சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பத்ரிநாத்தில் இரண்டாவது நாள்.


மறுநாள் விடிந்தது. ஆனால் ரஜாயை விட்டு வெளியே வர ஒருவருக்கும் மனதில்லை. எப்படியோ ஒரு மாதிரி மனதைத் திடப்படுத்திக்கொண்டு எழுந்து, ஒரு காப்பி போட்டுக் குடித்தோம். அப்பறம்தான் உடம்பு சரியாக வேலை செய்ய ஆரம்பித்தது. எவ்வளவு சீக்கிரம் இந்த ஊரை விட்டுப் போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு விடலாம் என்று எல்லோருமாக ஏகோபித்த முடிவு எடுத்தோம். டிரைவர் ஒரு இடத்தில் மரவட்டை மாதிரி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி விவரம் சொன்னேன். அவருக்கும் அது சௌகரியமாகவே இருந்தது. ஏனெனில் பத்ரிநாத்திலிருந்து ஒரே நாளில் ஹரித்துவார் போக முடியாது. நடுவில் எங்காவது தங்கித்தான் போக வேண்டும். அதனால் சீக்கிரம் புறப்பட்டால் தங்கவேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போய் சேர்ந்து ரெஸ்ட் எடுக்கலாம். ஆகவே அவர் சந்தோஷமாக இந்த மாறுதலுக்கு ஒத்துக்கொண்டார்.

லாட்ஜ் நிர்வாகம் ஆளுக்கு ஒரு பக்கெட் வெந்நீர் கொடுத்தார்கள். எல்லோரும் குளித்து விட்டு, எதிரில் இருந்த ஒரு ஹோட்டலில் அபூர்வமாகக் கிடைத்த இட்லியையும் தோசையையும் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம். ரொம்ப வயசான, நடக்க முடியாதவர்களை ஒரு கூடையில் உக்கார வைத்து ஒரே ஆள் முதுகில் சுமந்து கொண்டுபோய் கோவிலில் இறக்குகிறான். இதற்கு போகவர முந்நூறு ரூபாய் சார்ஜ். படத்தைப்பார்க்க.


நாங்கள் நடந்தே சென்றோம். கோவிலில் காலை நேரம் என்பதால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. கோவிலுக்கு வெளியில் பூஜைக்காகத் தட்டு விற்கிறார்கள். கொஞ்சம் பூ, பட்டாணிக்கடலை, வெள்ளை கற்கண்டு மிட்டாய், இவ்வளவுதான் பூஜை சாமான்கள். இதை தலை மேல் வைத்துக்கொண்டு சாமிக்கு முன்னால் போய் பூஜாரியிடம் கொடுத்தால், பூஜாரி அதை வாங்கி சாமியின் மேல் வீசுகிறார். பிறகு அந்தத் தட்டில் அவர் முன்னால் இருக்கும் தட்டிலிருந்து கொஞ்சம் மிட்டாயும் கடலையையும் நம் தட்டில் போட்டுத் திருப்புத் தருகிறார். அதுதான் பத்ரிநாதரின் பிரசாதம்.

தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது என் சகோதரிக்கு முன் தினம் போலவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. டாக்சி டிரைவருக்கு போன் போட்டு காரை வரவழைத்து காரில் ரூம் திரும்பினோம்.

{ஒரு முக்கிய குறிப்பு: இப்போது பரவலாக செல்போன் உபயோகிப்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக டாக்சி டிரைவர்கள் அனைவரும் செல்போன் வைத்திருப்பார்கள். நீங்கள் எங்காவது டாக்சியில் சென்றால் முதல் வேலையாக டாக்சி டிரைவரின் செல்போன் நெம்பரை வாங்கி உங்கள் செல்போனில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் உபயோகமாக இருக்கும். }

ரூமைக்காலி செய்துவிட்டு பத்ரிநாத்துக்கு குட்பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம். ஆனால் கொஞ்சதூரம் வந்ததும் எல்லா வண்டிகளும் நின்றுகொண்டிருந்தன. என்னவென்றால்கேட்திறக்கவில்லை என்றார்கள். இந்த கேட் முறை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். பத்ரிநாத்திலிருந்து ஜோஷிமட் வரை ஒரு வழிப்பாதைதான். மாற்றி மாற்றிதான் வண்டிகளை விடுவார்கள். நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.





சுமார் 11½ மணிக்கு கேட் திறந்தார்கள். நாங்கள் புறப்பட்டு ஜோஷிமட் வழியாக கர்ணப்பிரயாக் வந்து சேர்ந்தோம். வழியெங்கிலும் பாதையை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. பாதையோரத்தில் இருக்கும் பாறைகளை வெடிவைத்து உடைக்கிறார்கள். உடனேயே அந்த பாறை துகள்களை இயந்திரங்கள் மூலமாக அப்புறப்படுத்துகிறார்கள். இதற்கு ஓரிரண்டு மணி நேரம் பிடிக்கிறது. அது வரை எல்லா வண்டிகளும் நிற்க வேண்டியதுதான். அப்பொழுதும் வண்டிகள் ரோட்டின் ஓரமாகவே, அதாவது கீழே விழுந்தால் அதலபாதாளம் என்ற நிலையிலேயேதான் செல்ல வேண்டியிருக்கிறது.

