கீரைவடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீரைவடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 மார்ச், 2015

கீரை வடையும் அன்னபூர்ணா ஹோட்டலும்.

                                        Image result for கோவை அன்னபூர்ணா ஓட்டல்
இது ஐம்பது வருடத்திற்கு முந்திய கதை. நான் 1960 களில் விவசாயக் கல்லூரியில் உதவி ஆசிரியனாகப் பணி புரிந்த காலம். நாங்கள் மொத்தம் 6 பேர். இளநிலை விவசாயப் படிப்பு அப்போது 4 வருடத்துப் படிப்பாகும். இப்போதும் அப்படித்தான்.

ஒவ்வொரு வருடத்திலும் 162 மாணவர்கள். இவர்களுக்கு வேதியல் பாடத்தில் செய்முறை வகுப்புகள் எடுப்பதுதான் எங்கள் வேலை. செய்முறை வகுப்புகள் அநேகமாக காலை வேளைகளில்தான் இருக்கும். காலை 7 மணிக்கே வகுப்புகள் ஆரம்பமாகும். 9 மணிக்கு ஒரு பேட்ச் முடிந்து 9.30 க்கு அடுத்த பேட்ச் வரும். இந்த பேட்ச் 11.30 க்கு முடியும். ஒவ்வொரு பேட்சிற்கும் மூன்று ஆசிரியர்கள் வேண்டும்.

இந்த வேலையை நாங்கள் முறை வைத்துக் கொண்டு நிறைவேற்றுவோம். தினமும் வகுப்புகள் உண்டு. காலையில் வகுப்புகள் முடிந்து விடும். பிறகு வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மாலையில் மூன்று மணிக்குத்தான் ஆபீசுக்கு வருவோம். எல்லோரும் பக்கத்தில் குவாட்டர்சில்தான் இருந்தோம்.

மாலையில் என்ன வேலை என்றால் பசங்களுடைய ரிக்கார்டு நோட்டுகளைத் திருத்துவதுதான். இதை அப்படியே அரட்டை அடித்துக்கொண்டே செய்யும்போது மாலை 4 மணி ஆனால் வயிற்றுக்குள் ஒரு மணி அடிக்கும். அதாவது அதற்கு ஏதாவது சிறுதீனி வேண்டும் என்று அர்த்தம்.

அப்போதுதான் வடகோவையில் சென்ட்ரல் தியேட்டர் என்று ஒன்று புதிதாகக் கட்டியிருந்தார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த கேன்டீனில் கீரைவடை என்று ஒன்று போடுவார்கள். சாதாரணப் பருப்பு வடை மாவில் ஏதாவது ஒரு கீரையை நன்றாக சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு பிசைந்து வடை சுடுவார்கள். வடை மொறுமொறுவென்று அவ்வளவு ருசியாக இருக்கும்.
விலை கொஞ்சம் ஜாஸ்தி.ஒரு வடை அரை அணா  என்று நினைவு.

ஆறு பேருக்கு ஆளுக்கு நாலு வடை வீதம் 24 வடைக்கு எவ்வளவு ஆகும் பாருங்கள்? 12 அணா, சுளையாக முக்கால் ரூபாய். எங்களுக்கு அப்போது சம்பளமே மாதத்திற்கு 150 ரூபாய்தான். ஆனாலும் இது அத்தியாவசியச் செலவு என்பதால் முறை வைத்துக் கொண்டு (ஆளுக்கு ஒரு நாள்- வாரத்தில் ஆறு நாள்) செய்தோம். இது தவிர ஆறு பேருக்குக் காப்பி. ஒரு காப்பி விலை ஒன்றரை அணா. ஆறு காப்பிக்கு 9 அணா. 24 வடைக்கு 12 அணா. ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 21 ஆணா. அதாவது ஒரு முழு ரூபாயும் ஐந்து அணாவும். அதாவது இன்றைய கணக்கில் ஒரு ரூபாய் முப்பது பைசா.

தினம் ஒருவர் முறை வைத்துச் செலவு செய்வதால் ஒருவருக்கு வாரம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் ஐந்தணா அவ்வளவு பெரிய செலவாகத் தோன்றவில்லை. இது தவிர அவ்வப்போது பெரிய கடை வீதியில் உள்ள "பாம்பே ஆனந்த பவன்" ஓட்டலுக்குப் போகவேண்டி வரும். யாராவது ஒருவர் ஏதாவது ஒரு வாக்குவாதத்தில் சிக்கித் தோற்றுப்போனால் அவர் அன்று மற்றவர்களுக்கு அந்த ஒட்டலில் இட்லி சாம்பார் வாங்கித்தரவேண்டும். எப்படியும் இந்த வைபவம் வாரத்திற்கு ஒரு முறையாவது நடக்கும். அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

