பொண்ணு சமைஞ்சா, ஒடனே அவ மாமனூட்டுக்குத்தான் சொல்லி அனுப்போணுங்க. இல்லீன்னா பெரிய வம்பு வளக்காயிருமுங்க. சமாசாரம் தெரிஞ்ச ஒடனே அவ மாமன் சம்சாரம், கூட நாலஞ்சு பேரைச்சேத்துட்டு, ஒரு புதுச்சீல, ரவிக்கை, சக்கரை, பளம் எல்லாம் வாங்கிட்டு இந்த சமைஞ்ச ஊட்டுக்கு வருவாங்க. அப்பல்லாம் சொந்தபந்தங்க எல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்லதான் இருப்பாங்க. அதனால எல்லாம் சட்டுப்புட்டுனு நடக்குமுங்க.
இங்கெயும் அக்கம்பக்கத்து ஊட்டுக்காரங்க எல்லாம் கூடிடுவாங்க. எல்லாருஞ்சேந்து அந்த புள்ளய ஒரு முக்காலி போட்டு கிளக்குமானா உக்கார வைப்பாங்க. வெந்தண்ணி ஒரு பெரிய குண்டாவுல கொண்டுவந்து பக்கத்துல வச்சுக்குவாங்க. கூட வெளயாடற சிறுசுக எல்லாம் வேடிக்கை பாக்க கூடிருமுங்க.
இருக்கெறதுல பெரிய சொமங்கலிதான் இந்த சீரெச்செய்யுமுங்க. சருகுச்சட்டில தண்ணி எடுத்து அதுல கொஞ்சம் மஞ்சப்பொடிய கலந்து அந்த தண்ணிய கையிலெ கொஞ்சம் எடுத்து மூணு தடவ அந்தப்புள்ள தலயச்சுத்தி கீள ஊத்துவாங்க. அப்பறமா எல்லாரும் மஞ்சப்பொடிய தண்ணிலெ நனச்சு அந்தப்புள்ள மூஞ்சில, களுத்து, கய்யில எல்லாம் பூசுவாங்க. அவியவிளுக்கு தெரிஞ்ச தமாசெல்லாம் ஆளாளுக்குப் பேசி, ஒரே ரவுசா இருக்குமுங்க.
அப்பறம் குண்டாவுல வச்சிருக்கற தண்ணிய அந்த சருகுச்சட்டிலெயெ மோந்து ஊத்தி அந்தப்புள்ளக்கி தண்ணி வாத்து உடுவாங்க. அப்பறம் மாமஞ்சம்சாரம் வாங்கிட்டு வந்திருக்கற புதுத்துணிய உடுத்தி வூட்டு பந்தவாசல்லெ முக்காலியப்போட்டு கெளக்குமாமா உக்கார வைப்பாங்க. அந்தப்புள்ளக்கி ஒரே வெக்கமாப்போயி தலயக்குனிஞ்சுகிட்டு உக்காந்துட்டிருக்கும்.
அதுக்கு முன்னால ஒரு மாத்து விரிச்சு அதுல ஒரு புள்ளார புடிச்சு வச்சிருவாங்க. புள்ளாருன்னா எப்படீன்னா, மாட்டுச்சாணி ஒரு கை ரொம்ப எடுத்து ஒரு கொளக்கட்டயாட்டம் புடிச்சு அதெக்கீள வெச்சு அதந் தலெல ரண்டு அருகம்பில்ல சொருகினா அதான் புள்ளாரு. அப்போதக்கி அதுதான் சாமி. அதுக்கு நெகுதி வச்சு சந்தனமும் செகப்பும் வச்சுட்டா தீந்துது. புள்ளாரு ரெடி. ஒரு தட்டத்திலெ வெத்தல, பாக்கு, ரெண்டு வாளப்பளம், ஒரு தேங்கா எல்லாம் இருக்குமுங்க. இன்னோரு தட்டத்துல சக்கர பளம் எல்லாம் வச்சிருக்கும். அப்பறம் ஒரு தட்டத்தில திண்ணீரு, செகப்பு, கப்பூரம் எல்லாம் இருக்கும். அப்புறம் ஒரு சொம்புல நெறய தண்ணியோட இருக்கும்.
இந்த சீர்க்காரம்மா அந்தப்புள்ளக்கி எதிரா நின்னு சொம்ப ஒரட்டாங்கையில எடுத்துட்டு கொஞ்சம் தண்ணியெ சோத்தாங்கையில ஊத்தி புள்ளயச்சுத்தி கீள ஊத்துமுங்க. இப்பிடி மூணு தடவ பண்ணுமுங்க. அப்பறம் தட்டத்துல கொஞ்சம் திண்ணீத்தப் போட்டு அதுக்குமேல கப்பூரத்தெ வச்சு பத்தவெச்சு புள்ளயச்சுத்தி மூணு தடவ காட்டுமுங்க. எல்லாரும் அந்தக்கப்பூரத்தெ தொட்டுக் கும்பிட்டுக்குவாங்க.
அப்பறம் சீர்க்காரம்மா சமஞ்ச புள்ள நெத்திலயும் திண்ணீரு பூசி, பொட்டு, பூவு எல்லாம் வெச்சுடுமுங்க. அப்பறம் கொஞ்சம் சக்கரெயெ எடுத்து புள்ள வாய்லெ வக்கிமுங்க. அப்பறமா வந்திருக்கற தாய்துபாய்து ஒரம்பற சனமெல்லாம் புள்ளக்கி பூவும்பொட்டும் வச்சுட்டுட்டு, சக்கர, பளத்தயெல்லாம் எடுத்து புள்ள வாயில ஊட்டறதும் மொறக்காரிங்க வாயில ஊட்டறதுமா, ஒரே ரவுசா கெடக்குமுங்க.
இந்தக்கூத்தெல்லாம் முடிஞ்சபொறவு புள்ளய கூட்டிட்டுப்போய் ஒரு தனி ரூம்புலெ உக்காரவச்சுருவாங்க. அந்தப்புள்ள மூணு நாளக்கி அந்த ரூம்பவிட்டு எங்கியும் போகப்படாதுன்னு கட்டுமானம் பண்ணியிருவாங்க.
மிச்சம் நாளெக்கி.....