அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

21. நான் இட்லி சாப்பிட்டேன்.

                                           Image result for ஜெயலலிதா இட்லி
நான் இட்லி சாப்பிட்ட விவகாரம் இப்படி அரசியலாகும் என்று நினைத்திருந்தால் அன்றைக்கே விடியோ எடுத்து யூட்யீபில் போட்டிருப்பேனே? தெரியாமப் போச்சே!

என் உடன் பிறவா சகோதரியைக் கேட்டால் சொல்லியிருப்பார்களே! இதற்கு ஏன் எல்லோரும் இப்படி வாக்குவாதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

என் அன்பு சகோதரன் பதிவர் கந்தசாமி இப்போதுதான் இந்திர லோகத்திற்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப் போகிறார் என்று தெரிந்தேன். அந்த சர்வீஸ் ஆரம்பித்த பிறகு நானே ஒரு முறை தமிழ் நாட்டிற்கு வந்து உங்கள் சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கிறேன். அது வரை கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசாமல் இருந்தால் நல்லது.

அதுவரை எல்லோரும் அமைதியாக அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டு பசியாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 15 ஜூன், 2016

அரசியல் கட்சி ஆரம்பித்து வளர்ப்பது எப்படி?

                           

நான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்று யோசித்தேன். அதற்குக் காரணம் இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் அக்-மார்க் சுயநலவாதிகளால் நடத்தப்படுகிறது என்ற எண்ணம் என் மனதினுள் தோன்றியதே. இந்த நாட்டிற்கு நம்மாலான சேவை செய்யாவிட்டால் நாம் பிறந்ததிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று என் மனச்சாட்சி சொல்லியது.

இதற்காக ஒரு ஆராய்ச்சி செய்தேன். அரசியல் கட்சியில் சேர்ந்து வளர்ந்தவர்களின் கதைகளை எல்லாம் விசாரித்து அறிந்தேன். அந்த ஆராய்ச்சியில் நான் அறிந்தவைகளை எல்லோரும் தெரிந்து பயனடையட்டும் என்று இங்கே பதிவு செய்கிறேன்.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் நீங்கள் இப்போது இருக்கும் ஏதாவதொரு கட்சியில் தொண்டனாகச் சேரவேண்டும். அப்படி தொண்டனாகச் சேருவதற்கு அந்தக் கட்சியில் இப்போது இருக்கும் ஒரு முக்கியப் புள்ளியிடம் அடியாளாகச் சேரவேண்டும். அடியாள் என்றால் என்னவென்று உங்களுக்கு இன்னேரம் புரிந்திருக்க வேண்டும்.

ஓரிரு ஆண்டுகள் இவ்வாறு சேவை புரிந்தபின் நீங்களே ஒரு தலைவனாக மாறவேண்டும். இதற்கான வழி முறைகள் இந்த இரண்டாண்டு அடியாள் பயிற்சியில் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். தலைவன் என்றால் உங்களுக்கு கீழே நாலைந்து அடியாட்கள் இருக்கவேண்டும்.

அடியாட்களுக்கு தினமும் பிரியாணியும் குவார்ட்டரும் சப்ளை செய்யவேண்டும். அதற்கு நிதி வசதி வேண்டும். இந்த நிதி வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சில யுத்திகள் உண்டு. முதலில் உங்கள் மனச்சாட்சியை அழித்து விடவேண்டும். உங்கள் பகுதியில் இருக்கும் வியாபார ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று ஒரு சந்தா வசூலிக்கவேண்டும். அந்தப் பகுதியில் என்ன அடிதடி நடந்தாலும் நீங்கள் அங்கே தவறாமல் ஆஜராகி கட்டைப் பஞ்சாயத்து நடத்தி தீர்ப்பு சொல்லவேண்டும். இதற்கு மாமூல் வசூலிக்கவேண்டும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏதாவதொரு கட்சியின் எம்எல்ஏவைப் பிடித்துக்கொள்ளவேண்டும். கட்சி கூட்டங்களுக்கெல்லாம் நீங்கள் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அவருக்குச் செலவு வைக்காமல் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் மூலமாக அப்படியே ஒரு மந்திரியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்படி உங்கள் செல்வாக்கு பெருகியவுடன் உள்ளாட்சித் தேர்தல்களில் நின்று கவுன்சலராகி விட வேண்டும்.

