என்னால் புதிய பதிவுகள் எழுத முடிவதில்லை. ஆனாலும் பிளாக்கை உயிருடன் வைத்திருக்க ஆசை. ஆகவே என்னுடைய அனைத்து பதிவுகளையும் மீள் பதிவாகப் போடுகிறேன்.

கடன் வாங்குவது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடன் வாங்குவது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஏப்ரல், 2011

கடன் வாங்கி விட்டுத் திருப்பித் தராமல் சமாளிப்பது எப்படி?“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று அந்தக் காலத்தில் கம்பன் எழுதினான். அவன் இப்போது இருந்தால் “கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்” என்று எழுதியிருப்பான்.   

பொதுவாக யாராக இருந்தாலும் கடன் வாங்கும்போது அந்தக் கடனை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்பதை யோசித்துத்தான் கடன் பத்திரத்தில் கையெழுத்து போடுவார்கள். ஆனால் சிலர் கடன் வாங்கினபின் இருக்கும் நிலையைப் பார்த்தால் அவர் கடன் வாங்கின மாதிரியே தெரியாது. எப்போதும் போல் டம்பமாகச் செலவு செய்து கொண்டும், சவடால் அடித்துக் கொண்டும் இருப்பார்.

இன்னும் சிலபேர் “எனக்கு இரண்டு கோடி கடன் இருக்கிறதாக்கும்” என்று பெருமையாகக் கூட சொல்லிக்கொள்ளுவார்கள். அதாவது கடன் இரண்டு கோடி இருந்தால் அவர் சொத்து எவ்வளவு இருக்குமோ என்று நாம் யூகித்துக்கொள்ள வேண்டுமாம். நான் யாருக்காவது ஒரு பத்து ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தால் அன்று இரவு முழுவதும் சரியாகத் தூக்கம் வராது. அடுத்த நாள் முதல் வேலையாக அந்தப் பணத்தைக் கொடுத்த பிறகுதான் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருக்கும்.

ஆனால் இந்த இரண்டு கோடிக்காரரோ சர்வ சாதாரணமாக இருக்கிறார். எப்போதும்போல் சாப்பிடுகிறார், எப்போதும்போல் தூங்குகிறார். இவரால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்பது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம்!

அதைவிட ஆச்சரியம் எந்த மடையர்கள் இவரை நம்பி இவ்வளவு கடன் கொடுத்தார்கள் என்பதுதான். இந்த மாதிரி கடன் வாங்கியிருப்பவர்களின் வாய்ச்சாலம் அருமையானது. இவர்கள் பேச்சைக் கேட்பவர்கள் இவருக்கு கடன் கொடுப்பது நம் பாக்கியம் என்று நம்புகிற அளவுக்கு பேச்சுத்திறமை கொண்டவர்கள். அப்படி கடன் கொடுப்பவர்களும் வெளியில் நான் இன்னாருக்கு கடன் கொடுத்திருக்கிறேனாக்கும் என்று பெருமை பேசிக்கொள்வார்கள். பணம், யானை வாயில் போன கரும்புதான் என்பது ரொம்ப நாள் கழித்துத்தான் அவர்களுக்கு உறைக்கும்.

கடன் கொடுத்தவர் கடன் வாங்கினவர் வீட்டுக்குப் போனால் அவருக்கு கிடைக்கிற மரியாதையே தனி தினுசாக இருக்கும். நிறைய சமயங்களில் அவரைப் பார்க்கவே முடியாது. ஏதாவது ஒரு சமயத்தில் பார்க்க முடிந்தாலும் “எதுக்கய்யா வீட்டுக்கெல்லாம் வர்ரே? உன் பணத்தை யாரும் தூக்கீட்டு ஓடிவிட மாட்டார்கள். உன் வீடு தேடி பணம் வரும். இனிமேல் இங்க வீட்டுக்கு வர்ர வேலையெல்லாம் வச்சுக்காதே” என்று நாயை விரட்டுகிற மாதிரி விரட்டுவார்கள். இவனுக்கு என்னமோ தனக்கு கடன் கேட்டுப் போன மாதிரி ஒரு எண்ணம் வரும். சில சமயம் ஆளைவிட்டு மிரட்டுவார்கள். கொலை நடந்த கேஸ்களும் உண்டு.

எனக்கு வாழ்நாள் ஆசை ஒன்று இருக்கிறது. நாமும் இந்த மாதிரி ஒரு இரண்டு கோடி கடன் வாங்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. சக பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அப்படி இரண்டு கோடி கடன் கொடுக்கக் கூடிய வள்ளல்கள் (அதாவது இளிச்சவாயர்கள்) யாராவது இருந்தால், உடனே தெரியப்படுத்தினால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். தவிர கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போடும் அரிய வாய்ப்பை உங்களுக்கே கொடுக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்.