நானும் ஒரு காலத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். சந்தேகம் வேண்டாம். என் S.S.L.C. புத்தகத்தை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். சந்தேகப்படுபவர்கள் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம்.
அப்போதெல்லாம் பரீட்சைகள் ஏப்ரல் மாதம் பாதிக்குள் முடிந்து விடும். மீதி பாதி ஏப்ரலும் மே முழுவதும் கோடை விடுமுறை. ஒரு சில தினங்கள் பாட்டி ஊருக்குப் போய் வந்த பின் சொந்த ஊரில்தான் வாசம். பாட்டியின் ஊர் ஒன்றும் அயல்நாட்டில் இல்லை. என் சொந்த வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்தில்தான் இருந்தது. என் உறவினர்கள் அனைவரும் ஒரு ஐந்து மைல் சுற்றளவிற்குள்தான் இருந்தார்கள்.
வீட்டில் இருக்கும்போது உடன் படிக்கும் தோழர்களுடன் நாள் முழுவதும் ஊர் சுற்றுவோம். பகல் 12 மணிக்கு வீதிகளில் சுற்றிக்கொண்டு இருப்போம். அப்போது பெரிதாக வெய்யில் அடித்ததாக நினைவு இல்லை. அல்லது அந்த வயதில் அந்த வெய்யில் எங்களுக்கு உறைக்கவில்லையோ என்று தோன்றுகிறது.
அப்போதெல்லாம் கோவையில் எப்போதும் மேகமூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காற்றும் சிலுசிலுவென்று அடித்துக் கொண்டே இருக்கும். இதனால் நாங்கள் வெய்யிலை உணர்ந்ததே இல்லை. ஏழைகளின் ஊட்டி என்று வெள்ளைக்காரன் கோவைக்குப் பெயர் வைத்திருந்தான்.
இப்போது கோவையில் ஏப்ரல் மாதத்திலேயே வெய்யில் மிகக் கடுமையாக இருக்கிறது. 10 மணிக்கு மேல் வெளியில் தலை காட்ட முடிவதில்லை. அப்படிப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குடை பிடித்துக் கொண்டு செல்லவேண்டி இருக்கிறது. இது ஏன் என்று யோசித்தேன். வெய்யில் அதுவாகவே அதிகம் ஆகி விட்டதா? இல்லை எனக்கு வயதாகி விட்டதால் வெய்யிலைப் பொறுத்துக்கொள்ளும் சக்தி குறைந்து விட்டதா? அல்லது இரண்டும் சேர்ந்து இம்மாதிரி உபத்திரவம் கொடுக்கிறதா? புரியாமல் மயங்குகிறேன்.
ஆனாலும் வீதிகளில் ஜனங்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. சாலைகளில் தார் உருக ஆரம்பித்து விட்டது. இந்த சாலைகளிலும் பலர் காலில் செருப்பில்லாமல் நடந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இவ்வாறு நடக்க முடிகிறது என்று யோசித்தால் சரியான விடை கிடைக்கவில்லை.
வாழ்க்கைத் தரம் உயர உயர நம் மன நிலையும் உடல் நிலையும் வெகுவாக மாறி விடுகின்றன என்று கருதுகின்றேன். இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்று செய்ய முடிவதில்லை. ஐந்து கிலோமீட்டர் சாதாரணமாக நடந்து போய் வந்ததை நினைத்தால் கற்பனை போல் தோன்றுகிறது.
வசதிகள் வளர வளர மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை நினைக்கும்போது அதிசயமாகத் தோன்றுகிறது. அந்தக் காலத்தில் பணக்காரர்களின் சில நடவடிக்கைகளைக் கேலி செய்த நான் இப்போது அதே நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. ஆனாலும் சுகத்திற்குப் பழகி விட்ட உடம்பு கஷ்டங்களை ஏற்க மறுக்கிறது. இதுதான் உலக நியதி என்று நினைக்கிறேன்.