அடுத்த படி சட்டசபைத்தேர்தலில் நின்று ஒரு எம்எல்ஏ ஆகிவிடவேண்டும். இதற்குள் உங்களுக்கு உள்ளூரில் ஏகப்பட்ட தொண்டர்களும் அடியாட்களும் சேர்ந்திருப்பார்கள். அடுத்த சட்டசபைத் தேர்தல் வரும்போது உங்கள் இனமக்களை வளைத்துப்போட்டு ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து விடுங்கள்.

அவ்வளவுதான். அரசியல் கட்சி ஆரம்பித்தாயிற்று. நீங்கள் தலைவர் ஆகிவிட்டீர்கள். இனி செய்யவேண்டியது ஸ்விஸ் பேங்கில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டியதுதான்.

சனி, 4 ஜூன், 2016

கோவை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் மூடு விழா

                                
டிரைவரைக் கூப்பிட்டு ஆபீசின் முன்னால் மாட்டப்பட்டிருந்த சங்கத்தின் போர்டைக் கழட்டச்சொன்னேன். பிறகு எல்லோரையும் கூப்பிட்டு ஆலோசனை நடத்தினோம்.

பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் சங்கக் கணக்கில் எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று கேட்டேன். அவர் ஏழு கோடியே ஐம்பது லட்சம் இருக்கிறது என்றார். சரி அப்படியா என்று கேட்டுக் கொண்டேன்.

டிரைவரைக் கூப்பிட்டு ஐயா. நடந்தவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா. இனி நீங்கள் வேறு வேலைதான் பார்த்துக்கொள்ளவேண்டும். இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்தபடியால் உங்களுக்கு ஒரு பத்து லட்சம் ரூபாய் கொடுக்கிறோம். அந்தப் பணத்தில் ஒரு டாக்சி வாங்கி ஓட்டிப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அவருக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்பினேன். அவர் சங்கத்தின் கார் சாவியை என் மேஜை மீதி வைத்து விட்டு நன்றி சொல்லி விடை பெற்றார்.

ஸ்டேனோவைக் கூப்பிட்டு, இதோ பாருங்க அம்மா, சங்கத்தை நாங்கள் மூடுகிறோம். இந்தக் கம்ப்யூட்டர், அதற்குண்டான மேஜை, நாற்காலி ஆகியவைகளை நீங்கள் எடுத்துக்கொண்டு போய் எங்காவது ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்ததிற்காக உங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் என்றேன். அந்த அம்மா சந்தோஷமாக விடை பெற்றுச் சென்றார்.

பொதுவிடம் சொன்னேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. நான் என்னென்னமோ கனவு கண்டு கொண்டிருந்தேன். அத்தனையும் வீணாகப் போய்விட்டது. உங்களையும் சென்னையிலிருந்து இங்கே கூப்பிட்டு அலைக்கழித்து விட்டோம். என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி சமாதானப் படுத்தினேன். உங்கள் சிரமங்களுக்காக உங்களுக்கு இருபது லட்சம் ரூபாய் இந்தப் பையில் இருக்கிறது. எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு இன்னோவா சேலன்ஜர் ஏசி டாக்சியைக் கூப்பிட்டேன். அந்த டிரைவரிடம் இவரைப் பத்திரமாக சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போய் அவர் வீட்டில் விட்டு விட்டு திரும்பி வந்து எனக்குத் தகவல் சொல்லவேண்டும் என்று சொல்லி அவருக்கு விடை கொடுத்து அனுப்பினேன்.

அந்த டாக்சி எங்கள் கூட பணி புரிந்த நண்பருடைய சொந்தக்காரருடையது. எங்களுக்கு எப்போது டாக்சி வேண்டுமானாலும் அவர்தான் அனுப்புவார். அந்தக் கம்பெனியின் எல்லா டிரைவர்களும் நல்ல பழக்கம். அந்த டிரைவரைக் கூப்பிட்டு, இப்போது நீங்கள் கூட்டிப்போகும் நண்பர் ஒரு மிக மிக முக்கியமானவர். மற்ற பயணிகளை நடத்துவது போல் இவரை நடத்தாதீர்கள். டோல்கேட் கட்டணங்களை எல்லாம் நீங்களே கட்டுங்கள். நடுவில் நல்ல ஓட்டல்களில் நிறுத்தி அவருக்கு அவ்வப்போது டிபன் காப்பி வாங்கிக்கொடுங்கள். பில் நீங்கள் கொடுத்து விடுங்கள். அவரை வீட்டில் விட்டவுடன் ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் வாங்கக்கூடாது.

