இனிய சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிய சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஜனவரி, 2016

என் ஆசிரியரைக் கண்டேன் - பாகம் 1


இந்த இரு படங்களிலும் நடுவில் இருப்பவர்தான் என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.டாக்டர் டி. டேனியல் சுந்தரராஜ் அவர்கள். அவர்களுக்கு இப்போது 96 வயதாகிறது. ஆனாலும் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தன் வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். இது தவிர கிறிஸ்தவ பஜனைக் கூட்டங்கள் நடத்துகிறார். ஏழைக்குழந்தைகளுக்கு அன்னதானமும் செய்கிறார். வயதானவர்களை வாரம் ஒரு முறை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு யோசனைகள் சொல்லுகிறார்.

மேலும் பல கிறிஸ்தவ மதபோதனைகள் அடங்கிய புத்தகங்களும் எழுதி வெளியிடுகிறார்.  இவர் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரெத் என்னும் இடம். நாசரெத் என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு புனித ஊர். அதன் நினைவாக இங்கு வந்த கிறிஸ்தவ மத போதகரான மர்கோஸ்சிஸ் என்பவர் ஒரு ஊரை 18 ம் நூற்றாண்டில் ஸ்தாபித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஆங்கிலத்தில் ஒரு சிறு குறிப்பு.

Canon Arthur Margoschis

He came to Nazareth in 1876 as a youth missionary. He has started an orphanage for children. Rev. Margoschis rendered to not only god’s ministry but also medical services and social services. His period of ministry is called the golden era of Nazareth church. He extended the back portion of the church. He started the scheme “Future provides funds”. He completed twenty five years of service in 1901 and the silver jubilee was celebrated in 1903 according to the wishes of the congregation. In 1903 the government honored him with a medal “Saviour Hindu” for his services. The Bishop of Madras made him one of the honor canons of Madras Diocese praising his devotion and knowledge. People call him “the father of Nazareth for his services to the welfare of Nazareth congregation. According to the census taken in 1901 the members were 1482 in member. He believed that this world exceed 2000 soon. So he decided a new gig church. But that plan could not be fulfilled during his time and it was executed after 20 years. His tomb is in the church premises.

அவரின் நினைவாக கட்டப்பட்ட சர்ச்.


நான் கல்லூரியில் 1953 ல் சேர்ந்த பொழுது, திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் தாவரவியல் உதவிப் பேராசிரியராக இருந்தார்கள். தவிர மாணவர் மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்கள். நீண்ட நெடிய உயரம். ஒரு பார்வையிலேயே பயத்தை உண்டு பண்ணும் பார்வை. மாணவர்களின் ஒழுக்கத்தில் மிகவும் கட்டுப்பாடானவர். அவர் வரும்போது அவர் பாதையில் நாங்கள் எதிர் செல்லாமல் மாற்றுப் பாதையில்தான் செல்வோம். அவ்வளவு பயம் கலந்த மரியாதை.

மாணவர்கள் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டால்தான் அவர்கள் பிற்காலத்தில் நல்ல குடிமகன்களாக விளங்குவார்கள் என்ற ஆழ்ந்த கொள்கையுடையவர். அது உண்மை எனப் பிற்காலத்தில்தான் எங்களுக்கு விளங்கியது. அப்படிப்பட்டவர் ஒரு காலகட்டத்தில் இளகிப் போனார். கண்டிப்பு மாறி கனிவு மேலோங்கியது.

நான் உதவி விடுதிக்காப்பாளனாக இருந்தபோது அவர் என் மேலதிகாரியாக இருந்தார். என் கடமை உணர்வையும் பதவிக்கு விசுவாசமாக இருந்ததையும் பார்த்து என் மேல் மிகுந்த அன்புடன் இருந்தார். நான் சில உதவிகள் கேட்டபோது, அவை கொஞ்சம் நடைமுறைகளுக்கு வித்தியாசமாய் இருந்த போதிலும் எனக்காக அவைகளைச் செய்தார். வேறு யாரும் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.

