அரட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஜூலை, 2015

நைனா கீதா?

                                  Image result for சென்னை
இந்த தலைப்பு என்னன்னு புரியுதா? புரிஞ்சா நீங்க நிச்சயம் வேலூர், கடலூர்க்காரரா இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக, "நைனா கீதா" அப்படீன்னா "அப்பா இருக்கிறாரா?" என்று அர்த்தம். கோயமுத்தூர்ல கிராமத்தில போய் இப்படிக் கேட்டா என்னமோ இந்தப் பய நம்மளைத் திட்டறான்னுதான் நினைப்பாங்க.

கோயமுத்தூர்ல இந்த வார்த்தை கிடையாது. இது ஒரு வட்டார வழக்கு. குறிப்பாக வேலூர் பக்கம் இது மிகவும் மரியாதை கலந்த வார்த்தை. ஆனால் அது கோயமுத்தூர்க்காரனுக்கு விளங்காது. அவனை இப்படிக் கூப்பிட்டால் அவனுக்கு எரிச்சல்தான் வரும். இங்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் ஏறக்குறைய காலேஜ் பசங்க ஒருத்தருக்கொருவர் "மச்சீ" அப்படீங்கறாங்களே அந்த மாதிரி.

இப்படியான வட்டார வழக்குகளுக்கு அந்தந்த வட்டாரங்களில்தான் மரியாதை. இப்படியான பல வட்டார வழக்குகளைக் கண்டு நான் குழம்பியிருக்கிறேன். சென்னையில் "இன்னா நாய்னா" என்பது ஒரு வகை மக்களின் அன்பான உரையாடல். "இன்னா சார்" என்றால் அது மிகப்பெரிய மரியாதை. கோயமுத்தூரில் இதற்கு சரியான வார்த்தை "என்னங்க ஐயா" என்பதாகும்.

நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது  சுற்றுலா போகும்போது கடலூர் பக்கம் ரயிலில் போய்க்கொண்டிருந்தோம். அப்போது அங்கு சில விவசாயிகள் சாக்கில் ஏதோ கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். சும்மா ஆர்வத்தில் சாக்கில் என்ன இருக்கிறது என்று கேட்டோம். அவர்கள் "மல்லாட்டெ" என்று பதில் சொன்னார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சாக்கைத் தொட்டுப் பார்த்தோம். அதற்குள் இருப்பது நிலக்கடலை என்று தெரிந்தது. ஆனால் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று எங்களுக்குள் விவாதித்தோம்.

அப்போது அந்த வட்டரத்தைச் சேர்ந்த எங்கள் வகுப்புத் தோழன் ஒருவன் சொன்னான். மல்லாக் கொட்டை என்பதைத்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்க்ள என்றான். அப்புறம் விவாதித்து அந்தப் பெயர் வந்த காரணத்தைக் கண்டு பிடித்தோம். நிலக்கடலை முதலில் "மணிலா" என்ற நாட்டிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்து இருக்கிறது. அதனால் மக்கள் அதை மணிலாக்கொட்டை என்று அழைத்தார்கள். அது நாளாவட்டத்தில் மருவி மல்லாக் கொட்டை என்று ஆகி பிறகு மல்லாட்டெ ஆகியது.

அப்புறம் அங்கு அடிக்கடி கேட்ட வார்த்தை "க்கீதா". இருக்கிறதா என்பதுதான் மருவி "க்கீதா" ஆகிற்று என்று வெகு நேரம் ஆராய்ச்சி செய்ததில் புரிந்தது.

மருதைக்கு மாற்றல் ஆகிப்போன புதிதில் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பையனைக் கூப்பிட்டு வீட்டுக்குப் போய் ஒரு பைய வாங்கிட்டு வா என்று அனுப்பினேன். நான் அலுவலகத்திலிருந்து அப்படியே கடைவீதிக்குப் போய் சில பொருட்கள் வாங்கவேண்டியிருந்தது. அதற்காக அவனை வீட்டிற்கு அனுப்பினேன்.  பையன் போனவன் போனவனே. அடுத்த நாள்தான் வந்தான்.