 எங்களுக்கு செய்முறை வகுப்புகளில் உதவி செய்வதற்காக "லேப் பாய்" என்று ஒரு கடைநிலை ஊழியர்கள் ஐந்தாறு பேர் உண்டு. மாலையில் இவர்களுக்கும் வகுப்புகள் இல்லாததால் வேறு வேலை இல்லை. இவர்களில் ஒருவனைப் பிடித்து கீரைவடை வாங்கவும் இன்னொருவனைப் பிடித்து காப்பி வாங்கவும் அனுப்புவோம். நான்கு மணிக்கு இவை இரண்டும் வந்து விடும். இவைகளைச் சாப்பிட்டு முடிக்கும் போது ஐந்து மணி ஆகிவிடும். அவ்வளவுதான். கடையைக் கட்டிவிட்டு வீட்டுக்குப் போய் கைகால் கழுவிவிட்டு 6 மணிக்கு ஆபீசர்ஸ் கிளப் போவோம். அந்தக் கதையை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இப்போ இந்தக் கீரைவடையின் மூலத்திற்கு வருவோம். அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் நூற்பாலைகள் அதிகம். அவைகளைப் போதுவாக நூல்மில்கள் என்று அழைத்துப் பிறகு வெறும் மில் என்றாலே நூல்மில் என்று ஆகிப்போனது. அதிகம் படிக்காத உள்ளூர் பசங்கள் எல்லாம் மில் வேலைக்குத்தான் போவார்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம். நாங்கள் 18 வருடம் படித்து எம்எஸ்சி பட்டம் வாங்கி பெரிய அரசாங்க உத்தியோகம் என்ற பெயரில் வேலை பார்க்க சம்பளம் 150 ரூபாய். ஸ்கூலுக்கே போகாமல் குண்டு விளையாடிக்கொண்டிருந்து விட்டு மில் வேலைக்குப் போகிறவர்களுக்கும் அதே 150 ரூபாய் சம்பளம். அது தவிர தீபாவளிக்கு 6 மாத சம்பளம் போனஸ் தருவார்கள்.

அன்றைக்கு இருந்த பொருளாதார நிலை அப்படி. இன்றைய நிலை எப்படி என்று சொன்னால் எல்லோருடைய வாயும் வயிறும் வெந்து விடும். வேண்டாம், அந்தப் பாவம் எனக்கு வேண்டாம். ஆனாலும் அப்படி மில் வேலைக்கு போய்கொண்டிருந்த சிலர் தாங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற குறிக்கோளுடன் பற்பல தொழில்கள் செய்து முன்னேறியிருக்கிறார்கள்.

அந்த மாதிரி நாலு பேர் சேர்ந்துதான் இந்த சென்ட்ரல் தியேட்டர் கேன்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்கள். அவர்களுடைய அம்மாவிற்கு சமையலில் கைப் பக்குவம் அதிகம். அவர்கள் வழிகாட்டுதலில் இந்தக் கேன்டீன் ஜேஜேவென்று ஓடியது. அவர்கள் போட்ட கீரை வடை கோயமுத்தூர் ஜில்லா முழுவதும் பெயர் பெற்றது.

இப்படியாக அனுபவம் பெற்ற அவர்கள் ஆர்எஸ்புரம் திவான் பகதூர் ரோட்டில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து சிறியதாக ஒரு ஓட்டல் ஆரம்பித்தார்கள். அவர்களின் முழு கவனமும் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் தரமாகவும் ருசியாகவும் விலை அதிகமில்லாமலும் இருக்கவேண்டுமென்பதில்தான் இருந்தது. இப்படி ஒரு ஓட்டல் நடந்தால் அது வளர்வதற்குத் தடை ஏது?

அந்த நாலு பேரும் அல்லும் பகலும் உழைத்தார்கள். அந்த ஓட்டல் வளர்ந்தது. சொந்தமாக இடம் வாங்கினார்கள். உள்ளூரில் கிளைகள் போட்டார்கள். எல்லாக் கிளைகளிலும் வியாபாரம் அமோகமாக நடந்தது. வெளியூரிலும் கிளைகள் ஆரம்பித்தார்கள். கோயமுத்தூர் வரும் வெளியூர் ஆட்கள் இந்த ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டால்தான் கௌரவம் என்ற அளவிற்கு இந்த ஓட்டல் பெயர் பெற்றது.

அந்த ஓட்டல்தான் இன்று கோவையில் கோலோச்சி வரும் அன்னபூர்ணா-கௌரிசங்கர் குரூப் ஓட்டல்கள்.
                                  Image result for அன்னபூர்ணா ஓட்டல்