எலும்பு வைத்தியம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலும்பு வைத்தியம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஜனவரி, 2015

எலும்பு முறிவு வைத்தியம்

                                            
மனித உடம்பு பெரும்பாலும் தனக்கு வரும் உபாதைகளைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றது ஆகும். அது அவ்வாறு தன்னைத்தானே சரி செய்து கொள்ளும்போது அதற்கு நாம் இடைஞ்சல் செய்யாமல் இருந்தால் போதும்.

அதே போல் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களை அதற்கு துணை செய்தால் மட்டும் போதும், அவை தானாகவே சரியாய் விடும். ஆனால் அவ்வாறு சரியாக கொஞ்சம் நாட்கள் ஆகும். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும்.

இந்த நுணுக்கத்தை நம் நாட்டின் பரம்பரை வைத்தியர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். குறிப்பாக நம் நாட்டின் நாவிதர்கள்தான் அந்தக் காலத்தில் வைத்தியர்களாகவும் இருந்தார்கள். மேல் நாட்டிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

பிற்காலத்தில் ஆங்கில மருத்துவம் (அலோபதி மருத்துவ முறை) பிரபலமாக ஆரம்பித்த பிறகுதான் எலும்பு முறிவு வைத்தியம் என்று ஒரு பிரிவு அந்த வைத்திய முறையில் உண்டாகியது. இதிலும் அந்தக் காலத்தில் நாட்டு மருத்துவர்கள் கடைப்பிடித்த முறைகளைத்தான் நவீனமான வழியில் பயன்படுத்தினார்கள். தற்காலத்தில்தான் ஆபரேஷன், பிளேட் வைத்தல் ஆகியவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

முறிந்த எலும்பை சரியான முறையில் வைத்து அதை அசையாதவாறு கட்டி வைத்திருந்தால் அது இயற்கையாகவே கூடி விடும். அந்த மாதிரி எலும்பைச் சரி செய்யும்போது ஏற்படும் வலியைத் தாங்கிக்கொள்ள ஆங்கில வைத்தியத்தில் மயக்க மருந்து கொடுப்பார்கள். நாட்டு வைத்திய முறையில் சாராயம் குடித்து விட்டு வரச்சொல்வார்கள்.

ஆனால் இந்த இரண்டு முறைகளிலும் தேவைப்படும் பணம் இருக்கிறதே, அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு ஒப்பாகும்.

நாட்டு வைத்தியம் செய்து கொள்ள சில நூறு ரூபாய்கள் போதும். ஆனால் ஆங்கில முறைப்படி வைத்தியம் செய்ய பல ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படும்.

அப்படிப்பட்ட ஒரு நாட்டு வைத்தியசாலை கோவை மாவட்டத்தில் சத்தியமங்கலத்திலிருந்து கோபி போகும் வழியில் சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் இருக்கிறது.


அங்கு ஒரு பெண்மணி தன் பாதத்தில் ஏற்பட்டுள்ள சுளுக்குக்கு வைத்தியம் செய்து கொள்கிறார்.இங்குள்ள வைத்தியர்கள் பெரும்பாலும் நாவிதப் பரம்பரையைச் சேர்ந்தவர்களே. எப்படிப்பட்ட சிக்கலான எலும்பு முறிவானாலும் அதை சரி செய்து விடுவார்கள். இங்கு வந்து குணமாகாமல் திரும்பினவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.

இவர்கள் உபயோகிக்கும் ஸ்பெஷல் எண்ணையை வேண்டுபவர்களுக்கு விலைக்கும் தருகிறார்கள். இது கைகால்களில் ஏற்படும் வலி, எலும்புகளில் லேசாக அடிபட்டு ஏற்படும் வலி ஆகியவைகளுக்கு கைகண்ட மருந்தாகும். 150 மில்லி கொண்ட பாட்டில் விலை வெறும் 70 ரூபாய் மட்டுமே. என் அனுபவத்தில் அயோடெக்ஸ் போன்றே குணம் தருகின்றது. 

நான் இந்த வைத்தியர்களுக்கு ஏஜன்ட்டோ என்று சந்தேகப்படவேண்டாம். என் சொந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.