இயற்கை விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 அக்டோபர், 2012

இயற்கை விவசாயம் - கூடுதலாக சில சிந்தனைகள்


இயற்கை வழி விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் சுகாதாரமானவை. மனிதன் ஆரோக்யமாக வாழ்வதற்கு நல்ல, சுகாதாரமான, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இல்லாதிருப்பது அவசியம். இயற்கை வழி விவசாயம் செய்தால் அத்தகைய உணவுப் பொருட்கள் நமக்கு கிடைக்கும். தவிர, சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை. நிலவளம் பாதுகாக்கப்படுகிறது.

ஏனெனில் இந்த முறை விவசாயத்தில் இயற்கைக்கு எதிராக எதுவும் செய்யப்படுவதில்லை. இயற்கை உரங்கள், இயற்கை வித்துக்கள், இயற்கையில் கிடைக்கும் பூச்சி மருந்துகள் இவைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்படி விவசாயம் செய்யப்படும்போது நில வளம் பாதுகாக்கப்படுகிறது. சத்துள்ள, சுகாதாரமான உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இத்தகைய உணவைச் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

இத்தகைய விவசாயத்தை நிச்சயமாக செயல்படுத்த முடியும். அதற்கான மனநிலைதான் வேண்டும். இந்த முறை விவசாயத்தில் பல விதமான பயிர்கள் விளைவிக்கப்படுவதால் நில வளம் பாதிக்கப்படுவதில்லை. பலர் இத்தகைய பண்ணைகளை வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பண்ணைகளைப் பராமரிப்பதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது தவிர, அந்தப் பண்ணைதாரர்களுக்கு இது ஒரு பெருமையும் சேர்க்கும். அவர்கள் லாப நஷ்டம் பார்ப்பதில்லை. அல்லது அவர்கள் கணக்குகள் லாபம் காட்டக்கூடும்.

மனித மனம் விசித்திரமானது. தான் கொண்ட நம்பிக்கைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கேட்காது. அதனால் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும். நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேர் செய்வது தவறு என்று சொல்லும். தான் சொல்வது பிரச்சினை மிகுந்தது என்றாலும், நம்பிக்கை இழக்காமல் சொன்னதையே செயல்படுத்துக்கொண்டு இருக்கும்.

இதற்கு இயற்கை விவசாயமும் விலக்கல்ல. இயற்கை விவசாயம் நல்லதுதான். ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே பத்து சதம் விவசாயிகள் கூட இயற்கை விவசாயம் செய்வதில்லை. அதன் நன்மைகள் தெரிந்தும் கூட அவர்களால் இயற்கை விவசாயம் செய்ய முடியவில்லை.

ஏன்? இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய இயற்கை உரங்கள் போதுமான அளவு இல்லை. இந்தியாவில் மொத்தமாக என்ன நடக்கிறது என்று நேரில் போய் பார்க்க முடியாது. நாம் அறிந்ததை வைத்து அறியாததை யூகிக்க முயல்கிறோம். அதுதான் நடைமுறையில் செய்யக்கூடியது. எனக்குத் தெரிந்த ஒரு யதார்த்தம், எல்லா மாநிலங்களிலும் விவசாயத்திற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன், கால்நடைகளை வைத்துத்தான் நிலங்களை உழுது பண்படுத்தினார்கள். விவசாயப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று அந்த வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. கால்நடைகளின் பராமரிப்பு செலவு அதிகரித்து விட்டது. தீவனப் பயிர்களுக்குப் பதில் வேறு பயிர்கள் பயிரிட்டால் கூடுதல் வருமானம் வருகின்றது. தற்போது பயிரிடப்படும் பெரும்பாலான பயிர்களில் தானியம் மட்டும்தான் கிடைக்கிறதே தவிர, கால்நடைகளுக்கான தீவனம் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களினால் விவசாயிகள் பால் மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு எருதுகளை எல்லாம் விற்று விட்டார்கள்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் துடியலூர் சந்தைகளில் முன்பு கால்நடைகள் அதிக அளவில் விற்கவும் வாங்கவும் செய்வார்கள். இப்போது இந்த கால்நடைகளின் வியாபாரம் மிகவும் குறைந்து விட்டது. காரணம் விவசாயப் பண்ணைகளில் கால் நடைகள் இல்லை. நான் படிக்கும்போது விவசாயக் கல்லூரியில் எருதுகளும் பசுக்களுமாக 200 உருப்படிகள் இருந்தன. தற்போது 20 உருப்படிகள் கூட இல்லை. காங்கயம் பட்டக்காரர் ஆயிரக்கணக்கான எருதுகளும் மாடுகளும் வளர்த்துக்கொண்டு இருந்தார். இப்போது அவரிடம் பெயரளவிற்குத்தான் கால் நடைகள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த நிலைதான் இருக்கிறது. ஆகவே இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய தொழு உரம் மிகவும் அரிதாகி விட்டது. அடுத்ததாக இலைதழைகள். முன்பு இருந்த அளவு மரங்களும் காடுகளும் இப்போது இல்லை. இரண்டாவது, கிடைக்கும் இலை தழைகளை நிலத்திற்கு கொண்டு சேர்க்க அதிக செலவு ஆகிறது. இந்த செலவு விவசாயத்திற்கு கட்டுபடியாவதில்லை.

