நேற்று நானும் என் மனைவியும் எங்கள் ஊரில் (சும்மா ஒரு ஐந்து கி.மீ. தூரம்தான்) ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்குப் போயிருந்தோம். அங்கே கோயில் வளாகத்தில் நான் கொஞ்ச தூரம் சென்று விட்ட பிறகு, என்னைப் பார்த்த ஒரு பெண்மணி, வேறு ஒருவரை அனுப்பி என் பெயரைச் சொல்லி, அவர்தானா என்று விசாரித்து விட்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு வரச் சொன்னார்.
இது என்னடா விபரீதம், என் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு வரச்சொன்னது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே சென்றேன். அந்தப் பெண்மணி என்னையும் என் மனைவியையும் மிகவும் அன்னியோன்யமாக நலம் விசாரித்தார்கள். இது யாராக இருக்கும் என்று நான் என் மண்டையைப் பலமாக ஆட்டி யோசித்தும் அடையாளம் பிடிபடவேயில்லை.
எப்படியோ சமாளித்து பேசிவிட்டு விடை பெற்றோம். முதலில் என்னைக் கூப்பிட்ட அம்மாள், அவர்கள் பிறந்த தோட்டத்தின் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களின் அடையாளம் சட்டென்று மனதில் தோன்றவில்லை.
பிறகு திரும்பி வரும்போதுதான் ஒரு மாதிரி கணக்குப் போட்டுப் பார்த்ததில், ஆஹா, அவர்களல்லவா இவர்கள் என்று அடையாளம் துலங்கியது. அவர்கள் என் மனைவியின் ஒன்று விட்ட அக்காளுக்கு நாத்தனார். அவர்களின் கணவர் எனக்கு பால்யத்திலிருந்து நண்பர். அவர்களின் அண்ணன் என்னுடன் கல்லூரியில் படித்தவர்.
மிகவும் நெருங்கிய உறவுதான். ஆனாலும் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. இரவு முழுவதும் இதே யோசனையாகப் போய்விட்டது. எனக்கு இந்த மாதிரி உறவுக்காரர்களை சரியாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. இது என் ஒரு பெரிய பலஹீனம்.
ஆனால் சிலர், ஒருவரை ஒரு முறை பார்த்துப் பேசினால் போதும், பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் கூட, நீங்கள் இன்னார்தானே என்று பெயரைச் சொல்லி அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அது ஒரு கொடுப்பினைதான்.