அவர் சொல்ல நினைத்தது - "நானும் ஒரு நாள் பெரிய ஆபீசர் ஆக பிரபலமாகி, என் படமும் ஒரு நாள் இங்கு இதே மாதிரி தொங்கும்" என்பதே. ஆனால் இதை நல்ல ஆங்கிலத்தில் சொல்ல அவருக்குத் தெரியவில்லை. ஏன், பெரும்பாலானவர்களுக்கே கடினமான விஷயம்தான்.
அவர் என்ன சொன்னார் என்றால் - "one day I will hang like this" இதன் அர்த்தம் என்னவென்றால் "ஒரு நாள் நான் இங்கு இது மாதிரி (தூக்கில்) தொங்குவேன்".
இந்த வாக்கியமானது பல வருடங்கள் பிரபலமாக இருந்தது. இந்த வாக்கியத்தைச் சொன்னவர்தான் எங்களுக்கெல்லாம் அன்அஃபிசியல் தலைவர் அதாவது லீடர். நல்ல தைரியசாலி. இவருடைய தலைமையில்தான் நாங்கள் ஆபீசர்ஸ் கிளப்பில் பல லீலைகள் புரிந்தோம்.
இந்த ஆபீசர்ஸ் கிளப்புக்கென்று ஒரு மெஸ் உண்டு. அதற்கு ஆபீசர்ஸ் மெஸ் என்று பெயர். அதை நடத்த ஒரு கான்ட்ராக்டரிடம் ஒப்பந்தம் போட்டு அவர் நடத்தி வந்தார். நான் கல்லூரியில் படிக்கும்போது சில வகுப்புகள் காலை 6.30 மணிக்கே தொடங்கும். நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவில்லை. காரணம் வீடு பக்கத்தில் ஆர்எஸ்புரத்தில் இருந்ததால் 10 நிமிடத்தில் கல்லூரிக்கு வந்து விடலாம்.
இப்படி 6.30 மணி வகுப்பிற்கு வரும்போது வீட்டில் டிபன் ரெடியாகி இருக்காது. அதனால் இந்த ஆபீசர்ஸ் மெஸ்சில்தான் டிபன் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்குப் போவேன். நான் வழக்கமாகச் சாப்பிடுவது - இரண்டு இட்லி (ஒரு அணா), ஒரு தோசை (ஒன்றரை அணா) ஒரு காப்பி (ஒன்றரை அணா), ஆக மொத்தம் நான்கு அணா அதாவது 25 நயா பைசா.
அன்று இருந்த விலைவாசி நிலவரம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியட்டும் என்றுதான் இவ்வளவு விவரம் கொடுத்தேன். இன்று அந்த 25 பைசாவே இல்லை.
இந்த ஆபீசர்ஸ் கிளப்பின் அங்கத்தினர்கள் எல்லோருக்கும் இந்த மெஸ்சில் கணக்கு உண்டு. எது வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு கணக்கில் எழுதச் சொல்லி விட்டு வந்து விடலாம். மாதக் கடைசியில் ஒவ்வொருவரும் சாப்பிட்ட கணக்குகளை ஒன்று சேர்த்து மெஸ் பில் தயாரித்து நோட்டீஸ் போர்டில் போடுவார்கள். 10 தேதிக்குள் அங்கத்தினர்கள் பில்லைக் கட்ட வேண்டும். அவர்களில் ஒரு சிலர் கட்டாவிட்டாலும் கிளப்பிலிருந்து மெஸ் கான்ட்ராக்டருக்கு 10 ம் தேதி பணம் கொடுக்கப்பட்டு விடும்.
இந்த வழக்கம் எல்லாம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வழக்கங்கள். இங்கிலீஷ்காரன் ஆண்டு கொண்டு இருக்கும் வரையில் எல்லாம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தது. அவனைக் கப்பல் ஏற்றி அனுப்பியவுடன் அவன் கற்பித்த ஒழுங்கு முறைகளையெல்லாம் நம்மவர்கள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.
பல அங்கத்தினர்கள் இந்த மெஸ் பில்லை ஒழுங்காகக் கட்டாததினால் ஆபீசர்ஸ் கிளப் திவாலாகும் நிலமைக்கு வந்து விட்டது. கிளப் நிர்வாகத்திற்கு வேறு வழி தெரியவில்லை. ஆகவே இந்த கடனில் சாப்பிடும் முறையை ஒழித்துக் கட்டினார்கள். பழைய பாக்கிகளை முடிந்தவரை வசூல் செய்தார்கள். பலர் பாக்கிகளை ஏப்பம் விட்டு விட்டார்கள்.
இந்தக்கால கட்டத்தில்தான் நாங்கள் முதுகலைப் படிப்பு முடிந்து எல்லோரும் வேலையில் சேர்ந்திருந்தோம். எங்கள் எல்லோருக்கும் அப்போது நான்-கெஜட்டெட் ஆபீசர்ஸ் என்று பெயர். எப்படியோ நாங்களும் ஆபீசர்ஸ் ஆகிவிட்டோம். அந்த ஜபர்தஸ்தைக் காட்டவேண்டாமா? ஆகவே ஆபீசர்ஸ் கிளப்பில் மெம்பர்களானோம்.