தவிர, நான் இப்போது சொல்லும் லிஸ்ட்டில் உள்ளவைகளை உடனே வாங்கிக் கொண்டு அவரை அவர் விட்டில் இறக்கி விடும்போது அந்தப் பொருட்களை அந்த வீட்டு அம்மாவிடம் கொடுத்து விடுங்கள்.

1. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக் - 5 கிலோ
2. ஜே.ஆர் இங்கிலீஷ் பேக்கரியில் ஒரு ஐந்து வகை கேக்குகள் ஒவ்வொரு டஜன்.
3. காளம்பாளையம் விதையில்லா புளூ திராக்ஷை - 4 பெட்டி
4. மல்கோவா மாம்பழம் - 50
5. காஷ்மீர் ஆப்பிள் - 5 கிலோ
6. சிறுமலை வாழைப் பழம் - 100
7. ஊட்டி உருளைக்கிழங்கு - 10 கிலோ
8. கல்லார் மங்குஸ்தான் - 10 கிலோ
9. ராம்ராஜ் கடையில் ஐயா சைசிற்கு ஒரு பட்டுச்சட்டை, ஒரு பட்டு வேஷ்டி
10. நம்ம பிஎஸ்ஆர் கடையில் அம்மாவிற்கு ஒரு பட்டு சேலை.

எல்லாவற்றையும் கம்பெனி கணக்கில் வாங்கிக் கொண்டு பிற்பாடு பில்களை என்னிடம் கொடுங்கள். சென்று வாருங்கள் என்று அவர்களை வழி அனுப்பி வைத்தேன்.

இப்போது நாங்கள் மூன்று பேர் மட்டும் இருந்தோம். நான், உபதலைவர், காரியதரிசி ஆகியோர். அவர்களிடம் நான் சொன்னேன். இந்த அட்வென்சர் ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரி ஒரு வழியாய் முடிந்தது. இனி நாம் நம் வழக்கமான சாப்பிடுவதும் தூங்குவதுமான வேலையைப் பார்க்கலாம்.

சங்க சொத்துக்களை என்ன பண்ணலாம் என்று யோசித்தோம். சங்கத்திற்கு வாங்கின காரை நான் வைத்துக்கொள்கிறேன். ஆபீசில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களை நீங்கள் இருவரும் எடுத்துக்கொள்ளுங்கள். பேங்கில் செலவு போக மீதி இருக்கும் ஏழு கோடியில் நான் மூன்று கோடி எடுத்துக்கொள்கிறேன். உங்கள் இருவருக்கும் ஆளுக்கு இரண்டு கோடி வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார்கள்.

இப்படியாக கோவை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் மூடு விழாவை வெற்றிகரமாக முடித்து விட்டு ஆபீஸ் சாவியைக் கட்டிடத்துக்காரரிடம் கொடுத்து விட்டு சங்கத்தின் காரில் ஏறி மூவரும் ரெசிடென்சி ஓட்டலுக்குப் போய் மூடு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி விட்டு அவரவர்கள் வீடு போய்ச்சேர்ந்தோம்.
                    

சனி, 21 மே, 2016

இந்த சட்டசபைத் தேர்தலில் எனக்கு நடந்த அநியாயம்

                            Image result for ஓட்டுக்குப் பணம்

இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பு பல கட்சிகளின் சார்பிலும் கொடுக்கப்பட்டது என்று பலவலாகப் பேசிக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். என்னுடைய காதிற்கும் இந்த செய்தி அப்படியே அரசல் புரசலாக வந்தது.

நானும் மிக ஆவலுடன் இந்த அன்பளிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். என் ஆசை இலவு காத்த கிளி போல் வீணாகிப்போனதில் என் மனது செக்கு நூறாக உடைந்து விட்டது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பெவிகால் போட்டு ஒட்ட வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இலவு காத்த கிளி என்றால் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பச்சைத் தமிழன் ஆகவே எனக்குத் தெரியும். அந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் கொள்கிறேன்.

