இல்வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இல்வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 டிசம்பர், 2017

31. காதல் கல்யாணம்

                                      Image result for காதலர்கள் படங்கள்
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதுதான் இல்லறம். ஆனால் அந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது பணம். பணம் இல்லையேல் முற்றும் துறந்த முனிவர்களினால் கூட வாழ முடியாது.

தற்போது செய்தித்தாள்களில் பிரபலமாக இருக்கும் கௌசல்யா-சங்கர் காதலை எடுத்துக்கொள்வோம். அவல்களின் கல்யாணம் நடக்கும்போது கௌசல்யாவிற்கு 18 வயது, சங்கருக்கு 21 வயது. அப்போதுதான் இருவரும் மேஜர் ஆகியிருக்கிறார்கள். இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கரின் குடும்பம் ஏழ்மையின் விளிம்பில்தான் இருந்தது என்று யூகிக்கிறேன்.

காதல் சினிமாவில் வேண்டுமானால் உயர்வாகக் காட்டப்படலாம். ஆனால் யதார்த்த த்தில் காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன.

இந்த நிலையில் அவர்கள் எந்த அடிப்படையில் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. காதல், சாதி வெறி ஆகியவை ஒருபுறம் இருக்க, அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு வாழ்வதற்கான பொருளாதார பலம் அவர்களுக்கு இல்லை. அந்த நிலையில் தங்களுக்கு கல்யாணம் அவசியமா என்ற சிந்தனை வராதா?

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்?

இது எனக்கு ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

நின்று போன கல்யாணங்கள்

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் அந்தந்த வீட்டுப்பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. குடும்ப பாரம்பரியத்தைப் பார்த்து மட்டுமே கல்யாணங்கள் நிச்சயிக்கப்பட்ட காலம் அது. கல்யாணத்தில் தாலி கட்டும் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க மாட்டார்கள்.

கல்யாணம் முடிந்து விட்டால் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றுதான் அந்தக் காலத்துப் பெண்கள் வாழ்க்கை நடத்தினார்கள். மணவாழ்வில் பெரிதாக ஏதும் பிரச்சினைகள் அந்தக் காலத்தில் உருவாகவில்லை. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம் அது. வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றாதிருந்த காலம் அது. அப்படி சிக்கல்கள் தோன்றினாலும் வீட்டுத் தலைவரின் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப் படுவார்கள்.

உடல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் பல மாறுதல்கள் உண்டு. பெண் சீக்கிரம் முதிர்ச்சி அடைகிறாள். ஆண் அவ்வளவு சீக்கிரம் முதிர்ச்சி அடைவதில்லை. அறுபது வயது ஆண் இளமையாகத் தெரிவான். ஆனால் அறுபது வயது பெண்ணின் உருவ மாற்றம் வெகுவாகத் தெரியும். இதனால்தான் கல்யாணத்தின்போது அந்தக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம் எட்டிலிருந்து பத்து வரை இருக்குமாறு பார்த்துக்   கொண்டார்கள்.

காலங்கள் எவ்வளவு வேகமாக மாறுகின்றன. இன்றைய கல்யாண சந்தையில் கல்யாணத்திற்கு பெண்ணோ மாப்பிள்ளையோ பார்க்க வேண்டுமானால் அதற்கென்று உள்ள திருமண தகவல் மையங்களில் பதிவு செய்ய வேண்டும். அல்லது ஒரு நல்ல புரோக்கரைப் பிடிக்க வேண்டும். முன்பெல்லாம் பெண்ணுக்கு வரன் அமைவதுதான் சிரமம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது பையனுக்குப் பெண் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.

ஏனெனில் பெண்கள் இப்போது படித்து நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கிறார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்பத்தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டியிருக்கிறது. பெண்ணுக்கு பையனைப் பிடித்தால்தான் மேற்கொண்டு சம்பந்தம் பேச முடியும். பையனுடைய வயது பெண்ணின் வயதை விட ஒன்று அல்லது இரண்டு வருடங்கள்தான் அதிகமாக இருக்கலாம் என்று இன்றைய யுவதிகள் விரும்புகிறார்கள்.

