அறுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத்திலகம்.


  Image result for 1000 number

இது என்னுடைய ஆயிரத்தியோராவது  அறுவை. இந்த சாதனையைப் பாராட்டி எங்கள் தெருவில் உள்ள பதிவர்கள் அனைவரும் (நான் ஒருவன் மட்டுமே< மற்ற பதிவர்கள் எனக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள்) எனக்கு "ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத் திலகம்" என்ற பட்டத்தை சூட்டி இருக்கிறார்கள்.

இத்தனை அறுவைப் பதிவுகள் போட்டிருந்தும் இன்னும் பதிவுலகில் இந்த அறுவையைத் தாங்காமல் யாரும் உயிரை விட்டதாகத் தெரியவில்லை. நானும் என்னால் முடிந்த மட்டில் அறுவைப் பதிவுகளாகத்தான் போடுகிறேன். ஆனாலும் ரிசல்ட் வரமாட்டேன் என்கிறது.

கொஞ்ச நாள் அபுதாபி போய் அங்குள்ள ஒரு பிரபல பதிவரிடம்  பாடம் கற்றுக்கொண்டு வரலாமா என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இருந்தாலும் தமிழ்ப் பதிவர்கள் அதற்கெல்லாம் மசிவார்களா என்றும் நினைக்கவேண்டி இருக்கிறது.

அந்த   அபுதாபிப் பதிவர் சமீபத்தில் இந்தியா வருவதாகக் கேள்விப்பட்டேன். அவரை நேரில் சந்தித்து சில பல யோசனைகள் பெறலாம் என்று முடிவு செய்துள்ளேன். அது வரை இப்போது வெளி வரும் சாதாரண அறுவைகளை வைத்து திருப்திப் பட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறேன்.

ஞாயிறு, 12 ஜூன், 2016

இந்த உலகத்தின் வாழ்நாள் எவ்வளவு?

Image result for life is beautiful

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் வாழ்கின்றது. அவைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, இறக்கின்றன. மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. அல்லது இப்படிக்கூறலாம். பிரச்சினைகளை அவை சாதாரணமாக, இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன.

மனிதன் ஒருவன்தான் தன்  சிந்திக்கும் திறனால் இயற்கையுடன் இசைந்து வாழ மறுக்கிறான். இயற்கையை தன் மனதுப்படி வளைக்க எண்ணுகிறான். வளைக்கிறான். இன்றைய பல நவீன உபகரணங்களுக் செயல் சக்திகளும் அதன் விளைவே.

ஆனால் அதனால் சில வேண்டாத விளைவுகளும் ஏற்படுகின்றன. அவைகளைக் களைய மனிதன் முற்படும்போது பல தடங்கல்கள் வருகின்றன. அவைகளில் முக்கியமான ஒன்று மனித இனத்தின் ஜனத்தொகை.

மனிதனின் வியாதிகளைக் கட்டுப்படுத்தி அவன் வாழ்க்கையில் உள்ள இயற்கை எதிர்ப்புகளை நீக்கி விட்டபடியால் மனிதன் அதிக நாள் உயிருடன் இருக்கிறான். மனிதனின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. தவிர அவனுடைய அதீத தேவைகளுக்காக பல இயற்கை வளங்களை அழிக்க நேரிடுகிறது.

இப்படியே ஜனத்தொகை அதிகரித்து, அவனுடைய தேவைகளுக்காக இயற்கை வளங்களையும் அழித்துக்கொண்டே போனால் இந்த உலகம் என்ன ஆகும்? விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.ஆனாலும் இயற்கையைக் காப்பி அடித்து ஒரு குண்டுமணி அரிசியைக்கூட நாம் இது வரை பெறவில்லை.

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பிரளயம் வந்து உலகம் அழியும் என்று நம் புராண இதிகாசங்கள் சொல்கின்றன. அது உண்மையாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

புதன், 10 பிப்ரவரி, 2016

உடலும் மனதும் ஆன்மாவும்!

