ஆடிட். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடிட். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூன், 2015

என் ஆடிட் அனுபவங்கள்

                                 Image result for audit party

பொதுவாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலகங்களிலும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று - ஆபீஸ் டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன், இரண்டு - ஆடிட்.

ஒரு அலுவலகம் அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா, அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த அலுவலக விதிமுறைகளின்படிதான் நடக்கிறதா என்பதை இந்த இரண்டு நடவடிக்கைகளாலும்தான் மேலதிகாரிகள் கணிக்கிறார்கள். ஒரு அலுவலகத்தின் முன்னேற்றத்திற்கு இந்த இரண்டும் அவசியம்.

இதில் ஆபீஸ் டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன் தொழில் நுணுக்க வல்லுநர்களால் நடத்தப்படும். அந்த அலுவலகத்தின் நோக்கம் என்ன? அதை எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறார்கள், அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் என்ன, அவைகளை எவ்வாறு களையவேண்டும் என்பதைப் பற்றி ஆக்க பூர்வமான ஆலோசனைகள் வழங்கவே ஏற்பட்டது இந்த டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன்.

ஆடிட்டின் நோக்கமே வேறு. அந்த அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்ட பணத்தை ஒழுங்காக, விதிமுறைகளின்படி செலவழித்திருக்கிறார்களா என்று சோதிப்பதுதான் ஆடிட்டர்களின் வேலை. இது பரஸ்பர அவநம்பிக்கையில் உருவான ஒரு நடைமுறை. மனிதர்கள் இடம் கொடுத்தால் கண்டிப்பாக ஏமாற்றுவார்கள் என்ற அடிப்படையில் உருவான ஒரு பழக்கம்.

அதனால் ஆடிட் என்றாலே பல அலுவலர்கள் அலறுவார்கள். காரணம் அவர்கள் அந்த அலுவலகத்தின் சட்ட திட்டங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததே. அப்படிப் புரிந்திருந்தாலும் அவர்கள் ஏதாவது தில்லு முல்லு செய்திருப்பார்கள்.

எனக்கு இந்த ஆடிட் மிகவும் பிடித்தமான ஒரு சமாச்சாரம். ஆபீசில் ஒரே மாதிரியான வேலைகளை இயந்திரத்தனமாக  தினம் தினம் செய்து போரடிக்கும்போது இந்த ஆடிட்காரர்கள் வந்தால் மூளைக்கு கொஞ்சம் வேலை கிடைக்கும். நான் இவர்களை ரொம்பவே விரும்புவேன். காரணம் இவர்கள் எல்லோருமே குறுக்குப் புத்தி உள்ளவர்கள். எங்கு தப்பு கண்டுபிடிக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

நான் இவர்களுக்கு மேல் குறுக்குப் புத்தி கொண்டவன். கொஞ்சம் கிறுக்கனும் கூட. அதாவது ஓவர் இன்டெலிஜென்ட். இன்டெலிஜென்ட் ஆட்கள் எல்லாம் எப்போதும் அரைக் கிறுக்கர்களாகத்தான் இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.. நான் ஓவர் இன்டெலிஜென்ட். அதனால் நான் முழுக் கிறுக்கனாக இருந்தேன்.(அப்பவும் இப்படித்தானா என்று சில பதிவர்கள் கேட்பது காதில் விழுகிறது. எப்பவுமே நான் அப்படித்தான். என் அந்தக் காலத்து மாணவர்களைக் கேளுங்கள். கதை கதையாகச் சொல்லுவார்கள்.) தவிர அலுவல சட்டதிட்டங்களை நன்கு புரிந்து வைத்திருப்பேன். மேலும் எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருப்பேன். தில்லு முல்லு எதுவும் செய்ய மாட்டேன். என் வேலைகளில் எப்போதும் ஒழுங்காக இருப்பேன். என் வேலையில் ஒருவர் குற்றம் கண்டு பிடிக்கும்படி விடமாட்டேன். ஆகவே ஆடிட்டர்களைக் கண்டு பயப்பட எனக்கு ஒன்றுமில்லை.

அப்போது நான் வேதியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருந்தேன். மாணவர்களுக்கு வேதியல் செயல்முறை வகுப்புகள் எடுப்பது என் வேலை. இந்த வகுப்புகளில் மாணவர்களுக்குப் பல கண்ணாடி உபகரணங்கள் தேவைப்படும். வருட ஆரம்பத்தில் அவைகளை அவர்களுக்கு கடனாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கொடுப்போம். மாணவர்கள் அவைகளை வாங்கி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கப்போர்டில் பூட்டி வைத்துக்கொள்வார்கள். வருடக் கடைசியில் அவைகளை திரும்ப வாங்கிக்கொள்வோம்.

மாணவர்கள் இந்த உபகரணங்களை உபயோகிக்கும்போது எப்படியும் சில உடைந்து விடும். அப்படி உடைந்தவைகளுக்கு அதன் விலையில் கால் பங்கு மட்டும் மாணவர்களிடமிருந்து வசூலிப்போம். இது ஒரு மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் மாணவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வரவேண்டும் என்பதற்கான ஒரு நடைமுறை.  இது காலம் காலமாக அரசுக் கல்லூரிகளில் வேதியல் சோதனைச்சாலைகளில் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு முறை. தனியார் கல்லூரிகளில் முழு விலையையும் வசூலிப்பார்கள்.