கர்ணப்பிரயாக் - ருத்ரப்பிரயாக் ஹைவே பாகீரதி நதி ஓரமாகவே வருகிறது. இந்த ரோட்டிலும் பாதை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. அந்தப்பாதையில் வந்த ஒரு வழக்கமாக வரும் ரூட் பஸ் பாதை ஓரத்தில் வரும்போது ஸ்லிப் ஆகி நாற்பது பயணிகளுடன் ஆற்றில் விழுந்து விட்டது. அங்கெல்லாம் ஆற்றில் இருபது ஆடி தண்ணீர் சாதாரணமாக ஓடும். பஸ்ஸையும் காணவில்லை. பஸ்ஸில் இருந்தவர்களையும் காணவில்லை. நாங்கள் கர்ணப்பிரயாக் வரும்போது இந்த காரணத்தினால் பொது ஜனங்கள் ரோடு பந்த் செய்துகொண்டிருந்தார்கள். எங்கள் வண்டியை வேறொரு மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டார்கள். இந்தப்பாதை ஆற்றுக்கு மறு பக்கம் இருக்கிறது. சாதாரண ரோடு என்பதால் அகலம் குறைவு. எப்பொழுது வேண்டுமானாலும் பஸ்ஸைத் தொடர்ந்து நாங்களும் பாகீரதியின் மடிக்குப் போய்ச் சேரலாம் என்கிற பயம் ஹரித்துவார் வந்து சேருமட்டும் இருந்தது.

எப்படியோ ஒரு வழியாக ருத்ரப்பிரயாக் வந்து சேர்ந்தோம். ஊரிலிருந்து ஒருக்குப்புறமாக ஒரு நல்ல லாட்ஜ்ஜுக்கு டிரைவர் எங்களைக் கூட்டிக் கொண்டுபோய் தங்க வைத்தார். ரூம்கள் சுத்தமாக இருந்தன. சாப்பிட்டுவிட்டு படுத்தோம். தூக்கத்தில் நாங்கள் எல்லோரும் ஆற்றில் விழுவதாகவே கனவு வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலையில் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு (டிபன் என்ன, மாத்திரைகள்தான்) புறப்பட்டு மாலை ஐந்து மணி சுமாருக்கு ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். ஒரு லாட்ஜ் பிடித்து தங்கினோம்.

தொடரும்

திங்கள், 11 அக்டோபர், 2010

பத்ரிநாதரின் முதல் தரிசனம்



ரூமில் காப்பி வைத்துக் குடித்தவுடன் நேரம் இருந்ததால் கோவிலுக்குச் சென்றுவரலாம் என்று புறப்பட்டோம். நாங்கள் தங்குமிடத்திலிருந்து கோவில் சுமார் அரைக் கிலோ தூரம்தான் இருக்கும். நடந்தே போகலாம் என்று முடிவு செய்து நடக்க ஆரம்பித்தோம். மாலை ஐந்தரை மணிதான் இருக்கும். ஆனால் குளிர் நடுங்க வைத்தது. பக்கம்தானே, சீக்கிரம் போய்வந்து விடலாம் என்று போனோம். கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு நதி ஓடுகின்றது. மந்தாகினி என்று பெயர். கங்கை நதியின் ஒரு உபநதி.

கோவில் பார்ப்பதற்கு கொஞ்சம் பரவாயில்லை. நல்ல பெயின்ட் அடித்திருந்தார்கள். தமிழ் நாட்டு சிறபக்கலை சில இடங்களில் தெரிந்தது. கோவில் ஒரு மலைச்சரிவில் அமைத்திருக்கிறார்கள். ஆகவே நிறைய படிகள் ஏற வேண்டியிருந்தது. கோவிலில் அதிகமாகக் கூட்டம் இல்லை. உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தோம். மொத்தம் ஐந்து சாமிகள் இருந்தன. நடுவில் பத்ரிநாதர். ஒரு புரம் லக்ஷ்மி, இன்னொரு புரம் கிருஷ்ணர், அப்புறம் மற்ற இரண்டு சாமிகளயும் அடையாளம் தெரியவில்லை. நம் ஊர் மாதிரி பூஜைகள் காணோம். எல்லா சாமிகளையும் ஜிகு ஜிகுவென்று கலர் ஜிகினாத் துணிகளினால் அலங்கரித்திருந்தார்கள். ஒரு ஐந்து நிமிடம் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தோம்.

நேரம் ஆக ஆக குளிர் அதிகமாகிக்கொண்டே இருந்தது. கதல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 12000 அடி உயரத்தில் பத்ரிநாத் இருப்பதால் காற்றின் அழுத்தம் குறைவு. அதனால் உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காத்தால் உடல் சோர்வும் மூச்சுத்திணறலும் உண்டாகின்றன. என் தங்கைக்கு நடக்க முடியவில்லை என்று உட்கார்ந்து விட்டாள். இரண்டு பேர் கைத்தாங்கலாகப் பிடித்துக் கூட்டிவந்து சூடாக ஒரு டீ வாங்கி குடிக்க வைத்த பின்பே அவளால் ஓரளவிற்கு நடக்க முடிந்தது. ஆஸ்த்மா மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பத்ரிநாத் போனால் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். வாங்கி வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. அதை எவ்வாறு உபயோகிப்பது என்றும் கடைக்காரர்களிடமே கேட்டுத்தெரிந்து கொள்வதும் அவசியம்.


லாட்ஜுக்கு முன்பாக இருந்த ஒரு ஓட்டலில் ஆளுக்கு ஒரு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு ரூமுக்குப்போய் ரஜாயைப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டோம். ரஜாயைப் போர்த்திக் கொண்டதால் குளிர் தெரியவில்லை.

தொடரும்