மனிதக்கழிவுகளைச் சேகரிக்கும் முறைகள் மாறிவிட்டன. முன்பு நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளையும், மனிதக் கழிவுகளையும் சேர்த்து கம்போஸ்ட் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நகரத்தைச் சுற்றிலுமுள்ள விவசாயிகள் தானியமல்லாத மற்றப் பயிர்களுக்கு அதைப் பயன்படுத்தினார்கள். ( நம்பள்கி அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருந்தார். சைனாவில் நெற்பயிருக்கு இதுதான் முக்கிய உரம். அங்கு இந்த மனிதக் கழிவுகளை அருவருப்புடன் பார்ப்பதில்லை).

தற்போது அதிகரித்து வரும் கோழிப் பண்ணைகள் கொஞ்சம் இயற்கை எருக்களைக் கொடுக்கின்றன. ஆனால் இந்தக் கோழி உரம் விலை அதிகமாகின்றது.

இயற்கை உரங்களின் விலையும் அதிகம். கிடைக்கும் அளவும் குறைவு. இது இயற்கை விவசாயத்திற்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை விவசாயப் பண்ணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பண்ணைகளிலிருந்து கிடைக்கும் பொருள்களை அதிக விலைக்கு விற்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் இந்த இயற்கை விவசாயம் கட்டுப்படியாகும்.

இந்த இயற்கைப் பொருள்களின் நன்மையை உணர்ந்து அதிக விலை கொடுத்து வாங்குமளவிற்கு நம் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. இந்த சாதக பாதகங்களை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இயற்கை விவசாயம் வளர வேண்டும்.

மக்கள் நாட்டில் நிலவும் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகாயத்தில் கோட்டை கட்டுவோம் என்று வீராப்பு பேசுவதில் பயனில்லை.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி



நேற்றைய தினத்தந்தியில் வந்த செய்தி. இந்தியாவில் இயற்கை விளை பொருட்கள் விற்பனை ரூ. 1000 கோடியாக உயர்வு. மேலும் விபரங்கள்.

தனியார் துறையைச் சேர்ந்த “யெஸ் பேங்க்” அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இவ்வங்கியின் “இந்திய இயற்கை உணவுப் பொருள்கள் சந்தை” என்ற ஆய்வறிக்கையில் நம் நாட்டில் இயற்கையான முறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் தயாரிப்புகள் பெருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டில் இச்சந்தை 22 சதம் சராசரி வளர்ச்சி கண்டு வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல அறிகுறி. மக்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதற்கு இந்த செய்தி நல்ல ஆதாரம். என்னென்ன பயிர்களில் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதென்றால், தேயிலை, பாசுமதி அரிசி, பருப்பு, பருத்தி, நறுமணப்பொருள்கள், எண்ணை வித்துக்கள் ஆகிய பயிர்களில் ஏற்றுமதி ஆகும் பொருள்கள் இந்த விழிப்புணர்வின் கீழ் வருகின்றன.

ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்பது தெரியும். அது மட்டுமல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்கள் என்றால் நிச்சயம் கூடுதல் விலை கிடைக்கும். இந்த ஊக்கத்தினால்தான் இந்தப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

எப்படியோ, விவசாயிகளுக்குப் பயன் கிடைத்தால் மகிழ்ச்சியே. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு நேரடியாக இந்த விற்பனை அதிகரிப்பால் பயன் ஏதும் இல்லை. நாம் வழக்கம்போல் செயற்கை விவசாயத்தில் விளைந்த நச்சு கலந்த உணவைச் சாப்பிடுவோம்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

இயற்கை உரம் எங்கிருந்து கிடைக்கும்?


இயற்கை விவசாயத்தைப் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வு இன்று நம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறது. நல்ல மாற்றம். அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள்  ஆவார்கள். நான் தேசத்துரோகியாக விரும்பவில்லை. முன்பு இருந்தேன். இப்போது மாறி விட்டேன்

தேசத் துரோகிகளுக்கு அவர்கள் முக்தியடைந்த பிறகு நரகப் பிராப்திதான் கிடைக்கும். அங்கு அவர்களை கொதிக்கும் எண்ணைக் கொப்பறைகளில் குளிப்பாட்டிய பின் செயற்கை விவசாயத்தில், செயற்கை உரங்களும், செயற்கைப் பூச்சி மருந்துகளும் அடித்து வளர்க்கப்பட்ட பயிர்களின் மகசூல்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளே கொடுக்கப்படும்.

இயற்கை விவசாயத்தை ஆதரித்தவர்களை எல்லாம், நேராக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரித்த உணவுகள் வழங்கப்படுவார்கள்.

