இட்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இட்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 மார்ச், 2012

இட்லி சாப்பிடுவது எப்படி?


என்னய்யா இது? தமிழ் நாட்டுல பொறந்தவனுக்கு இட்லி கூட சாப்பிடத் தெரியாதா? இதுக்கு ஒரு பதிவான்னு கேக்கறவங்கவெல்லாம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உண்மையில் இட்லியை முழுவதுமாக அனுபவித்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம் முன்னால வாங்க.

நான் சொல்றத கவனமாக் கேட்டுக்குங்க.

மொதல்ல மாலை நேரத்தில் இட்லி மாவை ஆட்டுக்கல்லில் ஊறவைத்த அரிசியையும், உளுந்துப்பருப்பையும், கையால் ஆட்டி மண் சட்டியில் எடுத்து வைக்கவும். மறுநாள் காலையில் அதை இட்லியாக சுடவும். இட்லி சுடுவதற்கு மண் பானைதான் பயன்படுத்தவேண்டும். இந்த டெக்னிக் தெரியாதவர்கள் 80 வயதுக்கு மேல் உயிருடன் இருக்கும் பாட்டிமார்களை அணுகித் தெரிந்து கொள்ளவும்.

நல்ல முற்றின தேங்காயாக எடுத்துக்கொண்டு அதைச் சிதறி, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு, புளி, இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து ஆட்டுக்கல்லில் நன்றாக அரைக்கவும். இப்போது தேங்காய்ச் சட்னி தயார். அதில் கடுகு, உளுத்தம்பருப்பை நல்லெண்ணையில் தாளித்துக்கொட்டவும்.

ஒரு அரை லிட்டர் துவரம்பருப்பு வேகவைத்து சின்னவெங்காயம் நிறைய சேர்த்து சாம்பார் வைத்துக்கொள்ளவும்.

வீட்டில் பக்குவமாகத் தயார் செய்த இட்லிப்பொடி ஒரு 200 கிராம் எடுத்து தேவையான செக்கில் ஆட்டிய நல்லெண்ணை விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே (செக்கில் ஆட்டிய)  நல்லெண்ணை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அப்போதுதான் சுட்ட சூடான இட்லி நான்கை ஒரு தட்டில் போட்டுக்கொள்ளவும். இரண்டு இட்லியின் மேல் இரண்டிரண்டு ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றவும். அந்த இட்லிகளை பிய்த்து சட்னியில் முக்கி வாயில் போட்டு மென்று சாப்பிடவும். ருசியை அனுபவிக்கவும்.

மீதி இருக்கும் இரண்டு இட்லிகள் முங்கும் அளவிற்கு சாம்பார் ஊற்றவும். குழி பிளேட்டாயிருந்தால் உத்தமம். ஒரு ஸ்பூன் உபயோகப்படுத்தி அந்த இரண்டு இட்லியையும் சாம்பாருடன் கலக்கி சாப்பிடவும்.

இப்போது ஒரு இட்லி மிச்சம் இருக்கும். அது இட்லிப்பானையின் அடித்தட்டில் வெந்த இட்லி. அதற்கு இட்லிப்பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடவும்.

இதுதான் முதல் ரவுண்டு. குறைந்தது மூன்று ரவுண்டாவது சாப்பிட்டால்தான் இட்லி சாப்பிட்டதன் பலன் தெரியும்.