உலக இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜூலை, 2016

ஜோசியத்தை நம்பி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்.


                                  Image result for நவ கிரகங்கள்       
நமது சூரிய மண்டலத்தின் அமைப்பைப் பற்றி அநேகர் அறிந்திருப்பார்கள். படிக்காதவர்கள் கூட "நவக்கிரகங்கள்" என்றால் புரிந்து கொள்வார்கள்.

சூரியன் ஒரு நட்சத்திரம். அது நிலையாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. (இது உண்மையா, கற்பனையா என்று தெரியாது). சூரியனைச்  சுற்றி பல கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியும் ஒன்று. அனைத்து கிரகங்களும் சூரியனை பல வேகங்களில் சுற்றி வருகின்றன. இந்த வானவியல் உண்மைகள் எல்லாம் அரசல் புரசல்களாக எல்லோருக்கும் தெரியும்.

 இந்த கிரக நிலைகளைப் பற்றிய சாஸ்திரம் வானவியல் சாஸ்திரம். இந்த வானவியல் மிகவும் நுட்பமானது. கணித அடிப்படையில் அமைந்தது. மிகவும் துல்லியமாக கிரக நிலைகளைக் கணிக்கும் வல்லமை உள்ளது.

ஜோதிடம் என்கிற சாஸ்திரம் இந்த கிரக நிலைகளை அடிப்படையாக வைத்து தோன்றிய ஒரு கலை. வானவியல், கணக்குகளின் அடிப்படையில் துல்லியமாக அமைந்துள்ளதை வைத்து இந்த ஜோசியர்கள், ஜோதிட சாஸ்திரமும் வானவியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே இதுவும் கணிதத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. ஆகவே துல்லியமானது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலானோர் இந்த வாதத்தை நம்புகிறார்க்ள.

ஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறக்கும்போது இந்த நவக்கிரகங்களும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும். அதிலிருந்து வரும் கிரணங்கள்  அப்போதுதான் பிறந்த அந்த ஜீவனைப்  பாதிக்கும். இந்தப் பாதிப்பில்தான் ஒருவனுடைய விதி அடங்கியிருக்கிறது. இந்த கிரகங்கள் இடம் மாறும்போது அந்த ஜீவனின் நிலையும் மாறுகின்றது. இந்த மாற்றங்களுக்கு ஏற்பத்தான் அவனுடைய வாழ்க்கை அமைகின்றது.

சூரிய மண்டலத்திலுள்ள பல்வேறு கிரகங்களிலிருந்து கிரணங்கள் (Electro-magnetic Radiations) பூமிக்கு வருகின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆகவே ஜோதிடர்கள் இப்படிச் சொல்லும்போது பெரும்பாலான மக்கள் "ஆஹா, ஜோதிடம் ஒரு உண்மையான விஞ்ஞான சாஸ்திரம்தான்" என்று நம்பி விடுகிறார்கள்.

சரி, நடைமுறைக்கு வருவோம். முதல் குறிப்பு - கிரகங்களின் நிலை ஒரு ஜாதகனின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது வெறும் யூகமே. இதற்கு எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்களோ அல்லது நடைமுறை ஆதாரங்களோ கிடையாது. ஒரு ஜாதகனின் கடந்த கால வாழ்க்கையை துல்லியமாகச் சொல்லிய பல ஜோதிடர்கள் உண்டு. ஆனால் அந்த ஜாதகனின் எதிர்காலம் பற்றி அப்படி துல்லியமாகச் சொன்னவன் எவனுமில்லை.

ஜோதிடர்கள் தங்கள் வாக்குச் சாதுர்யத்தினால் மக்களை வசப்படுத்துகிறார்களே தவிர கிரகங்களின் நிலைக்கும் ஜாதகனின் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை அறிந்தவன் எவனுமில்லை. மக்கள் ஜோதிடத்தின் பேரில் வைத்திருக்கும் தங்கள் அதீத நம்பிக்கையினால் ஜோதிடன் சொல்வது அப்படியே நடக்கும் என்று நம்பி தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

குறிப்பாக கல்யாணத்திற்காக ஜோசியம் பார்க்கும் பல பெற்றோர்கள் ஜோசியனின் வார்த்தைகளை நம்பி தங்கள் வாரிசுகளின் கல்யாணங்களைத் தள்ளிப் போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த வாரிசுகளின் வயது அதிகமாகி அவர்களுக்கு நல்ல வரன் அமையாமல் போகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இந்த மாதிரி அவலங்கள் அதிகமாக இருக்கின்றன.