நரகத்தில் இருக்கும் முன்னாள் விவசாய மந்திரி திரு.சி. சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட தகவல் இது. அவர்தான் செயற்கை விவசாயத்தை இந்தியாவில் புகுத்தியவர். அவருடைய சகா ஒருவர் இன்னும் இருக்கிறார். அவரும் சுப்பிரமணியம் போன இடத்திற்குத்தான் போவார் என்பது உறுதி.


இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சம் "இயற்கை உரங்களை மட்டும்" உபயோகப்படுத்துவது. மற்ற அம்சங்களைப் பிறகு பார்க்கலாம்.

இயற்கை உரங்கள் எங்கிருந்து கிடைக்கும்?

1. மிருகங்களின் கழிவுகள்.
2. மனிதனின் கழிவுகள்
3. பசுந்தாள் உரப்பயிர்கள்
4. மரங்கள் செடிகளில் இருக்கும் இலை, தழைகள்
5. நுண்ணுயிர் உரங்கள்
6. குளங்கள், ஏரிகளில் இருக்கும் வண்டல் மண்

பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் 1960 வரை, மேற்கண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். அப்போது மக்கள் எவ்வளவு ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

(தேசத்துரோகிகள் சொல்வதை நம்பாதீர்கள் - அப்போது இந்தியனின் சராசரி ஆயுட் காலம் 45 வருடம் என்றும் இப்போது இந்தியனின் சராசரி வயது 65 என்றும் சொல்வார்கள். தவிர, அப்போது இந்தியாவில் பல பஞ்சங்கள் தலைவிரித்தாடின, ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்றும் சொல்வார்கள். எல்லாம் வயித்தெரிச்சலில் சொல்வது.அவர்கள் எல்லாம் கட்டாயம் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம்).

இந்த இயற்கை உரங்கள் இந்தியாவில் மிகுந்து கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் அறியாமையினாலும் விஞ்ஞானிகளின் துர்ப்போதனையினாலும் இந்த உரங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றன. தவிர, கால்நடைகளை வளர்ப்பதற்குச் சோம்பல்பட்டு அவைகளை மாமிசத்திற்காக அனுப்புகிறார்கள். மனிதக்கழிவுகளை சேகரித்துப் பயன்படுத்துவதில்லை. விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்தியாவில் இயற்கை விவசாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். இதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார். இந்தப் போராட்டம் அடுத்த சுதந்திர தினத்தன்று டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கும். அனைவரும் தயாராக இருங்கள். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல விசா கொடுப்பதற்காக சித்திரகுப்தன் ஸ்பெஷல் அலுவலகம் திறக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்.

தேசப் பற்றுள்ளோரே, இயற்கை விவசாயத்தை ஆதரிப்பீர்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாயம் ஏன் சாத்தியமில்லை?

என்னுடைய  இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம் என்ற பதிவிற்கு நான் எதிர்பார்க்காத அளவிற்கு பார்வையாளர்களும் பின்னூட்டங்களும் வந்துள்ளன. சில பின்னூட்டங்கள் பதிவுலகைப் பற்றிய என் கருத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றன. இதில் எனக்கு வருத்தமேயில்லை. மாறாக சந்தோஷமே. ஏனென்றால் நாட்டுப் பிரச்சினைகளில் மக்கள் இவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே.

என்னுடைய மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் திரு வே.சுப்பிரமணியன் அவர்கள். அவருடைய பின்னூட்டத்தை இங்கு கொடுத்து அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் (சிகப்பு வர்ணம்) தனித் தனியாக பதில் கொடுக்கிறேன்.


//நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து.//

அப்படியெனில் நடைமுறைக்கு ஒத்து வருவது எது என்று தாங்கள் தெரியப்படுத்தவில்லையே..

இன்று நடைமுறையில் பெரும்பாலானோர் விவசாயத்தில் செயற்கை உரங்களையும் பூச்சிகொல்லி மருந்துகளையும் பயன்படுத்திதான் மகசூல் எடுக்கிறார்கள். இதனால் மண்ணின் தன்மை மாறுபட்டு நிலம் கெட்டுக்கொண்டு வருகின்றது என்பது உண்மை. அதற்கு மாற்றாகத்தான் இயற்கை வழி விவசாயம் செய்வோம் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயற்கை விவசாயத்தில் ரசாயன உரங்களும் ரசாயன பூச்சி மருந்துகளும் உபயோகப் படுத்த மாட்டார்கள். இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவார்கள்.இந்தியாவிலுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் இயற்கை உரம் மட்டும் போடுவதென்றால் அவ்வளவு உரம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை. ஏறக்குறைய "அன்னா ஹஸாரே" ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்திட்டம் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இந்த இரண்டு திட்டங்களையும் எதிர்ப்பவர்களுக்கு வெகு சுலபமாக "தேசத்துரோகிகள்" அல்லது "இயற்கை விரோதிகள்" என்ற பட்டத்தை சூட்டி விட முடியும். ஏனென்றால் நாம் உணர்ச்சிகளினால் ஆட்டுவிக்கப்படுகிறோமே தவிர, சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பது கிடையாது. லஞ்சத்தை ஒழிப்பது பற்றிய விவாதம் இங்கு வேண்டாம்.