கல்யாணம் முடிந்த பிறகு கூட்டுக் குடும்பத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள். பையனுக்கு சகோதர சகோதரிகள் இருக்கக்கூடாது. மாமியார் இருக்கலாம். மாமனார் இல்லாமல் இருந்தால் நல்லது. ஒரு ஐந்து வருடங்களுக்கு குழந்தைகள் கூடாது. இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள். இவை எல்லாம் சரியாக இருந்து கல்யாணம் நிச்சயம் செய்த பிறகும் பெண்கள் தங்கள் முடிவுகளை மாற்றலாம். மாற்றுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து அப்படி நின்று போன கல்யாணங்கள் சிலவற்றைப் பற்றிக் கூறுகிறேன். ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே காதலன் மூலம் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தப் பெண்ணையும் ஒருவன் திருமணம் செய்ய முன் வருகிறான். நிச்சயதார்த்தம் முடிந்தது. கொஞ்ச நாள் கழித்து அந்தப் பெண் பையனை சினிமாவுக்குப் போகலாம் என்று கூப்பிடுகிறாள். அவன் இன்று எனக்கு ஆபீசில் வேலை இருக்கிறது, நாளை போகலாம் என்று சொல்லியிருக்கிறான். அந்தப் பெண் "ப்ளெடி ஃபூல்" என்று சொல்லி விட்டு போனை வைத்து விடுகிறாள்.

அந்தப் பையன் என்ன செய்ய முடியும்? வீட்டிற்கு வந்தவுடன் அவன் அம்மாவுடன் இந்தப் பெண்ணுடன் என்னால் வாழ்க்கை நடத்த முடியாது என்று சொல்லி விட்டான். கல்யாணம் நின்று விட்டது.

இன்னொரு நிகழ்ச்சி. கல்யாணம் முடிந்து விட்டது. பெண்ணும் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் சாப்பிட்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை சாப்பிட்ட பிறகு கையை நக்கியிருக்கிறான். திரும்ப கல்யாண மண்டபத்திற்கு வந்தவுடன் பெண் தாலியைக் கழட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டு இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

இப்படியெல்லாம் உலகில் நடக்கிறது. கல்யாணம் பண்ணப் போகும் மாப்பிள்ளைகள் ஜாக்கிரதையாகப் பெண் பார்க்கவும்.

திங்கள், 11 ஜூலை, 2016

இனி வீட்டிற்கு சமையல் அறை தேவையில்லை.

             
                        Image result for சமையல் அறை

இது என்னய்யா அநியாயமாக இருக்கு, வீட்டிற்கு சமையல் அறை இல்லாமல் எங்கே சமைப்பார்கள், எப்படிச் சாப்பிடுவார்கள் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம். உங்கள் வீட்டில் கல்யாண வயதில் ஒரு பையன் இருக்கிறான் என்றால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

முன்பெல்லாம், அதாவது 30 - 40 வருடத்திற்கு முன் ஒரு பையனுக்கு பெண் பார்க்கப் போனால் பையனுடைய அம்மா கேட்கும் முதல் கேள்வி "பொண்ணுக்கு சமையல் செய்யத்தெரியுமா" என்பதாகத்தான் இருக்கும். இன்று பெண் பார்க்கப்போகும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் "என்ன, காட்டுமிராண்டி ஜன்மங்களாய் இருக்கிறார்கள்" என்ற கேள்விக்கு புரோக்கர் பதில் சொல்ல வேண்டி வரும்.

இப்படி இரண்டு மூன்று பார்ட்டி வந்து போனபின் புரோக்கருக்கு ஒரு புது அறிவுரை கொடுக்கப்படும். "இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேக்கற பார்ட்டிகளை இனிமேல் இங்கே கூட்டி வராதே" என்று சொல்லி விடுவார்கள். பொண்ணு என்ன படிச்சிருக்கா, என்ன வேலை பாக்கறா இந்த மாதிரி கேள்விகள்தான் அனுமதிக்கப்பட்டவை.

