இன்ப வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்ப வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 டிசம்பர், 2017

29. பிட் காயின் வேண்டுபவர்கள் அணுகவும்.


பிட் காயினைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லையென்று நம்புகிறேன். இனி உலக முழுவதும் பிட் காயின்தான் புழக்கத்திற்கு வரப்போகிறது.

இதன் விலை 2017 ம் ஆண்டு துவக்கத்தில் 1000 டாலராக இருந்தது இப்போது 15000 டாலராக இருக்கிறது. என்ன ஒரு வளர்ச்சி பார்த்தீர்களா? 2016 ம் ஆண்டில் ஒரு 100 பிட் காயின் வாங்கிப் போட்டிருந்தால் இன்று நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்.

இந்த விவகாரத்தில் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த பிட்காயின் எங்கே கிடைக்கும் என்பதுதான். இப்படி மக்கள் வகை தெரியாமல் திண்டாடுகிறார்களே என்று நான் இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

ரகசியமாக விசாரித்ததில் இந்த பிட் காயினை ஒரே ஒருவர்தான் தயாரிக்கிறார் என்பதுவும் அவர் வட துருவத்தில் யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் தன் கம்ப்யூட்டருடன் வசிக்கிறார் என்பதுவும் தெரிய வந்தது. அவருக்கு பல இடங்களில் ரகசிய ஏஜண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் தெரிய வந்தது.

இதில் ஒருவர் எனக்கு தற்செயலாக அறிமுகம் ஆனார். அவர் எனக்கு எவ்வளவு பிட்காயின் வேண்டுமானாலும் வாங்கிக்கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார். இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் விலை 10 லட்சம் ரூபாய். தேவைப் படுபவர்கள் எவ்வளவு பிட்காயின் வேண்டுமோ அவ்வளவிற்கான தொகையை என்னுடைய ஸ்டேட் பேங்க் கணக்கில் கட்டிவிட்டு அந்த விபரத்தை எனக்குச் சொன்னால் அவர்களுக்கு இந்த பிட் காயின்கள் அனுப்பி வைக்க முடியும். 

பிட்காயின்களை நேரில் பார்க்கமுடியாது. அவைகள் உங்களுக்கு ஒரு கணக்கு ஆரம்பித்து அந்தக்கணக்கில் இந்த பிட்காயின்களை சேர்த்து விடுவோம். இந்தக்கணக்கு விபரங்கள் எங்கள் கம்பயூட்டரில் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். இதன் விலை ஏற ஏற உங்கள் பிட்காயின்களின் மதிப்பும் ஏறிக்கொண்டே போகும். இந்த பிட்காயின்களின் மதிப்பை எண்ணிக்கொண்டே நீங்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கலாம்.

இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த பிட்காயின் என்னும் கோபுரம் சீட்டுக்கட்டு கோபுரம் மாதிரி சரிந்து விடும். ஆனால் எங்களிடம் வாங்கிய பிட்காயின்கள் அப்படியே இருக்கும். அதில் எந்த வித மாற்றமும் ஏற்படாது. அப்போது தங்கள் பிட்காயினுக்கு பணம் வேண்டுபவர்கள் அன்றைய மதிப்பு எவ்வளவோ அந்த நிலவரத்திற்கு பணம் பெற்றுக்கொள்ளலாம். (எங்களுடைய கணிப்பு - அன்றைய தேதியில் ஒரு பிட்காயின் ஏறக்குறைய நூறு ரூபாய் இருக்கும்)

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையோடு எங்களிடம் பிட்காயின் வாங்கி பயனடையுங்கள்.

வாழ்க பிட்காயின். வாழ்க இவ்வைகயம்.

புதன், 17 மே, 2017

5. நதிமூலம்-5

Image result for அவதாரங்கள்

உலகம் உய்வதற்காக பல அவதார  புருஷர்கள் நம் நாட்டில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல. தற்கால சமூகத்தை புணருத்தாரணம் செய்ய அவதரித்துள்ள அவதார புருஷர்கள் இன்றைய இன்டர்நெட் வலைத்தளங்களில்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சேவையை நீங்களே அனுபவித்தால்தான் அதனுடைய பூரண இனபத்தைப்பெற முடியும். இருந்தாலும் என்னால் முடிந்த வரையில் விவரிக்கிறேன்.

