களிமண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களிமண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தலைல என்ன களிமண்ணா இருக்கு?

இந்த வசவை பலரும் தங்கள் இளம் வயதில் கேட்டு வருந்தியிருக்கலாம். நீங்கள் அப்படி வருந்தியிருக்கத் தேவையில்லை. ஏனென்றால் களிமண்ணும் மூளையும் ஒரே வேலையைத்தான் செய்கின்றன. அது எப்படி என்று பார்ப்போம்.

மூளை என்ன செய்கிறது? தான் கேட்கும் விஷயங்களை எல்லாம் தன்னுள் வைத்துக் கொண்டு நமக்குத் தேவைப்படும்போது கொடுக்கிறது. அவ்வளவுதானே. களிமண் எவ்வாறு இந்த வேலையைச் செய்கிறது என்று பார்க்கலாமா?

மண் என்பது பாறைகள் சிதைந்து உருவானதாகும். இதில் பல அளவிலான துகள்கள் இருக்கின்றன. அளவில் 0.002 மி.மீ. க்கு குறைவான துகள்களையே களிமண் துகள்கள் என்கிறோம். இதன் நுண்ணிய அளவினால் இது சில சிறப்பான குணங்களைக் கொண்டிருக்கிறது.

இதன் மேற்பரப்பில் மிக நுண்ணிய மின் காந்த சக்தி அணுக்கள் இருக்கின்றன. அந்த மின் அணுக்கள், பல வித கனிம அணுக்களை ஈர்த்து தன்னிடம் வைத்துக் கொள்கிறது. பயிர்கள் மண்ணில் வளரும்போது அவைகளுக்குத் தேவையான சத்துக்களை களிமண் தன்னிடமிருந்து கொடுக்கிறது. இந்த தன்மை களிமண்ணிடம் இல்லாதிருந்தால் நாம் விவசாயமே செய்ய முடியாது.

இயற்கை உரங்களை நிலத்தில் போடும்போது, அதிலுள்ள அங்ககப் பொருள் இந்தக் களிமண்ணுடன் சேர்ந்து ஒரு கூட்டுப் பொருளாக மாறுகிறது. இந்தக் கூட்டணி விவசாயத்திற்கு பல விதங்களில் உதவுகின்றது. விவசாயப் பயிர்களுக்கு வேண்டிய அனைத்து ஊட்டங்களும் இந்தக் கூட்டணியில் இருந்துதான் கிடைக்கின்றன.

இப்போது புரிகிறதா, களிமண்ணின் மகிமை. மூளை என்ன செய்கிறது? எல்லா செய்திகளையும் தன்னிடம் சேர்த்து வைத்துக்கொண்டு நாம் வேண்டும்போது கொடுக்கிறது. ஆகவே, யாராவது உங்கள் தலையில் என்ன களிமண்ணா இருக்கிறது என்று கேட்டால் பெருமையுடன் "ஆமாம்" என்று சொல்லுங்கள்.

களிமண் இல்லையென்றால் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லையென்றால் மனிதன் இல்லை. மனிதன் இல்லையென்றால் இந்த வலைத்தளமும் இல்லை. ஆகவே களிமண்ணின் மகத்துவத்தை மனதில் நன்றாகப் பதிந்து கொள்ளுங்கள்.

இப்படிச் சொல்கிறீர்களே, உங்கள் தலையில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? கொஞ்ச நாள் பொறுங்கள். மண்டையை உடைத்துப் பார்த்து விடுவோம்! நிச்சயம் களிமண்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை!