இலவச வைத்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவச வைத்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 டிசம்பர், 2016

சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்

இது ஒரு மீள் பதிவு


சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்


சர்க்கரை நோயைப் பற்றி பல மருத்துவர்கள் குறிப்பாக டாக்டர் முருகானந்தம் பல பதிவுகள் எழுதியிருக்கிறார். அந்தப் பதிவுகள் மருத்துவ ரீதியில் மிகவும் துல்லியமானவை. பல மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தொகுத்து அதன் சாராம்சங்களை கொடுத்துள்ளார்.

ஆனால் சாதாரண சர்க்கரை நோய் உள்ள, சாதாரண மனிதனுக்கு அந்த குறிப்புகளை மனதில் வாங்கி நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் சிரமமான சமாச்சாரம். அதற்காக, என்னைப் போல் உள்ள பாமர மக்களுக்கும் புரியும்படி சிறு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இவைகளைச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று கேட்கிறீர்களா? 20 வருடகாலம் சர்க்கரை நோய் அனுபவம் எனக்கு இருக்கிறது. அதைவிட வேறென்ன வேண்டும்.

இவை யாவும் நான் கற்றுக்கொண்ட நடைமுறை உண்மைகள். ஆனால் இவைகளைக் கடைப்பிடிக்கும்போது ஏதாவது சிக்கல்கள் வருகிற மாதிரி தோன்றினால் உடனே உங்கள் வழக்கமான டாக்டரைப் பார்த்து விடுங்கள்.

1. நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதை முதலில் மறந்து விடுங்கள். கவலை சர்க்கரை நோயை அதிகரிக்கும்.

2. எப்போதும் போல் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் பழைய அளவில் பாதி மட்டும் சாப்பிடவேண்டும். அதாவது முன்பு ஒரு டஜன் இட்லி சாப்பிடுபவராக இருந்தால் இப்போது அரை டஜன் மட்டும் சாப்பிடவும்.

3. நீங்கள் காப்பிப் பிரியரா? சர்க்கரை இல்லாத காப்பி குடிப்பதற்குப் பதிலாக விஷத்தை குடித்து விடலாம். நல்ல காப்பி குடிக்காமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்ன இரண்டு ஸ்பூன் சர்க்கரைக்குப் பதிலாக ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் பழகி விடும்.

அதற்குப்பிறகு ஒரு ஸ்பூனுக்குப் பதிலாக அரை ஸ்பூன் சர்க்கரை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த ஒரு மாதத்தில் இதுவும் பழகி விடும்.

அப்புறம் மற்றவர்கள் குடிக்கும் காப்பி பாயசம் மாதிரி இருக்கும். என்னய்யா காபி குடிக்கறீங்களா, இல்லை பாயசம் குடிக்கிறீங்களா என்று மற்றவர்களைக் கலாய்க்கலாம்.

4.கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் போனால் விருந்தில் நன்றாக ஒரு வெட்டு வெட்டுபவரா நீங்க? கவலையே படாதீங்க. கல்யாணங்களுக்குப் போவதை அடியோடு நிறுத்துங்கள்.

5. டாக்டர் சொல்லும் மருந்துகளைத் தவறாது டாக்டர் சொன்ன முறைப்படி சாப்பிட்டுவிடுங்கள். இதில் எந்த மாற்றமும் கூடாது.

6.பசி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து "லோ சுகர்" ஆகிவிடும். அப்போது கைகால்களில் ஒரு மாதிரி நடுக்கம் வந்து விடும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மயக்கம் கூட வரலாம். இந்த நிலை வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

7. மாதம் ஒரு முறை தவறாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு 150 க்கு கீழ் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை. 100 இருந்தால் அன்று நீங்கள் ஒரு ஸ்வீட் சாப்பிடலாம்.

8. எங்கேயாவது ஸ்வீட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட நேர்ந்தால் இரண்டாக சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் உங்கள் மனதில் குற்ற உணர்வு அதிகரித்து அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஸ்வீட் பக்கம் போகாமலிருப்பீர்கள்.

9. வீட்டில் மற்றவர்கள் எல்லாம் வக்கணையாக, விதம் விதமாக ஸ்வீட்டுகள் செய்து சாப்பிடுவார்கள். அவர்கள் மேல் வரும் கொலைவெறியை எப்படியாவது கட்டுப் படுத்துங்கள். ஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்.

10. தினமும் தவறாமல் முக்கால் மணி நேரம் நடைப் பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம்.