இலவம் பஞ்சு என்பது ஒரு வகையான மரத்தில் காய்க்கும் காய்களிலிருந்து எடுக்கும் பஞ்சு. இதை மெத்தை தலையணைகளில் அந்தக் காலத்தில் உள்ளே திணித்து தைப்பார்கள். உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. இந்தக் காய்கள் பச்சைப் பசேல் என்று இருக்கும்.

சில கிளிகள் இதை ஒரு வகை பழம் போல் நினைத்து இது பழுக்கட்டும், பழுத்த பிறகு திங்கலாம் என்று காத்துக்கொண்டு இருக்கும். ஆனால் இந்தக் காய்கள் பழுக்காமல் திடீரென்று ஒரு நாள் வெடித்து விடும். காத்துக்கொண்டிருந்த கிளிகள் நமது காப்டன் மாதிரி ஏமாந்து போகும்.

நானும் இந்த மாதிரி ஆகிப்போனேன். ஒரு பயலும் என்னிடம் வந்து,  "தாத்தா, ஓட்டுப்போடுவதற்கு இதோ அன்பளிப்பு" என்று கொடுக்கவில்லை. எனக்கு என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தி விட்டார்களே என்ற ஏக்கம் மாறவே மாட்டேனென்கிறது. இந்த அநியாயத்தை எதிர்த்து சர்வதேசக் கோர்ட்டில் ஒரு வழக்கு பதியலாம் என்ற எண்ணமும் இருக்கிறது.

அதனால்தான் நான் ஓட்டுப்போடவில்லை என்ற ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பதிவில் இரண்டு ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். அவைகளை ரகசியமாகப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன்.

                              Image result for கேப்டன் விஜயகாந்த்

செவ்வாய், 17 மே, 2016

தப்புக்கணக்கு போட்டுவிட்டேன் !

                                       Image result for கருணாநிதி குடும்பம்
போன பதிவில் நான் அம்மா புகழ் பாடியதை அனைவரும் படித்திருப்பீர்கள். எனக்கு தன்மானம் இல்லையா என்று கூட ஒருவர் பின்னூட்டம் போட்டிருந்தார். இத்தனை வயசுக்கப்புறம் சின்னப்பசங்க மாதிரி தன்மானம், ரோஷம், சுயமரியாதை அப்படீன்னு எல்லாம் பேசிக்கிட்டு திரியலாமா?

இப்ப விஷயத்திற்கு வருகிறேன். போன பதிவில் போட்டது எல்லாம் சும்மானாச்சுக்கும் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லப் போவதுதான் நிஜம். அம்மா புகழ் பாடி அலுத்துப்போச்சு. இனி அய்யா  புகழ்தான் பாடப்போகிறேன்.

அய்யாவின் அனுபவம் என்ன? சாதுர்யம் என்ன? எப்படி இருந்தவர் எப்படி ஆகியிருக்கார் என்று பாருங்கள். எத்தனை நாளைக்குத்தான் சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்க முடியும்? ஆகவே அவரை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்ப்பது என்று பச்சைத் தமிழர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறட்டும். எத்தனை நாளைக்குத்தான் ஒரே முகத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பது?

வாழ்க தமிழகம், வாழ்க தமிழ், வாழ்க, வாழ்கவே.

பின்குறிப்பு; உனக்கு முதுகெலும்பு என்று ஒன்றிருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில். விஞ்ஞான உலகில் ஒரே கொள்கையைப் பிடித்துக்கொண்டிருப்பவன் அடி முட்டாள்.

ஞாயிறு, 8 மே, 2016

வருகின்ற தேர்தலில் ஓட்டுப்போடுவது எப்படி?

                         
                                 Image result for tamilnadu election 2016 comedy

தமிழக சட்டசபைத் தேர்தல் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் 10 நாளில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி விடும். இந்த தேர்தலில் எல்லோரும் ஓட்டுப்போடவேண்டும் என்று விடாது பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. ஆகவே உங்கள் ஓட்டை வேட்பாளர்களில் நல்லவருக்குப் போடுங்கள் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். இது ஒரு உண்மையான புத்திமதி.

எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என்னவென்றால் வேட்பாளர்களில் நல்லவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான். அனைத்து வேட்பாளர்களும் ஏதாவதொரு கட்சியின் சார்பில்தான் நிற்கிறார்கள். ஆகவே அந்தக்கட்சிகளின் தன்மை, அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு அவர்கள் செய்த நன்மைகள் இவைகளை வைத்துத்தானே அந்தக் கட்சியின் தன்மை பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அப்படித் தெரிந்துதானே ஓட்டுப்போட முடியும்.

கட்சிகள் ஆட்சி செய்தபோது அவர்கள் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். பல இலவசப் பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் இலவசங்கள் கொடுப்போம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

இந்த இலவசங்களை எப்படிக் கொடுக்க முடியும் என்பது எனக்கு வேண்டாத சிந்தனை. ஒன்று மட்டும் நிச்சயம். யார் வந்தாலும் இலவசங்கள் தொடரும். ஆகவே யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? எனக்கு இலவசங்கள் வருமல்லவா?

இந்த சிந்தனையில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் மக்களே. ஆகவே நான் ஓட்டுப்போட்டாலும் போடாவிட்டாலும் ஏதோ ஒரு கட்சி ஜெயித்து ஆட்சிக்கு வரும். அவர்கள் இலவசங்களை வாரி வழங்கப் போகிறார்கள். இதில் ஏதாவது லாஜிக் தவறு இருக்கிறதா?

தேன் எடுப்பவன் புறங்கையில் வழியும் தேனை, நக்கத்தான் செய்வான். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் ஓட்டுப்போட அவசியம் இருப்பதாக க்கருதவில்லை. நீயெல்லாம் ஒரு படித்தவனா, உன் ஜனநாயக உரிமையை இப்படிக் கேவலமாகப் பேசுகிறாயே, உனக்கு வெட்கம் மானம் இல்லையா என்று எல்லோரும் கேட்பீர்கள் என்று தெரியும்.

என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நான் கட்டாயம் ஓட்டுப்போடுகிறேன். போட்டியில் இருக்கும் கட்சிகளில் யோக்கியமான கட்சி எது? இதற்கு யாராவது ஒருவராவது பதில் சொன்னால் போதும்.

இப்படிச் சிந்திப்பதால்தான் அனைத்துக் கட்சிகளும் படித்தவர்களை வெறுக்கின்றன.

                                   Image result for tamilnadu election 2016 comedy

சனி, 7 மே, 2016

காதல் கல்யாணங்கள்

ஒரு ஊழியனின் குரல் 

என்கிற தளத்தில் வெளி வந்த
இப்பெண்ணின் கேள்விக்கு பதிலென்ன?

என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்.


நான் இந்த கலப்புத் திருமணங்களைப் பற்றி சில சொந்தக் கருத்துகள் வைத்திருக்கிறேன். அவை என்னைப் பிற்போக்குவாதியாகவும் சாதி வெறியனாகவும் இன்னும் பல அடைமொழிகளுக்கு உரியவனாகவும் காட்டலாம். அவைகளைப் பற்றி கவலைப்படாமல்தான் இந்த பின்னூட்டம் போடுகிறேன். இந்தப் பின்னூட்டம் மேலும் பல மாற்றுக்கருத்துகளுக்கு வழி வகுத்தால் நன்மை உண்டாகும்.

காதல் என்பது ஒரு பருவக்கவர்ச்சியே என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்க சாத்தியமில்லை. இதை சரியான கோணத்தில் கையாள்வதற்கு நம் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.நாம் வாழும் காலம் என்ன, நம் வாழ்க்கையை வாழ என்னென்ன தேவைகள் உண்டு, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற நாம் என்ன தகுதி பெற்றிருக்கவேண்டும் என்ற சிந்தனைகள் ஒவ்வொரு பொறுப்புள்ள இளைஞன் மற்றும் இளைஞிக்கு வேண்டும்.

18 வயது பெண்ணும் 21 வயது பையனும் கல்லூரியில் பழகும்போது காதலில் ஈடுபட்டு கல்யாணம் செய்து கொண்டால் அவர்களுக்கு வாழ்க்கை நடத்த என்ன பொருளாதார வசதி இருக்கும்? என்ன உலக அனுபவம் இருக்கும்? இந்த நடைமுறை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் காதல் என்ற போர்வையைப் போர்த்துக்கொண்டு கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் தோற்று விடுகிறது.

