செக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 டிசம்பர், 2012

வெளியூர் செக்குகள் பணமாகும் விதம்

இந்தப் பதிவு நைஜீரியாவிலிருந்து வரும் செக்குகளைப் பற்றியதல்ல. இந்திய நாட்டிற்குள் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு அனுப்பப்படும் செக்குகளைப் பற்றியது.

உங்கள் மாமனார் டில்லியிலிருந்து உங்களுக்கு தீபாவளிக்காக ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக் அனுப்பியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்களும் ஆனந்தப்பட்டு (ஆனந்தப்படாவிட்டால் உங்கள் மனைவி உங்களை பார்வையாலேயே எரித்து விடுவார்) அந்தப் பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்ற கற்பனையில் மூழ்குவீர்கள்.

உங்களுக்கு அப்போது தெரியாதது,  உங்களை ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறதென்ற விஷயம். அந்த சங்கதி பிறகுதான் தெரியும்.

நீங்கள் ஆனந்தமாக அடுத்த நாள் அந்தச் செக்கை உங்கள் அக்கவுன்டில் போட்டுவிடுவீர்கள்.

பேங்கில் இந்த மாதிரி வெளியூர் செக்குகளை எல்லாம் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். அந்தந்த வாரக்கடைசியில் அந்த செக்குகளை எல்லாம் சேர்த்து, உங்கள் செக் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறதோ அந்த ஊரிலிருக்கும் அவர்களுடைய பேங்கிற்கு அனுப்புவார்கள். நமது தபால் இலாக்காவின் சாமர்த்தியம் எல்லோருக்கும் தெரியும். உங்கள் அதிர்ஷ்டம் சரியாக இருந்தால் உங்கள் செக் சரியாகப் போய்ச் சேர்ந்து விடும்.

அந்த ஊரில் இருக்கும் பேங்க் அலுவலர் இந்த மாதிரி செக்குகளைப் பிரித்து அந்தந்த பேங்குகளுக்கு அனுப்புவார். அதை வாங்கும் பேங்க் அதை பாஸ் செய்து அந்த விபரத்தை இந்த பேங்குக்கு அனுப்பும். அங்கிருந்து அந்த செக் பாஸான விபரம் நீங்கள் செக் போட்ட பேங்க்குக்கு தபால் மூலமாக வரும்.

இதற்கு சுமாராக 15 முதல் 45 நாட்கள் வரை ஆகலாம். இதுதான் பழைய நடைமுறை. அதுவரை நீங்கள் தினமும் பேங்கிற்குப் போய் செக் பாஸாகி வந்து விட்டதா என்று விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது இந்த விபரங்கள் இன்டர்நெட் மூலமாக வரலாம். அப்படி வந்தால் செக் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் நாட்கள் குறையும்.

அதற்குப் பிறகு அந்தச் செக்கின் பணம் உங்கள் கணக்கில் போடப்படும். ஆயிரம் ரூபாய்க்கு ஏறக்குறைய நூறு ரூபாயை கமிஷன் என்று பிடித்துக் கொள்வார்கள்.

உங்கள் மாமனார் ஊரில் உங்கள் பேங்கின் கிளை இருந்தால் நீங்கள் தப்பித்தீர்கள். ஏதாவது சிறிய ஊராக இருந்து, உங்கள் பேங்க்கின் கிளை அந்த ஊரில் இல்லையென்றால், நீங்கள் பேசாமல் அந்த செக்கை கிழித்துப் போட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒழுங்காக பாஸ் ஆகி வராது. செக் என்ன ஆயிற்று என்றும் தெரியாது. முக்கால்வாசி சமயங்களில் அந்த செக் அபேஸ் ஆகி, உங்கள் மாமனார் பணத்தை ஊர் பேர் தெரியாத உங்கள் சகலை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.

இப்போது பல பேங்குகளில் மல்டிசிட்டி செக்குகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். அந்த செக்குகள் அந்தந்த ஊரிலேயே பாஸ் ஆகிவிடும். தவிர இப்போது புதிதாக வரப்போகும் சிடிஎஸ் 2010 செக்குகள் நடைமுறைக்கு வந்து விட்டால் இந்தச் சிக்கல்கள் ஏறக்குறைய மறைந்து போகும் என்று நம்பலாம். அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.