                                           Image result for ஆத்மா
மக்களுக்கும் மாக்களுக்கும் என்ன வித்தியாசம்? சிந்திப்பவர்கள் மக்கள். சிந்திக்காதவர்கள் மாக்கள். நீங்கள் மக்களாக இருக்க விரும்பினீர்களானால் மேற்கொண்டு படியுங்கள். இல்லை நாங்கள் மாக்களாகவே இருந்து விட்டுப் போகிறோம் என்றால் வேறு தளத்திற்குப் போய்விடுங்கள்.

உடல் ஜடம், மனதுதான் காரணி. அதாவது உடலினால் தானாக எதுவும் செய்ய முடியாது. அதற்கு வேண்டிய உத்திரவுகளை மனது பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் உடல் செயல்படும்.

இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனாலும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் இந்த இரண்டையும் ஒன்றாகவே பாவிக்கிறோம். ஏனெனில் உடல் மனது இரண்டும் எப்போதும் இணைந்தே செயல் புரிகின்றன. அவைகளுக்குள் மாறுபாடு என்பதே வருவதில்லை. ஆகவே இரண்டும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொள்வதில் எந்த சங்கடமும் வராது. இதில் தவறு எதுவும் இல்லை.

ஆனால் இந்த மெத்தப் படித்தவர்கள், அதிலும் கொஞ்சம் ஆன்மீகம் தெரிந்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள்தான், உடல் வேறு, மனது வேறு என்று சொல்லிக்கொண்டு தாங்கள் குழம்புவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் குழப்புவார்கள். இவர்கள் ஆன்மா என்று மூன்றாவதாக ஒன்றையும் உட்புகுத்தி இருக்கிறார்கள். சரி ஐயா, ஆன்மா என்றால் என்ன என்கிற கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

அதனால் ஆன்மாவை விட்டு விடுவோம். நம் ஆராய்ச்சியை உடல், மனது என்ற இரண்டிடம் மட்டும் வைத்துக்கொள்வோம். இந்த உடல் உயிர் இருந்தால்தான் இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. உடலில்தான் மனது இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சி இப்போதைக்கு வேண்டாம். உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் உடல் இருக்கும் ஆனால் இயங்காது. உயிரற்ற உடலில் மனது இல்லை.

எனக்குப் புரிந்த வகையில் உயிர் என்பதுதான் ஆன்மா. ஆன்மா பிரிந்தது என்றாலும் உயிர் பிரிந்தது என்றாலும் ஒன்றுதான். உடலை விட்டுப் பிரிந்த உயிர் என்னவாகிறது என்பதில்தான் அனைத்துக் குழப்பங்களும் வருகின்றன. அதாவது உடலின் அவயவங்கள் அனைத்தும் தங்கள் திறன் குன்றி, அவைகளின் இயக்கத்தை நிறுத்தி விடுவதைத்தான் உயிர் பிரிந்தது என்கிறோம். அதாவது உடல் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. உயிர் என்று ஒரு பொருள் இருந்தாலல்லவா அது பிரிவதற்கு? அப்படி ஒரு பொருள் இல்லாததினால் ஒருவனுடைய உடல் இயக்கம் நின்று விட்டது என்று சொல்வதுதான் சரியான செய்தியாகும். ஆகவே அந்த உயிர் எங்கே போயிற்று என்று சிந்திக்கவேண்டியதில்லை.

கிராமங்களில் இதைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். "அவன் செத்துப் போய் விட்டான்" என்று எளிமையாகவும் நிதர்சினமாகவும் சொல்கிறார்கள். இந்தப் படித்த மேதாவிகள்தான் அவனுடைய ஆன்மா பிரிந்தது, அவர் பரமபதம் அடைந்தார், இயற்கை எய்தினார், விண்ணுலகம் ஏகினார், இப்படி பல வார்த்தைகள் உபயோகித்து ஒருவனுடைய இறப்பை குழப்புவார்கள்.