இந்தக் கிளப்பில் பெரிய ஆபீசர்கள், சின்ன ஆபீசர்கள், எங்களைப் போன்ற கத்துக்குட்டி ஆபீசர்க்ள எல்லோரும் மெம்பர்களாக இருந்தோம். ஆபீஸில் காட்டும் பந்தா, தோரணை எல்லாம் இங்கு இல்லை. எல்லோரும் சமமாகப் பழகுவார்கள்.
கிளப்பில் சில தினப் பத்திரிக்கைகள், வார, மாதப் பத்திரிக்கைகள் வாங்கி அங்கத்தினர்கள் படிப்பதற்காகப் போட்டிருப்பார்கள். கேரம்போர்டு, டேபிள் டென்னிஸ், செஸ் ஆகிய உள்ளே விளையாடும் விளையாட்டுகளும், வெளியில் விளையாடும் டென்னிஸ் ஆகியவை உண்டு. நாங்கள் எல்லாம் புது அங்கத்தினர்களானதால் மிகவும் பவ்யமாக பேப்பர் படித்துக்கொண்டு மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம்.
முக்கியமான விளையாட்டு ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதுதான் சீட்டாட்டம். அதில் காசு வைத்துத்தான் ஆடுவார்கள். காசு இல்லாவிட்டால் அதில் சுவாரஸ்யம் ஏது? ஆனால் காசை வெளிப்படையாக டேபிளில் வைத்து விளையாடக் கூடாதல்லவா? அதனால் பல வர்ணங்களில் டோகன்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு. ரொம்ப அதிகப் பணம் வைத்து ஆடமாட்டார்கள். ஆனாலும் ஒரு நாளைக்கு ஐம்பது, நூறு என்று வரும், போகும்.
கொஞ்ச நாள் ஆனதும் நாங்களும் டேபிள் டென்னிஸ், கேரம் ஆகிய விளையாட்டுகள் விளையாட ஆரம்பித்தோம். நான் கேரத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றேன். நாங்கள் ஒரு நாலு பேர் ஒரு டீமாகச் சேர்ந்தோம். ஒரு டீம் கேரம் விளையாட ஆரம்பித்தால் அவர்க்ள ஒரு முழுமையான கேம் விளையாடி முடிக்கும் வரை அடுத்தவர்கள் கேரம் விளையாட உரிமை கோர முடியாது. அப்படி ஒரு எழுதப்படாத சட்டம் எங்கள் கிளப்பில் அமுலில் இருந்தது.
கேரம் விளையாட்டு ஆடினவர்களுக்குத் தெரியும். எந்த டீம் முதலில் 29 பாய்ன்ட் எடுக்கிறதோ அந்த டீம்தான் வென்றதாக கருதப்படும். நாங்கள் நால்வரும் மாலை ஆறு மணிக்கே போய் கேரம் போர்டைப் பிடித்துக் கொள்வோம். முதலில் ஒழுங்காக அவரவர் சாமர்த்தியத்திற்கு ஏற்ப விளையாடுவோம். ஏதாவது ஒரு டீம் 25 அல்லது 26 பாய்ன்ட் எடுத்த பிறகு அந்த டீம் அதற்குப் பிறகு வேண்டுமென்றே அடுத்த டீமுக்கு பாய்ன்ட் ஏறும்படியாக விளையாடும்.
இப்படி விளையாடி இரண்டு டீமும் தலா 28 பாய்ன்ட் எடுத்து விடும். அதற்குள் ஏறக்குறைய இரவு 8.45 மணி ஆகிவிடும். அதற்குப் பிறகுதான் கடைசி ஆட்டம். இரு டீமும் போட்டி போட்டுக் கொண்டு ஆடும். ஏதாவதொரு டீம் ஜெயிக்கும். இதற்குள் மணி 9 ஆகியிருக்கும். 9 கணிக்கு கிளப் மூடும் டைம். ஆகவே அன்று வேறு யாரும் கேரம் விளையாட முடியாது.
மறுநாளும் இப்படியே. இப்படியாக இரண்டு வருடம் நாங்கள் மட்டும்தான் கேரம் விளையாட்டை ஏகபோக உரிமையாக்கி விளையாடினோம். வேறு மெம்பர்கள் ஆட்சேபணை தெரிவித்தால் எங்கள் தலைவர் அடாவடியாகப் பேசி அவர்களை அடக்கி விடுவார். "நீங்களும் நேரத்தோடு வந்து கேரம் விளையாட்டை ஆரம்பிக்கவேண்டியதுதானே? இப்போது இவர்கள் நேரத்தோடு வந்து விளையாட்டை ஆரம்பித்து விட்டார்கள். இந்த கேம் முடியட்டும், அடுத்த கேம் நீங்கள் விளையாடலாம்" என்று பேசி அவர்களை அடக்கி விடுவார்.
நாங்கள்தான் எங்கள் டெக்னிக் பிரகாரம் ஆடி கிளப் மூடும் சமயத்தில்தான் கேமை முடிப்பதாச்சே? அப்புறம் எங்கே மற்றவர்கள் விளையாடுவது? இப்படியாக அந்த இரண்டு வருடமும் வேறு யாரும் எங்கள் கிளப்பில் கேரம் விளையாட நாங்கள் விடவில்லை.
இப்படியாக நாங்கள் அட்டுழியம் பண்ணிக்கொண்டு இருக்கும்போது இந்த சீட்டாட்டக்காரர்களுடன் ஒரு மோதல் ஏற்பட்டது. அது என்னவென்று அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.