இயற்கை விவசாயத்திற்கு வருவோம். 1970 களில் பசுமைப் புரட்சி வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். அதன் முக்கிய அம்சமே ரசாயன எருக்கள் உபயோகப்படுத்துவதுதான். அப்படி உபயோகித்துதான் பசுமைப் புரட்சி வெற்றி பெற்றது. இன்றும் இந்திய விவசாயம் இந்த செயற்கை உரங்களை நம்பித்தான் இருக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைப் பாருங்கள்.

உரங்களின் உபயோகம் கடந்த 60 வருடங்களில் எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்று பாருங்கள். அப்படி உரங்களை உபயோகித்ததால்தான் இன்று நாம் எல்லோரும் பட்டினியில்லாமல் இருக்கிறோம். சுதந்திரத்திற்கு முன் நாம் 30 கோடியாக இருந்தபோது பஞ்சங்கள் வந்தது என் போன்றவர்களுக்குத் தெரியும். இன்று 120 கோடியாக ஜனத்தொகை உயர்ந்த போதும் பஞ்சம் என்பது என்னவென்றே இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது.

இந்த நிலை எப்படி சாத்தியமாயிற்று என்று விவசாய வல்லுனர் யாரையாவது நேரில் சந்தித்தால் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.



இந்தப் படத்தை நன்கு பார்த்து புரிந்து கொள்ளுங்கள். பயிரிடும் பரப்பு குறைந்த போதிலும் உணவு உற்பத்தி அதிகமாகியிருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று? உரங்களின் உபயோகத்தினால்தான்.

இப்படி ரசாயன உர உபயோகத்தினால்தான் மனிதனுக்கு வியாதிகள் வருகின்றன, நிலவளம் கெட்டு விட்டது, இப்படியான கதைகளை இயற்கை விவசாய விஞ்ஞானிகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இயற்கை விவசாயத்தை அனுசரித்து இன்றுள்ள இந்திய ஜனத்தொகைக்கு அவர்களால் உணவு கொடுக்க முடியுமென்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

தவிர, சுற்றுச்சூழல் பாதிப்பு இந்த விவசாயத்துறையில் மட்டுமா இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், எது இன்று மாசில்லாமல் கிடைக்கிறது? அதைப் பற்றி நாம் கவலைப்பட்டு ஆகப்போவதென்ன? உலகத்தை 100 வருடங்களுக்கு முன்னால் கொண்டு போக யாரால் முடியும்?

//இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை. நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.//

பதிவுலகை தாண்டிய உலகம்தான் நிஜம் என்றும், பதிவுலகம் பொய்யென்றும் தாங்கள் கூறுகிறீர்கள். அப்படியெனில் பொய்யான இந்த பதிவுலகில், ஏன் ஆரோக்கியமான விஷயத்தை பதிவிட்டு வீணடித்தீர்கள்? பதிவுலகம் பொய்யான உலகமாக தெரியவில்லையே அய்யா. அப்படி பொய்யானதாக இல்லாததால்தான் இந்த பதிவையே நீங்கள் இட்டுள்ளீர்கள்.

தங்கள் கூற்றுப்படி, பதிவுலகில் விவாதம் பயனில்லையென்றால்.. அதே பதிவுலகில் இட்ட இந்த பதிவும் பயனில்லாத ஒன்றாகத்தானே இருக்கும்.


பதிவுலகத்தில் நான் வலம் வருவது என்னுடைய சுயநலனுக்காக மட்டுமே. என்னுடைய மூளை துருப்பிடிக்காமல் இருப்பதற்காக இந்தக் கம்பயூட்டரையும் பதிவுலகத்தையும் பயன்படுத்துகிறேன்.மற்றபடி இதில் எனக்கு வேறு ஒரு உபயோகமும் எதிர்பார்ப்பும் இல்லை.

பொய்யான பதிவுலகத்தில் ஏன் ஆரோக்யமான விஷயத்தைப் பதிவிட்டு வீணடித்தீர்கள் என்று கேட்கிறீர்களே, அது என் தனிப்பட்ட விருப்பம். உங்கள் அப்பன் வீட்டு சொத்தை ஒன்றும் நான் வீணடிக்கவில்லையே. இந்தப் பதிவுகளைப் படிப்பதும் படிக்காததும் அவரவர்கள் விருப்பமே.

பதிவுலகில் விவாதங்களினால் பயன் இல்லை என்று நான் சொன்னது இயற்கை விவசாயம் பற்றி மட்டும்தான். மொத்தப்  பதிவுகளினால் பயனில்லை என்று ஏன் பொருள் கொள்கிறீர்கள்?

