எங்கள் கிளப்பில் ஒரு குறிப்பிட்ட சில அங்கத்தினர்கள் காசு வைத்து ரம்மி விளையாடுவார்கள். ஒரு பத்து பேர் இருக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அல்லக்கைகள். மாலை 6 மணிக்கு ஜமா சேர்ந்து விடும். கிளப் மூடும் 9 மணி வரைக்கும் விளையாடுவார்கள். ஆட்ட சுவாரஸ்யத்தில் சில சமயம் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல் விளையாடுவார்கள். அவர்களை வெளியேற்றி கிளப்பை மூடுவதற்கு கிளப் பாய் படாதபாடு படவேண்டியிருக்கும்.
லீவு நாட்களில் கிளப் சட்ட திட்டங்கள் சற்று வளைக்கப்படும். பண்டிகை நாட்களில் இரவில் கிளப்பை மூடவே மாட்டார்கள். கச்சேரி விடிய விடிய கன ஜோராக நடக்கும். ஒரு தடவை வெள்ளிக்கிழமை 1 ம் தேதி. சம்பளநாள். அடுத்து சனிக்கிழமை ஏதோவொரு லீவு. அப்போதெல்லாம் வாரத்தில் ஆறு நாள் வேலை. ஞாயிற்றுக்கிழமை வார லீவு. திங்கட்கிழமை தீபாவளி லீவு.
என் நண்பன் ஒருவன் வெள்ளிக்கிழமை மாலை சம்பளம் மற்றும் தீபாவளி அட்வான்ஸ் (ஏறக்குறைய 300 ரூபாய் - 1960 களில் இது ஒரு பெரிய தொகை, இன்றைய மதிப்பில் ஒரு லட்சம் இருக்கலாம்) வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகாமல் அப்படியே கிளப்புக்குப் போனான். தீபாவளி மற்றும் லீவு நாட்கள் என்பதால் கச்சேரி வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு, ஞாயிறு பகல், ஞாயிறு இரவு, திங்கள் காலை வரையில் தொடர்ந்து நடந்து, திங்கள் காலை தீபாவளி கங்காஸ்நானம் செய்யவேண்டுமென்பதால் கலைந்தது.
என் நண்பனின் பர்சில் அப்படி கலைந்து போகும்போது ஒரு சில ரூபாய்கள் மட்டுமே இருந்தன. மறு நாள் இந்தச் செய்தி கல்லூரி முழுவதும் பரவிவிட்டது. ஏண்டா இப்படி செய்தாய் என்று நாங்கள் கேட்டதற்கு அவன் முரட்டுத்தனமாக, "அவரவர்கள் அவரவர்கள் வேலையைப் பாருங்கள்" என்று முகத்திலடித்தாற்போல் பதில் சொன்னான். நாங்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டோம். அவன் வருத்தம் அவனுக்கு.
இப்படி விடிய விடிய ஜமா நடக்கும்போது பசிக்குமல்லவா? அதற்கு அந்த ஆபீசர்ஸ் மெஸ் கான்ட்ராக்டர் ஸ்பெஷல் ஐட்டங்கள் அவ்வப்போது சூடாகத் தயார் பண்ணிக் கொடுப்பார். ஆடுபவர்கள் ஆட்டத்திலிருந்து பாதியில் எழுந்து வெளியில் போக முடியாதல்லவா? அதனால் சிறிய ஸ்டூல்கள் தயார் செய்து வைத்திருந்தார்கள். அதைப் பக்கத்தில் போட்டு அதில் அந்த தின்பண்டங்களை வைத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். இடது கையில் சீட்டுகள். வலது கையில் சாப்பிடுவது. ஒரு ஆட்டம் முடிந்து அடுத்த ரவுண்ட் சீட்டு போடும் இடைவெளியில் போய் கை கழுவி விட்டு வந்து விடுவார்கள். இப்படியாக ஆட்டம் தொய்வில்லாமல் நடக்கும்.
சீட்டாடுபவர்களைப் பற்றி ஒரு கதை கேள்விப் பட்டிருப்பீர்கள். அது சும்மா வேடிக்கைக்கு சொல்லப்படுவது என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள் ஆனால் இது நடக்கக்கூடிய சம்பவமே என்பதை சீட்டாட்டத்தில் பழகியவர்கள் அறிவார்கள்.
கிராமத்தில் ஒருவன் கூட்டத்தோடு ஒரு வீட்டுத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒருவன் வந்து அவனிடம் அவன் பெண்டாட்டி இறந்து விட்டதாகத் தெரிவித்தான். இவன் அப்படியா என்று கேட்டுவிட்டு, சரி, நான் உடனே வந்து என்ன செய்யப் போகிறேன், போய் அடக்கம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பவும் சீட்டு விளையாட்டில் மூழ்கி விட்டான்.
கொஞ்ச நேரம் கழித்து அவன் திரும்பவும் வந்து எல்லாக் காரியங்களும் ஆகிவிட்டன, நீங்கள் வந்த பிறகு சவத்தைப் பாடையில் வைக்கலாமென்றிருக்கிறோம், வாருங்கள் என்றான். அதுக்கு நான் என்னத்துக்கு, பாடையிலே வச்சு சுடுகாட்டுக்கு இந்த வழியாகத்தானே போவீங்க, அப்ப நான் சேந்துக்கிறேன் என்று சொல்லி அவனை அனுப்பி விட்டான்.
கொஞ்ச நேரம் கழித்து சவ ஊர்வலம் அந்த வழியாக வந்தது. சரி. இத்தனையெல்லாம் செய்து விட்டீர்களல்லவா, இனி சுடுகாட்டுக்கு வந்து நான் என்ன செய்யப்போகிறேன், நீங்களே கொண்டு போய் அடக்கம் செய்து விடுங்கள் என்றானாம். எல்லோரும் அவனைக் காறித்துப்பி விட்டு சுடுகாட்டிற்குப் போனார்களாம்.
