சுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

எது சுகம் ?

                                         
                                           Image result for வெங்காய பஜ்ஜி

திருவள்ளுவர் அன்றே சொல்லி விட்டுப் போனார்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் 
ஒண்டொடி கண்ணே உள

இந்தக் குறளின் பதவுரை, பொழிப்புரை எல்லாம் நமக்கு இப்போது தேவையில்லை. இதன் கருத்துரை என்னவென்றால் மனிதனுக்குள்ள ஐந்து புலன்களும் ஒரே சமயத்தில் தங்களுக்குண்டான இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதுதான். அதுதான் சுகம் என்கிறார் வள்ளுவர்.

இன்று காலை, மன்னிக்கவும் அதிகாலை, காலை 2 மணியை எப்படிச் சொல்வது? ஏதோ ஒன்று. 2 மணிக்கு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது (எப்பத்தான் தூக்கம் வருது? எப்பவும்தான் முளிச்சிட்டு இருக்கறீங்க- இது என்னுடைய ஆசைப் பொண்டாட்டி) இந்தக் குறள் நினைவிற்கு வந்தது.

எனது கற்பனைக் குதிரையைத் தட்டியெழுப்பி, எது சுகம் என்று ஒரு குட்டி ஆராய்ச்சி செய்தேன். அந்த ஆராய்ச்சியின் முடிவுகள்தான் இந்தப் பதிவு.

 கண்ணுக்கு சுகம் பல இருந்தாலும் நான் அனுபவிப்பது நல்ல புத்தகங்கள் படிப்பது. இது கண்ணுக்கும் மனதிற்கும் ஒரு சேர இன்பம் பயப்பது ஆகும். ஆனால் ஒரு நிபந்தனை. படுக்கையில் தலைக்கு ஒரு மூன்று தலையணை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்துக் கொண்டு படிக்கவேண்டும்.

படுக்கையில் மூன்று தலையணை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்துக்கொள்வதில் எந்த சிரமமும் இல்லை. அந்த அனந்த சயன பாவத்தில் இந்தப் புத்தகத்தை கண்ணுக்கு வாகாக கையில் வைத்துக்கொண்டு படிப்பதில்தான் கஷ்டமே இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் கை வலிக்க ஆரம்பிக்கிறது.

இதற்கு ஏதாவது புத்தக-தாங்கியை யாராவது கண்டு பிடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது கண்டுபிடித்திருந்தால் அது எங்கு கிடைக்கும் என்று யாராவது சொன்னால் புண்ணியமாகப் போகும். அதை வாங்கி இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு செய்யலாம்.

அடுத்ததாக செவிக்கு இன்பம். நல்ல இசையைக் கேட்பது இன்பம் என்று அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள். இந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்க இந்த உடல் அனுமதிப்பதில்லை. மூன்று நிமிடம் இசையைக் கேட்டவுடன் தூக்கம் வந்து விடுகின்றது.

இதற்கும் யாராவது ஒரு கருவி கண்டு பிடித்தால் நல்லது. அதாவது அந்தக் கருவி ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு தரம் நம்மைத் தட்டி எழுப்பிக்கொண்டு இருக்கவேண்டும். எங்கு கிடைக்கும் என்று இணையத்தில் விசாரிக்க வேண்டும்.

அடுத்து நாசிக்கு இன்பம். இது இக்காலத்தில் மிகவும் சுலபமாகக் கிடைக்கிறது. உங்களுக்கு எந்த வாசனை பிடிக்குமோ அந்த வாசனை கொண்ட பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. திரவ கொசு பத்தி மாதிரி பல சாதனங்கள் கிடைக்கின்றன. இதில் ஒரு கஷ்டமும் இல்லை.

அடுத்து மெய்யின்பம். அதாவது உடலுக்கு இதமாக இருப்பது. உண்மையைச் சொன்னால் தாய்க்குலம் பொங்கியெழும். ஆகவே அது வேண்டாம். ஒரு நல்ல மின் விசிறியை மாட்டி விட்டால் அதன் காற்று மெதுவாக உடலை வருடிக்கொடுக்கும். இதுவும் சிரமமில்லாத வேலைதான்.