ஏதாவது எனக்கு மனதிற்குப் பிடித்த விஷயங்களை என்னுடைய ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேனே தவிர, என்னுடைய பதிவுகளைப் படித்து இந்த உலகில் புரட்சி வெடிக்கும் என்கிற எண்ணம் எல்லாம் கிடையாது.  ஏதாவது பதிவர் எதைப் பற்றியாவது எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டால், எனக்கு மனது இருந்தால் அதைப்பற்றி எழுதுவேன். அவ்வளவுதான்.  ஏன் அதைப் பற்றி எழுதுகிறீர்கள், ஏன் இதைப்பற்றி எழுதவில்லை என்று யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். பொது அரங்கில் கேள்வி கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் " இதையெல்லாம் எழுதி நீ என்ன சாதித்தாய் (கிழித்தாய்)?" என்று வரும் கேள்விகள் அநாகரிகமானவை. அப்படிப்பட்ட கேள்விகளை நிராகரிக்கும் உரிமை எனக்குண்டு. அல்லது அதே பாணியில் பதிலளிக்கும் உரிமையும் எனக்குண்டு.

நாகரிகமான, நக்கல் கிண்டல் இல்லாமல் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அதை கண்டிப்பாய் நிறைவேற்றுவேன். நகைச்சுவையை அவை ஆபாசமாக இல்லாதவரை நான் வரவேற்கிறேன். "எதை நீங்கள் ஆபாசம் என்று கருதுகிறீர்கள்" என்று நீங்கள் கேட்கலாம். அது என்னுடைய அபிப்பிராயத்திற்கு உட்பட்டது.

பதிவுலகம் முகமூடிகளால் நிரம்பியிருக்கிறது. அப்படிப்பட்ட மாயாஜால உலகில் எந்த விவாதமும் பயனளிக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். அந்தக் கருத்துகளுக்கு யார் பொறுப்பேற்று நடைமுறைப் படுத்தப் போகிறார்கள்? அதனால்தான் பதிவுலகில் செய்யப்படும் விவாதங்கள் ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதையாகத்தான் முடியும்

பதிவுலகத்தில் வரும் பதிவுகளினால் நிஜ உலகில் ஏற்பட்டிருக்கும் ஏதாவது மாற்றங்களைச் சொல்லுங்கள். நான் என் கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். 

என்னைப்பொறுத்தவரை, பதிவுலகில் இட்டுள்ள இந்த பதிவும் பயனுள்ள ஒன்றாகத்தான் பார்க்கிறேன். மேலும் அதை ஒட்டிய பதிவுலக விவாதங்களும் பயனுள்ள ஒன்றாகத்தான் இருக்கும்.


ஏதோ ஒரு சிலர் ஒரு பதிவைப் படிப்பதற்கும் உருப்படியான சமுதாய மாற்றம் ஏற்படுவதற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது, நண்பரே. அப்படி ஏற்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமே.

நன்றி அய்யா!

சில சுட்டிகள் கொடுத்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் அவைகளைப் பார்க்கலாம்.


FAO Report on Agricultural Production


PRODUCTION

The domestic production of N and P2O5 was 29 000 and 10 000 tonnes, respectively, in 1951/52. By 1973/74, this had increased to 1.05 million tonnes N and 0.325 million tonnes P2O5. As a result of the oil crisis in the mid-1970s and the consequent sharp increase in the international prices of fertilizers, the Government of India encouraged investment in domestic fertilizer production plants in order to reduce dependence on imports. It introduced a “retention price” subsidy in 1975/76. The scheme led to a sharp increase in domestic capacity and production between the mid-1970s and the early 1990s. The total production of N and P2O5 rose from 1.51 million and 0.32 million tonnes respectively in 1975/76 to 7.30 million and 2.56 million tonnes in 1991/92. In 1992/93, phosphatic and potassic fertilizers were decontrolled. As a consequence, the rate of growth in the demand for these products slowed. The total production of N reached 10.6 million tonnes and that of P2O5 reached 3.6 million tonnes in 2003/04.



இந்த லிங்க்கில் 2020 வரைக்கும் இந்தியாவின் உரத்தேவை என்ன என்று Indian Institute of Management, Allahabad ஒரு 32 பக்க அறிக்கை தயாரித்திருக்கிறார்கள். 



இந்த லிங்கில் இந்திய நாட்டின் உர பயன்பாட்டு புள்ளி விபரங்கள் உள்ளன.


முடிவுரை:

இத்தகைய ஆரோக்கியமான விவாதங்கள் நம் கருத்துகளைத் தெளிவு படுத்திக்கொள்ள உதவும். இவைகளை நான் வரவேற்கிறேன்.


சிலபல எரிச்சலூட்டும் பின்னூட்டங்களும் வருகின்றன. என்னால் முடிந்தவரையில் அவைகளுக்குப் பதில் அளிக்கிறேன். ஆனால் சில பின்னூட்டங்கள் தனி மனித தாக்குதல்களாக இருக்கின்றன.  

ஒரு முகமூடிப் பதிவர் போட்ட இந்தக் கமென்ட்டைப் பாருங்கள்.

//இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்கவில்லை, இணையத்தில் விவசாயம் பற்றிப்பேசுவதால் பயனில்லை என்கிறீர்கள் ,அப்போ மற்றது பேசினால் மட்டும் பயன் கூறையை பிச்சிக்கிட்டு கொட்டுமா?