ஒவ்வொருவரும் தாங்கள்தான் சிந்தித்து இந்த அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும்.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

மருமகன்களுக்குப் பிடித்த மாமனார் எப்படியிருப்பார்?


வர வர பதிவுகளுக்கு சப்ஜெக்ட் தேத்தறது கஷ்டமாப் போச்சுதுங்க. எத்தனை நாட்களுக்கு விவகாரமில்லாத சப்ஜெக்டுகளை வைத்தே காலத்தை ஓட்டறது? அதனால கொஞ்சம் வெவகாரமான சப்ஜெக்டைப் பிடித்திருக்கிறேன். நண்பர் ஸ்ரீராம் தன் பின்னூட்டத்தில் ஒரு சப்ஜெக்ட் கொடுத்து உதவியிருக்கிறார்.

இது பெரிய உதவி அல்லவா? அவருக்கு மிக்க நன்றி.

பதிவிலிருந்து விலகி ஒரு கேள்வி... ஏன் மாமனாருக்கும் மருமகன்களுக்கும் ஒத்துக் கொள்வதேயில்லை?!! அதுபோலவே நாத்தனார் Vs அண்ணி..!

நான் மருமகனாக இருந்து இப்போது மாமனாராக இருக்கிறேன். எனக்கு மூல நட்சத்திரம் ஆனதால் மாமனார் இல்லாத வீட்டில் பெண்ணைக் கட்டினேன். ஆகவே எனக்கு மாமனாரை விரட்டும் பாக்கியம் இல்லாமல் போயிற்று.

எனக்கு இரண்டு பெண்கள். ஆகவே இரண்டு மாப்பிள்ளைகள்.

பொதுவாக அனைத்து தகப்பனார்களுக்கும் பெண் குழந்தைகள் பேரில்தான் பாசம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டும் பெண்கள் என்பதால் இந்த வித்தியாசத்தை நான் அனுபவித்ததில்லை.

இந்த இயற்கையினால், பெண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது தன் சொத்தைப் பறிகொடுத்தது போல், ஒவ்வொரு தகப்பனும் உணருவான். தாய்க்கு அந்த உணர்வு வராது. ஏனென்றால், அவள் இந்த நடைமுறையை நன்கு அனுபவித்திருக்கிறாள்.

சொத்தைப் பறிகொடுத்தவனுக்கு, அந்தச் சொத்தை பிடுங்கி அனுபவித்துக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் எரிச்சல் வருவது இயல்புதானே. இதுதான் மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் வரும் பிரச்சினை.

அது போக, மாமனாரிடம் இருக்கும் மற்ற சொத்துக்ளையும் ஏன் நமக்கே, இப்பொழுதே  கொடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு மருமகனுக்கும் தோன்றுவது இயற்கை. இது மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்க்கிறது. இப்போதெல்லாம் பெண் பார்க்கப் போகும்போதே, மாமனாரின் உடல் நிலையையும் ஒரு நோட்டம் போட்டுவிடுகிறார்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

இதே மாதிரிதான் நாத்தனார்-அண்ணி பிரச்சினையும். இவ்வளவு நாளாக தங்கைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த அண்ணன்காரன், தனக்கு கல்யாணமானவுடன் தன் பெண்டாட்டிக்குத்தான் எல்லாம் வாங்கிக் கொடுப்பான். தங்கையை புறக்கணித்து விடுவான். இதனால் நாத்தனாருக்கு அண்ணி பேரில் பொறாமை வந்து விடுகிறது.

இது உலக இயற்கை. இந்த மனத்தாங்கல்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

எல்லா மருமகன்களுக்கும் பிடித்த மாமனார் சொத்தையெல்லாம் மருமகன் பேரில் எழுதி வைத்துவிட்டு இப்படித்தான் சுவரில் தொங்கிக்கொண்டு இருப்பார்.