இது முற்றிலும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் இதில் நிறைய உண்மை இருக்கிறது. இதைப்பற்றி பின்னால் கூறுகிறேன்.
இந்த சீட்டாடும் குரூப் கொஞ்சம் கொஞ்சமாக அதிக ரவுஸ் விட ஆரம்பித்தார்கள். சத்தமாகச் சிரிப்பதும் பேசுவதுமாக கிளப்பை சந்தைக் கடை போல் ஆக்கி விட்டார்கள். எங்கள் தலைவர் பார்த்தார். இவன்களை இப்படியே விட்டால் கிளப்பை நாற அடிச்சு விடுவார்கள். ஏதாச்சும் பண்ணலாம் என்றார். நாங்கள் எல்லோரும் ஒத்துப் பாடினோம். நாங்கள் அதற்குத்தானே இருக்கிறோம்.
அடுத்த நாளே இவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே எங்களுக்கும் ஒரு டேபிள் போட்டோம். நாங்கள் பத்துப் பேர். என்ன ஆட்டம் ஆடலாம் என்று யோசித்து கடைசியில் கழுதை ஆட்டம் ஆடலாம் என்று முடிவு பண்ணி ஆட ஆரம்பித்தோம். இந்த ஆட்டம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். யாரிடம் கடைசியில் நிறைய சீட்டு இருக்கிறதோ அவரே கழுதை.
ஒரு ஆட்டம் பத்துப் பதினைந்து நிமிடங்களில் முடிந்து விடும். ஆட்டம் நடக்கும்போதே அதைப்போடாதே, இதைப் போடாதே என்று அல்லக்கைகள் கூக்குரலிடும். ஆட்டம் முடிந்தவுடன் கழுதையானவனைப் பார்த்து ஒரே கத்தல்தான். நாங்கள் போடும் சத்தத்தைப் பார்த்து வழக்கமாக ஆடுபவர்கள் அரண்டு போனார்கள். ரோட்டில் போகிறவர்கள் எல்லாம் நின்று இங்கே என்ன அடிதடி என்று கேட்க ஆரம்பித்தார்கள். நிலவரம் கட்டுக்கடங்காமல் போனது.
கிளப் நிர்வாகம் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணினார்கள். எங்கள் தரப்பினரின் வாதம், முதலில் சத்தம் போட்டது அவர்கள்தான், அவர்களை அடக்குங்கள், நாங்களும் நிறுத்தி விடுகிறோம் என்றோம். ஒருவாறாக இரு தரப்பினரும் சமாதானமாகி, இனி விளையாடும்போது சத்தம் போடுவதில்லை என்ற ஒப்பந்தத்திற்கு வந்தோம்.
ஆனாலும் எங்கள் கழுதையாட்டம் தொடர்ந்தது. ஆறு மாதம் கழித்து இந்தக் கழுதையாட்டம் சலித்துப்போய்விட்டது. ஆகவே நாங்களும் ரம்மி ஆட ஆரம்பித்தோம். மிகவும் குறைவான தொகையையே பந்தயப்பணமாக வைத்தோம். ஒரு மாலை முழுவதும் ஆடித் தோற்றால் கூட நாலணாத்தான் நஷ்டமாகி இருக்கும். சீட்டு விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் ஆடினோமே தவிர பெரிதாக பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.
ஆனாலும் இப்படி ஆறு மாதம் விளையாடிய பிறகு இந்தச் சீட்டாட்டம் என்னைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. மாலை 5 மணி ஆனாலே மனசுக்குள் ஒரு பதட்டம் வந்து விடும். உள்ளங்கையெல்லாம் அரிக்கும். மாலை 6 மணிக்கு எப்படியும் சீட்டாடப் போயே ஆகவேண்டும் என்ற உந்துதல் வந்து விடும்.
நாளாக நாளாக இந்த சீட்டாட்டம் ஒரு போதையாகி விட்டது. டவுனில் ஏதாவது வேலை இருந்தால் அதைத் தள்ளிப்போடுவேன். அல்லது முன்னாலேயே போய் அந்த வேலையைப் பார்த்து முடித்து விட்டு 6 மணிக்கு கிளப்பிற்கு வந்து விடுவேன். அப்போதுதான் அந்த பெண்டாட்டி செத்த கதை நிஜமாக இருந்தாலும் இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்போது எனக்கு கல்யாணம் ஆகியிருக்கவில்லை.
பிறகு கல்யாணம் ஆன பின்பும் கொஞ்ச நாள் இந்த சீட்டாட்டம் தொடர்ந்தது. சொந்தக்காரர்கள் என்னைப் பார்க்க கிளப்புக்கே வரத்தொடங்கினார்கள். அப்போது எனக்கு பதவி உயர்வு வந்தது. நான் குடியிருந்த குவார்ட்டர்ஸைக் காலி பண்ணவேண்டிய கட்டாயம். என் புது வேலைக்கான குவார்ட்டர்ஸ் காலி இல்லை.
அதனால் வெளியில் வீடு பார்த்து குடி போக வேண்டிய அவசியம் நேரிட்டது. இதனால் கிளப்பிற்கு வர முடியவில்லை. மெதுவாக கையரிப்புக் குறைந்தது. சீட்டாட்டத்தை அடியோடு மறந்தேன்.
என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால் சூதாட்டம் என்பது, சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் தனி மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வலிமை கொண்டது. ஆனானப்பட்ட தர்ம ராஜாவின் கதையே ஒரு உதாரணம். இளைய சமுதாயம் இந்த வலையில் சிக்காமல் பாதுகாப்பது பெரியவர்களாகிய நம் கடமை.