விவசாயத்துக்கு உதவாத விவசாய பல்கலைகளும், விவசாய துறையும் எதுக்கு , தெண்ட சம்பளம் வாங்கவா, அவற்றையும் மூடி விடலாம். ஆண்டுக்கு பல கோடி மிச்சம் ஆகும்.//

எவ்வளவு நாகரிகமான கமென்ட் பார்த்தீர்களா? யார் மேலயோ உள்ள வயித்தெரிச்சலை என் மேல் கொட்டினால் நான் என்ன செய்ய முடியும்?

அவர் போட்ட இன்னொரு கமென்ட்டையும் பாருங்கள்.

நீங்கள் நிஜ உலகில் மேடையில் தான் பேசுவேன் என்று சொல்கிறீர்கள் ரைட்டு,பான்கி மூன் கிட்டே சொல்லி UNOமூலம் FAO வில் ஒரு மேடை தயார் செய்துவிடலாம்.

இந்த நக்கலை அவர் எதற்காக என்னிடம் 


காட்டுகிறார் என்று தெரியவில்லை. அப்படி FAO 


வில் மேடை தயார் செய்யக்கூடிய சாமர்த்தியசாலி, 


எதற்கு ஒரு முகமூடி போட்டுக்கொண்டு 


பதிவுலகில் வலம் வருகிறார் என்று எனக்குத் 


தெரியவில்லை.




இப்படிப்பட்ட கமென்ட்டுகளுக்கு அவர்கள் 


பாணியிலேயே பதில் கொடுப்பது தவறல்ல என்று 


நினைக்கிறேன்.


வியாழன், 30 டிசம்பர், 2010

மண்ணும் மண் வளமும்.

என்னுடைய இந்த http://swamysmusings.blogspot.com/2010/12/blog-post_28.html பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்: அதற்கான பதில்களை சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

சார், இது குறித்து இன்னும் விளக்கமாக எழுதுங்களேன். இப்போ நீங்கள் எழுதியிருப்பது புரிகிறது. ஆனால், இயற்கை விவசாயம் செய்யவே முடியாது என்று நீங்கள் சொல்லவில்லை, இல்லையா?

உங்கள் ஆர்வம் பாராட்டுக்குடையது. விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்ததினால் இந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. விவசாய சம்பந்தமான பல வலைத்தளங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே உங்களுக்குப் பதில் சொல்லும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

இயற்கை விவசாயம் செய்யமுடியும். ஆனால் அதைப்பற்றிய போதுமான விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளிவரும் பேட்டிகளை மட்டும் வைத்து நாம் ஒரு முடிவுக்கும் வர முடியாது, வரவும் கூடாது.

ரசாயன உரங்கள் இரண்டாம் உலகப்போர் நடக்கும் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அது வரையிலும் இயற்கையாகக் கிடைக்கும் இடுபொருள்களைக் கொண்டுதான் விவசாயம் நடந்து கொண்டு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு மகசூல் கிடைத்தது என்பதைப்பற்றி துல்லியமான புள்ளி விபரம் வேண்டுமென்றால் கிடைக்கும். அது மிகவும் குறைவாக இருந்தது என்று மட்டும் தெரிந்தால் இப்போதைக்குப் போதும். அந்த கால கட்டத்தில் உணவுப் பஞ்சங்கள் இருந்தன என்பதை நினைவில் கொண்டால் போதும்.

விளைச்சலை அதிகப்படுத்தவேண்டும் என்பதுதான் ரசாயன உரங்களை அறிமுகப்படுத்தியதன் நோக்கம். அது சுற்றுச் சூழலை எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற தெளிவு அப்போதைக்கு இல்லை. பிறகுதான் அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளிலிருந்து கண்டுபிடித்தது என்னவென்றால், வரை முறையில்லாமல் ரசாயன உரங்களை உபயோகித்தால் மண்ணின் வளம் பாதிக்கும், விளையும் மகசூலின் தரம் குறையும் என்பதாகும்.

ஒரு உதாரணம் சொன்னால் இது நன்கு விளங்கும். ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் உடனடியாக அதிக சக்தி வேண்டுமென்பதற்காக குளுகோஸ் சாப்பிடுவார்கள். உடனடியான ஓட்டத்திற்கு வேண்டிய சக்தியை அந்த குளுகோஸ் கொடுக்கும். ஆனால் அந்த வீரருடைய உடம்பு சரியான உணவுகள் சாப்பிட்டு நல்ல திடகாத்திரமாக இருக்கவேண்டும். ஒரு நோஞ்சான் உடம்புக்காரரை குளுகோஸ் சாப்பிடச் செய்து ஓட்டப்பந்தயத்தில் ஓடச்செய்தால் அவர் ஜெயிப்பாரா? மாட்டார்.