பிற்காலத்திலும் அவர் எந்தப் பதவியில் இருந்த போதிலும், நான் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கக்கூடிய சலுகையை அளித்திருந்தார்.
அவரைப் பின்பற்றியே நானும் என் ஆசிரியப் பணியில் கட்டுப்பாடுதான் முக்கியம் என்று வலியுறுத்தி வந்தேன்.

கடந்த இரண்டு வருடங்களாகவே அவரைச் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மனதினுள் இருந்து வந்தது. சமீபத்தில் அவருடைய மருமகனும் என்னுடைய மாணவரும், என் கூடப் பணிபுரிந்தவருமான திரு.டாக்டர். அகஸ்டின் செல்வசீலன் தன்னுடைய முகப்புத்தகத்தில் திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களுடைய போட்டோவைப் பகிர்ந்திருந்தார்.

அதைப் பார்த்தவுடன் என் எண்ணம் வலுவடைந்து திரு. அகஸ்டினிடம் கலந்து பேசி, அவரும் நாசரெத் போகும்போது என் வருகையையும் வைத்துக்கொள்ளுமாறு ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்தோம். 7-1-16 தேதி அவ்வாறு நிச்சயமானது. உடனே ஆன்லைனில் திருநெல்வேலிக்கு போகவர டிக்கட் பதிவு செய்தேன்.திட்டப்படியே பயணித்து திருநெல்வேலியில் தங்கி அங்கிருந்து  மற்றுமொரு ரயில் பிடித்து நாசரெத்திற்கு போய் சேர்ந்தேன். டாக்டர் அகஸ்டின் வேறொரு இடத்திற்குப் போய் விட்டு வருவதில் கொஞ்சம் லேட் ஆகும் என்றார். நான் அவரைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களுடைய விலாசத்தைச் சொன்னேன். ஆட்டோ டிரைவர் சரியாக அவர் வீட்டு வாசலில் கொண்டு போய் நிறுத்தினார்.

வாசலைத் திறந்தவுடனேயே திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் என் பெயரைச்சொல்லி வரவேற்றார். நான் கண் கலங்கிப்போனேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும் என்னை நினைவு வைத்திருக்கிறாரே என்ற ஆனந்தம் என் கண்ணில் நீரை வரவழைத்தது.


நான் திருநெல்வேலியில் தங்கின விடுதி

தொடரும்....

திங்கள், 19 மே, 2014

எனது பெங்களூரு விஜயம்

திரு GMB யைப் பார்க்க நான் செய்த முஸ்தீபுகளை போன பதிவில் எழுதியிருந்தேன். நான் புறப்படுவதற்கு முன் தினம் அவர் அனுப்பிய செய்தியில் என்னை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். நான் மிகவும் மகிழ்வுற்றேன். ஏனெனில் இப்போது பெங்களூரு பூதாகாரமாக வளர்ந்துள்ளது என்று கேள்விப்பட்டிருந்தேன். நண்பர் வீட்டிற்கு எப்படி போய்ச்சேரப் போகிறோம் என்ற கவலை மனதினுள் அரித்துக் கொண்டிருந்தது. அவர் அனுப்பிய செய்தியினால் அந்தக் கவலை மறைந்தது.

ஆனால் வேறு கவலைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. "தெனாலி" படத்தில் கமலஹாசன் சொல்லுவாரே அந்த மாதிரி கவலைகள்.

நான் போகும் ரயில் இரவு 1 மணிக்கு. நான் நேரத்தோடு ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். இல்லாவிட்டால் பஸ் கிடைக்காது. அப்படி நேரத்தோடு ஸ்டேஷன் போய்விட்டால், ரயில் வரும்போது தூங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை.

அப்படி ரயில் வரும்போது நான் விழித்திருந்து என் கம்பார்ட்மென்டில் ஏறின பிறகு என்னுடைய பெர்த் காலியாக இருக்குமா? அதில் யாராவது படுத்துக் கொண்டிருந்தால் அவருடன் வாக்குவாதம் செய்யவேண்டி வருமோ என்ற கவலை.

