ஆனால் அதை முழுவதுமாகத் தலைவர் பேரில் (அதாவது அன்று வந்த அரசியல்வாதி) ரிஜிஸ்டர் ஆகி, சுவாதீனம் எடுத்து, தற்பொழுது சுற்றிலும் வேலி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

வட்டத்திடம் கேட்டதற்கு, இதுதான் மாமூலுங்க, நிலம் உங்களுதுதானுங்க, கிரயம் யார் பேரில் இருந்தால் என்னங்க? என்றாராம். அப்படியா என்று கேட்டுக் கொண்டு, பொதுவை அந்த அரசியல்வாதியிடம் அனுப்பினேன். அவர் பொதுவை மிரட்டியிருக்கிறார். இத பாரு பொது, எங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க, அப்புறம் இந்தப் பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது, இதுக்கு இன்கம்டாக்ஸ் கட்டீருக்கீங்களா. இப்படியெல்லாம் கேள்வி கேட்கவைப்பேன். அப்புறம் நீங்கள் எல்லோரும் ஜெயிலில் களி திங்க வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறார்.

நான் அவருடன் போனில் பேச முயற்சி செய்தேன். போனை எடுக்கவே இல்லை. ஓஹோ, இதெல்லாம் காரியத்திற்கு உதவாது என்று நேரடி நடவடிக்கை எடுத்தேன். இரண்டு யமகிங்கரர்களை விட்டு வட்டத்தைத் தூக்கி வந்தேன். வட்டத்திற்கு என்னைப் பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு குடிக்க பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்திய பிறகு பேச ஆரம்பித்தார்.

என் பேரில் எந்த தப்பும் இல்லைங்க, தலைவர் (அந்த அரசியல்வாதி) இப்படித்தானுங்க, நிலம் வாங்கித் தாரேன் அப்படீன்னு, யாரு பணம் கொடுத்தாலும் வாங்கி தன் பெயரில் நிலம் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணீப்பாருங்க. ஏனுங்க இப்படீன்னு கேட்டா, தம்பி, இதப்பாருங்க, நிலம் உங்க பேர்ல இருந்தா என்ன, என் பேரில இருந்தா என்ன. நெலம் எங்க போயிடப்போகுது, உங்க பேர்ல நெலம் இருந்திச்சின்னு வையுங்க, இந்த இன்கம்டாக்ஸ்காரன் ஆயிரத்தெட்டு கேள்வி உங்களைக் கேட்பான், அதுக்கு உங்களால பதில் சொல்ல முடியாது. என்னைக் கேள்வி கேட்க ஒரு பயலுக்கும் திராணி கிடையாது.

இப்படியே இருக்கட்டும், உங்களுக்கு தேவைப்படும்போது சொல்லுங்க, மாத்தி எழுதீடலாம் என்பார். இதுதானுங்க இப்ப நடைமுறை. நான் என்ன பண்ணுட்டுங்க என்று வட்டம் சொன்னான். சரி இப்ப அந்த தலைவரைப் பார்க்கணுமே, அதுக்கு என்ன வழி என்றேன். வட்டம் சொன்னார், இந்த மாதிரி டீல் ஒண்ணை முடிச்சா, அவரு ஆறு மாசம் ஊர்லயே இருக்க மாட்டாருங்க. அவருக்குப் பல ஊர்களிலே பங்களாக்கள் இருக்குதுங்க, எங்க இருக்காருன்னு யாருக்கும் தெரியாதுங்க என்றான்.

அப்படியா என்று நாரதரைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லி அந்த ஆள் எந்த லோகத்தில் இருந்தாலும் இழுத்துக் கொண்டு வாருங்கள் என்றேன். துணைக்கு இரண்டு கிங்கரர்களை அழைத்துக்கொண்டு போங்கள் என்றேன். வட்டம் நான் போகட்டுங்களா என்றான். "அடே வட்டம், நீயும் அவனோட கூட்டுக் களவாணிதானே, அவன் வரும்போது நீ இல்லாவிட்டால் எப்படி?" என்று அவனை இருக்கவைத்தேன்.

அரை மணி நேரத்தில் நாரதரும் அந்த அரசியல்வாதியும் வந்து விட்டார்கள். வந்தவுடன் அவன் தாம்தூம் என்று குதித்தான். என்னை யாரென்று நினைத்தீர்கள், இப்போதே பிரதம மந்திரிக்குப் போன் போட்டு உன்னை என்ன செய்கிறேன் பார், உன்னை இன்கம்டாக்ஸ் கேஸ் போட்டு, ஜெயில் களி திங்க வைக்கிறேன் பார் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணினான். வட்டத்தைப் பார்த்து என் சக்தியைப் பற்றி இவர்களிடம் நீ ஒன்றும் சொல்லவில்லையா என்று சத்தம் போட்டான்.

அவன் ஆர்ப்பாட்டம் அடங்கட்டும் என்று காத்திருந்தேன். அரை மணி நேரம் கத்திவிட்டு ஓய்ந்து போனான். அப்புறம் நான் அவனைக்கேட்டேன். நாங்கள் யாரென்று உனக்குத் தெரியுமா என்றேன். "நீ யாராயிருந்தால் எனக்கென்ன, என்னை இப்போதே நான் இருந்த இடத்திற்குக் கொண்டுபோய் விடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா" என்றான்.

"என்ன நடக்கும், பார்க்க எனக்கு ஆசையாய் இருக்கிறது" என்றேன். யார் யாருக்கோ போன் பேசினான். ஒன்றும் நடக்கவில்லை. உனக்கு யார் வேண்டும் என்றேன். பிரதம மந்திரியிடம் பேசவேண்டும் என்றான். நான் ஹாட்லைனில் பிரதம மந்திரி அலுவலகத்தைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு போனை அவனிடம் கொடுத்தேன். பிரதம மந்திரியின் உதவியாளர் பேசினார்.

அவர் அவனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை, அவன் தடாலென்று என் காலில் விழுந்து காலைப் பிடித்துக் கொண்டான். தெய்வமே, நான் தெரியாமல் தப்பு பண்ணிவிட்டேன். இப்போதே அந்த நிலத்தையெல்லாம் நீங்கள் சொல்லுகிற மாதிரி மாற்றி எழுதி விடுகிறேன். இந்த விவகாரத்தைப் பற்றி பிரதம மந்திரியிடம் ஏதும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் யாரென்று தெரியாமல் இந்தத் தப்பை செய்து விட்டேன் என்று அழுதான்.

சரி, ரொம்பவும் அழுகிறானே என்று அவனை மன்னிக்கிறேன் என்று சொல்லி எழுப்பி, நான் முதலில் சொன்ன பிரகாரம் பத்திரங்களை ரிஜிஸ்டர் செய்து அனுப்பு என்று சொல்லி அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பினேன்.

இங்குதான் நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன்.

அடுத்த பதிவைப் பாருங்கள்.