கடைசியாக, மிக முக்கியமானது நாவிற்கு இன்பம் கொடுப்பது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தின்பண்டம் இன்பத்தைத் தரும். எனக்கு மிகவும் பிடித்தது வெங்காய பஜ்ஜியும் அதற்குத் தொட்டுக் கொள்ள நல்ல தேங்காய்ச் சட்டினியும். அனுதினமும் மூன்று வேளையும் கொடுத்தாலும் சாப்பிடுவேன்.

வெங்காய பஜ்ஜி சாப்பிடுவது ஒரு தனிக்கலை. வெங்காய பஜ்ஜி சூடாக சாப்பிட்டால்தான் சுகம். வெங்காய பஜ்ஜியைக் கையால் பிய்த்தால் வெங்காயம் தனியாகவும் வெந்த கடலை மாவு  தனியாகவும் வந்து விடும் அதைச் சாப்பிட்டால் வெங்காய பஜ்ஜி சாப்பிட்ட திருப்தி கிடைக்காது.

சூடாக இருக்கும் வெங்காய பஜ்ஜியை அப்படியே வாயில் போட்டுக் கொண்டால் வாலை விட்டு ஆப்பை எடுத்த குரங்கின் கதைதான். சூடாக இருக்கும் பஜ்ஜியை மெல்லவும் முடியாது. வாயில் வைத்திருக்கவும் முடியாது. துப்பவும் முடியாது.

இது தவிர தேங்காய்ச் சட்னி முழு பஜ்ஜியில் சரியாக ஒட்டவும் ஒட்டாது. இதற்காக நான் என் ஆராய்ச்சி மூளையைப் பயன்படுத்தி ஒரு செயல்முறை கண்டுபிடித்திருக்கிறேன். சும்மா வேலையில்லாமலா "பிஎச்டி" படித்தேன்.

பஜ்ஜி சுட ஆரம்பித்தவுடனே ஒரு நல்ல கத்தி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். வாணலியிலிருந்து பஜ்ஜியை எடுத்து தட்டில் போட்டவுடன் அவைகளை நடுவில் கத்தியால் வெட்டி இரு துண்டங்களாகப் பண்ணவும். இந்தத் துண்டங்கள் அரை வட்ட வடிவில் இருக்கும். வெங்காயம் தனியாகப் போய்விடாதபடி வெட்டவேண்டும். இதற்கு கத்தியை முதலிலேயே நன்றாகத் தீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

இப்படி வெட்டப்பட்ட அரை வட்ட வடிவில் இருக்கும் வெங்காய பஜ்ஜியை எடுத்து அந்த வெட்டுப்பட்ட பகுதியை சிறிது பெரிது பண்ணி அதற்குள் தேங்காய்ச் சட்னியை ஒரு தேக்கரண்டியில் எடுத்து அளவாகப் போடவேண்டும், அப்படியே பஜ்ஜியை வாயில் போடவேண்டியதுதான். இதுதான் சுகம். இதையே, அதாவது பஜ்ஜியை வெட்டி சட்னி உள்ளே வைத்துத் தரும் வேலையை வேறு யாராவது செய்து கொடுத்து நீங்கள் சாப்பிட்டால், அதுதான் சுகமோ சுகம்.

இப்படியாக நீங்கள் படுக்கையில் மூன்று தலையணை வைத்துப் படுத்துக்கொண்டு, ஒரு புத்தகத்தாங்கியில் புத்தகத்தை படிப்பதற்கு வாகாக வைத்துக்கொண்டு, மின் விசிறியை ஓடவிட்டு, சங்கீதம் ஒலித்துக் கொண்டு, நல்ல வாசனைத் திரவியம் வாசனை அளிக்க, வெங்காய பஜ்ஜி சாப்பிடும் சுகம் இருக்கிறதே அதுதாங்க திருவள்ளுவர் சொன்ன ஐம்புலன்களும் நுகரும் இன்பமுங்க.

வாழ் நாளில் இந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் பெரிய துர்ப்பாக்கியசாலிகளே.