பெண்ணும் பையனும் ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால், தனியாகப் பேசுவார்கள். அப்புறம் இருவரும் ஓகே சொன்னால் மேற்கொண்டு விவரங்கள் பேசுவார்கள். இந்த மாதிரி பேசும்போதே பெண்ணின் அம்மா பெருமையாகச் சொல்லிக்கொள்வாள். என் பொண்ணை சமையலறைப் பக்கமே நான் விட்டதில்லை, என்பாள். பையனுடைய அம்மா, சீர் வரிசையாக பெண்ணுக்கு என்ன என்ன செய்வார்க்ள என்ற கணக்கிலேயே மூழ்கி இருப்பாள். பெண்ணின் அம்மா சொன்ன வார்த்தையைக் கேட்டிருக்க மாட்டாள்.

கல்யாணம் தடபுடலாக நடந்து முடிந்தது. பெண்ணிற்கு 200 பவுன் நகை. மாப்பிள்ளைக்கு ஒரு 80 லட்சத்தில் பிஎம்டபிள்யூ கார். பையனோட அம்மாவிற்கு 20000 ரூபாயில் பட்டுப்புடவை. வெள்ளிப் பாத்திரங்கள், இத்தியாதி.  அம்மாவிற்கு வாயெல்லாம் பல். சம்பந்தியம்மா செய்திருக்கும் சீர் வரிசைகளை தன்னோட சொந்தக்காரர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டாள்.

கல்யாணம் முடிந்தது. தம்பதிகள் பதினைந்து நாள் யூரோப்பிற்கு ஹனி மூன் போய் வந்தார்கள். ஊருக்குத் திரும்பின பின் இருவரும் பிஎம்டபிள்யூ காரில் வேலைக்குப் போய்வந்தார்கள். மாமியார்க்காரி வழக்கம்போல் சமையல் செய்து வந்தாள். இருவரும் திவ்யமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பத்து நாள் ஆயிற்று, பதினைந்து நாள் ஆயிற்று. மருமகள் சமையல் கட்டுக்கு வருவாள் வருவாள் என்று மாமியார்க்காரி எதிர் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

இதற்கிடையில் சம்பந்தி அம்மாள் வந்தாள். அவளிடம் என்ன உங்க பொண்ணு சமையல் கட்டுப் பக்கமே வரமாட்டேங்கறா அப்படீன்னு சொன்னாள். அதுதான் நான் நீங்க பொண்ணு பார்க்க வரப்போவே சொன்னேனே, என் பொண்ணு சமையல் அறைப் பக்கமே வரமாட்டேன்னு, நீங்க அதைக் கேக்கலியா என்றாள். மாமியார்க்காரிக்கு தூக்கி வாரிப்போட்டுது. அதெல்லாம் எங்க வீட்டிற்கு சரிப்படாது, நீங்க ஒங்க பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு மாசத்தில சமையல் சொல்லிக்கொடுத்து அனுப்புங்கோ என்றாள்.

அந்த அம்மாவும் அப்படியே பெண்ணையும் மாப்பிளையையும் கூட்டிக்கொண்டு போனாள். அடுத்த வாரம் இரண்டு பேரும் தனிக்குடித்தனம் போய் விட்டதாகத் தகவல் வந்தது. சரி, இரண்டு பேரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று மாமியார்க்காரி விசாரித்தாள். விசாரித்ததில் தெரிந்தது.

பையனுக்கு காப்பி போடத்தெரியும். காலையில் எழுந்த தும் காப்பி போட்டு அவனும் அவன் பெண்டாட்டியும் குடிக்கிறார்கள். காலையில் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மாமி இட்லி சுட்டுக் கொடுக்கிறாளாம். அங்கு ஆளுக்கு நாலு இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு இருவரும் ஆபீஸ் போய்விடுவார்களாம்.

