கெட்ட காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கெட்ட காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜனவரி, 2012

பதிவுலகத்தின் சமீபத்திய சாபக்கேடு



பதிவுலகத்திற்குள் காலடி எடுத்துவைக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் வருகிறார்கள். தங்கள் எழுத்துக்கு உண்டான ஒரு கௌரவம் கிடைக்கும் என்று நம்பி வருகிறார்கள். ஆனால் நடப்பதென்னவோ அவர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறது.

பொதுவாக பதிவர்கள் எழுதும் சமாசாரங்கள் அவரவர்களுடைய தினசரி வாழ்க்கையை ஒட்டியேதான் இருக்கும். ஆன்மீகம், சினிமா, வாழ்க்கைச் சம்பவங்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாக அமைகின்றன. சிலர் கவிதை ஒன்றே எழுதுவார்கள். இந்தக் கவிதைகளில் பெரும்பாலும் உரைநடையை கவிதை மாதிரி சந்தி பிரித்துப் போடுவதுதான் நடக்கிறது. கவிதை நயத்தோடு இருக்கும் கவிதைகள் அரிது.  ஈழப்பதிவர்களுக்கு வன்னிப் போராட்டமே முக்கிய கருப்பொருள்.


அபூர்வமாக அரசியல் அல்லது சமுதாயப் பிரச்சினைகள் பற்றி ஒரு சிலர் ஆழமாக எழுதுவது உண்டு. ஆனால் அவை மிகவும் நீளமாக இருந்து விடுவதால் படிப்பவர்கள் குறைவு. மற்ற பதிவுகளையும் படிப்பவர்கள் பல காரணங்களினால் குறைந்துகொண்டே வருகிறார்கள். காரணம் என்னவென்று பார்த்தால், நல்ல கருத்துகளைக் கொண்ட பதிவுகள் குறைந்துகொண்டே போகின்றன.


இதைப் பற்றி நான் யோசித்ததில் சில உண்மைகள் புலனாகின. நல்ல பதிவுகள் எழுதிய சீனியர் பதிவர்கள் இன்று பதிவு எழுதுவதில்லை. பதிவுலகை விட்டே ஏறக்குறைய விலகி விட்ட நிலையில் இருக்கிறார்கள். புதிய பதிவர்களும் சில மாதங்கள் பதிவு எழுதிய பின் பதிவுலகம் சலிப்பூட்டுகிறது. அதனால் பதிவுலகத்தை விட்டு விலகி விடுகிறார்கள். இதற்கு பல காரணங்களைக் கூறலாம்.


முதல் காரணம் நல்ல எழுத்துகளுக்கு ஆதரவு இல்லை. பின்னூட்டம் இடுபவர்கள் பதிவின் நல்ல கருத்துகளுக்காகவோ அல்லது விவாதிக்கும்  பொருளுக்காகவோ பின்னூட்டம் இடுவது இல்லை. தங்களுக்குப் பிடித்த பதிவுகளுக்கே/பதிவர்களுக்கே பின்னூட்டமிடுகிறார்கள். மொக்கைப் பதிவு என்று சொல்லப்படுபவைகளுக்கு பதிவு இட்டு சில மணி நேரத்திலேயே நூறு பின்னூட்டங்களுக்கு மேல் இடப்படுகின்றன. அவைகளே திரட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றன.


இத்தகைய நிலை தொடர்வதால் புதிய, பழைய பதிவர்களின் ஆர்வம் குறைந்து போகின்றது. வருங்காலத்தில் பதிவுலகம் ஆதரவு இல்லாமல் மங்கிப்போகும். இது காலத்தின் கோலம். மாற்று வழிகள் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
முகநூல், டிவிட்டர் போன்றவை பதிவுலகத்தைவிட சுவையாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். எனக்கு நேரடி அனுபவம் இல்லை. பல பதிவர்கள் அந்த மாதிரி தளங்களுக்குப் போய்விட்டதாக ஒரு தகவல்.


பின்னூட்டங்கள், திரட்டிகளின் ரேங்க்குகள் இவைகளை மட்டும் நினைத்து பதிவு போடுபவர்களுக்கு இனி இங்கு இடம் இருக்காது. அப்படி பின்னூட்டங்கள், ரேங்குகள் கிடைக்கும் பதிவர்கள் மட்டும்தான் இனிமேல் பதிவுலகில் இருப்பார்கள். அவர்களின் பதிவுகளும் மொக்கையாகத்தான் இருக்கும். நானும் இந்த கால சுழற்சியில் விதிவிலக்கல்ல.