இந்த மாதிரி கல்யாணங்களில் சாதி வேறுபாடும் கலந்து விட்டால் அந்தக் காதலர்களின் வாழ்க்கை இன்னும் பிரச்சினைக் குரியதாகிறது. இந்தப் பிரச்சினையை ஒரு சமுதாயப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்கு மாற்று வழிகளாக ஏதாவது கருத்துகள்  மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இந்தப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். இந்த நிகழ்வுகளுக்கு வெறும் சாதிச் சாயம் மட்டுமே பூசி சாதி வெறியை அதிகரிப்பதினால் யாருக்கு என்ன பயன்?

கல்யாணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் சமநிலையில் இருக்கவேண்டும். அதாவது அவர்கள் குடும்பம், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள் இத்தியாதி. இவை சமநிலையில் இருந்தால்தான் அவர்களின் திருமணம் வெற்றிகரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கலப்புத் திருமணங்களில் இந்த சம நிலை இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே அவைகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.

ஜாதி வெறி என்று சொல்வதினால் அது உடனே மறைந்து போகப் போவதில்லை. இதை அரசியலாக்குவதால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எந்த விடிவும் ஏற்படப்போவதில்லை. இந்த நிலை மாறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல காலங்கள் ஆகும். அதற்குள் கீழ் நிலையிலிருப்பவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு அவர்களுக்கு வழிகாட்டத் தகுந்த தலைவர்கள் வேண்டும். இதற்கெல்லாம் காலம் பிடிக்கும். அதற்குள் அவசரப்பட்டு கலப்புத் திருமணங்கள் செய்யும் ஜோடிகள் பல இன்னல்களுக்கு ஆளாகத்தான் வேண்டும்.

நம் சமுதாயம் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடையுமா, அடையாதா, அடையும் என்றால் எத்தனை காலம் பிடிக்கும் என்பதே ஒரு பெரிய கேள்விக் குறிதான்.

இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. சம்பந்தப்பட்டவர்களின் உணர்ச்சியைத் தூண்ட வல்லது. ஆகவே இதைப்பற்றி எழுதும்போது மிகவும் கவனமாகத்தான் எழுதுகிறேன். நான் இந்தப் பதிவு எழுதுவதின் நோக்கமே ஒரு சமுதாய மாற்றத்திற்கான சிந்தனைகள் வளர வேண்டும் என்பதற்காகவே. அப்படியும் சிலர் என் மீது தனிப்பட்ட முறையில் கோபப்படலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரச்சினையை விட்டு விட்டு தனி நபர் மீது கோபம் கொள்வது எந்த வகையிலும் அந்தப் பிரச்சினை தீர்வதற்கு உதவாது என்பதை உணர வேண்டும்.

திங்கள், 18 ஏப்ரல், 2016

18. நாட்டின் தலைவிதி மாறியது

                            Image result for indian parliament

பிரதம மந்திரி. நிதி அமைச்சர், கட்சித்தலைவர் ஆகியார் குழு வந்தார்கள். பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.


நான் சில கருத்துகளைக் கூறினேன்.

1. இப்போது உள்ள தேசீயக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும். இதில் 33 சதம் பெண்கள். இந்த  வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

2. எதிர்க் கட்சிக்கு 10 சதம் இடம் கொடுப்போம். ஏனெனில் எதிர்க்கட்சி இல்லாவிடில் அதை ஜனநாயக நாடு என்று ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

3. பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.

4. தேர்தலுக்கான அறிவிப்புகளும் வேட்பாளர் தேர்வும் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.

5. தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடித்து விடவேண்டும்.

இந்த கருத்துகளுக்கு அவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

நிதி அமைச்சர் மட்டும் ஒரு சந்தேகம் எழுப்பினார். நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சந்தோஷத்துடன் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்லொரும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். தேசீயக் கட்சி வேட்பாளர்கள் சீக்கிரம் முடிவு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட்டார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் வேட்பாளர்களை நானே ஏற்பாடு செய்தேன்.

வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு ஓட்டுச் சீட்டுகள் அடித்தாகிவிட்டது தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. அனைத்து ஓட்டர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.

