சமீபத்தில் ஒரு சேவை அமைப்பின் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் என் நண்பர் ஒருவருக்கும் விருது கொடுத்து மரியாதை செய்வதாக இருந்ததால் என் நண்பர் என்னையும் நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார். நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு.
ஐந்தேமுக்காலுக்கே போய்விட்டேன். நிகழ்ச்சி சரியாக 6.25க்கு ஆரம்பித்தார்கள். அந்த சேவை அமைப்பின் பெயர் "தாய்மடி". அதாவது தாய்மடியில் உங்களுக்கு எந்த ஆதரவு கிடைக்குமோ அந்த ஆதரவு இந்த அமைப்பின் மூலம் கிடைக்கும் என்று அமைப்பின் பொறுப்பாளினி, தன் அறிமுக உரையில் சொன்னார்கள். இந்த சேவை அமைப்பு பிரபல ஜவுளி நிறுவனமான பி.எஸ.ஆர் ஸ்தாபனத்தின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பலரிடம் பல திறமைகள் இருக்கலாம், ஆனால் வெளி உலகிற்கு அந்த திறமை தெரியாமல் இருக்கலாம், அப்படிப்பட்டவர்களை இந்த அமைப்பின் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். நோக்கம் உன்னதமான நோக்கம். ஆனால் செயல்படுத்த அதிக பொருளும், நேரமும், உழைப்பும் தேவைப்படும்.
அன்று நடந்த நிகழ்ச்சி ஒரு அவியல் சுவையுடையதாய் இருந்தது. பலதரப்பட்ட திறமையாளர்களை மேடையேற்றி அவர்களை பலவாறாக கௌரவித்தார்கள். என் நண்பருக்கு "யோகா வல்லுநர்" என்ற பட்டமும், பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியும், ஒரு பொன்னாடையும் கொடுத்தார்கள். அவர் பேசுவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார், ஆனால் ஏதோ காரணத்தினால் அவரைப் பேச அழைக்கவில்லை.
அந்த நிகழ்ச்சியில் கடைசியாக பல மழலைகளைக் கொண்டு ஒரு நடன நிகழ்ச்சியும் வைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். அங்கு எடுத்த சில படங்களை இணைத்திருக்கிறேன்.
வந்திருந்தவர்கள்.