அப்படி நடக்காமல் பெர்த் கிடைத்த பிறகு ரயில் விபத்தில்லாமல் பெங்களூரு போய்ச்சேருமா என்ற கவலை.

டிடிஆர் உடனே வந்து டிக்கெட்டைச் செக் செய்யவில்லையானால் அவருக்காக விழித்துக்கொண்டிருக்கவேண்டுமே என்ற கவலை.

நடுவில் எங்காவது ரயில் கொள்ளைக்காரர்கள் வந்து என் உடமைகளைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை. என்ன உடமைகள்? இரண்டு செட் பழைய டிரஸ்கள். பணத்தை ஜட்டியில் இருக்கும் பாக்கெட்டில் பாலிதீன் கவரில் போட்டு பத்திரமாக வைத்து ஒரு சேப்டி பின் குத்திவிட்டு புறப்படுவதுதான் என் மாமூல் வழக்கம். ஆகவே பணத்தைப் பற்றி அதிகம் கவலை இல்லை.

பாத்ரூம் போனால் திரும்பி வருவதற்குள் என் பேக்கை யாராவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை.

நடுவில் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மேல் லோகம் போய் விட்டால் என் உடலை யார், எப்படி என் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்ற கவலை.

செல்போன் சார்ஜ் தீர்ந்து போனால் என்ன செய்வது என்ற கவலை.

பெங்களூர் ஸ்டேஷனுக்கு திரு GMB  வராமல் போனால் என்ன செய்வது என்ற கவலை.

இப்படிப் பலவிதமான கவலைகளுடன் ஸ்டேஷனில் தூக்கம் வராமல் உட்கார்ந்து கொண்டிருந்தபோது நான் செல்லவேண்டிய ரயில் வந்து சேர்ந்தது. என்னுடைய பெர்த் காலியாக இருந்தது. என் பேக்கையே தலையணையாக வைத்துக்கொண்டு படுத்தேன் ஏனென்றால் தூங்கும்போது பேக்கை யாரும் களவாடக் கூடாதல்லவா?

முன்பு டிடிஆர் என்று ஒரு கருப்புக்கோட்டு போட்ட ஆசாமி வந்து பயணிகளை வாதித்துக்கொண்டு இருப்பார். ஒழுங்காக டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தாலும் அவர் வந்து நம் டிக்கெட்டை செக் பண்ணிவிட்டுப் போகும் வரையிலும் ஒரு இனம் தெரியாத பயம் மனதிற்குள் இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ரயில்வே டிபார்ட்மென்டை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் அந்த அதிகாரிகளின் மனதில் வேறூன்றி இருக்கும். அது போலத்தான் நடந்துகொள்வார்கள்.

இப்போதெல்லாம் ரயில்வே டிபார்ட்மென்டுக்கு தங்கள் பயணிகள் மேல் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது போல் இருக்கிறது. நான் சென்ற ரயிலில் ஒரு டிடிஆரையும் காணவில்லை. திரும்பி வரும்போதும் அப்படியே. என்ன ஒரு நம்பிக்கை. மக்களும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் பயணித்துக்கொண்டு இருந்தார்கள்.

ரயில் வந்தவுடன் நான் என் கேரேஜை கண்டு பிடித்து ஏறி என் சீட்டைத் தேடினேன். என் சீட் லோயர் பெர்த். மாமூலாக யாராவது அதில் படுத்துக்கொண்டு இருப்பார்கள். எழுப்பி இது என்னுடைய பெர்த் என்று சொன்னால், என்னுடையது அப்பர் பெர்த், அதில் படுத்துக்கொள்ளுங்களேன் என்று புத்திமதி கூறுவார்கள். நம்முடைய உரிமையை நிலை நாட்ட ஒரு வாக்குவாதம் நிகழ்த்த வேண்டும்.