தேர்தல் நாளைக்கு முன்தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து சாதனங்களும் தேர்தல் அதிகாரிகளும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்பட்டிருந்த அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் "வை-ஃபி" முறையில் தேவலோகத் தூதரகத்திலுள்ள சூபர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு யம கிங்கரனைக் காவலுக்குப் போட்டிருந்தேன். எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

17. ஆணும் பெண்ணும் சமம்.


இந்த தேர்தல்கள் முடிந்து எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் நடைமுறை அலுவல்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. மக்களின் நலவாழ்விற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்தத் தேவையான வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இதேபோல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கடைசியாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியம் கொடுக்கப்படும். ஆகவே எந்த திட்டத்திலும் ஊழல் என்பதே தலைகாட்டக்கூடாது. அனைத்து நலத்திட்டங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடக்கும். இந்த செயல்பாடுகளை ஒரு சூபர் கம்ப்யூட்டர் கண்காணிக்கும். எங்கு தவறு நடந்தாலும் அது என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகள் உடனடியாக எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள்:

   1.   எல்லோருக்கும் குடியிருக்க கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள்
   2.   அனைவருக்கும் வேண்டிய குடிநீர்
   3.   அனைவருக்கும் வேலை வாய்ப்பு 
   4.   கிராமத்திலேயே தரமான கல்வி
   5.   எல்லோருக்கும் மருத்துவ வசதி
   6.   நல்ல சாலைகள்
   7.   விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள்
   8.   மக்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையங்கள்
   9.   சமூக கூடங்கள்
10. வேலை வாய்ப்பு சுய உதவிக் குழுக்கள்.
11. விவசாயத்திற்கு முன்னுரிமை

இந்த வசதிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களிலேயே மக்களின் தேவையை அனுசரித்து இருக்கும். கிராம மக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அனைத்து அரசு துறைகளும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்த கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தயாரித்து அவைகளை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். இதற்கான நிபுணர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி வசதிகள் ஒவ்வொரு பஞ்சயத்திற்கும் தடையில்லாமல் வழங்கப்படும். எங்கும் எதிலும் இலவசம் என்ற பேச்சுக்கு இடமே கொடுக்கப்பட மாட்டாது.

இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.

வேலை வாய்ப்பு சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அமைக்கப்பட்டன. அந்தந்த தொழிலுக்குத் தேவையான வேலைகளை இந்த குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும். அந்தந்த குழுக்களுக்குத் தேவையான தொழில் நுட்ப பயிற்சிகள் தகுந்த நிபுணர்களால் கொடுக்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஆட்களின் தேவைகளைக் குறைக்கும் தொழில் நுட்ப பயிற்சிகள் விரிவாக கொடுக்கப்பட்டன.

இதனால் குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது. அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவை அனுசரித்து விற்பனை விலை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

கிராமங்கள் செழிப்படைய ஆரம்பித்தன. இந்நிலையில் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. பிரதம மந்திரியின் குழுவை வரச்சொல்லி தகவல் அனுப்பினேன்.

சனி, 26 செப்டம்பர், 2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

                                   Image result for போஸ்

இந்தப் பெயர் இந்தியா சுதந்திரம் வாங்கிய காலத்தில் ஒவ்வொரு இந்தியனாலும் பெருமை பொங்கப் பேசப்பட்ட ஒரு பெயர். போஸ் இந்திய சுதந்திரத்தை வாங்க ஒரு போராட்ட முறையைக் கடைப்பிடித்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இரண்டாம் உலக யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதும், பிரிட்டிஷ்காரர்கள் இந்தயாவிற்கு சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

அப்போது இருந்த இந்தியத் தலைவர்களில் மூத்தவர்கள் காந்தியும் நேருவும் ஆவார்கள். ஆனால் இந்த இருவருக்கும் போஸ் ஒரு பெரும் தலைவராக இந்தியாவிற்குள் வருவதை விரும்பவில்லை. அப்படி வந்திருந்தால் நேருவிற்கும் போஸுக்கும் யார் பெரியவர் என்பதில் ஒரு சிக்கல் உருவாகியிருக்கும்.

போஸ் இறந்து விட்டார் என்ற தகவல் வெளியானதும் இவர்கள் இருவரும் பெருத்த ஆறுதல் அடைந்திருப்பார்கள். போஸ் இறக்கவில்லை என்று பாமர மக்கள், குறிப்பாக பெங்காளிகள் நம்பினார்கள். இது வழக்கமாக பெரும் தலைவர்கள் மறையும்போது ஏற்படும் உணர்வுதான்.