மனிதனுக்கு எப்போதும் அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் அலாதி ஆனந்தம். இந்த வலைத் தளங்கள் இந்த ஆசையை பூரணமாக நிறைவேற்றுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்கிறேன்.

‘’நான் இன்று காலையில் எழுந்தேன். பல் விளக்கினேன். காபி குடித்தேன். நாயைக்குளிப்பாட்டினேன். நானும் குளித்தேன். டிபன் சாப்பிட்டேன். என் சமையல் அறையில் கரப்பான் பூச்சி வந்தது. கம்ப்யூட்டரில் இதை எழுதினேன். ........ இப்படியே இரவு தூங்கப்போவது வரை விலாவாரியாக விவரித்து விட்டு, பிறகு தூங்குவார்கள் (என்று நினைக்கிறேன்)’’

நல்ல வேளை அதற்குப்பிறகு நடப்பவற்றை தற்சமயம் விவரிப்பதில்லை. அதைப்பற்றியும் விவரிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லது அப்படி எழுதியவை என் கண்ணில் படாது போயிருக்கலாம். 

ஆஹா தேச சேவை செய்ய இப்படியும் ஒரு வழி இருக்கிறதா, இத்தனை நாள் நமக்கு தெரியாமல் போய்விட்டதே, நம் ஓய்வு நாளை பயனுள்ளதாய் கழித்து போகுமிடத்திற்கு புண்ணியம் தேடிக்கொள்வோம் என்று முடிவு செய்து இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன்.

எவ்வளவு நாள் நடக்கும், எத்தனை பேர் இதைப்பார்ப்பார்கள் என்றெல்லாம் எனக்கு யோசனை இல்லை. எப்படியோ, பொழுது போவதற்கு ஒரு வழி பிறந்தது. மேலும் என் மாமனார் வீட்டார் நான் பஞ்சமா பாதகத்திலிருந்து மீண்டு விட்டேன்      (அதாவது சீட்டு விளையாடுவதிலிருந்து) என்ற சந்தோஷமும் அடையவும் இந்த வேலை காரணமாய் அமைந்தது. ஆகவே எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன். இது சந்தோஷத்தை கொடுக்குமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

இதுதான் இந்த வலைத்தளத்தின் நதிமூலம்..............தொடரும்..

Image result for அவதாரங்கள்

புதன், 4 ஜனவரி, 2012

2012 ம் வருடத்தில் இன்பமாக இருக்கப் போகிறேன்.



மனித மனம் எப்போதும் இன்பத்தையே விரும்புகிறது. துக்கத்தை வெறுக்கிறது. இது இயற்கை. ஆனாலும் இன்பம் துன்பம் இரண்டமே கலந்துதான் வாழ்க்கை அமைகின்றது. இதில் துன்பத்தை விலக்கி இன்பத்தை மட்டுமே அனுபவிப்பது என்று எனது பதிவுலக வாழ்க்கையில் அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

யாரோ ஒருவன் சொன்னானாம். “என் உயிரே போவதாக இருந்தாலும் சரி, நான் இந்த சுகத்தை பூரணமாக அனுபவிக்கப்போகிறேன்.”

நான் அப்படியெல்லாம் உயிரை விடுவதாக இல்லை. ஆனாலும் உயிரை விடாமலேயே இன்பமாக இருக்க பல வழிகள் இருக்கும்போது எதற்காக வீணாக உயிரை விடுவானேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்கிற பரந்த மனப்பான்மையின் காரணமாக அந்த வழிகளை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்.  

   1.   வம்பு பேசுதல்.

இரண்டு நண்பர்கள் பேசினால் அவர்கள் பேசுவது மூன்றாவது நண்பனைப்பற்றித்தான் என்று ஒரு பொன்மொழி உண்டு. காரணம் இந்த மாதிரி வம்பு பேசுதில் உள்ள இன்பம் வேறு எதைப் பற்றி பேசுவதிலும் இல்லை. அந்த மூன்றாவது நண்பன் உண்மையான நண்பனாக இருந்தால், மற்ற இருவரும் அவனைப்பற்றி பேசி இன்புற்றார்கள் என்று தெரிந்தால் மிகவும் சந்தோஷப்படவேண்டும்.