என்னடா விஷயம் என்று கேட்டால் "நீங்கதானே வீட்டிற்குப் போய்விட்டு "பைய" வரச்சொன்னீங்க என்கிறான். வெகு நேரம் பேசின பிறகுதான் எனக்கு விளங்கியது. மருதையில் "பைய" என்றால் மெதுவாக என்று அர்த்தமாம். நான் பையை வாங்கிக்கொண்டு வரச் சொன்னதை அவன் மெதுவாக வரச்சொன்னதாகப் புரிந்து கொண்டான். அப்புறம்தான் தெரிந்தது. நான் பைக்கட்டு வாங்கி வா என்று சொல்லியிருக்க வேண்டும்.கோயமுத்தூரில் அப்படிச்சொன்னால் அவன் ஒரு கட்டுப் பையைக் கொண்டு வருவான்.

அப்பறம் ஒரு நாள் ஒரு கடையில் உட்கார்ந்து கொண்டு இருந்த போது அந்தக் கடை முதலாளி அந்தக் கடையில் வேலை செய்யும் ஒரு ஆளைக் கூப்பிட்டு ஒரு வேலைக்காக வெளியில் அனுப்பினார். வேலை விவரம் சொல்லி விட்டு கடைசியாக எப்படியாவது இந்த வேலையைக் கோளாறா முடிச்சிட்டு வந்திரு என்று சொல்லி அனுப்பினார். எனக்கு ஒரே குழப்பம். வேலையை ஏன் கோளாறு பண்ணச்சொல்றாரு என்று புரியவில்லை. எங்க ஊர்ல கோளாறு என்றால் கெடுத்தல் அல்லது தகராறு என்று அர்த்தம்.

அப்புறம் விசாரித்ததில் மருதையில் கோளாறு என்றால் கெட்டிக்காரத்தனம் என்று பொருளாம். எப்படி இருக்கிறது பாருங்கள்.

கோயமுத்தூர் பாஷை என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். அது மற்ற மாவட்டங்களில் கேலிக்குரியதாகி விட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து கோயமுத்தூருக்கு வந்து வேலை செய்யும் நண்பர்கள் எங்களுக்கு கோயமுத்தூர் பாஷை நல்லாத் தெரியுமே. எதற்கெடுத்தாலும் ஒரு "ங்க" சேர்த்தால் அது  கோயமுத்தூர் பாஷை என்பார்கள்.

அவர்களுக்கு நான் ஒரு பரீட்சை வைப்பேன். நான் சொல்கிற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் சொல்லுங்க பார்ப்போம் என்று சொல்லி இந்த வார்த்தைகளைக் கூறுவேன்.

அம்மணி, அந்த அங்கராக்குச் சோப்பில தொரப்புக்காய் இருக்குது, எடுத்துட்டு வா அம்மணி.

எல்லோரும் திருத்திருவென முளிப்பார்கள்.  பார்க்கலாம் உங்களில் எவ்வளவு பேருக்கு இதன் அர்த்தம் தெரிகிறதென்று. கோயமுத்தூர்க்காரர்கள் சும்மா இருக்கோணும்.

சனி, 4 ஆகஸ்ட், 2012

உங்களுக்குப் பேசத் தெரியுமா?நீங்கள் மிக நன்றாகப் பேசுவீர்கள் என்று நான் அறிவேன். உங்களைப் போல் சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவர்கள் அதிகம் பேர் இல்லையென்பதையும் நான் அறிவேன். ஆனால் நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சை அடுத்தவர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆனால் அதை நான் அறிவேன். இந்த சூட்சுமத்தை அறியாமல்தான் பலர் வாழ்க்கையில் சங்கடப்படுகிறார்கள். மற்றவர்களையும் சங்கடப்படுத்துகிறார்கள்.

நீங்கள் உங்கள் நண்பரிடம் ரொம்ப முக்கியமான சமாசாரத்தைச் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். அவர், இவன் இந்தக் கழுத்தறுப்பை எப்ப முடிப்பான், நாம பஸ் பிடிச்சு எப்ப வீட்டிற்குப் போய்ச் சேருவது என்று கவலையில் இருப்பார். பல பேர் இப்படித்தான், அடுத்தவன் என்ன நினைப்பான், அவன் என்ன சூழ்நிலையில் இருக்கிறான் என்ற நினைப்பேயில்லாமல் மணிக்கணக்கில் அறுப்பார்கள்.

அடிக்கடி, “என்ன நான் சொல்றது புரியுதா” என்ற கேள்வி வேற கேட்டு வெறுப்பேத்துவார்கள். ஒரு அவசர வேலை இருக்கிறது, நான் போகவேண்டும் என்றால் அதைக் காதிலேயே வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எதிரே ஒரு ஆள். அவ்வளவுதான். இவர்கள்தான் வயதான பிறகு வீட்டுத் திண்ணையில் தனியாக உட்கார்ந்துகொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டு இருப்பவர்கள்.
போனில் பேசுபவர்கள் இன்னும் பெரிய கழுத்தறுப்புகள். நேரில் முகம் பார்த்து பேசும்போதே அடுத்தவர்களின் மன நிலையைக் கவனிக்காதவர்கள், போனில் முகத்தைப் பார்க்காமல் பேசும்போது எப்படி நடந்து கொள்வார்கள் என்று நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு நீங்கள் சும்மா “ஊம்” சொல்லிக்கொண்டு இருந்தால் போதும். நீங்கள் ஏதாவது சொல்ல இடைவெளியே கொடுக்க மாட்டார்கள். அப்படி ஏதாவது சொல்ல ஆரம்பித்தால், இருங்க, நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்தபின் நீங்கள் பேசலாம் என்பார்.

இவர் எப்போ சொல்லி முடிக்கிறது, நாம எப்போ பேசறது, வீண் வேலைதான். பேசாமல் போனை கீழே வைத்து விட்டு நம் வேலையைக் கவனிக்கலாம். அதற்கும் இந்த பிரஹஸ்பதிகள் விடமாட்டார்கள். அவர்களுக்கு ஒரு ஆள் “ஊம்” கொட்டிக்கோண்டே இருக்கவேண்டும். எது எதற்கோ மிஷின் கண்டு பிடிக்கிறார்களே, இந்த “ஊம்” கொட்டுவதற்கு ஒரு மிஷின் கண்டு பிடித்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்?
எனக்கு சில நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு காது கொஞ்சமாகத்தான் கேட்கும். ஆனால் அவர்கள் அதை உயிர் போனாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். செவிட்டு மிஷின் வாங்கி வீட்டில் பத்திரமாக வைத்திருப்பார்கள். தப்பித்தவறி அதை காதில் வைத்துக்கொண்டாலும் ஞாபகமாக சுவிட்சை ஆஃப் பண்ணிவைத்திருப்பார்கள். காரணம் பேட்டரி தீர்ந்து போய் விடுமாம். ஏனய்யா இந்தக் கஞ்சத்தனம் பண்ணுகிறீர்கள் என்று கேட்டால், ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்பத்தான் ஆஃப் பண்ணினேன் என்பார்கள்.

இவர்களுடன் பேசுவது ஒரு தனி கலை. அவர்கள் பேசும் சப்ஜெக்ட்டுக்கு சம்பந்தமாய் பேசினால் நம் உதடு அசைப்பை வைத்து ஓரளவு புரிந்து கொள்வார்கள். வேற சப்ஜெக்ட்டுக்கு போனீர்களானால் வந்தது வம்பு. நீங்கள் சொல்வதை அவருக்குப் புரிய வைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். ஆனால் இவர்களுக்கு மற்றவர்களுடன் அளவளாவ மிகவும் பிடிக்கும். யாராவது கிடைத்தால் மிகுந்த சந்தோஷம் கொள்வார்கள். அப்படி யாரும் கிடைக்காவிட்டால் போன் போட்டு நண்பர்களை வரவழைப்பார்கள். இவர்களிடம் காலம் தள்ள ரொம்ப ரொம்ப பொறுமை வேண்டும்.

சிலர், யாராக இருந்தாலும் வலியப்போய் ஒட்டிக்கொண்டு சம்பந்தமில்லாமல் ஏதாவது கேட்டுத் தொண தொணப்பார்கள். விசேஷ வீடுகளில் இந்த ஆட்கள் பண்ணும் அக்கிரமம் சொல்லி முடியாது. இவர்களை சிலர் சமாளிக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். அங்கு கண்ணில் தென்படும் யாராவது ஒருத்தரைக் கூப்பிட்டு, “இவர் என்னமோ கேட்கிறார், என்ன என்று பாருங்கள்” என்று சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்வார். அந்த ஆள் மாட்டிக்கொண்டு முழிப்பார்.

இதில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான நல்ல நல்ல ஆலோசனைகளை இலவசமாகச் சொல்ல நான் இருக்கிறேன். பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.