அவர் இறந்து ஏறக்குறைய 80 வருடங்கள் கழித்து இப்பொழுது எதற்கு இந்தப் பிரச்சினையை தூசி தட்டி உயிர் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. நேரு, காந்தி இவர்களையே நாம் மறந்து வெகு காலம் ஆகிறது. இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத போஸை இப்பொழுது யாருக்கோ ஆதாயமிருப்பதால் உயிர்ப்பித்திருக்கிறார்கள். 

வியாழன், 12 மார்ச், 2015

உலகமே ஒரு நாடக மேடை

மோடி வருகையை முன்னிட்டு 82 மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்கிறது - இன்றைய செய்தி

ஆஹா, என்ன ஒரு கருணை என்று வாய் பிளக்காதீர்கள். இது ஒரு பட்டவர்த்தனமான அரசியல் நாடகம்.

நான் வேலையில் இருந்த போது இப்படிப்பட்ட ஒரு நாடகத்தைப் பார்த்தேன். அப்போதுதான் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் உருவான புதிது. அதன் முதல் துணைவேந்தர் ஒரு சாமர்த்தியசாலி. காரியங்களை நடத்துவதில் கைதேர்ந்தவர்.

அவர் ஒரு முறை 25 நாட்களுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். திரும்பி வரும் நாளன்று அவர் கோவைக்கு 8 மணிக்கு விமானம் மூலம் திரும்பி வருவார் என்பது பயணத்திட்டம். பொதுவாக யாராக இருந்தாலும் 25 நாட்கள் வெளியூர் சென்று விட்டு ஊருக்கு வந்தால் தன் வீட்டுக்குத்தான் செல்வார்கள்.

ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை. கோவைக்குப் பக்கத்தில் பவானிசாகர் என்னுமிடத்தில் ஒரு விவசாயப் பண்ணை இருக்கிறது. அவர் திரும்பிவரும் அன்று அங்கு ஒரு விவசாயிகள் தின விழா ஏற்பாட் செய்யச்சொல்லி விட்டு வெளியூர் பயணம் மேற்கொண்டார். திரும்பி வந்த அன்று விமான நிலையத்தால் இறங்கியவுடன் காரில் பவானிசாகர் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு மாலையில்தான் கோவை வீட்டிற்கு வந்தார்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். துணைவேந்தருக்கு என்ன ஒரு கடமை உணர்வு? இவ்வளவு நாள் கழித்து திரும்பியதும் வீட்டிற்குக் கூடப் போகாமல் உடனே ஒரு விழாவில் கலந்து கொள்ளுகிறாரே? என்ன ஒரு கடமை உணர்வு? என்ன ஒரு திறமை? என்ன ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு? என்ன, ஆச்சரியம்?  என்று எல்லோரும் வாயைப் பிளந்தார்கள். நானும் கூடத்தான்.

பலநாட்கள் கழித்துத் தான் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது.  இது ஒரு அப்பட்டமான நாடகம். ஒரு நாள் முன்பாகவே பெங்களூர் வந்து இறங்கி அங்கு ஒரு விடுதியில் தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது. அங்கு தனக்கு வேண்டிய ஒருவரை ரகசியமாக வரவழைத்து விழா ஏற்பாடுகளெல்லாம் சரியாக இருக்கிறதா என்று  சரி பார்த்துக் கொள்ளவேண்டியது. மறுநாள் விமானத்தில் பெங்களூரிலிருந்து கோவை வந்து விழாவிற்கு செல்லவேண்டியது.

ஜனங்கள் அவர் அப்போதுதான் நேரடியாக வெளிநாட்டிலிருந்து வந்து இறங்குகிறார் என்று நம்பிக் கொள்வார்கள். எப்படி ஒரு நாடகம்?

ஒரு விஞ்ஞானிக்கே இப்படி ஒரு நாடகம் போட்டுத் தன் மதிப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் ஒரு அரசியல்வாதிக்கு என்னென்ன தோன்றும்? மடத் தமிழன்கள் எல்லாம் இலங்கை அரசுக்குத் தமிழர்களின் பேரில் என்ன ஒரு அக்கறை என்று ஆச்சரியப்படமாட்டார்களா?