கண்டிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

எனக்கெதிராக மாணவர்கள் நடத்திய ஸ்ட்ரைக்


நான் இப்படி ஒரு கொடுங்கோல் ஆசிரியனாக கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் என்னை ஒரு விடுதிக் காப்பாளனாகவும் நியமனம் செய்துவிட்டார்கள். கொஞ்ச காலம்  இந்தப் பதவியில் வேறூன்றிய பிறகு, ஒரு நாள் நானும் இன்னொரு சக விடுதிக்காப்பாளரும் ஒரு விடுதியில் மாணவர்கள் அறைகளுக்குச் சென்று பார்வையிட்டோம்.

அந்தக்காலத்தில் இப்படியெல்லாம் விடுதிக்காப்பாளர்கள் மாணவர்களின் அறைகளைப் பார்ப்பது வழக்கம். இன்று காப்பாளர்கள் மாணவர்களைப் பார்ப்பதே இல்லை. அவ்வளவு பயம்.

நாங்கள் அனைத்து அறைகளையும் பார்வையிட்டு விட்டு வெளியே வரும்போது மாணவர்கள் அனைவரும் ஓவென்று ஊளையிட்டார்கள். அதாவது நாங்கள் அவர்கள் அறைகளைப் பார்வையிட்டதற்கு எதிர்ப்பு காட்டுகிறார்களாம்.

நானும் ஒரு காலத்தில் மாணவனாக இருந்தவன்தானே. இவர்கள் டெக்னிக்கெல்லாம் தெரியாதா என்ன? வெளியில் வந்தவன் உள்ளே போய் எல்லா மாணவர்களையும் ரூம்களை விட்டு வெளியே வரச்சொன்னேன். எல்லோரும் வந்தார்கள். அவர்களைப்பார்த்து இப்போது எதற்காக ஊளையிட்டீர்கள் என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்வார்களா என்ன? எல்லோரும் ஆடு திருடின கள்ளன் மாதிரி முளித்துக்கொண்டு நின்றார்கள்.

நான் சொன்னேன்- நானும் உங்களை மாதிரி மாணவனாக இருந்தவன்தான். இப்ப கூட நான் ஓங்கி சத்தம் போட்டா அது மாதிரி உங்கள்ல ஒருத்தனும் போட முடியாது. நீங்க இப்ப சத்தம் போட்டது எங்களை அவமானப் படுத்துவதற்காகத்தான் என்பது எனக்குத் தெரியும். நாளை மதியத்திற்குள் நீங்கள் இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால், உங்களில் ஒருவருக்கும் இந்த வருடம் அரசு உதவித்தொகை கிடைக்காமல் செய்து விடுவேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

அடுத்த நாள் காலை ஆபீஸ் போனால் அந்த குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் ஸ்ட்ரைக் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கோரிக்கை, என்னை விடுதிக் காப்பாளனாக தொடர அனுமதிக்கக் கூடாது என்பதுதான். கல்லூரி டீன் இடம் போய் பெடிஷன் கொடுத்திருக்கிறார்கள். அவர் என்னைக் கூப்பிடவுமில்லை, என்ன ஏது என்று விசாரிக்கவும் இல்லை. மாணவர்களைத் திட்டிவிட்டு, எல்லோரும் போய் ஒழுங்காப் படிக்கற வேலையைப் பாருங்க என்று சொல்லி அனுப்பி விட்டார்.

பிறகு வேறு ஒரு வகுப்பு மாணவர்கள் வந்து என்னிடம் சொல்லியது, சார் அப்படி உங்களை காப்பாளர் பதவியிலிருந்து நீக்கியிருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் ஸ்ட்ரைக் செய்திருப்போம் என்றார்கள். இப்படி எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர அனுபவித்தேன்.

இன்றும் என் பழைய மாணவர்கள் என்னைச் சந்திக்கும்போது சார், உங்கள் கண்டிப்பால்தான் நாங்கள் இன்று நன்றாக இருக்கிறோம் என்று சொல்வார்கள். அப்போது நினைத்துக் கொள்வேன் - நம் கண்டிப்பு வீண் போகவில்லை என்று.