காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 அக்டோபர், 2014

ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்

இளம் வயதில் ஏற்படும் உறவுகள் பல பரிமாணங்களில் ஏற்படும். அறியாப் பருவ சிநேகிதம் கால ஓட்டத்தில் எப்படி பரிணமிக்கும் என்று யூகிக்க முடியாது. சகோதர பாசமாகவோ அல்லது காதலாகவோ மாறும் சாத்தியக் கூறுகள் சூழ்நிலையைப் பொருத்தே அமையும்.

இந்தக் கதையில் அவன் அதைக் காதலாக எண்ணுகிறான். ஆனால் அந்தப் பெண்ணோ அதை சகோதர பாசமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள். இதற்கு காரணம் பெண்களின் மன வளரச்சி ஆண்களை விட துரிதமாக ஏற்பட்டு விடுகிறது. பெண் தன் எதிர் காலத்தை துல்லியமாகத் திட்டமிடுகிறாள். ஆணுக்கு அந்த திறமை வெகு நாட்களுக்குப் பிறகே ஏற்படுகிறது.

இந்த நுணுக்கமான உணர்ச்சிப் போராட்டத்தை வெகு நாசூக்காக கதாசிரியர் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. எந்த விதமான விரசங்களும் இல்லாமல் ஒரு காதல் கதையை சொல்வது மிகவும் சிரமம். திரு வை.கோ. அதை நிறைவாக செய்திருக்கிறார்.

தன் கற்பனைகள் சிதையும்போது கதாநாயகன் அதை மிகவும் நாகரிகமாக எடுத்துக் கொள்கிறான். இந்தக் கதை ஐம்பது வருடங்களுக்கு முன்  இருந்த சமூக சூழ்நிலையில் நடக்கக் கூடிய கதை. இன்று காலம் மாறி விட்டது. கதாநாயகன் கதாநாயகிக்கு தான் வரைந்த அவளுடைய ஓவியத்தை பரிசாக தருவதற்குப் பதில் முகத்தில் ஆசிட் வீசியிருப்பான்.

ஒரு நல்ல எளிமையான கதை. மனதிற்கு இதமாக இருந்தது.


செவ்வாய், 30 செப்டம்பர், 2014

காதலாவது கத்திரிக்காயாவது

விமர்சனம்.


காதலாவது கத்திரிக்காயாவது என்ற வைகோவின் சிறுகதைக்கு என் சிறு விமர்சனம். இதைப் படித்த பின் இந்த சிறுகதையைப் படிக்கத் தோன்றினால் இங்கே செல்லவும்.

காதலாவது கத்திரிக்காயாவது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அதன் பொருள் என்னவென்றால் சமூகத்தில் வாழும் சாதாரண மனிதர்களுக்கு காதல் என்பது ஒரு எட்டாக்கனி அல்லது காதல் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒன்றல்ல என்பதேயாகும்.

ஆனாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் இயற்கையை ஒட்டிய உணர்வுகள் வரும் என்பதை அன்றாட வாழ்க்கைப் போராட்ட நிகழ்வுகளுக்கிடையே பின்னியிருக்கும் விதம் அருமை. ஒரு ஆதரவற்ற இளைஞனுக்கும் இளைஞிக்கும் தற்செயலாக ஏற்படும் சந்திப்பு, பரஸ்பர நட்பாக மாறி இறுதியில் காதலாக உருவெடுக்கும் ரசாயன மாற்றத்தை கதாசிரியர் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.

கதையில் குறிப்பிடும் நிகழ்வுகள் சாதாரணமாக யாருக்கும் ஏற்படக்கூடியவை. அவைகளைப் பின்னி ஒரு காதல் கதையை புனைந்த வை.கோ. அவர்களை பாராட்டவேண்டும். கதையின் ஓட்டம் ரோல்ஸ்ராய் காரில் பயணம் செய்வது போல் அவ்வளவு சுகமாக இருக்கிறது. இது அவரின் ஒரு தனித்துவம்.


பரமு காமாட்சி ஜோடியின் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்று கதையைப் படித்தவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இயற்கையாகவே தோன்றும்.