அரைகுறை வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரைகுறை வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூலை, 2015

நான் திருப்பதி நாவிதன் ஆனேன்

                                            Image result for திருப்பதி மொட்டை
திருப்பதி நாவிதர்களைப் பற்றி ஒரு பேச்சு வழக்கு உண்டு. "திருப்பதி நாவிதன் வேலை செய்யாதே" என்று பெரியவர்கள் கூறுவார்கள். திருப்பதி நாவிதர்கள் என்ன செய்வார்கள் என்றால், அங்கு பிரார்த்தனைக்கு முடி காணிக்கை செலுத்த பல பக்தர்கள் வருவார்கள். இவர்களுக்கு மொட்டை போட திருப்பதி தேவஸ்தானமே நாவிதர்களை நியமித்திருக்கிறது. அவர்களுக்கு ஒருவருக்கு மொட்டை போட இவ்வளவு கட்டணம் என்றும் நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் எவ்வளவு பேருக்கு மொட்டை போடுகிறார்களோ அவ்வளவு ஊதியம் அவர்களுக்குக் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு நாவிதரும் எவ்வளவு பேருக்கு அதிகமாக மொட்டை போட முடியுமோ அவ்வளவு பேர்களுக்கு மொட்டை போடவே முயற்சிப்பார்கள். மொட்டை போடுவதில் அவர்களுக்குள். ஒரு எழுதப்படாத சட்டம் உண்டு. அதாவது ஒரு நாவிதர் ஒரு பக்தருக்கு மொட்டை போட கத்தியை அவர் தலையில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டால் வேறு யாரும் அந்த பக்தருக்கு மொட்டை போட முடியாது.

பக்தர்க்ள கூட்டம் அதிகமாக இருக்கும்போது இந்த நாவிதர்கள் என்ன பண்ணுவார்கள் என்றால் ஒரு பக்தரை இழுத்து வைத்து அவர் தலையில் கத்தியால் ஒரு இழுப்பு இழுத்து விட்டு, இருங்கள் இப்போ வருகிறேன் என்று சொல்லி விட்டு இன்னோரு பக்தரைப் பிடித்து அவருக்கும் இந்த மாதிரி ஒரு இழுப்பு இழுத்து விட்டு அடுத்த பக்தரைத் தேடிப்போய்விடுவார்கள்.

இப்படியாக ஒரு ஏழெட்டு பக்தர்களுக்கு ஒவ்வொரு இழுப்பு மட்டும் இழுத்து விட்டுப் பிறகு சாவகாசமாக ஒவ்வொருவருக்காக முழு மொட்டையும் அடித்து முடிப்பார்கள். இப்படி ஒரு இழுப்பு இழுக்கப்பட்ட பக்தர்களுக்கு வேறு யாரும் மொட்டை அடிக்க வரமாட்டார்கள். இவர்கள் அந்தக் குறிப்பிட்ட நாவிதர் வரும் வரையில் பேசாமல் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

இப்படி ஒரு வேலையைத் தொடங்கிவிட்டு அதை முடிக்காமல் அடுத்த வேலைக்குத் தாவுகிறவர்களைத்தான் திருப்பதி நாவிதன் வேலை மாதிரி செய்யாதே என்பார்கள்.

இப்ப இந்தக் கதையை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நானும் பல பதிவுகளுக்கு முன்னுரை மட்டும் கொடுத்து விட்டு பதிவு வருகிறது, பதிவு வருகிறது, என்று "புலி வருகிறது" என்ற கதை மாதிரி பாவ்லா காட்டிக்கொண்டு இருக்கிறேன். எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. இன்று முதல் மும்முரமாக ஒவ்வொன்றாய் முடித்து விடுகிறேன். அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.