இந்த மாதிரி வாக்குவாதம் செய்து அதில் ஜெயித்து நம் பெர்த்தை நாம் அடைந்தோமானால் வாதத்தில் வெற்றி பெற்ற எண்ணம் மட்டுமே மிஞ்சும். தூக்கம் போய்விடும். அந்த மாதிரி எதுவும் நடக்காமல் என் பெர்த் காலியாக இருந்தது. எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பெர்த்தில் என்னுடைய பேக்கை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தேன். ஏனெனில் பேக்கை நான் தூங்கும்போது யாரும் திருடிக்கொண்டு போய்விடக்கூடாதல்லவா?

பிறகு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பெங்களூர் போய்ச் சேர்ந்தேன். ரயிலை விட்டு இறங்கினால் பிளாட்பாரத்தில் ஒரே திருவிழாக்கூட்டம். நண்பரை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறோம் என்ற புதுக்கவலை என்னை பிடித்துக்கொண்டது. என் நல்ல காலம் ஒரு நிமிஷத்தில் திரு.GMB  என் அருகில் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டார். இருவருமாக ஸ்டேஷனுக்கு வெளியில் வந்தோம். ஆட்டோ புக் செய்யும் இடத்திற்குச் சென்று ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டிற்கு போய் சேர்ந்தோம்.

அங்கு சென்றதிலிருந்து மாலை அவர் வீட்டை விட்டு புறப்படும் வரை நடந்தவைகளை திரு.GMB அவர்கள் தன்னுடைய பதிவில் விவரமாக எழ்தியிருக்கிறார் அதை மறுபடியும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதில் நான் ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தம்பதியினர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு என்னை உபசரித்து தங்கள் அன்பு வெள்ளத்தில் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டனர். இந்த அன்புக்கு நான் எப்படி எந்த ஜன்மத்தில் கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.


திருGMB தம்பதியினர்

பிற்பகலில் திரு GMB தம்பதியினர் என்னை தும்கூர் ரோட்டில் 15 கி. மீ. தூரத்திலுள்ள பகவத் கீதா மந்திருக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். பகவத் கீதை ஸ்லோகங்கள் முழுவதையும் நான்கு பாஷைகளில் அங்கு கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். நடுவில் விஷ்ணுவின் விஸ்வரூப சிலை ஒன்றும் இருக்கிறது. கீழ் தளத்தில் காயத்ரி தேவியின் சந்நிதி இருக்கிறது. கண்ணன் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள். நான் அங்கு எடுத்த சில போட்டோக்கள்.திரு GMB எனக்கு அன்பளிப்பாக கொடுத்த ஓவியம். இது அவரே கைப்பட வரைந்தது. 65 வயதில் தஞ்சாவூர் பெயின்டிங்க் போட தானாகவே பழகி பல படங்கள் வரைந்துள்ளார்.(அதிகாலையில் போட்டோ எடுத்த போது தூக்கக் கலக்கத்தில் காமிராவின் கைப்பிடியும் போட்டோவில் சேர்ந்துவிட்டது.)


திரு GMB அவர்கள் எழுதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.

16 சிறு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மணிமேகலைப்பிரசுரம் பிரசுரித்துள்ளது. நடைமுறை ழ்க்கையில் நாம் சந்திக்கும், சந்தித்தபின் அவைகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் போகும் நிகழ்வுகளை அருமையாக சிறுகதை வடிவில் தொகுத்திருக்கிறார். படித்த பின் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.

இந்த இரண்டு அன்பளிப்புகளும் ஆத்மார்த்தமாக கொடுக்கப்பட்டவை. அவைகளை பெரும் பொக்கிஷமாக கருதி பாதுகாப்பேன். என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

மாலையில் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்படும்போது திருமதி GMB  தன் கையால் செய்த இனிப்புகள் கொண்ட ஒரு டப்பாவை என்னிடம் கொடுத்தார்கள். கோவை வந்தவுடன் அதைத் திறந்து பார்த்தேன். அருமையான பொரிவிளங்காய் உருண்டைகள். பாதிக்கு மேல் நானே சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தன. சர்க்கரை, நெய்யுடன் அன்பும் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பல்லவா அவை.

ஒரு இனிய நண்பருடன் ஒரு நாள் கழித்த நினைவுகள் என்றும் என் மனதில் பசுமையாகத் தங்கியிருக்கும்.