அவ்வளவுதானுங்க. ஜாம் ஜாமுன்னு சர்க்கரையில்லா வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

காதில் வண்டா? கவலை வேண்டாம்

ஸ்ரீராம்.22 ஜனவரி, 2013 7:49 PM என்னுடைய "காது குடைவது எப்படி" என்ற பதிவில் போட்ட பின்னூட்டம்.
மூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்டு, பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது போன்ற பதிவுகள் கியூவில் நிற்கின்றன என்பதைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


நண்பர் ஸ்ரீராம் கேட்டதில் கடைசி பதிவு.


காது குடைவது எப்படி என்று சமீபத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக காதில் ஏதாவது எறும்பு, கொசு, வண்டு, அல்லது வேறு பூச்சிகள் ஆகியவை சென்று விட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம்.

சாதாரணமாக இந்த மாதிரி பூச்சிகள் காதுக்குள் போகாது. அபூர்வமாகத்தான்  இது நிகழும். இருந்தாலும் களவும் கற்று மற என்ற பரம்பரையில் வந்த நாம் இதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் இந்தப் பதிவை இடுகிறேன்.

எறும்பு யானைக் காதில் புகுந்தால் யானை இறந்து விடும் என்கிற புருடாவையெல்லாம் நம்பாதீர்கள். அப்படியெல்லாம் யானை இறக்காது. மனிதனும் அப்படித்தான். எறும்பு காதில் புகுந்த சில விநாடிகள் காதுக்குள் விநோதமாக உணர்வீர்கள். கொஞ்ச நேரம் அப்படியே இருந்தால் அந்த எறும்பு செத்துப் போய்விடும். பிறகு தானாகவே அந்த எறும்பின் உடல் வெளி வந்து விடும்.

ஆனால் அதற்குள் சில அவசரக்குடுக்கைகள் "ஐயோ, அம்மா" என்று அலறுவார்கள். அவர்களுக்கான வைத்தியம். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அவர்களை ஒருக்களித்து படுக்கச்சொல்லி, காதில் அந்த தண்ணீரை மெதுவாக ஊற்ற வேண்டும். எறும்பு உயிருடன் இருந்தால் தண்ணீரில் நீந்தி வெளியே வந்து விடும். அது இறந்து போயிருந்தால், அதன் சடலம் மேலே மிதந்து வரும். அதை எடுத்து உரிய முறையில் அடக்கம் செய்து விடலாம்.

அவ்வளவுதான் வைத்தியம். இதே முறைதான் வேறு என்ன பூச்சிகள் காதுக்குள் போனாலும் கடைப்பிடிக்க வேண்டியது.

சிலருக்கு பூச்சி வெளியில் வந்த பிறகும், பூச்சி காதுக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு இன்னும் கொஞ்சம் தீவிர வைத்தியம் தேவை.

அந்தக் காலத்தில் வீடுகளில் குடுக்கை விளக்கு என்று ஒன்று இருக்கும். மண்ணெண்ணையில் எரியும் பெட்ரூம் விளக்கு அது. இப்போது ஏறக்குறைய மறைந்து போய் விட்டது. அது இல்லாவிட்டால் அகல் விளக்கு என்றால் எல்லோருக்கும் தெரியும். அதை எடுத்து ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

பிரச்சினை பண்ணும் நபரை ஒருக்களித்துப் படுக்கவையுங்கள். ஒரு வரமிளகாய் எடுத்து காம்பைக் கிள்ளிவிட்டு, அந்தப் பக்கத்தில் ஒரு தெரிய ஓட்டை போடவும். அதில் உள்ள விதைகளை கொட்டி விடவும். அதில் முக்கால்வாசி நல்லெண்ணை ஊற்றவும். பிறகு ஒரு ஊசியினால் அந்த மிளகாயைக் குத்திக்கொள்ளவும்.

படத்தைப் பார்கவும்
அந்த ஊசியினால் மிளகாயை விளக்கு மூக்கில் சிறிது நேரம் காட்டவும். எண்ணை சூடானவுடன் அந்த எண்ணையை பிரச்சினைக்குரியவர் காதில் ஊற்றவும். இந்த சமயத்தில் நல்ல வலுவானவர்கள் நாலு பேர் அந்த பிரச்சினைக்குரியவரை அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். அவ்வளவுதான் வைத்தியம் முடிந்தது. காதுக்குள் எந்த பூச்சி போயிருந்தாலும் இந்த வைத்தியத்தில் வெளியே வந்தே ஆகவேண்டும்.

மேலும் விளக்கம் வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், எங்கள் கம்பெனி வைத்தியரை அனுப்பி வைக்கிறோம். அவர் டெமான்ஸட்ரேஷன் வகுப்புகள் நடத்தி விளக்கம் தருவார்.