இந்த பணத்தை மாணவர்கள் கல்லூரி அலுவலகத்தில் கட்டி விட்டு, ரசீதை எங்களிடம் காட்டினால் அந்த விவரங்களைக் குறித்துக் கொண்டு, நாங்கள் நோஅப்ஷெக்ஷன் சர்டிபிகேட் கொடுப்போம். அதைக் காட்டினால்தான் அவர்களுக்கு பரீட்சை எழுத ஹால் டிக்கட் கிடைக்கும். இந்த ரசீதுகளின் அடிப்படையில் இந்த உபகரணங்களின் எண்ணிக்கையை ஸ்டாக் புக்கிலிருந்து குறைப்போம்.

இந்த நடைமுறை தவறில்லாமல் செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று ஆடிட்காரர்கள் சரி பார்ப்பார்கள். அதற்கு அவர்கள் இந்தப் பணம் வசூல் செய்யப்பட்ட பில் புஸ்தகங்களை கல்லூரி ஆபீசிலிருந்து வாங்கி, எங்கள் ஸ்டாக் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பில்லாகப் பார்த்து டிக் அடிக்கவேண்டும். 400 மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று ஐட்டங்களையாவது உடைத்திருப்பார்கள். மொத்தம் 1200 ஐட்டங்கள். இவைகளை ஒவ்வொன்றாக சரி பார்ப்பது என்பது மிகவும் சள்ளை பிடித்த வேலை.

 ஆனால் என்ன செய்ய முடியும்? ஆடிட்டர்களின் வேலை அதுதானே. ஒரு வருடம் ஒரு ஆடிட்டருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ஆடிட்டர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது எங்கள் கடமை. ஆகையால் அவர்கள் கூப்பிட்டால் போகாமலிருக்க முடியாது. நான் போனேன்.

அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால், சார்,  இந்த மாணவர்கள் உடைத்த உபகரணங்களின் கணக்கைப் பார்க்கவேண்டும். நீங்கள் ஆபீசில் போய் அந்த பில் புத்தகங்களை வாங்கி வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு பில்லாகக் காட்டினால் நான் ஸ்டாக் புக்கில் டிக் அடித்து விடுவேன், என்றார். அதாவது அவர் வேலையில் பாதியை என்னை வைத்து செய்து விடலாம் என்று நினைத்திருக்கிறார்.

நானும் கொஞ்சம் கோணல் புத்திக்காரன்தானே? அவருடைய தந்திரம் புரிந்தது. நான் சொன்னேன். நான் வாத்தியார். மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவேண்டும். அந்த வேலையை விட்டு விட்டு இந்த வேலையைச் செய்ய என்னால் வரமுடியாது என்றேன். நீங்கள் வராவிட்டால் பரவாயில்லை, உங்களுக்கு கீழ் இருக்கும் அட்டெண்டர் யாரையாவது அனுப்பினாலும் போதும் என்றார். நான் விடுவேனா? நான் வகுப்பு எடுக்கும்போது என் உதவிக்கு அவர்களும் என்னுடன் இருக்கவேண்டும். ஆகையால் அவர்களையும் அனுப்ப முடியாது என்றேன்.

இப்படி சொன்னால் எப்படி? என்றார். பிறகு வேறு எப்படி சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? ஆடிட் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. செய்ய முடிந்தால் செய்யுங்கள். முடியாவிட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி விட்டுப் போங்கள். நீங்கள் என்ன எழுதினாலும் அதற்குப் பதில் எழுத என்னால் முடியும். சர்க்கார் கொடுக்கும் பேப்பரும் பேனாவும் உங்களிடமும் இருக்கிறது. என்னிடமும் இருக்கிறது. நீங்கள் எழுதும் குறிப்புகள் பத்து வருடம் இழுவையில் இருக்கும். அதற்குள் நீங்கள் எங்கேயோ, நான் எங்கேயோ என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இந்த ஆடிட்டர்கள் எழுதும் குறிப்புகளை ஆடிட் முடிந்த பிறகு அவர்களின் மேல் அதிகாரி ஒருவருடன் நாங்களும் உட்கார்ந்து ஒரு ஜாயின்ட் சிட்டிங்க் வைப்போம். அப்போது இந்த மேட்டர் பார்வைக்கு வந்தது. மேல் அதிகாரி என்ன விவரம் என்று என்னைக் கேட்டார். நான் சொன்னேன். சார் இந்த ஆடிட்டர்கள் என்னை பில் புக்கைக் கொண்டு வந்து ஒவ்வொரு பில்லாகத் திறந்து காட்டச் சொல்லுகிறார்கள். நான் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவா அல்லது இந்த வேலையைச் செய்யவா? என்று கேட்டேன். அவர் ஆடிட்டர்களைப் பார்த்து இந்த வேலையை நீங்களே செய்யுங்கள், ஆசிரியர்களை ஏன் தொந்திரவு செய்கிறீர்கள் என்று சொல்லி விட்டார். ஆடிட்டர்களின் முகம் தொங்கிப் போயிற்று.

பிறகு என்ன நடந்ததோ எனக்குத் தெரியாது. சில நாட்களில் நான் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டு இந்த மேட்டரை முற்றிலும் மறந்து போனேன்.