சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 டிசம்பர், 2014

12. உண்மை சற்றே வெண்மை

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

உண்மை கசப்பானது, அன்றாட நடைமுறை வாழ்வில் உண்மையைக் கடைப்பிடிப்பது கடினம் என்று வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். ஆனாலும் உண்மையாகவே வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

அத்தகைய ஒரு குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த ஒருத்திக்கு உடலில் இருக்கும் சிறிய குறை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற போராட்டம்தான் இந்தக் கதை.

இளம் பெண்ணின் பருவ மாற்றங்கள் அவளுள் ஏற்படுத்தும் தாக்கங்களை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் கதாசிரியர். அந்த எண்ண அலைகள் படிப்பவர் மனத்திலும் ஆழ்ந்த சோகத்தை தூண்டுகிறது. நம் கையாலாகாத்தனத்தை எண்ணி நம்மை தலை குனிய வைக்கிறது.


ஆணிடம் எப்பேர்ப்பட்ட குறைகள் இருந்தாலும் அதை மறைக்கும் இந்த சமூகம் பெண்ணிடம் இருக்கும் குறைகளை மறைத்தால் மட்டும் ஒத்துக் கொள்வதில்லை. இது அநியாயம் என்று தெரிந்தாலும் நாம் இந்த மனப்பானமையை விடுவதில்லை. காலம் மாறுமா?

சனி, 6 செப்டம்பர், 2014

கதை கதையாம்...


பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். எழுத்தில் இன்பம் கண்டவர். தாம் பெற்ற இன்பத்தை இவ்வைகயமும் பெறட்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடு ஒரு விமர்சனப்போட்டி நடத்தி வருவது அனைத்துப் பதிவர்களும் அறிந்ததே.

இந்தப் போட்டியில் பல பதிவர்கள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பேர்களுக்கு பரிசு கொடுக்கிறார். எனக்கும் கூஊஊஊஊஊஊஊஊட ஒரு மூன்றாம் பரிசு கிடைத்ததென்றால் பாருங்களேன்.

இந்த மூன்றாம் பரிசு கிடைத்த ஊக்கத்தினால் நானும் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்கிறேன். ஆனாலும் பரிசு ஒன்றும் கிடைப்பதாகக் காணவில்லை. இருந்தாலும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற முதுமொழிக்கேற்ப விடாமல் ஒவ்வொரு போட்டிக்கும் விமர்சனம் எழுதியனுப்பிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக ஒரு ஆறுதல் பரிசாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பரிசு பெற்ற விமர்சனங்களை வைகோ தன்னுடைய பதிவில் பிரசுரிக்கிறார். அந்தப் பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன. இவ்வளவு திறமை உள்ளவர்கள் ஏன் தாங்களாகவே கதை எழுதாமல் அடுத்தவர் கதைகளுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற என் சந்தேகத்திற்கு இது வரை விடை கிடைக்கவில்லை.

சரி, அது எப்படியோ போகட்டும். நான் ஒவ்வொரு சிறுகதைக்கும், 80 வயதானபின் எஞ்சியிருக்கும் கொஞ்நஞ்ச  என் மூளையைக் கசக்கிப் பிழிந்து விமர்சனங்கள் எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறேன். சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் நன்னூல் சூத்திரத்தை சிறுவயதில் படித்த காரணத்தினால் மற்றவர்கள் ஒரு நாவல் அளவிற்குச் சொல்வதை நான் ஒரு வரியில் சொல்லி விடுவேன்.

என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் இந்த அளவுகோலின்படி எழுதப்பட்டவை. பரிசு பெறாத விமர்சனங்களை வைத்துக்கொண்டு வைகோ என்ன செய்யப்போகிறார்? ஆகவே அவருடைய அனுமதி உண்டு என்கிற நம்பிக்கையில் நான் எழுதிய விமர்சனங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

விமர்சனம் 1.

ஜாங்கிரி. நினைத்தாலே இனிக்கும் ஒரு இனிப்பு. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை இன்பங்களும் இதற்கு உண்டு. இதை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இதை உருவாக்குபவனும் ஒரு மனிதன்தான். அவன் உருவாக்கும் இந்த ஜாங்கிரி.

மற்றவர்களுக்குத்தான் இனிமையே தவிர, அதை உருவாக்குபவன் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. எந்த உணவும் அப்படித்தான். அதை செய்பவன் அதை ரசித்து உண்ண முடியாது.

தவிர, அவன் வாழ்க்கையில் இனிப்பு சுவை இல்லாததுதான் ஒரு சோகமான உண்மை. இந்த உண்மையை ஒரு நிகழ்வின் மூலம் நம் கண்முன் நிறுத்தும் கதைதான் “ஜாங்கிரி”. மனிதர்களின் பல பரிமாணங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
நிறைய செலவு செய்து பெரிய விழா நடத்தும் பெரிய மனிதர்களுக்கு சாதாரண மனிதப் பண்பு இல்லாமல் போனது நடைமுறையில் பல இடங்களில் சந்தித்திருந்தாலும் இக்கதையில் அது ஆணித்தரமாக காட்டப்பட்டுள்ளது.


சிறுகதையின் வெற்றியே வாசகர்களை கதாபாத்திரங்களோடு கட்டிப்போடுவதுதான். அதை மிகத் திறம்பட இந்த கதையில் ஆசிரியர் செய்திருக்கிறார். அந்த சமையல்காரர் ஏன் வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சிகள் செய்யவில்லை என்று அவர் மீது கோபம் வருகிறது. அதுதான் கதாசிரியரின் வெற்றி.  


கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.