மதியம் ஆபீஸ் கேன்டீனில் சாப்பாடு. இரவு வீட்டிற்கு வந்ததும் ஏதாவது ஓட்டலுக்குப் போய் அங்கு இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்துக்  கொள்வார்களாம். ஞாயிற்றுக் கிழமை லீவு அன்று இருவரும் பொண்ணோட அம்மா வீட்டிற்குப் போய் விடுவார்களாம்.

இப்படி வாழ்க்கைதான் இனிமேல் நடக்கப் போகிறது. அப்புறம் வீட்டில் எதற்கு சமையல் அறை வைக்கவேண்டும்? தேவையில்லையே. செலவும் மிச்சம்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

புது வருட வாழ்த்துகளும் தீர்மானங்களும்.

எல்லோரும் புது வருட வாழ்த்து சொல்லும்போது  நான் மட்டும் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும். அதனால நானும் எல்லோருக்கும் புது வருட வாழ்த்தினைச் சொல்லிக்கொள்கிறேன்.                

                        Image result for new year greetings 2016

இந்த மாதிரி ஒருத்தரைப்பார்த்து ஒருத்தர் செய்வதைத்தான் இங்கிலீஸ்ல Peer Pressure அப்படீங்கறாங்க. ஒலகத்தில தனி மனிதனுக்கு வருகிற துன்பங்களெல்லாம் இந்த சனியனாலதான் வருகிறது என்பது என் அபிப்பிராயம்.

அடுத்த வீட்டுல ஏசி மிஷின் வாங்கீட்டாங்களா? நாமும் வாங்க வேண்டியதுதான். இந்தப் பக்கத்து வீட்டில கார் வாங்கீட்டாங்களா? நாமும் வாங்கோணும். அடித்த வீட்டுப் பையன் கிளாஸ்ல முதல் ரேங்க்கா? நீ ஏண்டா முதல் ரேங்க் வாங்கலேன்னு நம்ம பையனுக்கு அடி அல்லது டோஸ்.

இப்படித்தான் உலகம் போய்க்கொண்டு இருக்கிறது. பையன் அல்லது பெண் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போது அவர்கள் ஒரு மாயா லோகத்தில் வாழ்கிறார்கள். அடுத்தவர்கள் செய்வதை எல்லாம் நாமும் செய்யவேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தி, நம் தகுதிக்கு ஏற்ப நாம் வாழ்வோம் என்ற கருத்தை ஒவ்வொரு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.

இதுவே நாம் இளைய தலைமுறைக்குச் செய்யும் சேவையாகும்.

                                    Image result for குடும்பம்

திங்கள், 14 மே, 2012

நீங்கள்தான் குடும்பத் தலைவரா?


புதுசா ஒருவர் இந்திய நாட்டின் ஜனாதிபதி ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குப் பதவிப் பிரமாணம் எடுத்தவுடனே, அவரைக் கொண்டு போய் ஜனாதிபதி மாளிகையில் குடி வைத்து விடுவார்கள். அந்த மாளிகையில் எத்தனை அறைகள் இருக்கின்றன என்று இதுவரை இருந்த ஒரு ஜனாதிபதிக்கும் தெரிந்திருக்காது என்று நம்புகிறேன். அந்த மாளிகையைக் கட்டின இஞ்சினீயருக்குத் தெரிந்திருக்கலாம்.

அந்த புது ஜனாதிபதிக்கு தான்தான் இந்த பரந்த நாட்டின் ஜனாதிபதி என்று உணருவதற்கே சில வாரங்கள் ஆகும். அது மாதிரி நம் நாட்டில் வாழ்க்கை நடத்தும் பலருக்கு, தான்தான் குடும்பத்தலைவர் என்பது மறந்து போயிருக்கும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

நீங்கள் உங்களை குடும்பத் தலைவன் என்று நினைக்கிறீர்களா? அதை உறுதி செய்ய சில கேள்விகள்.

1. ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் என்கிற இடத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா?

2. குடும்பத்தின் வருமானம் உங்கள் மூலமாக மட்டுமே வருகிறதா?

3. சம்பளம் வாங்கியதும் சம்பளக் கவரை அப்படியே மனைவி கையில் கொடுக்கிறீர்களா?

4. உங்களுடைய அன்றாட செல்வுகளுக்கு மனைவியிடம் வாங்கிக் கொள்கிறீர்களா? அதற்கு மாலையில் கணக்கு சொல்கிறீர்களா?

5. தீபாவளிக்கு உங்களுக்கு புது வேஷ்டி சட்டை உங்கள் மனைவி வாங்கிக் கொடுக்கிறார்களா?

6. பள்ளி சுற்றுலா போக உங்கள் குழந்தைகள் அம்மாவிடம் பர்மிஷனும் பணமும் வாங்குகிறார்களா?

7. தினம் சாப்பிடும்போது உங்களுக்கு அர்ச்சனை நடக்கிறதா?

8. உங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது சமையலறையில் பாத்திரங்கள் உருளுகின்றனவா?

9. காலையில் ஆறிப்போன காப்பியைக் குடிக்கிறீர்களா?

10. வீட்டில் பல முக்கியமான காரியங்கள் உங்களுக்குத் தெரியாமல் நடக்கின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்று நீங்கள் பதில் சொன்னால் கண்டிப்பாக நீங்கள்தான் குடும்பத் தலைவர். எந்த சந்தேகமும் வேண்டாம்.



சனி, 21 ஏப்ரல், 2012

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?



இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று.  இதில் ஆழமான பிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல.

முதலில் செய்யவேண்டியது என்னவென்றால்வெட்கம், மானம், மரியாதை, சூடு, சொரணை, இப்படி வேண்டாத சாமான்களை எல்லாம் காயலான் கடைக்குப் போட்டு விடவேண்டும். அப்புறம் நல்ல கணவனாவது வெகு சுலபம்.

வளவளவென்று சும்மா பேசி என்ன பிரயோஜனம்? சுருக்கமாக பாய்ன்ட் பை பாய்ன்ட்டாக (Point by Point) நெம்பர் போட்டு சொல்லிவிடுகிறேன்.

   1.   காலையில் மனைவிக்கு முன் எழுந்திருந்து நல்ல டிகாக்ஷன் காப்பி   போட்டு மனைவி எழுந்திருக்கும்போது சூடாகக் கொடுக்கவும்.
   
   2.   காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவைகளை சமையலுக்குத் தேவையானபடி அரிந்து, கழுவிக் கொடுக்கவேண்டும்.

   3.   அவ்வப்போது உபயோகித்த பாத்திரங்களை அப்போதைக்கப்போது கிளீன் செய்து அதது வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவும்.

   4.   சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.

   5.   துணி துவைக்கும் வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடக்கூடாது. உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)

   6.   மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால் ஆபீசுக்கு மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத் தேவையானவை பணிவிடைகளைச் செய்யவும்.

   7.   மனைவி ஷாப்பிங்க் போகும்போது கூடவே போய் அவர்கள் வாங்கும் பொருட்களை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.
   
   8.   மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டேண்டிற்குப் போய் வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும். ஆட்டோவில் எக்காரணம் கொண்டும் கூட்டி வரக்கூடாது.

   9.   அந்த ஜனங்களை உள்ளூரில், பக்கத்து ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்சியில் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டி வரவேண்டும்.

   10. அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போகும்போது உண்மையாக வருத்தப்பட வேண்டும். கண்களில் கண்ணீர் வந்தால் நல்லது.

இந்த முறைகளெல்லாம் அக்மார்க் முத்திரை வாங்கியவை. இவை கட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள் மாமியாரிடமிருந்தே பெற்றுத்தரும். நான் கேரன்டி.