காப்பி பேஸ்ட் பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காப்பி பேஸ்ட் பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

காப்பி பேஸ்ட் கலைஞர்கள்

பதிவர்களில் பல வகை இருக்கிறார்கள்.

பிரபல பதிவர்கள்:  இவர்கள் என்ன பதிவிட்டாலும் ஜே போடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கறது. இவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

மொக்கைப்பதிவர்கள்:  இவர்கள் பதிவில் ஒரு விஷயமும் இருக்காது. ஆனால் முந்நூறு பின்னூட்டங்கள் கண்டிப்பாக போடப்படும்.

சாதாரணப் பதிவர்கள்:  கோயில், குளங்கள், பஜ்ஜி, போண்டா, எங்க வீட்டுக் கல்யாணம் இவைகளைப் பற்றி எழுதுபவர்கள். பதிவுலகில் இவர்கள்தான் மெஜாரிட்டி.

நவயுகப் பதிவர்கள்:  இவர்கள் அறிவு ஜீவிகள். சமூகத்தைச் சீர்திருத்தப் போகிறவர்கள். புதுப் புது தலைப்புகளில் பதிவு போடுவார்கள். ஆனால் அவ்வப்போது என் பதிவை இவன் திருடீட்டான், அவன் திருடீட்டான் என்று புலம்பல் பதிவுகளும் போடுவார்கள்.

காப்பி பேஸ்ட் பதிவர்கள்:  இவர்கள் பாடுதான் இன்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் சொந்தமாக பதிவு எழுதி தங்கள் மூளையை வீணாக்க மாட்டார்கள். ஏனென்றால் அது இல்லை. ஆகவே அடுத்தவர்களின் பதிவை அப்படியே காப்பி செய்து தங்கள் பதிவில் பேஸ்ட் செய்து விடுவார்கள். இது நியாயமா, அநியாயமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அதற்காக இவர்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகம். மற்ற பதிவர்களெல்லாம் இவர்களை புழு, பூச்சியை விட கேவலமாகப் பேசுகிறார்கள்.

இந்த காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு உதவுவதற்காக நான் செய்த உத்தி என்னவென்றால், கீழே கண்ட அறிவிப்பை என் பதிவின் தலைப்பிலேயே கொடுத்து விட்டேன்.

இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் மற்றும் சகபதிவர்கள் உபயோகத்துக்காக...தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம். எங்கிருந்து எடுத்தோம் என்று சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் இன்னொரு வருத்தமான செய்தி: இந்தப் பதிவில் பின்னூட்டங்கள் மற்றும் ஓட்டுப் பட்டைகள் உண்டு.

ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். ஒரு வேளை என்னுடைய பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்வதற்கு லாயக்கற்றவையோ என்னமோ, தெரியவில்லை.

இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போய் விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் வழியில்லாமல் எங்க ஊர்ல இருக்கிற புளிய மரத்தையெல்லாம் ரோட்டை அகலப்படுத்துகிறேன் என்று வெட்டிவிட்டார்கள். புளிய மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டால்தான் பேயான பிறகு அங்கேயே வசிக்கலாம்?

சக பதிவர்களிடமிருந்து நான் கேட்கும் உதவி என்னவென்றால், உங்கள் ஊரில் எங்காவது புளியமரம் தென்பட்டால் உடனே எனக்குத் தெரிவித்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் சேர இறைவனை வேண்டிக்கொள்வேன்.