அது போலத்தான் மண்ணும். மண் என்பது வெறும் உயிரற்ற பாறைத்துகள்கள் அல்ல. அது ஒரு உயிருள்ள, நம்மைப் போலவே வாழும் ஒரு பொருள். அது எப்படி வாழ்கிறது என்றால், அந்த மண்ணில் ஒரு சதம் அங்ககப்பொருள் (Organic matter) இருக்கிறது. அந்த அங்ககப்பொருளும் மண்ணின் துகள்களும் இணைந்து இருக்கின்றன. இதற்கு clay-humus complex என்று பெயர். இதுதான் மண்ணின் உயிர். இதில்தான் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவைகளின் செயலால்தான் பயிர்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கின்றன.

ரசாயன உரங்கள் போடுவதுடன், போதுமான இயற்கை உரங்களையும் போட்டு வந்தால் மண்ணின் வளம் கெடாமல் இருக்கும். வெறும் ரசாயன உரங்களை மட்டும் போட்டு வந்தால் நாளாவட்டத்தில் மண்ணின் வளம் குறைந்து மண்ணின் தன்மை மாறிவிடும். இந்தத் தத்துவத்தை விவசாய மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் பல காலம் முன்பே கண்டு பிடித்துள்ளார்கள். இந்த உண்மை எல்லா ஆராய்ச்சி இதழ்களிலும் புத்தகங்களிலும்
இருக்கிறது. இதையெல்லாம் படித்துத்தான் நாங்கள் பட்டம் வாங்கினோம்.

இந்த உண்மை முன்பே உங்களுக்கு, அதாவது விவசாய ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியமல்லவா? இதை மாற்ற ஏன் எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை என்று கேட்கலாம்? ஐயாமார்களே, அம்மாமார்களே, இந்த உண்மையை காலம் காலமாக எல்லா மேடைகளிலும், பத்திரிக்கைகளிலும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் மக்களின் மனப்பான்மை என்னவென்றால் நல்லது எதையும் கேட்கமாட்டார்கள். தங்கள் அரசியல் தலைவியை கைது செய்து விட்டார்கள் என்று கேட்டவுடன் விவசாய மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தைக் கொளுத்தி மூன்று மாணவிகளை உயிரோடு எரித்த சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த உணர்ச்சி வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு, ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதில் இருந்தால் நம் நாடு ஒரு வல்லரசாக என்றோ ஆகியிருக்கும்.



செவ்வாய், 28 டிசம்பர், 2010

தாய்ப்பாலில் விஷம் ?


ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றி கக்கு - மாணிக்கம் said...

அதுசரி.......ஈரோடு பதிவர் சந்திப்புக்கு போகாமல் இங்கே உட்கார்ந்து கொண்டு இன்னும் பதிவு எழுதுகிறீர்களே.
26 December 2010 14:13

***** மாணிக்கம் என் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை சுமத்திவிட்டார். *****

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு போய் வந்து விட்டேன், மாணிக்கம். ஒரு பதிவும் போட்டுவிட்டேன். நான் எடுத்த படங்கள் அனைத்தையும் வலையில் ஏற்றி அதற்கான சுட்டியையும் அதில் கொடுத்து விட்டேன். கொஞ்சம் போய் வந்த அலுப்பு தீர்வதற்காக தூங்கி எழுந்து பார்த்தால், நான் எழுதலாம் என்று யோசித்து வைத்திருந்தது அனைத்தையும் பலரும் எழுதித் தீர்த்து விட்டார்கள். குறிப்பாக கதிரும், “பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்”. அதற்கு மேல் எழுத என்னிடத்தில் விஷயம் ஒன்றுமில்லை.

விழாவை நன்கு திட்டமிட்டு நடத்திய கதிருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு குறைபாடு உண்டு. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலேயே இது நாள் வரையிலும் சமாளித்து விட்டேன். ஆனால் அதை இப்போது சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என் மூளையின் ஒரு பகுதியில் களிமண் இருக்கிறது. அது எந்தப் பகுதி என்றால் - சந்திக்கும் மனிதர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் பகுதி. சம்பவங்கள் ஞாபகம் இருக்கும் அளவிற்கு பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. அதனால் நான் ஈரோடு பதிவர் சங்கமத்தில் பலரை சந்தித்தபோதும் ஒரு சிலரின் முகங்கள் மட்டுமே பெயருடன் ஞாபகம் இருக்கிறது. அதனால் என்னால் சரளமாக சங்கமத்தின் விவரங்களை பதிவு போட இயலவில்லை. அனைவரும் என் வயதை மனதில் கொண்டு இந்த குறையை மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் சந்தித்த பலரும் என்னை நினைவு கூர்ந்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

*********************************************************************************************************************

இனி நம் சப்ஜெக்ட்டுக்கு வருவோம். அதாவது இயற்கை வழி விவசாயம்.

போன பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்களைப் பார்ப்போம்.

கலாநேசன் said...

விவசாயத்திற்கு பூச்சிமருந்து பயன்படுத்தித்தான் இன்று தாய்ப்பாலிலும் விஷம் கலந்தோம் நாம். முற்றிலும் இயற்கையான விவசாயம் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் முடிந்தவரை முயலலாமே...

26 December 2010 06:15

ஆரண்ய நிவாஸ்ஆர்.ராமமூர்த்தி said...

எல்லாம் நடக்கும்.. நாம் மனது வைத்தால்...

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

shammi's blog said...

very true sir , its easy to say but its hard to follow, even now organic foods are available in the market Only the persons could afford to, buy them, Just as ages passed, we could not go to neolithic era, but still we could try to minimize the use of certain seeds like Monsanto's hybrid brinjal, and so on. Yeah, what you said is true if its on the greener side its far better but as you ended just some are interested, not all...nice article sir ...thanks for sharing.

26 December 2010 18:50

வாசிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இங்கு நான் என் அனுபவத்தில் கற்றுக்கொண்டவைகளை உங்களுடன் பங்கிடுகிறேனே தவிர, இந்த இயற்கை விவசாயத்தில் நான் ஒரு சர்வதேச நிபுணன் இல்லை. என்னுடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அவை சரியாகவும் இருக்கலாம். நான் விரும்புவது, இந்த சப்ஜெக்ட் அனைவருடைய கவனத்திற்கும் சென்றால் போதும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை வைத்துக் கொள்வோம். என்னுடைய கருத்துத்தான் சரி என்கிற உடும்புப் பிடிவாதம் தேவையில்லை. என்னுடைய கருத்துகளுக்கு எந்த விதமான பின்னூட்டங்களும் போடலாம். பதில் சொல்ல முடிந்தால், தெரிந்தால், சொல்லுகிறேன். முடியாவிட்டால் முடியவில்லை என்று சொல்லி விடுகிறேன். எல்லாவற்றையும் எல்லோராலும் தெரிந்து வைத்திருப்பது முடியாத காரியமல்லவா?

முதலில் கலாநேசன் கருத்தை எடுத்துக்கொள்வோம். பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதால் அந்த மருந்து, அந்தப் பயிரிலிருந்து விளையும் பொருள்களில் சேர்ந்து, அவைகளை தாய் சாப்பிடும்போது அவள் உடம்பில் சேர்ந்து. பிறகு அது தாய்ப்பால் மூலமாக குழந்தைக்குப் போய் சேருகிறது என்று சொல்கிறார். இந்த வாதம் சரியானதுதான். ஆனால் அவ்வாறு சேரும் பூச்சி கொல்லி மருந்தின் அளவு என்ன?, அதனால் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஏற்பட்ட தீங்குகள் என்ன? என்று ஏதாவது ஆராய்ச்சி செய்திருக்கிறாரக்ளா? அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் என்ன? இந்த விவரங்கள் தெரியாமல் அவசரமாக முடிவு செய்வது சரியில்லை. இந்த பூச்சி மருந்தை விஷம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வது மக்களுக்கு பயத்தை உண்டு பண்ணுவதற்காகத்தான் என்று நான் கருதுகிறேன். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான். பாம்பின் விஷமும் குறைந்த அளவில் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

நாம் பொதுவாக எந்தப் பிரச்சினையையும் அறிவு பூர்வமாக அணுகாமல், உணர்ச்சி பூர்வமாக அணுகுகிறோம். இதனால் பிரச்சினை தீர்வதில்லை. உதாரணத்திற்கு, ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும்போது அவளுக்கு பலவிதமான சத்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அவைகளை குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டால்தான் மருந்தாக வேலை செய்யும். அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். அதற்காக அந்த மருந்துகளை சாப்பிடக்கூடாது என்று சொல்லலாமா? சாதாரணமாக சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளும் உப்பே அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் விஷம்தான்.

இன்னொன்றை சொல்ல விரும்புகிறேன். பெரிய நகரங்களில் இப்போது வாகனங்கள் வெளிவிடும் புகை சர்வதேச அனுமதிக்கப்பட்ட அளவை விட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. அதைக்குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் அதை நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இது போன்று பல விஷயங்கள் இருக்கின்றன. முடிந்த வரையில் அதன் தீமைகளைக் குறைக்க விஞ்ஞானிகளும் அரசுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுதான் இன்று இருக்கும் நடைமுறை உண்மை. மனது வைத்தால் மாற்ற முடியும் என்று ஆர்.ஆர்.ஆர். சொல்கிறார். நான் மறுக்கவில்லை. கமலஹாஸன் தசாவதாரத்தில் கடவுளைப்பற்றி சொல்கிற மாதிரி நான் சொல்ல வருவது என்னவென்றால் : இந்த தீங்குகளை அகற்றுவதற்கு நான் எதிரியில்லை. அகற்றினால் நன்றாக இருக்கும், ஆனால் அது சாத்தியமில்லை என்றுதான் சொல்கிறேன்.

இது ஒரு எதிர்மறை கருத்து என்று என் மீது குற்றம் சுமத்தலாம். வரலாற்று உண்மைகளை உணர்ந்து, எதை நடைமுறைக்கு கொண்டு வரமுடியும், எதைக் கொண்டு வர முடியாது என்று சிந்தித்து, பிறகு என் கருத்துகளைக் குறை கூறுங்கள்.

தொடரும்….