இந்தக் காரணத்தினால்தான் நண்பர்கள் எங்காவது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் அங்கு தவறாது ஆஜர் ஆகி விடவேண்டும். இல்லையென்றால் அன்றைய தாளிப்புக்கு நீங்கள்தான் கருவேப்பிலை.

   2.   அடுத்தவர் சண்டையை வேடிக்கை பார்த்தல்.

இதில் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. வெறும் இன்பம் மட்டுமே. அதிலும் நிஜ உலகத்தில் நடப்பவைகளை விட பதிவுலகத்தில் நடக்கும் சண்டைகளே அதிக சுவாரஸ்யமும் பரபரப்பும் உள்ளவை. நமக்கு எந்த விதமான ரிஸ்க்கும் கிடையாது. இதில் ஒரே வருத்தம் என்னவென்றால் தற்சமயம் பழைய மாதிரி சண்டைகள் அடிக்கடி நடப்பதில்லை. முற்போக்கு பதிவர்கள் இந்த நிலையை மாற்ற முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.

   3.   டெம்ப்ளேட்/எமோடிகான் பின்னூட்டங்கள் போடுதல்.

ஆஹா, இதில் இருக்கும் த்ரில் + இன்பம் வேறு எதிலும் கிடையாது. இந்த கமென்ட்டுகளைப் பார்க்கும் பதிவர்கள் உடனே கயிற்றை எடுத்துக்கொண்டு புளியமரத்தை தேடிக்கொண்டு ஓடவேண்டும்.

   4.   மொக்கைப் பதிவுகள் போடுதல்.

அந்தப் பதிவுகளைப் படிக்கும் வாசகர் அதன் பிறகு பதிவுலகையை திரும்பிப் பார்க்கக் கூடாது. எவ்வளவுக் கெவ்வளவு மொக்கை போடுகிறாரோ அந்த அளவு அவர் பிரபலமாவார். அதனால் வரக்கூடிய இன்பமே இன்பம். (அடுத்த பதிவர் சங்கமத்தில் அதிக மொக்கை போட்டவர்களுக்கு ஒரு விருது கொடுக்குமாறு அமைப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் மொக்கைகள் அதிகரிக்கும்). அப்படி கொடுக்காவிட்டால் மொக்கைப் பதிவர்கள் சங்கமம் என்று தனியாக ஆரம்பிக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

   5.   பதிவர்கள் சந்திப்பு.

இவை நடந்தால் எல்லோருக்கும் ஆனந்தமே. கலந்து கொண்டால் நல்ல விருந்து சாப்பிடலாம். கலந்து கொண்டாலும்  கொள்ளாவிட்டாலும் நாலைந்து பதிவுகளுக்கு மேட்டர் தேத்தி விடலாம். என்ன ஒரு இன்பமான நிகழ்வு. வம்பு பேசுவதற்கும் நல்ல, நல்ல ஆட்களின் அறிமுகம் கிடைக்கும். ஏன் ஈரோட்டிலும் நெல்லையிலும் மட்டும் இந்த சந்திப்பு நடக்கவேண்டும். மற்ற ஊர்க்காரர்களுக்கு மானம் ரோஷம் இல்லையா? மற்ற இடங்களிலும் நடந்தால் அப்புறம் பதிவர்களுக்கு எழுத விஷயத் தட்டுப்பாடே இருக்காது. இதுதான் டாப் இன்பமான சமாசாரம்.

   6.   ஓசியில் சினிமா பார்த்தல்.

பிரிவியூ ஷோவிற்கு அழைப்பிதழ் கிடைத்து பஜ்ஜி காப்பியுடன் சினிமா பார்க்கும் இன்பமே இன்பம். என்ன ஒரே பின்விளைவு என்றால் அதைப் பற்றி உயர்வாக ஒரு விமர்சனம் நம் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு எழுதி பதிவில் போடவேண்டும்.

2013 ம் வருடத்திற்கான இன்பமாக இருப்பது பற்றிய வழிகள் அடுத்த வருடப் பிறப்பு அன்று பதிவிடப்படும்.