மக்களே, குழம்பாதீர்கள், தெளிவாக இருங்கள், மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

சனி, 3 ஜூலை, 2010

என்னைப் பிடித்திருக்கும் பெருங்கவலை? 
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பழைய நண்பர் வீட்டுக்கு வந்தார். அவரை ஒரு 50 வருடங்களாக அறிமுகம் என்றாலும் நெருங்கிப் பழகியதில்லை.
என் வீடு அவருக்கு எப்படித் தெரிந்தது என்றால் இரண்டு மாதத்திற்கு முன் என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் நானும் இன்னொரு நண்பரும் வந்து கொண்டிருந்தபோது நேர் எதிரில் அவர் வந்தபடியால் பேசவேண்டியதாயிற்று. என் கூட வந்த நண்பருக்கும் அவர் தெரிந்தவர்தான். அன்று என் நாக்கில் சனி பகவான் இருந்திருக்கிறார். ஒரு மரியாதைக்காக என் வீடு பக்கத்தில்தான் இருக்கறது, வாங்களேன், ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று அழைத்தேன். அவரும் ஆஹா, பேஷா வருகிறேன் என்று சொல்லி எங்களுடனே வீட்டுக்கு வந்தார்.
எங்கள் வீட்டு அம்மாவிடம் சொல்லி அவருக்கு ஒரு காப்பி கொடுத்தேன். நாங்கள் இருவரும் முன்பே அன்னபூர்ணாவில் காபி குடித்துவிட்டுத்தான் திரும்பிக் கொண்டிருந்தோம். அவர் காபி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். முக்கால்வாசி அவர் பேசினார். நாங்கள் இருவரும் சேர்ந்து கால்வாசி பேசினோம். எல்லாம் அவருடைய சுயபுராணம்தான். ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டார். எப்படியோ கஷ்டப்பட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் கழித்து அவர் புறப்பட்டுச் சென்றார். அவர் போன பிறகு என் நண்பர் சொன்னார், நான் கண்ணால் ஜாடை காட்டினேனே, அதைப்புரிந்து கொள்ளாமல் இவரை எதற்கு வீட்டிற்கு கூப்பிட்டீர்கள் என்று கூறினார்.
சரி, எப்படியோ இந்த முறை தெரியாமல் நடந்துகொண்டேன், இனிமேல் ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன் என்று கூறினேன். அப்புறம் அவரும் போய்விட்டார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் போன் செய்து வீட்டில் இருக்கிறீர்களா என்று கேட்டார். போனை எடுத்த பிறகு நான் வீட்டில் இல்லை என்று எப்படி சொல்ல முடியும். நான் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் செய்து விட்டார். அப்புறம் என்ன செய்யமுடியும்? விதிப்பிரகாரம் நடக்கட்டும் என்று முடிவு செய்தேன். பதினைந்து நிமிடத்தில் அவர் வந்துவிட்டார்.
பிறகு ஒரு காபி (வீட்டம்மா கருணையுடன்) கொடுத்தேன். காபி குடித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதாவது அவர் பேசினார், நான்ஊம்கொட்டிக்கொண்டிருந்தேன். நடுவில் நான் பேச முயற்சித்தால் அவர் விடுவதில்லை. மொதல்லே இதைக்கேளுங்க என்று சொல்லி என்னைப்பேச விடுவதில்லை.
என்ன பேசினாரென்றால் முழுவதும் சுயபுராணம்தான். அவர் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து இன்று வரையில் நடந்த அத்தனை கதைகளையும் சொல்லி விட்டார். இதில் பாதி கதைகள் போன தடவை வந்தபோதே சொன்னவை. ஒரு கட்டத்தில் புறப்படுகிறேன் என்று சொன்னவர் திரும்பவும் விட்டுப்போனதை சொல்ல ஒரு அரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.
கடைசியாக விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். ஒரு மரியாதைக்காக வாசல் வரை சென்றேன். அங்கே நின்றுகொண்டு மீண்டும் அரை மணி நேரம் பேசினார். கடைசியாக அப்பப்போ நேரம் இருக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
எனக்கு இப்போதைய பெருங்கவலை என்னவென்றால் அடுத்த தடவை இவர் வந்தால் எப்படி தப்பிப்பது என்பதுதான். நண்பர்கள் யாராவது யோசனை கூறினால் அவர்களுக்கு கோயில் கட்டி கும்பிடுகிறேன் என்று உறுதி கூறுகிறேன்.